Breaking News

கோலிவுட்… பன்றிக்காய்ச்சல் படுத்தும் பாடு!

August 11, 2009 by  
Filed under Cinema

கோலிவுட்… பன்றிக்காய்ச்சல் படுத்தும் பாடு!

லக நடப்பு எதுவாக இருந்தாலும் அதன் தாக்கம் நிச்சயம் கோலிவுட்டிலும் எதிரொலிக்காமல் இருக்காது.

shooting-spot

உலகப் பெருமந்தம் வந்தது… அதில் கோடம்பாக்க கனவுத் தொழிற்சாலையும் ஆட்டம் கண்டது. அடுத்த ஸ்வனை் ப்ளூ வந்தது… அதன் தாக்கும் இன்னும் பெரிய அளவில் எதிரொலிக்கிறது தமிழ் திரையுலகில்.

எப்போது எந்த வடிவில் இந்த நோய் தாக்குமோ என்ற அச்சம் காரணமாக வெளிநாடுகளில் நடக்கவிருந்த பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் வெளியில் செல்வதை அடியோடு தவிர்த்து வருகின்றனர்.

அசல் படப்பிடிப்புக்காக ஏற்கெனவே மலேஷியா – சிங்கப்பூர் சென்று வந்தனர் சரண் மற்றும் குழுவினர். அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக இத்தாலி, ஹங்கேரி, ஹாங்காங்… என 8 நாடுகளுக்குப் பயணமாகவிருந்தது அசல் படக் குழு. ஆனால் பன்றிக்காய்ச்சல் பயம் காரணமாக இப்போது அடியோடு அந்த திட்டத்தையே ரத்து செய்துவிட்டனர்.

அதேபோல, விஜய் படத்தின் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது அந்த எண்ணத்தையே கைவிட்டுவிட்டனராம்.

தென்னமெரிக்காவில் நடக்கவிருந்த த்ரிஷா நடிக்கும் ‘சங்கம்’ படப்பிடிப்பும் ரத்தாகிவிட்டது.

வெளிநாட்டுப் படப்பிடிப்புகள் ரத்து ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் வட இந்திய நடிகைகளுடன் நடிப்பதை அடியோடு தவிர்த்து வருகிறார்கள் முன்னணி தமிழ் நடிகர்கள். முடிந்தவரை, காதல் காட்சிகளை சில நாட்கள் தள்ளி எடுத்தால் போதும் என்று இயக்குநர்களிடம் கூறிவருகிறார்களாம்.

சமீரா ரெட்டி மும்பைக்கே போகாமல் சென்னையிலேயே தங்கியிருக்கிறாராம். இன்னும் சில நடிகைகள் சென்னையில் இருந்தால்தான் பாதுகாப்பு என மருத்துவர்கள் அறிவுரைத்ததால் இங்கேயே தங்கிவிட்டனர். ஆனால் கடந்த இரு தினங்களாக சென்னையில் நடப்பதைப் பார்த்தவர்கள், இங்கேயே இருக்கலாமா… மும்பை போய்விடலாமா என தவிக்கிறார்களாம்.

மும்பைவாசியாகிவிட்ட அசினுக்கு எப்போது சென்னைக்குப் போகலாம் என்றாகிவிட்டதாம். அப்படி ஒரு நோய்க் கலவரமாம் பாலிவுட்டில். இங்கேயோ… வேண்டாம் வேண்டாம்… இன்னும் கொஞ்சநாள் அங்கேயே இருந்துவிட்டு வாருங்கள் என சொல்லிவிட்டார்களாம் அசினுக்கு.

இதற்கிடையே, வெளிநாடுகளில் ஸ்வைன் ப்ளூ இரண்டாவது சுற்று தாக்குதல் தொடங்கிவிட்டதாம். இதுகுறித்த அறிவிப்பை இன்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியிட, ஹ்ருத்திக் ரோஷன், ஷாருக்கான் போன்ற பெரும் நடிகர்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களை அப்படியே ரத்து செய்துவிட்டு மும்பைக்கு வந்துவிட்டார்களாம்.

