Breaking News

‘அட, ஆஃபரைச் சொல்லுங்க… நானே அனுப்பி வச்சிடறேன்!’

 ’அட, ஆஃபரைச் சொல்லுங்க… நானே அனுப்பி வச்சிடறேன்!’

 

Jayvija1

‘ஏங்க முதல்வர் மேடம்… எதுக்கு நீங்க இவ்ளோ சிரமப்படறீங்க… அவங்களை எம்எல்ஏவாக்குனது நான்தான்… அவனுங்களுக்கு என்ன ‘ஆஃபரோ’ அதை நேரடியா என்கிட்டயே கொடுத்துடுங்க…. மிச்சமிருக்கிற மொத்தப் பேரையும் நானே ‘தொகுதிப் பிரச்சினையைப் பேச’ அனுப்பி வச்சிடறேன்!’

-என்வழி

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Tributes to Adithan

ருணாநிதியை நலம் விசாரிக்கும் விஜயகாந்த்: ஒரு கூட்டணிக்கான அச்சாரம்?

இடம்: போயஸ் கார்டன், மறைந்த சிவந்தி ஆதித்தன் வீடு

படத்தை வெளியிட்டவர்: கலைஞர் மு கருணாநிதி

மேலும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெ பக்கம் ஓட்டம்.. டென்ஷனில் விஜயகாந்த்!

October 27, 2012 by  
Filed under election, election 2011

மேலும் இரண்டு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஜெ பக்கம் ஓட்டம்.. டென்ஷனில் விஜயகாந்த்! 

சென்னை: நேற்று இரு தேமுதிக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு ஓட்டம் பிடித்தனர்.

நடிகரும் பேராவூரணி தொகுதி எம்எல்ஏவுமான அருண்பாண்டியன், தயாரிப்பாளரும் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவுமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் இன்று முதல்வரைச் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அம்மா ஆட்சி சிறப்பாக நடப்பதாக ‘சான்றிதழும்’ தந்துள்ளனர்!

இது தேமுதிக தலைவர் விஜயகாந்தை மேலும் டென்ஷனாக்கியுள்ளது.

இதுவரை ஜெயலலிதாவைச் சந்தித்த 4 எம்எல்ஏக்களுமே விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று அறியப்பட்டவர்கள். இவர்களிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் விஜயகாந்த்.

அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் இருவருமே சினிமா துறையைச் சேர்ந்தவர்கள். கட்சியில் கிளம்பிய எதிர்ப்பபைக் கூட பொருட்படுத்தாமல் இவர்களுக்கு எம்எல்ஏ சீட் கொடுத்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் 8 எம்எல்ஏக்களுக்கும், பின்னர் 14 எம்எல்ஏக்களுக்கு அதிமுக குறிவைத்ததாகக் கூறப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் ஓடுகிற வேகத்தைப் பார்த்தால் 29 எம்எல்ஏக்களையுமே இழுத்துவிடுவார்கள் போலிருக்கிறது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்!

-என்வழி செய்திகள்

ஒருவழியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது ‘தேமுதிக உடைப்பு வேலை’.. தாவத் தயார் நிலையில் இரு எம்எல்ஏக்கள்!

October 26, 2012 by  
Filed under election, election 2011, Nation, Politics

ஒருவழியாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது ‘தேமுதிக உடைப்பு வேலை’.. தாவத் தயார் நிலையில் இரு எம்எல்ஏக்கள்!

சென்னை: விஜயகாந்தின் தேமுதிகவைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்தனர். ‘புரட்சித் தலைவி அம்மா’ சிறந்த ஆட்சியைத் தருவதாக பாராட்டு மழை பொழிந்தனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் 29 இடங்களை பிடித்த தே.மு.தி.க எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார்.

ஆனால் இந்தக் கூட்டணி உருவான வேகத்திலேயே உடைந்துபோனது. சட்டமன்றத்தில் விஜயகாந்த் நாக்கை மடித்து, கையை உயர்த்திப் பேச, கடுப்பான முதல்வர் பதிலுக்கு காய்ச்சி எடுக்க… தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்துக்குப் போவதையே நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

இப்போது அரசையும் ஜெயலலிதா ஆட்சியையும் குறிப்பாக ஜெயலலிதாவையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜயகாந்த்.

இந்நிலையில், மதுரை மத்திய தொகுதி தேமுதிக  எம். எல்.ஏவான ஆர்.சுந்தர்ராஜன், திட்டக்குடி  தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் க.தமிழழகன் ஆகியோர் இன்று தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சென்னை கோட்டையில் சந்தித்தனர்.

அவர்கள் முதல்வருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ‘புரட்சித் தலைவி அம்மா தலைமையில் தமிழக அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக’க் கூறிப் பாராட்டினர். மேலும், தங்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசு தாராள நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

‘அப்படியே ஆகட்டும்’ என பெருமகிழ்ச்சியுடன் பதிலளித்த முதல்வர், அவர்கள் இருவரையும் வழியனுப்பி வைத்தார்.

இந்த சந்திப்பின் மூலம், தேமுதிக உடைப்பு வேலை அமோகமாக ஆரம்பித்திருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும், அவசரமாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய ஆரம்பித்துள்ளார் விஜயகாந்த்.

இன்னும் எட்டு எம்எல்ஏக்கள் வரை இதேபாணியில் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடும் என அதிமுக தரப்பு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்த நிற்கப் போவதாக அறிவித்துள்ள விஜயகாந்தை, தேர்தலுக்கு முன்பே ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும் என்பது செங்கோட்டையன் அன்ட் கோவுக்கு முதல்வர் தந்துள்ள அசைன்மென்ட் என்கிறார்கள்.

இந்த புத்திசாலித்தனம், திட்டமிடலை ஆட்சித் திறனில் காட்டலாமே!

தமிழகத்தில் இப்போ கெட்டவங்க ஆட்சி நடக்குது! – விஜயகாந்த்

June 2, 2012 by  
Filed under General, Nation, Politics

அண்டா திருடன் மத்திய அரசு – குண்டா திருடன் மாநில அரசு! – விஜயகாந்த்

சென்னை: உரலுக்கு ஒரு பக்கம் இடியென்றால், மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி’ என்பதுபோல், மத்திய, மாநில அரசுகள் போட்டிபோட்டு விலையை ஏற்றுகின்றன, என்றார் விஜயகாந்த்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இன்று திருச்சியில் தேமுதிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:

எண்ணெய் நிறுவனங்கள் விலை ஏற்றி விட்டதாக மத்திய அரசும், மின்சார ஒழுங்கு முறை ஆணையமும், மின் கட்டணத்தை உயர்த்தியதாக தமிழக அரசும் கூறுகின்றன.

அப்படியென்றால் அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இயங்குகின்றனவா இந்த நிறுவனங்கள்?

எண்ணெய் நிறுவனத்துக்கும், ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் நாம் ஓட்டளிக்கவில்லை. இவர்களை நம்பித்தானே ஓட்டளித்தோம். யார் மீதோ பழிபோட்டு தப்பித்துக் கொள்கின்றார்களே…

நாட்டில் அனைத்து பொருள்கள், பணிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. பெட்ரோலுக்கு நிரந்தர விலை வைக்க வேண்டும். விலை நிர்ணயம் செய்தால், மக்கள் நிம்மதியாக இருப்பர்.

ஐந்து ஆண்டு இதுதான் விலை என்று கூற வேண்டும். அதன்பின், ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ விலை உயர்த்த வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லட்சத்து 3,000 கோடி ரூபாய் நஷ்டம் என்கின்றனர். வரி மூலம், ஒரு லட்சத்து 85 ஆயிரம்கோடி லாபம் கிடைக்கிறது. லாபத்தில் தான் நஷ்டம்.

ஒடிசாவில் 19 சதவீதம், டெல்லியில் 18 சதவீதம் பெட்ரோலுக்கு மாநில அரசு வரி போடுகின்றன. ஆனால் தமிழகத்தில், 27 சதவீதம் வரி!

கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் வரி மூலம் வருவாய். அதில், 1,000 ரூபாய் மக்களுக்காக விட்டுக் கொடுக்கலாமே.

தமிழக அரசு வரியைக் குறைத்தால் தமிழகத்திலும் பெட்ரோல் விலை குறையும். ஜெயலலிதா மின் கட்டணம் உயர்த்தி, குறைத்தது போல், மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தி கொஞ்சம் குறைக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் மின் பிரச்னை தீரும் என்றார். அது இன்னும் அதிகமானதுதான் மக்கள் கண்டது.

ஒழுங்கா ஆளுங்க…

தமிழகத்தை ஒழுங்கா ஆளுங்க; மக்கள் வரிப்பணத்தில் இந்தியா முழுவதும் தமிழக அரசு விளம்பரம் செய்கிறது. இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? கட்சி பணமா? இல்லை. மக்களின் வரிப்பணம்.

சட்டசபையில் யாரோ அமைச்சர் மூனுசாமியோ முனுசாமியோ பேசினாராம், ‘உங்க தலைவர் ஊரை சுத்தி சுத்தி வந்து பேசினாரு. எங்கம்மா ஒரு நாள் வந்து பேசுனதுக்கே சங்கரன்கோவிலில் ஜெயிச்சுட்டோம்,’ என்கிறார். 2004 லோக்சபா தேர்தலில் 40 தொகுதியிலும் உங்க அம்மா (ஜெயலலிதா) ஒரு தொகுதி விடாம அனைத்திலும் பேசினாரே? என்ன ஆச்சு? 40 தொகுதியிலும் தோத்தீங்க!

சங்கரன்கோவிலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக நின்றபோது, 32 பேரை அனுப்புனீங்க. இன்று புதுக்கோட்டையில் நான் ஒரு ஆள்தான். 52 பேரை அனுப்புறீங்க. ஜெயலலிதாவுக்கு பயம். எனக்கு துளிகூட பயம் கிடையாது.

கெட்டவங்க ஆட்சி…

நில அபகரிப்பு என்று கூறி அரசியல் பழிவாங்கலை ஆரம்பித்துள்ளீர்கள். அதே நிலைதான் நாளை உங்களுக்கும் திரும்பும். இன்றைக்கு வெயில் காலம் முடிந்தும் வெயில் குறைந்ததா? நல்லவங்க யாரும் ஆட்சி செய்யலை. கெட்டவங்க தான் ஆட்சி செய்றாங்க.

2004ல் சுனாமி வந்தபோது, திருச்சியில் திருமண மண்டபம் எரிந்தபோது, கும்பகோணத்தில் பள்ளி எரிந்து குழந்தைகள் இறந்தபோதெல்லாம் யாரோட ஆட்சி நடந்தது? இப்ப பூகம்பம், சுனாமின்னு வருகிறது. இப்ப யாரோட ஆட்சி நடக்குது? நல்லவங்க ஆட்சி இருந்தா இதெல்லாம் நடக்குமா… நடக்காது!

நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்க இந்தியா முழுவதும் புதிய கட்சிகள் வர வேண்டும். கடந்த தேர்தலில் மக்கள் கூறியதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன். ஆனால் அந்த கூட்டணியினால் எந்த பயனும் ஏற்படவில்லை.

மாநில அரசை எதிர்த்து பேசினால் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி என்கின்றனர். கடந்த முறை கருணாநிதி ஆட்சியில் இருந்ததால், அவரை எதிர்த்து பேசினேன். இந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்த்து பேசுகிறேன். மக்களுக்கு எதிரானவர்களை நான் விமர்சனம் செய்வேன்.

சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் பேச முடியவில்லை. எந்த கேள்விக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. எல்லாவற்றுக்கும் 110 விதியின் கீழ் ஜெயலலிதாவே அறிக்கை படித்து விடுகிறார். ஜெயலலிதா பேசும் போது அமைச்சர்கள் மேஜையை மட்டும் தட்டுகிறார்கள், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அண்டா திருடன் மத்திய அரசு – குண்டா திருடன் மாநில அரசு போன்ற கோஷங்களை எழுப்பினர்.

