நான் கடவுள் நம்பிக்கை இல்லாத சாமியார் மாதிரி! – கமல்
March 24, 2010 by The Editor
Filed under Cinema
நான் கடவுள் நம்பிக்கை இல்லாத சாமியார் மாதிரி! – கமல்
சென்னை: நான், ஒரு சாமியார் மாதிரி. எனக்கு, கடவுள் நம்பிக்கை கிடையாது, என்றார் கமல் ஹாஸன்.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த ஆதவன் படத்தின் 100-வது நாள் விழா, சென்னை அடையாரில் உள்ள பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.
விழாவில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்கினார்.
விழாவில் சூரியா பேசும்போது, “ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் மனதில் வைத்துக்கொள்கிற மாதிரி ஒரு மந்திரத்தை அண்ணன் கமல்ஹாசன் எனக்கு சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் பேசிய கமல் இவ்வாறு கூறினார்:
“சூரியா பேசும்போது, என்னிடம் மந்திரம் கேட்டார். அதுவும் என்னிடம் போய் மந்திரம் கேட்கிறார். நான் ஒரு சில சாமியார் மாதிரி. கடவுள் நம்பிக்கை கிடையவே கிடையாது. சூரியாவின் அப்பா (நடிகர் சிவகுமார்) என்னிடம் மந்திரம் சொல்லியிருக்கிறார். இவர் மந்திரம் கேட்கிறார்.
சினிமாவை இன்னும் நான் வியப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்த வியப்பு, திகில், பதற்றம், சந்தோஷம் எல்லாம் நிறைந்ததுதான் சினிமா.
என் படம் வெளியாகிற அன்று முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது, நான் படம் பார்ப்பவர்களின் முகத்தைத்தான் பார்ப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷம், உற்சாகம்தான் நிஜம்.
சினிமாவில் எழுத்தாளராக வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஒருமுறை மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவுக்கு நான் போனபோது, அங்கிருந்த லைப்ரரியில் கலைஞர் எழுதிய ஸ்கிரிப்ட்டைப் பார்த்தேன். அதில், அத்தனை நுணுக்கமான விஷயங்கள் இருந்தன.
அதை படித்த பிறகு, எழுத வேண்டும் என்ற ஆசையை ஆறு வருடங்களுக்கு தள்ளிப்போட்டேன். சினிமாவில், நடிகர்கள் மறக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஒரு விஷயத்தில் மட்டும் பயங்கர திமிராக இருக்க வேண்டும். உங்களின் முந்திய வெற்றியை நீங்கள் மதிக்கக் கூடாது.
கிரிக்கெட்டில் தோற்றால் அடித்துக் கொள்கிறார்களா?
எனக்கு, கமல் மீது மரியாதை கிடையாது. பதற்றம் உண்டு. என் முந்திய வெற்றியை சவாலாக எடுத்துக்கொள்வேன். தோல்வி பற்றி பயப்படக்கூடாது. கிரிக்கெட்டில் தோற்றால், அடித்துக்கொள்கிறார்களா என்ன? அடுத்த மேட்சுக்கு தயாராகி விடுகிறார்கள் அல்லவா? அதுமாதிரி இருக்க வேண்டும்.
நடிகர் திலகம் தொடர்ந்து 13 தோல்விப் படங்களை கொடுத்தார். வேறு யாராக இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள். அடுத்து வந்த 14-வது படம் 200 நாட்கள் ஓடியது. அது அவரால் மட்டும்தான் முடியும்…”, என்றார்.
விழாவில் இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், “நான் ஒரு நிறுவனத்துக்குப் படம் பண்ணால் அதுதான் பெஸ்ட் படமாக இருக்கும். இப்போது இங்கே ரெட்ஜெயன்ட் மூவீஸுக்கு அடுத்த படத்தைப் பண்ணுகிறேன். ஆனால் கேஎஸ் ரவிக்குமார் அவர்களும் கமல் சாரை வைத்து படம் பண்ணுகிறார். அவர் படம் நிச்சயம் பிரமாதமாக இருக்கும். அதையும் தாண்டி நிற்கும் விதத்தில் படம் தர இப்போது நான் முயற்சிக்க வேண்டும்…” என்றார்.
ரெட்ஜெயன்ட் மூவீஸின் அடுத்த படத்தில் கமல்ஹாஸன்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.









அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்