தயாரிப்பாளர் சங்கம் – நடிகர் சங்கம் அறிவுறுத்தல்!

இதற்கிடையே, படப்பிடிப்பு நடக்கும் இடங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், முடிந்த அளவு வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் தமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன தயாரிப்பாளர் கவுன்சில் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள்.

பன்றிக் காய்ச்சல்… சில எச்சரிக்கைக் குறிப்புகள்!

August 11, 2009 by  
Filed under General


பன்றிக் காய்ச்சல்… சில எச்சரிக்கைக் குறிப்புகள்!

ன்றிக் காய்ச்சல் பயந்து நடுங்கும் அளவுக்கு மிக மிக ஆபத்தானதல்ல. அதைக் குணப்படுத்தவும் முடியும்.

images166262_maskன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், வந்தால் செய்ய வேண்டியவை குறித்தும் சில தகவல்கள்… இதனை தமிழ அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அறிகுறிகள்:

இருமல், சளி, கடும் காய்ச்சல், தொண்டை வலி, களைப்பு, தலைவலி, வயிற்றுப் போக்கு, உடல் வலி, மூக்கு ஒழுகுதல், தும்மல், எடைக் குறைவு போன்றவையே பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும்.

-இவை தென்பட்டால், உடனடியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் பரிசோதனை நிலையத்திற்கு சென்று அங்கு முறைப்படி பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம்.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் வழிகள்:

வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது நலம்.

தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அதிக அளவில் கூடும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.

என்-95 என்ற வகை முகக் கவசத்தை அணிந்து கொள்வது அல்லது நல்ல கைக்குட்டையால் மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் மூடும்படியாக அணிந்து கொண்டு வெளியில் செல்வது நல்லது.

இருமும்போதோ அல்லது தும்மும்போதோ கைக்குட்டையால் வாய்ப் பகுதியை மூடிக் கொண்டு செய்வது நல்லது.

இருமல், சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

தினசரி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்பளர் தண்ணீராவது அருந்துவது அவசியம்.

கீரை உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

இதைத் தவிருங்கள்…

மது அருந்துவோருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பரவல் எளிதாக இருக்கும் என்பதால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

என்ன மருந்து?

பன்றிக் காய்ச்சலுக்கான மாத்திரையான ‘டமிஃப்ளூ’ அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். அதை நாமாக வாங்கி சாப்பிட முடியாது. அது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அரசு அதை கட்டுக்குள் வைத்து அரசு மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே விநியோகித்து வருகிறது.

எங்கே சிகிச்சை?

தமிழகத்தில் தேர்ந்தெடுத்த சில மருத்துவமனைகள் மற்றும் ஆய்வு மையங்களில் பன்றிக் காய்ச்சல் குறித்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

சென்னையில் தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்று நோய் மையம், அரசு பொது மருத்துவமனை மற்றும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் பன்றிக் காய்ச்சலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனே அது பன்றிக் காய்ச்சல்தான் என்று பீதி அடைந்து விடாமல், உரிய டாக்டர்களை அணுகினால், பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தவிர்க்க முடியும்.

முடிந்த வரை இந்த எச்சரிக்கை குறிப்புகளை அருகிலுள்ளோருக்கும் சொல்லுங்கள்!

பன்றிக் காய்ச்சல்: சென்னையில் மேலும் ஒருவர் பலி!

August 11, 2009 by  
Filed under General

பன்றிக் காய்ச்சல்: சென்னை – ஜம்முவில் இருவர் பலி!

சென்னை: பன்றிக் காய்ச்சலால் சென்னையில் நேற்று சிறுவன் h1n1சஞ்சய் உயிரிழந்த நிலையில் இன்று இளம் பெண் ஒருவரும் உயிரிழந்தார். இதையடுத்து இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தோரின் எண்ணிக்க 10 ஆக உயர்ந்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் படு வேகமாக பரவி வருகிறது. இங்குதான் உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.

நேற்று மட்டும் இந்தியாவில் நான்கு பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். புனேவில் இருவர், குஜராத்தில் ஒருவர், சென்னையில் சிறுவன் என உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் மூவர் பலி!