-என்வழி செய்திகள்

கறிவேப்பிலை மாதிரி என்னைத் தூக்கிப் போட்டார் ஜெ – 2014 தேர்தலில் தேமுதிக பலம் தெரியும்! – விஜயகாந்த்

May 12, 2012 by  
Filed under election, election 2011, Nation, Politics

கறிவேப்பிலை மாதிரி என்னைத் தூக்கிப் போட்டார் ஜெ – 2014 தேர்தலில் தேமுதிக பலம் தெரியும்! – விஜயகாந்த்

சென்னை: என்னை வெறும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி தூக்கிப்போட்டுவிட்டார் ஜெயலலிதா. வரும் 2014- மக்களைத் தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

2011 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக- தேமுதிக, அடுத்த சில மாதங்களில் பரம எதிரிகளாக மாறிவிட்டன.

எங்கள் ஆதரவினால்தான் அதிமுக ஜெயித்தது என விஜயகாந்த் போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைக் கண்டு கொள்ளாத ஜெயலலிதா, வரும் மக்களவைத் தேர்தலில் யாருடைய கூட்டணியும் இல்லாமல் 40 தொகுதிகளையும் வென்று காட்டுவேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாங்கள் இல்லாமல் போயிருந்தால் அதிமுக தோற்றிருக்கும் என்று கூறியுள்ளார்.

அந்த பேட்டியின் ஒரு பகுதி:

2011-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி ஏற்பட்டது. தேர்தலின்போது தே.மு.தி.க. மிகவும் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டது. அதன் காரணமாகத்தான் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

அதிமுக பெற்ற வெற்றியில் எங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. இந்த உண்மையை புரிந்து கொள்ளவும், தேமுதிக வுக்கு உள்ள பலத்தை அறிந்து கொள்ளவும் நீங்கள் 2016-ம் ஆண்டு வர உள்ள தமிழக சட்டசபை தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலிலேயே தேமுதிகவுக்கு உள்ள பலம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டுவோம். 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. அப்போது என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தேமுதிக பலத்தைக் காட்டும். அது மட்டுமின்றி 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக ஆற்றிய பங்களிப்பை மக்களுக்கு எடுத்துக்காட்டும்.

கடந்த ஆண்டு மக்கள் மனநிலை திமுக ஆட்சிக்கு எதிராக இருந்தது. அதனால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டிய லட்சியத்துடன் தேமுதிக செயல்பட்டது. எனவேதான் கண்ணை மூடிக்கொண்டு அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தேன். அதிமுகவுடன் கூட்டணி சேர நான் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை.

மேலும் எனக்காக நான் எந்த ஒரு சலுகையையும் எதிர்பார்க்கவில்லை. சேலத்தில் நடந்த மாநாட்டின்போது எனது கட்சிக்காரர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்களது கருத்துக்கு ஏற்ப நான் ஒத்துப் போனேன்.  தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அதிமுக எப்படியெல்லாம் முயன்றார்கள் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.

என்னை ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்க விடாமல் கூட்டணிக்காக துரத்தினார்கள். என்னை தொடர்பு கொள்ள அதிமுகவினர் எல்லா வழிகளையும் பயன்படுத்தினார்கள். எத்தனை தடவை போனில் பேசினார்கள் என்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும்.

தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத ஓட்டுக்கள் இருப்பதாகவும், சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அது அந்த கூட்டணியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று பத்திரிகைகள் கணித்திருந்தன. ஆனால் அந்த தேர்தலில் தேமுதிகவை தனித்துப் போட்டியிட வைக்க திமுக-காங்கிரஸ் முயன்றது எல்லாருக்கும் தெரியும். என்றாலும் எனது கட்சிக்காரர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து நான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டேன்.

தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்ததும் அவர்கள் மாறிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அணுகுமுறை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். எனவே கூட்டணி முறிவு பற்றி நான் ஆச்சரியம் அடையவில்லை. ஒருவரது தனிப்பட்ட குணம் ஒருபோதும் மாறாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

என்னை கறி வேப்பிலை மாதிரி பயன்படுத்தி விட்டு, பிறகு ஓரத்தில் தூக்கிப்போட்டு விட்டார்கள். சட்டசபை கூட்டத் தொடரில் நான் பங்கேற்காதது பற்றி விமர்சிக்கிறார்கள். சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்துவதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுப்பதில்லை.

சட்டசபை என்பது அடிமைகள் தங்கள் தலைமையை புகழ்ந்து பேசும் சபை போல ஆகி விட்டது. அங்கு போய் நான் என்ன செய்ய முடியும்? மிகவும் முக்கியமான பிரச்சினைகள் மீதுதான் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசிப்பார்கள். ஆனால் தற்போது ஒவ்வொரு துறை மீதான விவாதத்தின் போதும் 110-வது விதியின் கீழ் முதல்வர் அறிக்கை வாசிக்கிறார்.இப்படி செய்தால் அமைச்சரவையில் மந்திரிகள் என்ன நோக்கத்துக்காக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

முதல்வர் ஒரு அறிவிப்பு செய்ததும் அது பற்றி புகழ்ந்து, பாராட்டி பேச மட்டுமே உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். விமர்சனம் செய்து பேச யாருக்கும் அனுமதி கொடுக் கப்படுவதில்லை.

இந்த நிலையில் நான் சட்டசபைக்கு வரவில்லை என்று விமர்சிக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது சட்டசபைக்கு வருவதை தவிர்த்தார்கள்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

-என்வழி செய்திகள்

கொஞ்சம் சோகம்… கொஞ்சம் தத்துவம் – கேப்டன் டி வி டைமிங்!

கொஞ்சம் சோகம்… கொஞ்சம் தத்துவம் – கேப்டன் டி வி டைமிங்!

ன்று சங்கரன்கோயில் இடைத்தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வந்துகொண்டிருந்த நேரம்…

அத்தனை சேனல்களும் – திமுக ஆதரவு சேனல்கள் உள்பட – தேர்தல் முடிவுகளை அறிவித்துக் கொண்டிருக்க, கேப்டன் டிவி மட்டும் தனி ட்ராக் எடுத்துவிட்டது.

விஜயகாந்தின் தத்துவம் மற்றும் சோகப் பாடல்களை ஒளிபரப்பி தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தது அந்த சேனல். விஜயகாந்த் கட்சி வேட்பாளர் கடைசி இடத்தைப் பிடித்த செய்தி வெளியான போது, அதில் ஒளிபரப்பான முக்கியமான பாடல், ‘தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான்…”

இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் ‘கேப்டன் நேரம்!’

கேப்டன் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நல்ல சினிமா ரசனை உள்ளவர் போலிருக்கிறது. கேப்டன் டிவி இப்படி டைமிங்காக நிகழ்ச்சி ஒளிபரப்புவது இது முதல்முறையல்ல.

ஏற்கெனவே விஜயகாந்த் தொண்டர்களுடன் உண்ணாவிரதம் இருந்தபோது, அந்த நிகழ்ச்சியை சன் செய்தி நேரடி ஒளிபரப்பாக காட்டிக் கொண்டிருக்க, கேப்டன் டிவியில் விஜயகாந்தின் சோகப் பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.

அப்போது இடம்பெற்ற பாட்டு, ‘நானோர் பரதேசி… நல்லோர் கால் தூசி’!

-என்வழி

தமிழக அரசியலில் தேமுதிக இடம் எதுவென்பதை மக்கள் காட்டிவிட்டார்கள் – ஜெ

March 21, 2012 by  
Filed under election, election 2011, Nation, Politics

தமிழக அரசியலில் தேமுதிக இடம் எதுவென்பதை மக்கள் காட்டிவிட்டார்கள் – ஜெ

சென்னை: சங்கரன்கோவில் தொகுதி மக்கள் எப்போதுமே அதிமுகவுக்குத்தான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்போது தேமுதிகவுக்கு அவர்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர். அதிமுகவுக்கு வாக்களித்த அத்தனை பேருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், துணை சபாநாயகர் தனபால், பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரின் மகன்களின் திருமணம் உள்பட 7 அதிமுக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழா சென்னையில் இன்று நடந்தது.

அதிமுகவுக்கு மிகவும் ராசியான வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதலவர் ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை  வாழ்த்தினார்.

அப்போதுதான் சங்கரன்கோவில் தேர்தல் முடிவு அவருக்கு சொல்லப்பட்டது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெறும் செய்தியை அறிந்து கூடியிருந்த அத்தனை பேரும் உற்சாகத்தில் மூழ்கினர். வாழ்த்தொலிகள் முழங்கின. முதல்வர் முகத்திலும் தாங்க முடியாத சந்தோஷம்.

மணமக்களை ஆசிர்வதித்து ஜெயலலிதா பேசும்போது, “தேர்தல் முடிவைக் குறிப்பிட்டுக் கூறுகையில்,  எப்போதுமே சங்கரன்கோவில் தொகுதி மக்கள்  அதிமுகவைத்தான் ஆதரித்து வந்துள்ளனர். இப்போதும் அது போலவே ஆதரவு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிகவுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுடைய இடம் எது என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள் தேமுதிகவினர். சவால் விட்டவர்களுக்கு மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர்,” என்றார் ஜெயலலிதா.

-என்வழி செய்திகள்

இப்போ திராணிய நிரூபிக்க வேண்டியது விஜயகாந்த் அல்ல… ஜெ மந்திரிகள்!

February 22, 2012 by  
Filed under Cartoon, Nation, Politics

 இப்போ திராணிய நிரூபிக்க வேண்டியது விஜயகாந்த் அல்ல… ஜெ மந்திரிகள்!

 

‘சங்கரன் கோயிலில் சொதப்பினா, மந்திரியா திரும்பவே மாட்டீங்கன்னு சொல்லி புது மந்திரிங்க லிஸ்ட்டையும் கொடுத்தனுப்பிட்டாங்க அம்மா!”

-கருத்து: என்வழி

படம்: அவுட்லுக்

விஜயகாந்த் கட்சியும் வேட்பாளரை அறிவித்தது – சங்கரன் கோயிலில் நான்கு முனைப் போட்டி

February 20, 2012 by  
Filed under election, election 2011, Nation, Politics

விஜயகாந்த் கட்சியும் வேட்பாளரை அறிவித்தது – சங்கரன் கோயிலில் நான்கு முனைப் போட்டி

சென்னை: திராணி இருந்தால் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுங்கள் பார்ப்போம் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதாவின் சவாலைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

தேமுதிக சார்பில் சங்கரன்கோவிலில் முத்துக்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலில் மார்ச் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பே அதிமுக தனது வேட்பாளராக என்ஜீனியர் முத்துச்செல்வியை அறிவித்தது.

பின்னர் திமுக தனது வேட்பாளராக ஜவகர் சூரியகுமாரை அறிவித்தது. அதேபோல மதிமுகவும் தனது வேட்பாளராக டாக்டர் சதன் திருமலைக்குமாரை அறிவித்தது.

இந்த நிலையில் தேமுதிகவின் நிலை தெரியாமல் இருந்து வந்தது. நாளை கூடும் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்றே தனது கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டார் விஜயகாந்த்.

தேமுதிக சார்பில் முத்துக்குமார் போட்டியிடுவார் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற இருக்கின்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழகத்தின் துணை செயலாளர் மு. முத்துக்குமார், பி.இ,எம்பிஏ வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. பயின்றவர். எம்பிஏ பட்டப் படிப்பு அழகப்பா பல்கலை கழகத்தின் தொலை தூர கல்வி மூலம் முடித்துள்ளார். கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டவர். இவர் சங்கரன்கோவில் நகரத்தில் வசிக்கின்றார்.

கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், கழக ஆதரவு அணிகளை சேர்ந்தவர்களும் அயராது தேர்தல் பணியாற்றி வெற்றி தேடி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். சங்கரன்கோவில் தொகுதியை சேர்ந்த வாக்காளர் பெருமக்களும், பொதுமக்களும் தங்கள் மேலான ஆதரவை தர வேண்டுகிறேன்,” என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

இதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் தற்போது நான்குமுனை போட்டி உருவாகியுள்ளது. அதேசமயம், பொது வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு மங்கியுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் தேமுதிக, திமுக இடையே உடன்பாடு ஏற்பட்டால் இவர்களில் யாராவது ஒருவர் விலகி விடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அதிமுகவுக்கு சங்கரன் கோயில் வெற்றி கவுரவப் பிரச்சினை என்றால், திமுகவுக்கு மதிமுக முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்ற பிரச்சினை!

-என்வழி செய்திகள்

‘ஏய்… உட்கார்றா!’

“ஏய்.. உட்கார்றா முதல்ல… கை நீட்டி பேசற வேல வெச்சிக்காத.. மவனே!

-டயலாக் நமதல்ல… எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துடையது!

தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்!-ஜெ.ஆவேசம்!

February 1, 2012 by  
Filed under election, election 2011, Nation, Politics

தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்!-ஜெ.ஆவேசம்!

சென்னை: தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன். அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன், என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவரது பேச்சின்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக அவர் கோபத்துடன் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எனக்கு சற்றும் விருப்பமில்லை. ஆனால் அதிமுக தொண்டர்கள் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று விரும்பியதால் அவர்களின் விருப்பப்படியே கூட்டணி வைத்தேன். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட கட்சியினரின் விருப்பத்தை மதித்துக் கூட்டணி
வைத்தேன்.

ஆனால் தகுதியே இல்லாத அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் இப்போது விஜயகாந்த் இருப்பதற்கும், அவரது கட்சி இந்த மாண்பு மிகுந்த சட்டசபைக்குள் நுழைவதற்கும் அதிமுகவும், அதன் தொண்டர்களும், எங்களது உழைப்பும்தான் காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைத்திருக்காது.

இனிமேல் தேமுதிவுக்கு இறங்குமுகம்தான். அதை நான் திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் இன்று பேசிய பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானது. சபையின் மாண்பை அவரது பேச்சு குலைத்து விட்டது,” என்று கடுமையாக சாடினார் ஜெயலலிதா

-என்வழி செய்திகள்

‘எதிர்த்தா பேசுகிறீர்கள்..?’ – விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்களை ‘தூக்கி வீசிய’ காவலர்கள்!

February 1, 2012 by  
Filed under election, election 2011, Nation, Politics

சென்னை: சங்கரன் கோயில் தேர்தலில் தனியாக நிற்க திராணி இருக்கிறதா என முதல்வர் ஜெயலலிதா பேசியதற்கு தேமுதிகவினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பி அமளியில் இறங்கியதால் விஜயகாந்த உள்ளிட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் அவைக் காவலர்களை விட்டு குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றச் செய்தார் சபாநாயகர்.

அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இன்று சட்டமன்றத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. தானே புயல் நிவாரணப் பணிகளில் தாமதம் என்ற தேமுதிக குற்றச்சாட்டால் ஏற்கெனவே கடும் கோபத்திலிருந்தார் முதல்வர் ஜெயலலிதா.

சட்டசபை இன்று கூடியதும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு சந்திரகுமார் மீண்டும் எழுந்து இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்டார்.

இந்த நிலையில், தேர்தல் தோல்வி பயத்தில் இப்படி விலை உயர்வை தள்ளிப் போட்டதாக தேமுதிக குற்றம்சாட்ட, இரு கட்சிகளுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது.

ஏற்கெனவே தங்கள் தயவில்தான், 1 எம்எல்ஏவாக இருந்த தேமுதிக உறுப்பினர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து, எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது என்ற காட்டத்திலிருந்தார் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது கட்சிக்காரர்களும். இந்த நிலையில், நமது தயவில் பதவி, அந்தஸ்து பெற்றுவிட்டு, நம்மையே சீண்டுகிறார்களே என்ற கோபம் காரணமாக இன்று அவையில் சீறித் தள்ளிவிட்டார் ஜெயலலிதா.

“பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் விலையை உயர்த்திய பிறகு வரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறோம். உங்களுக்குத் திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்.

நாங்கள் அடையப் போகிற மகத்தான வெற்றியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்ககள். உங்களால் தடுக்க முடியுமா என்பதை யோசித்துப் பேசுங்கள்”, என்று சவால்விட, உடனே கொஞ்ச நேரம்  அமைதி காத்து, பின் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர் தேமுதிகவினர்.

விஜயகாந்த் எழுந்து, இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதானே, என்றார்.

அதற்கு மீண்டும் எழுந்த ஜெயலலிதா, ‘தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது’ என கூறினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேசைகளை பலமாக தட்டி ஒலி எழுப்பினர்.

பதிலுக்கு தேமுதிகவினர் பேச, அதிமுகவினரும் பதில் குரல் எழுப்பியதால் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி விஜயகாந்த் உள்பட அனைத்து தேமுதிக உறுப்பினர்களையும் அவையிலிருந்து வெளியேற்ற மார்ஷலுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர் ஜெயகுமார்.

இதையடுத்து அவைக் காவலர்களுடன் மார்ஷல் உள்ளே புகுந்து தேமுதிக எம்.எல்.ஏக்களை -விஜயகாந்த் உள்பட – குண்டுக்கட்டாக தூக்கி அவையிலிருந்து வெளியேற்றினர்.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று எதிர்க்கட்சியான பின்னர் முதல் முறையாக அக்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த் குற்றச்சாட்டு

‘எங்களை மிரட்டும் வகையில் சட்டமன்றத்தில் கையை நீட்டி நீட்டிப் பேசியது அதிமுகவினர்தான். உண்மையைப் பேசினால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மிரட்டிப் பார்க்கிறார்கள். தேமுதிகவினர் எந்த வகையில் குந்தகம் விளைவிக்கவில்லை’, என்று விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

‘ஆளுநர் ஆட்சியின் கீழ் நடத்துங்க தேர்தல.. தனியா நிக்கிறேன்!’

சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியா என்று கேட்டதற்கு பதிலளித்த விஜயகாந்த், “ஆளுநர் ஆட்சிக்கு கீழ் தேர்தல் நடத்தினால் சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட தயார்,” என்று கூறினார்.

“இதைத்தான் நான் அவையில் கூறினேன். அதற்காக எங்களை வெளியேற்றிவிட்டனர். இவங்க மட்டும் தனியா போயிருந்தா, உண்மை நிலை தெரிந்திருக்கும். மக்களுக்கும் அவங்களோட பலம் தெரிந்திருக்கும். அது தெரியாமல் நாங்களாக ஜெயித்தோம் என்று கூறினால் எப்படி.

போன ஆட்சியில்  நடந்த ஒரு இடைத் தேர்தலில் கூட அதிமுக ஜெயிக்கவில்லை. பென்னாகரத்தில் டெபாசிட்டே வாங்கவில்லை. ஏன் முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதாவே ஒரு தொகுதியில் தோற்றாரே. அது மறந்து விட்டதா.

மந்திரி பேசுகிறார் உட்கார் என்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் எதையுமே பேசக்கூடாது என்றால் எப்படி. எதிர்க்கட்சித் தலைவர் என்று எனக்கு அந்தஸ்து கொடுத்து விட்டு பேசக் கூடாது என்றால் எப்படி. இதை என்னவென்று சொல்வது…

நான் பேசும்போது ஆளுங்கட்சித் தரப்பில் ஒருவர் சத்தமாக பேசினார். என்னய்யா கையை நீட்டிப் பேசுறே என்று நான் கேட்டால் அதைத் தப்பு என்கிறார்கள். கையை நீட்டிப் பேசினால் எங்க ஆளுங்களும் சும்மா இருக்க மாட்டாங்க. யாருமே சும்மா இருக்க மாட்டாங்க

2006ம் ஆண்டு தேர்தலின் போது மின்னணு இயந்திரத்தை குறை கூறியவர்தான் ஜெயலலிதா. அந்தத் தப்பு இவர் ஆட்சியில் மட்டும் நடக்காதா?,” என்றும் விஜயகாந்த் கூறினார்.

-என்வழி செய்திகள்

தனியா நிற்க திராணி இருக்கா? -தேமுதிகவுக்கு ஜெ. சவால்!

February 1, 2012 by  
Filed under election, election 2011, Nation, Politics

திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் தனித்து நின்று பாருங்கள்-தேமுதிகவுக்கு ஜெ. சவால்!

சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறாம். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். நாங்கள் அங்கு மகத்தான வெற்றியை பெறப் போகிறோம். உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள், என்று தேமுதிகவுக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பகிரங்கமாக சவால் விடுத்தார்.

இதனை அவையில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

சட்டசபையில் நேற்றே தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே லடாய் தொடங்கி விட்டது. தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தானே புயல் நிவாரணப் பணிகள் குறித்து புகார் கூறி பேசியதற்கு முதல்வர் ஜெயலலிதா உடனடியாக சூடான பதில் கொடுத்தார். மேலும் தானே நிவாரணப் பணிகளில் தமிழக அரசு உலக சாதனை செய்துள்ளதாகவும், அதனை விவரமாக பிப்ரவரி 4-ம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும் சவால் விட்டார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் பிரச்சினை வெடித்தது. தேர்தல் தொடர்பாக தேமுதிகவினர் பேசியதால் பெரும் அமளி துமளி வெடித்தது. அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகளை நீட்டியபடி பேசினர்.

திராணி இருக்கா தேமுதிகவுக்கு?

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாகப் பேசினார். அவர் கூறுகையில், “தானே புயல் நிவாரணப் பணிகள் குறித்து நான் பலமுறை விளக்கம் அளித்து விட்டேன். அதற்குப் பிறகும் அரசைக் குறை கூறிப் பேசி வருகிறார்கள் தேமுதிக உறுப்பினர்கள்.

இப்போதுசொல்கிறேன், பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் விலையை உயர்ததிய பிறகு வரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறோம். உங்களுக்குத் திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்.

நாங்கள் அடையப் போகிற மகத்தான வெற்றியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்ககள். உங்களால் தடுக்க முடியுமா என்பதை யோசித்துப் பேசுங்கள் என்று ஆவேசமாக பேசியபடி சவால் விடுத்தார் ஜெயலலிதா.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேருக்கு நேர் பார்த்தபடி பேசினார் ஜெயலலிதா. அப்போது விஜயகாந்த் அமைதியாக ஜெயலலிதாவைப் பார்த்தபடி இருந்தார்!

-என்வழி செய்திகள்

ஒருவழியா எம்ஜிஆர் ‘தப்பிச்சார்’!

ஒருவழியா எம்ஜிஆர் ‘தப்பிச்சார்’!

இந்த சமாச்சாரம் ‘ஹஸாரே கோஷ்டிக்கு’ தெரியுமா?

தேமுதிக… சிங்காரித்து மூக்கறுத்த ஜெயலலிதா!

September 23, 2011 by  
Filed under election, election 2011

தேமுதிக… சிங்காரித்து மூக்கறுத்த ஜெயலலிதா!

நாம் முன்பே சொன்னது போல, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

கூட்டணி கட்சிகளின் தயவு இந்தத்தேர்தலைப் பொறுத்த வரை தனக்குத் தேவையே இல்லை என்று முடிவு செய்துவிட்டார். கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் போனால் போகட்டும் என சில தொகுதிகளை அவர் தரக்கூடும். அவரது இந்த முடிவில் தவறு காண ஒன்றுமில்லை!

41 இடங்களைக் கொடுத்து, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக தேமுதிக அமரக் காரணமாக இருந்த அதே ஜெயலலலிதா, தேர்தல் முடிந்து 100 நாட்களைக் கடந்த கையோடு விஜயகாந்தின் தேமுதிகவைக் கழட்டி விட்டுள்ளார்.

எனவே வேறு வழியின்றி, அதிமுக ஏமாற்றிவிட்டதென்ற புலம்பலுடன் தனியாகப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறி, தனியாகவே நின்று வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக என்ற குதிரையில் ஏறி ஜம்மென்று சட்டசபைக்குள் போய் விட்டது. ஆனால் இப்போது ஏற்றிய இடத்திலேயே மீண்டும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அதிமுக. இதற்குப் பெயர்தான் சிங்காரித்து மூக்கறுப்பதென்பது!

எனவே முன்பைக் காட்டிலும் பெரும் நெருக்கடி விஜயகாந்துக்கு. இந்த முறை தனது செல்வாக்கை அவர் நிரூபித்தே தீரவேண்டிய கட்டாயம். காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்றால், ஒரேயடியாக வாக்காளர்கள் புறக்கணித்துவிடுவார்களோ என்ற பயமும் அவருக்கு உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான ஒரு கருத்தைக் கூட எந்தப் பிரச்சினையிலும் அவர் முன் வைத்ததில்லை. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நைஸாக அதிமுகவிடம் அதிக சீட் பெறுவதுதான் அவர் நோக்கமாக இருந்தது.

இதைப் புரிந்து வைத்திருந்த முதல்வர், ஆரம்பத்திலேயே தட்டி வைக்க நினைத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமான பிரிவா என்பது தெரியவில்லை!

ஆனால் ஒரு விஷயத்தில் ஜெயலலிதாவைப் பாராட்டியே தீர வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்ததும், தங்களால்தான் ஜெயலலிதா முதல்வரானார் என்கிற ரீதியில் பேசி வந்த கூட்டணிக் கட்சிகளை, அவரவர் பலம் என்னவென்று காட்டுங்கள்… பிறகு பேசுங்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.

இந்த துணிச்சல் கூட்டணிக் கட்சிகளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… வாக்காளர்களுக்குப் பிடிக்கும்!

-எஸ்எஸ்

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்!!

May 14, 2011 by  
Filed under election, election 2011

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்!!

ட்சி ஆரம்பித்து 8 ஆண்டுகால தடுமாற்றங்களுக்குப் பின் முதல் முறை கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, இந்தத் தேர்தலில் ணிசமான தொகுதிகளுடன் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாகியுள்ளது.

அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது அக்கட்சி.

இந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. ஒற்றுமையில்லாத பிரச்சாரம், ஜெயலலிதா- விஜயகாந்த் இடையிலான ஈகோ மோதல்கள் என பல விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டாலும், அவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை மக்கள்.

இந்தத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர்களே அதிகமாக நிறுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே படுதோல்வி அடைந்துள்ளனர்.

இறுதி நிலவரப்படி தேமுதிக 28 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.ய மாநிலத்தின் ஆளும் கட்சியாக இருந்த திமுக பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையாக் காட்டிலும் இது அதிகம்.

எனவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார். கடந்த தேர்தலில் ஒரேயொரு எம்எல்ஏவாக சட்டசபைக்குச் சென்ற விஜயகாந்த், இந்த முறை 28 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றம் செல்கிறார்.

கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக, இந்தமுறை எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு அட்வான்ஸ் வாழ்த்து சொன்ன ரஜினி

இந்தத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோதே, விஜயகாந்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துச் சொன்ன முதல் விவிஐபி ரஜினிதான். கலைப்புலி தாணு இல்ல திருமண விழாவில், ரஜினியும் விஜயகாந்தும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது, ‘கூட்டணி விஷயம் கேள்விப்பட்டேன். நல்ல முடிவு. வாழ்த்துக்கள்’, என்று பளிச்சென்று கூறி வாழ்த்துத் தெரிவித்தவர் ரஜினி. இதற்கு முந்தைய தேர்தலில், விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றபோது, முதல்வர் முன்னிலையிலே விஜயகாந்தை பகிரங்கமாக ரஜினி பாராட்டியது நினைவிருக்கலாம்.

அதற்கு அடுத்தநாளே (டிசம்பர் 12), ரஜினியின் வாழ்த்து குறித்து கேட்டபோது, ‘அண்ணன் ரஜினிக்கு நன்றி. இன்று அவருக்கு பிறந்த நாள் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்’, என்று கூறியது நினைவிருக்கலாம்.

விஜயகாந்தை தரக்குறைவாக தாக்கிப் பேசினார் என்பதற்காகத்தான், வடிவேலுவுக்கு ‘ராணா’வில் வாய்ப்புத் தரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-என்வழி

ஜெயலலிதாவின் கோவை கூட்டத்தில் பங்கேற்காத விஜயகாந்த்!!

April 7, 2011 by  
Filed under election, General

ஜெயலலிதாவின் கோவை கூட்டத்தைப் புறக்கணித்த விஜயகாந்த்!!

கோவை: கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் புதன்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தொகுதிப் பங்கீடு, இடங்கள் தேர்வு ஆகியவை தொடர்பாக ஜெயலலிதாவும் விஜயகாந்தும் நேரில் சந்தித்துப் பேசவே இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் குழுவினர்தான் பேசி 41 தொகுதிகள் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் வந்து 20 நிமிட நேரம் சந்தித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு உடனே வெளியேறி விட்டார் விஜய்காந்த் .

இந் நிலையில் அதிமுக அதிரடியாக வேட்பாளரை அறிவித்ததில் ஏற்பட்ட கலாட்டாவில் இடதுசாரிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கப் போவதாக ஜெயலலிதாவை விஜய்காந்த் மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் தனது பிரச்சாரத் திட்டத்தை அறிவித்துவிட்டு பயணத்தையும் ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. மேடையில் தனக்கு சமமாக விஜய்காந்துக்கு இடம் தர ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

அதே போல மரியாதை தரத் தெரியாத ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய விஜய்காந்தும் விரும்பவில்லை.இந் நிலையில் பிரச்சாரத்தின்போது அதிமுக கொடிகளைப் பிடிக்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்களை திட்டி, அந்தக் கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானார் விஜய்காந்த்.

இதேபோல திருச்சி பகுதியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா பெயரைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் பெயரைச் சொல்லியோ அவரது கட்சி பெயரைச் சொல்லியோ வாக்கு கேட்கவில்லை.

மேலும் ஜெயா டிவியில் விஜய்காந்தின் பிரச்சாரத்தையோ கேப்டன் டிவியில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தையோ காட்டுவதும் இல்லை. அவ்வளவு ஏன்… இந்தத் தொகுதிகளில் அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் சீமானுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அவரது பிரச்சார கூட்டத்தை தொலைக்காட்சியில் காட்டக் கூடாது என உத்தரவே பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

ஒரே மேடையில்…

இதற்கிடையே ஜெயலலிதாவும், விஜய்காந்தும், இடதுசாரித் தலைவர்களும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய முடியுமா என திமுக கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பி வருவதோடு, ஜெயலலிதாவுக்கும் விஜய்காந்துக்கும் பிரச்சனைகள் நிலவுவதை ‘ஹை-லைட்’ செய்து வருகிறது.

இந் நிலையில் ஜெயலலிதாவை சமீபத்தில் ஓடிப் போய் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், விஜய்காந்தும் நீங்களும் நாங்களும் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துவதே மக்களிடம் நல்ல பெயர் வாங்க உதவும் என்று கூறினாராம்.

ஆனால் நேரம் இல்லையே என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம் ஜெயலலிதா.

ஒற்றுமையில்லாத இந்தத் தலைவர்களின் செயல்பாடுகள் மக்களிடத்திலும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்ற அச்சம், ‘ஆர்எஸ்எஸ் சார்பு’ பத்திரிக்கையாளருக்கும் ஏற்பட்டது. அவரது கடுமையான முயற்சியாலும் இடதுசாரி தேசியத் தலைவர்கள் சிலரது தலையீட்டினாலும், வற்புறுத்தலாலும் விஜய்காந்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் தோன்ற ஒப்புக் கொண்டார்.

விஜயகாந்த் வரவில்லை

இதன்படி கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில்யில் புதன்கிழமை மாலை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதாவும் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தக் கூட்டத்துக்கு விஜய்காந்த் வரவில்லை. தேமுதிக சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே பங்கேற்றார்.

மாலை 6 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கிய நிலையில் ஊட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவும் வர தாமதமாகிவிட்டது. இதனால் அவர் வரும் முன்பே கூட்டம் தொடங்கிவிட்டது. கூட்டம் தொடங்கிய பின்னரே ஜெயலலிதா வந்து சேர்ந்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் ராஜா எம்.பி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் ஜெயலலிதா ஒரே மேடை ஏறி, அதில் வைகோ பெயரை ஜெயலலிதா கூறியதும் மக்கள் கூட்டம் ஆராவாரம் செய்ய, ஜெயலலிதாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. கூட்டத்தில் அதிகமான மதிமுக கொடிகள் இருந்ததற்காக அதிமுக நி்ர்வாகிகளைக் கூப்பிட்டு ஜெயலலிதா கடிந்து கொண்டதாக செய்திகள் வந்ததும் நினைவிருக்கலாம்.

இந் நிலையில் இன்றைய கூட்டத்தில் அதிமுக கொடிகளை விட குறைவான அளவிலேயே மற்ற கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் இருக்குமாறு அதிமுக நிர்வாகிகள் பார்த்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் தனக்கும் தேமுதிகவுக்கும் உரிய மரியாதையை ஜெயலலிதா தர மாட்டார் என்பதாலேயே விஜய்காந்த் இதில் பங்கேற்கவில்லை என்கிறார்கள்.

ஆனால் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “விஜயகாந்த் இப்போது அதிமுக வேட்பாளருக்குத்தான் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். அதனால் வரமுடியவில்லை. அம்மாவிடம் சொல்லுங்கள், அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்’ என்று என்னிடம் கூறியுள்ளார். அவர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை”, என்றார்.

2001 ஃப்ளாஷ்பேக்…

2001ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது காங்கிரஸ். அப்போது விழுப்புரத்தில் ஜெயலலிதாவும் சோனியாவும் கூட்டாக பேச பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சோனியா விழுப்புரம் வந்து இரண்டு மணி நேரம் காத்திருக்க, ஜெயலலிதா வரவேயில்லை. சோனியா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத அவமானம் இதுதான். இந் நிலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளுக்குப் பின் விஜய்காந்துடன் கூட்டத்தில் பேச ஜெயலலிதா ஒப்புக் கொண்ட நிலையில், விஜய்காந்த் திடீரென வராமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

-என்வழி

‘ஆஃப் அடிச்சாதான்…!’ – திகில் கிளப்பும் விஜயகாந்த்

April 3, 2011 by  
Filed under General

‘ஆஃப் அடிச்சாத்தான் திமுவுக்கு ‘ஆப்பு’ அடிக்க முடியும்!’ – விஜயகாந்த்

திண்டுக்கல்: திமுகவினரின் வாய்க்கும் மீடியாவுக்கும் தேடிப் போய் வேலை வைப்பதே விஜயகாந்தின் வேலையாகிவிட்டது.

லேட்டஸ்டாக ‘திமுகவுக்கு ஆப்படிக்க, ஆஃப் அடிச்சாதான் சரியா வரும்’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே விஜயகாந்த்தை தனது பிரசாரக் கூட்டங்களிலெல்லாம் தாறுமாறாக விமர்சித்து வருகிறார் நடிகர் வடிவேலு.

இந்த நிலையில் விஜயகாந்த்தும் தன் பங்குக்கு திமுகவினர் மற்றும் ஆளுங்கட்சிக் கூட்டணியினரின் வாயில் வலியப் போய் சிக்கிக் கொள்கிறார். சமீபத்தில், தர்மபுரியில் நடந்த பிரசாரத்தின் போது சொந்தக் கட்சி வேட்பாளரையே போட்டுஅடித்து விட்டார் விஜயகாந்த். பின்னர் ‘ஆமா அடிச்சேன். என் ஆளைத்தானேய்யா அடிச்சேன். என்கிட்ட அடிவாங்கினா மகாராஜனாயிடுவான்’, என்று அடுத்த காமெடியை அரங்கேற்றினார்.

ஆனால் விஜயகாந்த் மனைவியோ, ‘அவர் யாரையும் அடிக்கவில்லை’ என்கிறார்.

இதை விடிய விடிய ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் டிவிகளில் காட்டி விஜயகாந்த்தை நாறடித்து விட்டனர். தேசிய அளவில் உள்ள என்டிடிவி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகள் கூட இதை விட்டு வைக்கவில்லை. இப்படியெல்லாம் கூட நடக்குமா தமிழ்நாட்டில், என்று பிரணாய் ராய் கேட்ட விதமே, அவர்களின் திகிலைக் காட்டியது!

இந்த நிலையில் ஆளுங்கட்சிக் கூட்டணியினரின் வாய்கள் மெல்வதற்கு மீண்டும் அவலைக் கொடுத்துள்ளார் விஜயகாந்த். அதே நேரம், இது திமுக மீடியாவின் ஒட்டு வேலை என்று விஜயகாந்த் தரப்பு மறுத்துள்ளது. ஆனால் விஜயகாந்த் எந்தக் கருத்தும் சொல்லவில்லை, இதுவரை.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட தர்மத்துப்பட்டியில் பிரசாரம் செய்தார் விஜயகாந்த். அப்போது அவர் பேசுகையில்,

“நானாவது எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டு வெய்யிலில் சுத்துறேன். அவுங்க வர்றாங்களா…. 4 , 5 மணிக்கு மேல வந்து டேய் கருப்பா இதைச் செய், டேய் மாடசாமி அதை செய்னு பேசிட்டுப் போறாங்க.

திமுகவுக்கு ஆப்பு அடிக்கணும். அதுக்கு ‘ஆஃப்’ (மது) அடிச்சாதான் சரிப்பட்டு வரும்,” என்றார்.

விஜயகாந்த்தின் இந்தப் பேச்சால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சன், கலைஞர், மக்கள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர்.

நாளைக்கு என்ன புது மேட்டர் தரப்போறாரோ  ‘கேப்டன்’ என்று நமட்டுச் சிரிப்போடு, அவரது பிரச்சார வேன் பின்னாலேயே துரத்துகிறார்கள் எதிர்க்கட்சி மீடியாக்காரர்கள்!

‘ஒபனிங் நல்லாருக்கு… பினிஷிங் சரியில்லையேப்பா!!’

March 30, 2011 by  
Filed under election, General

வேட்பாளரை அடித்த விஜயகாந்த்: ‘ஒபனிங் நல்லாருக்கு… பினிஷிங் சரியில்லையேப்பா!!’

பொது இடங்களில் கட்சி நிர்வாகிகளை / வேட்பாளர்களை தாறுமாறாக அடிப்பது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வாடிக்கையாகிவிட்டது.

முந்தைய தேர்தல்களின்போது மதுரை, பின்னர் ஸ்ரீரங்கம் ஆகிய ஊர்களில் பிரச்சாத்தின்போது கட்சி நிர்வாகிகளை மக்கள் முன்னிலையிலேயே அடித்த விஜயகாந்த், இந்த தேர்தலிலும் தனது கட்சி வேட்பாளரை அடித்துள்ளார். அதுவும் பட்டப்பகலில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையிலேயே இந்த ‘அடிப்பு வைபவம்’ அரங்கேறியது.

தருமபுரி தொகுதியில் தேமுதிக வேட்பாளராக நிற்கிறார் பாஸ்கரன் என்பவர். இவரை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் விஜயகாந்த். ஒரு இடத்தில் வேனை நிறுத்தி வேட்பாளரை அறிமுகப்படுத்தும் போது, பாஸ்கரன் என்ற பெயரை, பாண்டியன் என்று தவறாக உச்சரித்தார்.

உடனே, அருகிலேயே குனிந்தபடி நின்று கொண்டிருந்த பாஸ்கரன், “அண்ணே பேரை மாத்தி சொல்லிட்டீங்க, என் பேரு பாஸ்கரன்” என்று எடுத்துக் கொடுக்க, விஜயகாந்துக்கு கோபம் வந்துவிட்டதாம். அதை ‘ஏண்டா இப்போ சொல்ற’ என்று கேட்டு பாஸ்கரன் தலை மற்றும் முகத்தில் ஓங்கி அறைய, பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ந்துபோய்விட்டனர்.

முன்னதாக, அவர் பிரச்சாரம் செய்ய வந்த வழியில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் கொடிகளைப் பிடித்தபடி, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்ட நின்று கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்ததுமே டென்ஷனான விஜயகாந்த், கொடிகளை இறக்கச் சொல்லி, திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு போய்விட்டார்களாம் விஜய் ரசிகர்கள்!

கடந்த தேர்தலின்போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சி நிர்வாகி ஒருவரை அடித்துவிட்டார் விஜயகாந்த். இது பெரிய விவகாரமாகக் கிளம்பவே, ‘நாங்க ரெண்டுபேரும் பிரெண்ட்ஸ். அப்படித்தான் அடிச்சுக்குவோம், இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல” என்றார் பின்னர் நிருபர்களிடம். விசாரித்ததில், அந்த நிர்வாகியை இதற்கு முன் நேரில் பார்த்ததுகூட இல்லையாம் விஜயகாந்த்!

இந்த முறை பாஸ்கரனுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறாரோ!

வடிவேலு கிண்டல்…

இந்த நிலையில், விஜயகாந்த் தன் கட்சி வேட்பாளரை அடித்த சம்பவம் குறித்து, தனது பிரசாரத்தின்போது பேசிய வடிவேலு, ‘கட்சி வேட்பாளர் யாருன்னு கூட தெரியாத அளவுக்கு தடுமாறிக்கிட்டிருக்காரு விஜயகாந்த். ஒரு வேட்பாளரை மக்கள் முன் அடிப்பது சரிதானா? “ஆரம்பமெல்லாம் நல்லாதான் இருக்கு… பினிஷிங் சரியில்லையேப்பா’ தன் கட்சி தலைவரை நினைத்துப் புலம்புகிறாராம் அந்த வேட்பாளர் இப்போது”, என்றார்.

விஜயகாந்த் வேட்பாளரை அடித்ததையும், அதற்கு வடிவேலு அடித்த கமெண்டையும் அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது கலைஞர் தொலைக்காட்சி!

-என்வழி

ஜெயலலிதாவைச் சந்தித்தார் விஜயகாந்த்: 41 தொகுதிகள் ஒதுக்கீடு!

March 4, 2011 by  
Filed under election, General

ஜெயலலிதாவைச் சந்தித்தார் விஜயகாந்த்: 41 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை: அஇஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) போயஸ் தோட்டத்திற்கு சென்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இன்று இரவு 9.30 மணி முதல் 9.50 வரை இருவரும் தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்துப் பேசினர்.

இச்சந்திப்பிற்கு பின்னர் வெளியே வந்த விஜயகாந்த்தை சந்திக்க செய்தியாளர்களும், போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சூழ்ந்தனர்.

பேச்சுவார்த்தை குறித்து எதுவும் தெரிவிக்காமல் வேகமாகச் சென்ற விஜயகாந்த் காரில் ஏறிப் புறப்பட்டார்.

பின்னர் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் வெளியிட்ட கூட்டறிக்கையை செய்தியாளர்களுக்கு கொடுத்தனர், ஜெயலலிதாவின் இல்ல நிர்வாகிகள்.

அந்த கூட்டறிக்கையில்,  “13.4.2011 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவிற்கும், தேமுதிகவிற்கும் இடையே இன்று 4.3.2011 ஏற்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 41 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளனர்.

அறிக்கையின் கீழ் ஜெயலலிதாவும்- விஜயகாந்தும் கையெழுத்திட்டுள்ளனர்.

‘ரஜினி அரசியலுக்கு வரும் வழியைக் காணோம்… இதில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் ஏன்?’ – கேள்வி பதில்

February 25, 2011 by  
Filed under Questions

‘ரஜினி அரசியலுக்கு வரும் வழியைக் காணோம்… இதில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் ஏன்?’ – கேள்வி பதில்

கேள்வி 1: உங்கள் ரஜினி அரசியலுக்கு வரும் வழியைக் காணோம். இதில், அரசியலில் இறங்குபவர்களைப் பற்றி நீங்கள் விமர்சனம் செய்வது நியாயமா?

-கோவை ராஜன்

கேள்வி 2: “பல வருடமாக டயலாக் பேசிவிட்டு, கடைசியில் என்னுடையது, அல்ல.. வசனகர்த்தாவினுடையது” என்று ஏமாற்றுவதை காட்டிலும், இது மேல்.. இன்று தமிழ்நாட்டில், இருவருமே நல்லவர்கள் அல்ல… ஆனால் இருவரிடமும் அனுசரித்து செல்லாமல், ஒருவரை வீழ்த்துவதற்காக, இன்னொருவருடன் சேர்வது தவறாக தெரியவில்லை.. உங்களுக்கு உங்கள் தலைவர் என்ன செய்தாலும் குற்றமில்லை, செய்யாவிட்டாலும் குற்றமில்லை…

-ஜெகதீஷ்

பதில்: அட… என்னங்க இது.. உங்க லாஜிக்கே புரியவில்லையே… எங்கள் தலைவர் அரசியலுக்கு வருவேன் என்றோ, வந்தால் தனித்து நிற்பேன், கூட்டணியே வைக்கமாட்டேன் என்றோ இதுவரை எங்குமே சொன்னதில்லையே. உங்களையும் என்னையும் போல அவரும் அரசியலைக் கவனித்து வருகிறார். அவருக்கு வசதிப்படும் நேரத்தில் வருவார். அல்லது வராமலும் போகலாம்.

இன்னும் அரசியலுக்கே வராத ஒருவரைப் பற்றி நீங்கள் இத்தனை விமர்சனம் வைக்கிறீர்கள்.

நானோ… அரசியலுக்கு வந்துவிட்டவர்களைத்தான் விமர்சனம் செய்கிறேன். அது ஒரு பார்வையாளனாக, பத்திரிகையாளனாக, வரிசையில் நின்று தவறாமல் ஓட்டுப் போடும் வாக்களனாக எனது கருத்து. வராத ஒருவரைப் பற்றியே நீங்கள் இத்தனை விமர்சனம் வைக்கும்போது, வந்துவிட்டவர்களை நான் விமர்சிப்பதில் தவறென்ன இருக்கிறது!

ரஜினியின் இப்போதைய நிலைப்பாடு உண்மையில் என்னைப் போன்றவர்களுக்கு வசதிதான். பாருங்கள்… திமுக, அதிமுக என்ற எந்த சார்பும் எடுக்க வேண்டியதில்லை. இருவருமே தவறு செய்கிறார்கள். அந்த தவறை விமர்சிக்கவும், நல்லது செய்தால் பாராட்டும் வசதியும் தானாகவே அமைந்துவிடுகிறது. அதை ரஜினியே அனுமதிக்கிறார்!

‘சினிமாவில் டயலாக் பேசியது தனது சொந்தக் கருத்தல்ல… அது இயக்குநர்கள் எழுத்தாளர்களின் கருத்து’ என்று ரஜினி சொன்னதில் என்ன தவறு கண்டுவிட்டீர்கள்? அவருக்கும் சொந்தமாக கருத்திருக்கிறது. தேவைப்பட்ட போது அதை அவர் சொல்லாமல் இருந்ததுமில்லை.

‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்பதை யாரும் எழுதிக் கொடுத்து அவர் சொல்லவில்லை. எந்த வசனகர்த்தாவும் எழுதாத, ரஜினியின் ‘பவர்ஃபுல்’ சொந்தக் கருத்து அது. அதற்கு கிடைத்த பலன் என்னவென்று திமுக ஆட்சியாளர்களுக்கும் இந்த மாநில வாக்காளர்களுக்கும் நன்கு தெரியும். நேரம் வந்தால் அவர் நிச்சயம் இதைவிட பலமான கருத்தைச் சொல்லவும் அல்லது தன் கொள்கைகளைச் சொல்லி வாக்குக் கேட்கவும் தயங்கமாட்டார்!

அந்த சூழல் வரும் வரை அவரைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமென்ன இருக்கிறது? நாட்டு நடப்பை எல்லோரையும் போல ஒரு ரஜினி ரசிகனும் விமர்சிக்கிறான். அவ்வளவுதான்!

********

கேள்வி: விஜயகாந்த் வேறு என்னதான் செய்ய முடியும்… அவர் மீது எதற்கு இந்த விமர்சனம்?

-வெங்கடேஷ், மதுரை.

பதில்: விஜயகாந்த் இத்தனை காலமும் கடுமையான விமர்சனங்களிலிருந்து தப்பித்து வந்ததே, “இப்போதுள்ள அரசியல் கட்சிகள், தலைவர்கள் அனைவருமே திருடர்கள்… இவர்கள் யாரோடும் கூட்டணி இல்லை. எனக்கு மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி. எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்று சொல்லி வந்ததால்தான். இப்போது அந்த திருடர்களில் ஒரு பிரிவினர் மட்டும் யோக்கியர்களாகி விட்டார்களா?

‘அதிமுக ஜெயலலிதா கம்பெனி… திமுக முக அழகிரி மற்றும் ஸ்டாலின் கம்பெனி’ என்று கிண்டலடித்தாரே… இப்போது தேமுதிகவும் ஒரு மட்டமான கம்பெனிதான் என்பதை ஒப்புக் கொள்கிறாரா?

‘தேமுதிக தனித்துவமான கட்சி… என் பின்னாள் வாருங்கள். கவுரவமான அரசியல் பாதையைக் காட்டுகிறேன்’ என்று அவர்தானே இரு வாரங்களுக்கு முன் சேலம் மாநாட்டில் முழங்கினார். ஜெயலலிதாவின் அதிமுக பின்னால் போவதுதானா அந்த கவுரவமான அரசியல் பாதை?

‘அவர் மட்டும் என்ன செய்வார்… கட்சியைக் காப்பாற்ற வேண்டாமா? கைக்காசை போட்டா அரசியல் நடத்துவார்?’ என்று சிலர் நியாயம் கற்பிக்கிறார்கள்… ‘இந்த மக்கள் அவருக்கு என்ன செய்து விட்டார்கள்’ என்று திருப்பிக் கேட்கிறார்கள். இதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? கட்சி துவங்குவதற்கு முன்பு அவரல்லவா யோசித்திருக்க வேண்டும் இதையெல்லாம்!

அரசியல் எந்த அளவுக்கு கேவலமாகிப் போய்விட்டது என்பதன் அடையாளம் இது. எல்லாரும் திருடுகிறார்கள்.. பாவம் அவரும் கொஞ்சம் திருடட்டும் என்று நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வாக்களிப்பதாக இருந்தால் வாக்களியுங்கள்.

எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல் சேவை செய்ய ஆரம்பிப்பதுதான் அரசியல் கட்சி. அப்படிச் சொல்லித்தான் இவர்களும் ஆதரவு கேட்கிறார்கள். இல்லாவிட்டால், நான் கட்சி ஆரம்பிக்கிறேன். அதற்குப் பிரதிபலனாக எனக்கு இதையெல்லாம் தாருங்கள் என்று தெளிவாகச் சொல்லிவிடலாமே. தேர்தல் வரை, தங்களை புனிதர்களாகக் காட்டி, அதற்கென கணிசமான ஆதரவாளர்களையும் திரட்டி, பின்னர் அனைவரையும் மொத்தமாக அடகுவைத்து சீட்டும் நோட்டும் பெறும் இவர் எந்த விதத்தில் யோக்கியராகிவிட்டார், நாம் விமர்சிக்காமல் இருக்க?

-வினோ

அந்தக் கூட்டணி இந்த ‘தெய்வத்தோடுதானா’!

February 25, 2011 by  
Filed under Editorial

அந்தக் கூட்டணி இந்த ‘தெய்வத்தோடுதானா’!

ருவழியாக போயஸ் தோட்டம் போய்ச் சேர்ந்தார் விஜயகாந்த். நேற்று முன்தினம் வரை, தெய்வத்தோடும் மக்களோடும்தான் எனது கூட்டணி என்று சொல்லி வந்தார் விஜயகாந்த். அது ‘போயஸ் தோட்ட தெய்வம்தான்’ என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது!

தேர்தல் என்றால் கூட்டணி சகஜம்தானே… அது யாரோடு அமைந்தால் என்ன? என்ற கேள்வி எழலாம்.

விஜயகாந்த் தன்னை ஆரம்பத்திலிருந்தே கூட்டணி அரசியலுக்கு விரோதியாக காட்டிக் கொண்டு வந்தவர். கூட்டணி அமைத்தவர்களையும், தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தவர்களையும் கடுமையாகச் சாடி வந்தவர். குறிப்பாக ஜெயலலிதாவை மிகக் கடுமையாகத் தாக்கி வந்தவர்.

ஜெயலலிதா இவரை, ‘குடிகாரன், சட்ட சபைக்கு குடித்துவிட்டு வந்து உளறுகிறார்’, என்று தாக்க, இவரும் சளைக்காமல், ‘ஆமாம், நான் குடிகாரன்தான். எனக்கு ஜெயலலிதாதான் ஊற்றிக் கொடுத்தார்’ என்றார் பதிலுக்கு.

தமிழகத்தின் மிகப் பெரிய கொள்ளைக்காரி ஜெயலலிதா என்று மேடைக்கு மேடை திருமங்கலத்தில் முழங்கியவர் விஜயகாந்த்.

இன்று அந்த கொள்ளைக்காரியே மேல் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அதே ஜெயலலிதாவுக்கு கூட்டணி என்ற பிறந்த நாள் பரிசை அவர் அளித்துள்ளதாக தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆனந்தக் கூத்தாடுகிறார்.

மாற்றம் என்பதே மாறாதது என்ற விதியை தங்களுக்காக மட்டும்தான் உருவாக்கியதாக அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

தேர்தல், கூட்டணி அரசியல், கொள்ளையர்களுடன் கூட்டு என்பதுதான் இவரது ஃபார்முலாவும் என்றால், ‘நான்தான் வித்தியாசமானவன், என் கட்சிதான் வித்தியாசமானது’ என்ற மார் தட்டல் எதற்காக? யாருடனும் கூட்டணி மட்டும் வைக்கமாட்டேன் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்து, அதை வாக்குக் கூட்டமாக மாற்றியது, அதிமுகவிடம் அடகு வைக்கத்தானா?

விஜயகாந்த் அதிமுகவுடன் சேர்ந்ததற்காக இதனை நாம் எழுதவில்லை… அவர் திமுகவுடன் சேர்ந்திருந்தாலும் இந்த விமர்சனம் பொருந்தும். தனித்துவம் மிக்க தலைமை என்றுதானே அவர் கூறிவந்தார்… அந்த தனித்துவத்தைக் காக்க முடியவில்லை, சில தொகுதிகளைப் பெறுவதற்காக அதை அடமானம் வைக்கிறார் என்றால்…

இன்னொரு பாமக, இன்னொரு மதிமுக, இன்னொரு விடுதலைச் சிறுத்தை… இதோ இன்னொரு தேமுதிக!

-வினோ

கலைப்புலி தாணு மகன் திருமணத்தில் ரஜினி! – சிறப்புப் படங்கள்

November 25, 2010 by  
Filed under Featured

கலைப்புலி தாணு மகன் திருமணத்தில் ரஜினி! – சிறப்புப் படங்கள்

மிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி தாணு. முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினி என்று பிரமாண்ட போஸ்டர்கள் அடித்து விளம்பரப்படுத்தி, கவனத்தை ஈர்த்தவர்.

கலைப்புலி தாணு – கலாவதி தம்பதியரின் மகன் பார்த்தசாரதி என்கிற கலா பிரபுவுக்கும், வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர் என்.ராஜேந்திரன்- சாந்த லட்சுமி மகள் இரா. சரண்யாவுக்கும் இன்று திருமணம் நடக்கிறது.

முன்னதாக நேற்று புதன்கிழமை மாலை இருவருக்கும் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண அரங்கில் நடந்தது.

திரையுலக, அரசியல் பிரமுகர்கள் திரண்டு வந்த இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

ரஜினி தம்பதியரை கலைப்புலி தாணு உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

அப்போது விழாவுக்கு வந்த விஜயகாந்த் ரஜினிக்கு வணக்கம் வைக்க, அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார் ரஜினி.

பின்னர் இருவரும் இணைந்து புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க, புகைப்படக்கார்ரகளுக்கு பெரும் உற்சாகம்!

என்வழி உங்களுக்காகத் தரும் பிரத்யேகப் படங்கள்….


-என்வழி ஸ்பெஷல்

திமுகவிடமிருந்து மக்களைக் காப்பதே லட்சியம்! – விஜயகாந்த்

September 12, 2010 by  
Filed under General

திமுகவிடமிருந்து மக்களைக் காப்பதே லட்சியம்! – விஜயகாந்த்

சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்றைய திமுக ஆட்சி மீண்டும் வராமல் தோற்கடித்து, தமிழக மக்களை மீட்பதே தேமுதிகவின் புனிதப் பணியாகும் என்று அக் கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா இந்த மாதம் 14-ம் தேதி வருவதை ஒட்டி சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

“கட்சி தொடங்கி சில மாதங்களில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 8.5 சதவீத வாக்குகளும், அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் 11 சதவீத வாக்குகளும் தேமுதிகவுக்கு கிடைத்தன.

தனித்துப் போட்டியிட்டும் மக்கள் தொடர்ந்து ஆதரிப்பதற்கு காரணம், நாம் யாருக்கும் இடையூறு செய்வதில்லை என்பதுதான். வணிக நிறுவனங்களை மிரட்டிப் பணம் வசூலிப்பதில்லை. இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக இருந்தாலும் வன்முறைகளில் ஈடுபடுவது இல்லை. உழைப்பினால் சம்பாதிக்கும் பணத்திலேயே கட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம், ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசியலில் சில குடும்பங்கள் குபேரர்களாகவும், கோடிக்கணக்கான குடும்பங்கள் வறுமையிலும் உழன்று வருகின்றன.

திமுக அரசின் புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் 52 லட்சம் ஏழைக் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் பரம ஏழைகளாக இருப்போர் 19 லட்சம் குடும்பத்தினர்.

இந்தச் சூழ்நிலையில் வரும் தேர்தலிலாவது ஆட்சி மாறாதா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேமுதிகவிடம் அவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ப நாம் ஆற்ற வேண்டிய பணி மகத்தானது.

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் புதிய வரலாறு படைக்கும் வகையில் நம் உழைப்பு அமைய வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் திமுக ஆட்சி மீண்டும் வராமல் அதைத் தோற்கடித்து, தமிழ்நாட்டு மக்களை மீட்பதே நம்முடைய புனிதப் பணியாகும். இன்றைய முதல்வர் கருணாநிதியின் கனவு பலிக்காது.

மாற்றார்கள் நம் மீது அவதூறு பரப்புவார்கள். வீண் பழி சுமத்துவார்கள், நமக்குள்ளேயே பேதத்தை உருவாக்குவார்கள். ஆசை காட்டுவார்கள். அச்சமூட்டுவார்கள். அவை அனைத்தையும் துச்சமென முறியடித்து தேர்தலில் தேமுதிகவை வெற்றிபெறச் செய்வது நம் கடமையாகும்” என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

நீங்கள் வைத்திருப்பது சிவப்பு பணமா? நீலப் பணமா? – கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி

August 25, 2010 by  
Filed under election

நீங்கள் வைத்திருப்பது சிவப்பு பணமா? நீலப் பணமா? – கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி

சென்னை: முதல்வர் கருணாநிதியின் குடும்ப வாரிசுகள் சினிமா படம் எடுக்கிறார்களே, அந்தப் பணம் கறுப்பு பணமா? அல்லது சிவப்பு பணமா? அல்லது நீலப் பணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க லட்சக் கணக்கில் கருப்பு பணம் வாங்கும் விஜயகாந்த், ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என, முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு விஜயகாந்த் வெளியிட்டுள்ள பதில் அறிக்கை:

“என்னைப் பற்றி நேரடியாக குற்றம்சாட்ட முடியாமல், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரே கூறப்படுகிறது. நம்பப்படுகிறது என்று கூறி தப்பிக்கொள்வது ஏன்? அவர் அப்படி கூறுவது முதல் தடவையல்ல. இதற்கு முன்பு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீதும் கூறினார். வேறு எந்த குறைகளையும் காணமுடியாததால், இந்த உளுத்துப்போன குற்றச்சாட்டை அவர் கூறி வருகிறார்.

முதல்வர் கருணாநிதியின் குடும்ப வாரிசுகள் சினிமா படம் எடுக்கிறார்களே, அந்தப் பணம் கறுப்பு பணமா? அல்லது சிவப்பு பணமா? அல்லது நீலப் பணமா?

இரவு பகல் பாராமல் வியர்வை சிந்தி சம்பாதித்தப் பணத்தில், அரசுக்கு வரி கட்டியதுபோக மீதி உள்ள பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிற என்னைப் பற்றி குறைகூறி வரும் முதல்வர் கருணாநிதி, அவரது குடும்ப பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் இன்று உலக பணக்காரர்கள் வரிசைக்கு போட்டியிடுகிறார்களே அவர்களுக்கு எந்த தொழில் மூலம் பணம் வந்தது என விளக்குவாரா?

ஏழை எளிய மக்களுக்கு 60 ஆண்டுகளில் என்ன உதவி செய்தார் என்று, நான் கேட்ட பிறகுதான் ஒரு நீண்ட நன்கொடை பட்டியலையே அவர் வெளியிட்டுள்ளார்.

மாமண்டூரில் நான் கட்டிய திருமண மண்டபத்தை திறந்து வைத்த அன்றே பொதுமக்களிடம் ஒப்படைத்தேன். அதற்கு பெயர்தான் உண்மையான தானம். சொந்த வாழ்க்கையில் நான் ஆற்றியுள்ள உதவிகளை பட்டியலிட்டால், எந்த பத்திரிகையிலும் வெளியிட இடம் இருக்காது.

தான் செய்த உதவிகளை பெற்றவர்கள்தான் பேச வேண்டுமே தவிர, தான் பேசக் கூடாது. ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு அடையாளம் உண்டு. காமராஜர் என்றால் கல்வி கண்ணை திறந்தவர் என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்றால் சத்துணவு தந்த வள்ளல் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அன்றிலிருந்து இனறு வரை கருணாநிதி என்றால், ஊழல்வாதி என்ற அடையாளம் தானே மக்கள் மனதில் நிலையாக நிற்கிறது. இதனை நான் முதலில் சொல்லவில்லை. ஊர் சொல்கிறது. உலகம் சொல்கிறது. நாடே சொல்கிறது. ஏன் உச்சநீதிமன்றமே விஞ்ஞான ரீதியான ஊழல்வாதி என சொல்கிறது…”

-இவ்வாறு அதில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கேப்டன் டிவி துவக்கம்… ரஜினி வாழ்த்து!

April 14, 2010 by  
Filed under General

கேப்டன் டிவி துவக்கம்… ரஜினி வாழ்த்து!

சென்னை: தேமுதிகவின் அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சியான கேப்டன் டிவியை இன்று காலை துவக்கி வைத்தார் அதன் நிறுவனரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.

கேப்டன் டிவிக்கு தனது வாழ்த்துக்களை போன் மூலம் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சித்திரை முதல் நாளான இன்று முறைப்படி கேப்டன் டி.வி. துவங்கப்பட்டது. இன்று காலை 5.59 மணிக்கு வானகரத்தில் உள்ள கேப்டன் டி.வி. அலுவலகத்தை விஜயகாந்த் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்தார். அவரைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் குத்துவிளக்கு ஏற்றினார்.

சரியாக 6 மணிக்கு ரிமோட் பட்டனை இயக்கி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். முதலில் கேப்டன் டி.வி. லோகோவும் அதைத் தொடர்ந்து பக்திப் பாடல்களும் ஒளிபரப்பாகின.

அதற்கடுத்த நிகழ்ச்சியாக ‘கேப்டனின் லட்சிய பயணம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கேப்டன் டி.வி. தொடங்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் டெலிபோனில் விஜயகாந்திடம் வாழ்த்து தெரிவித்தார்.

பொழுது போக்கு மற்றும் கட்சிப் பிரச்சாரம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கேப்டன் டிவி சேனல் துவங்கப்பட்டுள்ளது. மே 1ம் தேதி முதல் இந்த சேனலில் தினமும் 4 முறை செய்திகள் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளார் விஜயகாந்த்.

அதேநேரம் தேமுதிக மற்றும் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட அரசியல் செய்திகள் பிரதானமாக இடம்பெறும்.

மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நடிகர்கள் விஜய், விவேக் ஓபராய், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமிநாதன், புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் ஜே.எம்.ஆரூண் எம்.பி., நடிகர்கள் முரளி, மன்சூர்அலிகான், ராமேஷ்கன்னா, பொன்னம்பலம், படத் தயாரிப்பாளர்கள் சிவா, மைக்கேல் ராயப்பன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

கேப்டன் டிவி மாதிரி சேனலை நீங்க பார்த்திருக்கவே முடியாது! – சொல்கிறார் சுதீஷ்

April 11, 2010 by  
Filed under Popcorn

’2012, அவதார் படங்களுக்கு இணையாக… குட்டிப் பிசாசு!’ – ராம நாராயணன்!

த்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ராம நாராயணன் இயக்கும் படம் குட்டிப் பிசாசு.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியை தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். முரசொலி செல்வம், இயக்குநர் அமிர்தம் ஆகியோர் அதைப் பெற்றுக் கொண்டனர்.

இதில் விசேஷம் ஒன்றுமில்லைதான்… ஆனால் இந்த முன்னோட்டக் காட்சி வெளியீட்டுக்குப் பிறகு ராம நாராயணன் சொன்ன விஷயம்தான் ஹைலைட்.

“தந்திர, சாகஸ காட்சிகள் நிறைந்த ஆங்கிலப் படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எனவே ஆங்கிலப் படங்களை மிஞ்சும் விதத்தில் ஒரு வருட காலமாக சில்வர்லைன் என்ற டீமைக் கொண்டு தந்திர-கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம் குட்டிப் பிசாசு படத்துக்காக. நிச்சயம் 2012, அவதார் போன்ற படங்களை ரசித்த ரசிகர்கள் இந்தப் படத்துக்கும் அவற்றுக்கு இணையான வரவேற்பைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் சீரியஸாக!

கேப்டன் டிவி மாதிரி சேனலை நீங்க பார்த்திருக்கவே முடியாது! – சொல்கிறார் சுதீஷ்

சென்னை: கேப்டன் டிவி போல ஒரு சேனலை நீங்கள் தமிழில் பார்த்திருக்கவே முடியாது. எந்த சேனலிலும் இல்லாத சமாச்சாரங்கள் கேப்டன் டிவியில் இருக்கும் என்கிறார் விஜய்காந்தின் மச்சானும் டிவியின் நிர்வாக இயக்குநருமான எல்கே சுதீஷ்.

கேப்டன் டிவியின் சோதனை முன்னோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்படி துவங்கியது.

ஏப்ரல் 14ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை அது அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. ஏராளமான திரையுலக – அரசியல் விஐபிக்கள் பங்கேற்பார்கள் என்றும் கேப்சன் டிவி தரப்பில் கூறுகிறார்கள்.

இதுகுறித்து எல் கே சுதீஷ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“கேப்டன் டிவி வரும் 14ம் தேதி சித்திரைத் திருநாளன்று ஒளிபரப்பப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

கேப்டன் டிவியில் மற்ற டிவிகளில் இல்லாத நிகழ்ச்சிகள் இடம் பெறும். மக்களை, குறிப்பாக இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்ச்சிகள் அதிக அளவில் இடம் பெறும்.

சுய தொழில், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

மெகா சீரியல்களும் இடம் பெறும். ஆனால் அனைத்தும் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் வகையிலான கருத்துக்களையே கொண்டிருக்கும். தினசரி பிற்பகலில் திரைப்படம் ஒளிபரப்பப்படும். முதல் படம் கேப்டன் பிரபாகரன். பிற ஹீரோக்களின் படங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.

மக்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்துக்கொண்டு அவர்களை தேவையான விஷயங்களை கொண்டு செல்வதில் கேப்டன் டிவி முன்னிலை வகிக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை தமிழில் வேறு தொலைக்காட்சிகள் எதிலும் பார்க்க முடியாது.

செய்திகள் மே 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகும். தினசரி காலை 7.30, பிற்பகல் 1 மணி, இரவு 7.30 மற்றும் இரவு 10மணி என 4 முறை செய்திகள் ஒளிபரப்பாகும். முழுக்க முழுக்க நடுநிலையான செய்திகளுக்கு கேப்டன் டிவிதான் என்ற நிலை உருவாகும்…” என்றார் சுதீஷ்.

-என்வழி

சேரன் Vs லாரன்ஸ்!

March 28, 2010 by  
Filed under Cinema

சேரன் முன் வைத்த பிரச்சினையை திசைமாற்றிய லாரன்ஸ்!

சேரன் அவ்வப்போது விளம்பரத்துக்காக எதையாவது பேசி பப்ளிசிட்டி பார்ப்பது வழக்கம். ஆனால் சனிக்கிழமையன்று ‘கோரிப்பாளையம்’ ஆடியோ விழாவில் ராம நாராயணன், விஜயகாந்த் முன்னிலையில் அவர் வைத்தது ஒரு நியாயமான கோரிக்கை.

ஆனால் அதற்கு சரியான தீர்வு என்ன என்பதை ராமநாராயணனும் சொல்லவில்லை. விஜயகாந்தும் சொல்லவில்லை. ஆனால் ராகவா லாரன்ஸ் சம்பந்தமே இல்லாமல் குறுக்கே புகுந்து கருத்து தெரிவிப்பதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவிக்க, ஒரு நியாயமான பிரச்சினை தீர்வு காணப்படாமலேயே அமுங்கிப் போனது.

கோரிப்பாளையம் படத்தை தனது பாண்டிய நாடு தியேட்டர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார் மைக்கேல் ராயப்பன். இவர் வேறு யாருமல்ல, விஜய்காந்த் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர். கடந்த முறை தேமுதிகவின் நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர். தேர்தலில் தோற்றாலும் அதன் பிறகு நாடோடிகள் படத்தைத் தயாரித்து பெரும் வெற்றி கண்டவர்.

மாயாண்டிக் குடும்பத்தார் படத்தினை இயக்கிய ராசு மதுரவன் இயக்கியுள்ள இந்தப் படம் ஷூட்டிங்கெல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இசை சபேஷ் முரளி.

படத்தின் ஆடியோவை விஜய்காந்த் வெளியிட, லாரன்ஸ் பெற்றுக் கொண்டார்.

அதற்கு முன் வாழ்த்திப் பேச அனைத்து விஐபிக்களையும் அழைத்தார்கள். அப்போது பேச வந்த சேரன், சில நிமிடம் சம்பிரதாயமாகப் பேசிவிட்டு பிரச்சினையை முன் வைத்தார் இப்படி:

“விநியோகஸ்தர்கள் சிரிச்சாதான் படம் ஜெயித்ததுன்னு சொன்னாங்க எனக்கு முன்ன பேசினவங்க. அது உண்மைதான். துரதிருஷ்டவசமா இப்ப அதைப் பேசற நிலையில் நான் இல்லை.

இன்றைக்கு திரையுலகம் பெரிய நெருக்கடியில் உள்ளது என்பதுதான் உண்மை. இதற்குக் காரணம் சேனல்களின் போட்டிதான்.

சேனல்களின் போட்டியை மீறி எத்தனை தயாரிப்பாளர்களால் வெற்றி பெறமுடியும்?

முன்பெல்லாம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வந்து, விமர்சனம் வெளியானாலே போதும்…படம் பற்றி எல்லாருக்கும் தெரியும். குறைந்த செலவுதான் இதற்கு ஆகும். ஆனால் இப்போது அப்படியில்லை. என்னதால் பேப்பரில் விளம்பரம் கொடுத்தாலும், பிரபலமான சேனலில் பெரும் தொகை செலவழித்து தொடர்ந்து விளம்பரம் போட்டால்தான் படம் வெளியானதே தெரிகிறது.

ஒரு படத்துக்கு ரூ 1.5 கோடிக்கு மேல் செலவு செய்து சேனல்களில் விளம்பரம் செய்தால்தான் படம் ஓட முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் கூலித் தொழிலாளர்களாக மாறி வாழ்க்கை பறிபோகும் நிலை இருக்கிறது.

எல்லாப் படங்களையும் சேனல்கள் வாங்குவதில்லை. அது முடியவும் முடியாது. அப்படியானால் மற்ற படங்கள் எப்படி ஓடும்? வாங்காத படங்களை பழி வாங்குகிற மாதிரி, கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றன இந்த சேனல்கள். எப்படி அந்தப் படங்கள் ஓடும்?

மலை மாதிரி உயர்ந்து இருக்கிற சினிமா சரிந்து விழுந்து மண் மேடாகும் நிலை வந்திருக்கிறது… இதற்கு ஏதாவது ஒரு தீர்வை இந்த மேடையில் உள்ள ராமநாராயணன் சொல்வாரா?” என்றார்.

ராகவா லாரன்ஸ் எதிர்ப்பு

சேரனுக்கு அடுத்துப் பேச வந்தார் லாரன்ஸ். சேரன் பொதுவாக வைத்த ஒரு குற்றச்சாட்டை, சன் டிவியின் பிரச்சினை போல மாற்றிப் பேச ஆரம்பித்தார் லாரன்ஸ்.

சேரனின் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தவர், தொடர்ந்து இப்படிச் சொன்னார்:

“டிவியால படம் பாதிக்கப்படுதுன்னு சொல்லக் கூடாது. அது தவறான கருத்து. டிவியாலதான் இன்னிக்கு பல படங்கள் நல்லா ஓடுது. சன் டிவியில வந்த மஸ்தானா மஸ்தானா நிகழ்ச்சி மூலம் எவ்வளவோ பேருக்கு நன்மை கிடைச்சது.

இப்போ கலைஞர் டிவி மூலம் ஒரு குழந்தைக்கு இதய ஆபரேஷன் செய்தோம். இதெல்லாம் கிடைக்குதுன்னா அதுக்கு காரணம் டிவி சேனல்கள் நல்ல நிலைமையில் இருப்பதுதான். எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆக சேனல்கள்தான் உதவுது. சன் டிவியால எவ்வளவு தயாரிப்பாளர்களுக்குப் பலன் தெரியுமா?

ஆனா எல்லா படங்களையும் அவங்களே வாங்கி ரிலீஸ் பண்ண முடியுமா? எனவே நாமதான் போராடி படங்களை வெளியில தெரிய வைக்கணும்..” என்றார் சம்பந்தமில்லாமல்.

இங்கே சேரன் வைத்த பிரச்சினை, சில டிவி சேனல்கள் தாங்கள் வாங்காத படங்களுக்கு விளம்பரக் கட்டணமாக மட்டும் ரூ 1.5 கோடிக்கும் மேல் பிடுங்குகிறார்கள். அப்படி கொடுக்காமல் ரிலீஸ் செய்தால், டிவியில் சுத்தமாகப் புறக்கணித்துவிடுகிறார்கள், மற்ற படங்களை புரமோட் பண்ணுகிறார்கள் என்பதுதான்.

இதைவிட இன்னொரு பிரச்சினை, வேறு சேனலுக்கு விற்கப்பட்ட படத்தின் விளம்பரங்களை பணம் கொடுத்தாலும் போட மறுக்கிறார்களாம் இன்னும் சில சேனல்காரர்கள்.

கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ராம நாராயணன் இதற்கு என்ன தீர்வு சொல்லப் போகிறார் என்று எல்லோரும் காத்திருந்த வேளையில் லாரன்ஸ் இப்படி சம்பந்தமே இல்லாமல் வக்காலத்து வாங்க, பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பினார் ராமநாராயணன்.

பிரச்சினையை யார் சொன்னாலும், அதில் குறைந்தபட்ச நியாயமிருக்கிறதா என்றாவது பார்க்க வேண்டாமா!

-என்வழி

ரஜினியை அழைக்கும் விஜயகாந்த்!

March 26, 2010 by  
Filed under Popcorn

நித்யானந்தன் வேடத்தில் வடிவேலு!

லகம் என்றொரு படம்… இதில் வடிவேலுவுக்கு 25 வேடங்களாம். 10 நாயகிகள் ஜோடி. கின்னஸ் சாதனைக்காக எடுக்கிறார்கள் போலிருக்கிறது.

இந்த 25 வேடங்களில் ஒன்று நித்யானந்தன் வேடமாம். நிஜமான ரஞ்சிதாவையே ஜோடியாக்கினால் என்ன என்று வில்லங்கமாக ஒரு யோசனையை வடிவேலுவிடம் சொன்னாராம் இயக்குநர் ஆதம் பாவா.

அதற்கு வடிவேலு, “இப்ப அவங்க ரேஞ்சே வேறப்பா… உன்னால நெருங்க முடியாது” என்றாராம்.

ரஜினியை அழைக்கும் விஜயகாந்த்!

ப்ரல் 14-ம் தேதி கேப்டன் டிவி துவக்க விழா.

முதலில் சாதாரணமாகத் துவங்கலாம் என திட்டமிடப்பட்டு, இப்போது ரஜினி – கமல் – கேப்டன் டோணி ஆகியோரைக் கொண்டு கலர்ஃபுல்லாகத் திறக்கலாம் எனும் அளவுக்கு வந்துள்ளதாம்.

உங்களில் ஒருவர் துவக்கப்போகும் டிவி இது என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொடுத்த விஜயகாந்த், கட்டாயம்

வந்து திறப்புவிழாவை நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். ரஜினியும் வர ஒப்புக் கொண்டிருப்பதாக எல்லோரிடமும் கூறி வருகிறார் விஜயகாந்த்.

கமல்ஹாஸனும் கட்டாயம் வருவதாகக் கூறியுள்ளாராம்.

இந்த விழாவுக்கு வரவிருக்கும் இன்னொரு ஸ்டார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி.

பெரும்பாலான சினிமா நட்சத்திரங்களும் வர ஒப்புக் கொண்டிருப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.

விழாவை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடத்தவிருக்கிறார்களாம்.

கேப்டன் டி.வியில் ஒளிப்பரப்பாகவிருக்கும் முதல் படம் கேப்டன் பிரபாகரன் என்பது கூடுதல் தகவல்!

சூட்கேஸுக்கு அலையவில்லை! -விஜய்காந்த்

March 26, 2009 by  
Filed under election

3 சீட்டுக்கும் 4 சீட்டுக்கும் நான் ஆளில்லை!

கன்னியாகுமரி: சூட்கேஸுக்கு அலைபவன் நான் அல்ல. அதேபோல 3 சீட்டுக்கும், 4 சீட்டுக்கும் என்னை பேரம் பேசி விலைக்கு வாங்க முடியாது. மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே எனது கூட்டணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து இன்று தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் விஜயகாந்த். கன்னியாகுமரி தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆஸ்டினை பிரசாரம் செய்த அவர் கூறியதாவது:

அப்போது விஜயகாந்த் பேசியது: 3 சீட், நான்கு சீட்களுக்கு நான் அலையவில்லை. அப்படி ஆசை காட்டி என்னை விலைக்கு வாங்கிவிட முடியாது. அந்த மாதிரி அரசியல் செய்ய நான் வரவில்லை. பீகாரில் ஒரு தேசிய கட்சிக்கு 3 சீட்தான் கொடுத்துள்ளனர்.

தேசிய கட்சிகளை நம்பி இப்போது மாநிலக் கட்சிகள் இல்லை. மாநில கட்சிகளை நம்பித்தான் தேசிய கட்சிகள் உள்ளன.

தமிழர்கள் செத்த பிறகு வரும் சமாதானம் எதற்கு?

தமிழர்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தற்போதை முதல்வர் கருணாநிதியும் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என கூறி வருகிறார்கள். ஆனால் இலங்கையில் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காக்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரணாப் முகர்ஜி கொழும்பு போனார். ஆனால் அந்த பயணத்தால் எந்தப் பயனும் இல்லை.

தமிழர்கள் செத்து மடிந்தபிறகு, சமாதானம் கிடைப்பதாலோ, அமைதி உண்டாகுவதாலோ பயன் இல்லை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் மாறி, மாறி அறிக்கை என்ற பெயரில் தங்களது தவறுகளை ஒப்புக் கொள்கிறார்கள். நான் மெளனமாக இருப்பதாகவும், யோசித்துக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள். நான் எப்போதும் மெளனம் சாதித்தது கிடையாது.

மக்கள் மற்றும் இளைஞர்களின் செல்வாக்குதான் என்னுடைய வளர்ச்சி. நான் பேரத்துக்கு பணியவில்லை என்கிறார்கள். 4, 5 சீட்டுகள் வாங்குவதற்காவா நாங்கள் கட்சியை ஆரம்பித்தோம்?

மக்களை நம்பி தேமுதிக முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இங்குள்ள மாநில கட்சிகள், காங்கிரஸ், பாஜக என 2 தேசிய கட்சிகளும் மாறி, மாறி கூட்டணி வைத்துள்ளார்கள். அப்படி கூட்டணி வைத்துவிட்டு தமிழகத்துக்கு என்ன செய்தார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் நெய்யாறு இடதுகரை சானலில் இதுவரை தண்ணீர் வந்ததில்லை. தண்ணீருக்கு கூட காசு கேட்கிறார்கள். ஒருமுறை எனக்கும் சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். நான் உங்களுக்காக குரல் கொடுக்க வந்துள்ளேன். சொந்த பந்தங்களுக்கு பதவி வாங்கிக் கொடுக்க நினைக்கவில்லை.

எனது திருமண மண்டபம் இடிப்பு முதல் நேற்றுவரை எனக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. நான் எந்த மிரட்டலையும் கண்டு பயப்படமாட்டேன். நான் உங்களை நம்புகிறேன். தமிழகம் முழுவதும் தேமுதிகவினருக்கு எந்தெந்தப் பகுதி மக்கள் எவ்வளவு வாக்களித்துள்ளார்கள், மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை நானே நேரில் ஆய்வு செய்வேன்.

அப்போது வாக்குகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் மாவட்ட நிர்வாகிகளை கேட்காமலேயே நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்படுவார்கள். ஆகையால் இன்று முதலே நிர்வாகிகள் சரியாக பணியாற்ற வேண்டும்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக சேராது. தனித்தே தேர்தலை சந்திப்போம்.

கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக ஆஸ்டினை நிறுத்தியுள்ளேன். ஆஸ்டின் மக்களை நேசிக்க கூடியவர். ஏற்கனவே எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருந்து உங்களுக்காக போராடி உள்ளார்.

கடந்த முறை ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கூறினேன். அப்போது என்னை கிண்டல் அடித்தார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளிடம் நேராக சென்று பொருட்களை கொள்முதல் செய்வதாக கூறி உள்ளனர்.

நான் தேர்தல் அறிக்கை விடும்போது கிண்டல் செய்தவர்கள், அதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள். இந்த முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள். என்னிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளது. அதை நான் கண்டிப்பாக செயல்படுத்துவேன்.

நான் சூட்கேஸ் வாங்க ஆசைப்படவில்லை. அப்படி சம்பாதித்திருந்தால் கோடீஸ்வரானாகி இருப்பேன், என்றார் விஜய்காந்த்.

நாளை நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.

Related Posts with Thumbnails