நேற்று மாலைக்கு மேல் புனேவைச் சேர்ந்த 13 வயது மாணவி ஸ்ருதி கவதே மற்றும் 35 வயதாகும் பார்மசிஸ்ட் சஞ்சய் திலேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுவரை மகாராஷ்டிராவில் மட்டும் 6 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். அதில் ஐந்து பேர் புனேவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 7ம் தேதி முதல் சிறுமி ஸ்வாதி செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

சென்னையில் பெண் பலி!

இந்த நிலையில் இன்று அதிகாலை, சென்னையில் ஒரு பெண் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

அவரது பெயர் டீனா ஜோசப். அடையாறில் வசித்து வந்த 29 வயதான டீனா, பன்றிக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

ஆனால் இந்தப் பெண் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்படியெனில் அவரை பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கான வார்டில் வைத்திருந்தது ஏன் பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல யாரும தயாராக இல்லை.

இந்த நிலையில் இன்று ஜம்முவில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு வெளியானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் மூடல்!

புனேவில் பன்றிக் காய்ச்சல் மோசமான முறையில் பரவி வருவதால் நகர் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல திரையரங்குகள், வர்த்தக வளாகங்களையும் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.

பீதியில் வேளச்சேரி – மடிப்பாக்கம்

சிறுவன் சஞ்சய் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தான். சஞ்சய் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் வசிப்போர் அனைவரும் மாஸ்க் அணிந்து நடமாடி வருகின்றனர்.

சஞ்சய் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ள பகுதியில் ஆள் நடமாட்டம் அடியோடு குறைந்து போய் விட்டது.

அந்தப் பகுதி வழியாக செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். வேளச்சேரி மக்கள் கிட்டத்தட்ட அனைவருமே முகத்தை மூடிக் கொள்ளும் மாஸ்க் அல்லது கர்ச்சீப்பால் முகத்தை மூடியபடியே நடமாடுகின்றனர்.

மாஸ்க்குகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது இப்பகுதிகளில்.

சஞ்சய் வீடு அருகே உள்ள கடைகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தோர் முகத்தை மூடியபடி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஸ்களைத் தடுத்த மக்கள்!

சஞ்சய் வீடு உள்ள சாலையில் பஸ்கள் செல்வது வழக்கம். ஆனால் மக்கள் பீதி காரணமாக பஸ்களை அந்த வழியாக செல்ல வேண்டாம் என டிரைவர்களை வலியுறுத்தியதன் பேரில் நேற்று அந்தப் பகுதி வழியாக பஸ்கள் செல்லவில்லை.

சஞ்சய் வசித்து வந்த வீட்டுக்கு அருகே வசித்து வரும் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனராம்.

பல வீடுகளில் வேலைக்காரப் பெண்கள் கூட வர மறுத்து விட்டனராம்.

வேளச்சேரி மக்கள் இன்னும் சஞ்சய் மரணம் மற்றும் பன்றிக் காய்ச்சல் பீதியிலிருந்து விலகவில்லை. ஒரு விதமான பதட்டமும், இறுக்கமான சூழ்நிலையும் அங்கு காணப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல்… அவசரத் தொடர்புக்கு 1913

பன்றிக் காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள், சோதனைகள் செய்து கொள்ள விரும்புவோர் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இலவச தொலைபேசி வசதியை 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பன்றிக் காய்ச்சல் வந்திருப்பதாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்தால் அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பார்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

கர்ச்சீப் போதும்…

பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க முறையான மாஸ்க் கிடைக்காவிட்டாலும் கூட வெறும் கர்ச்சீப்பால் (கைக்குட்டை) கூட முகத்தை மறைத்துக் கொண்டால் போதுமானது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்ல சுத்தமான கைக்குட்டையால் மூக்குப் பகுதியையும், வாயாயையும் மறைக்கும் வகையில் கட்டிக் கொண்டால் போதும், வைரஸ் தாக்குதலைத் தடுக்கலாம் என்று மகாராஷ்டிர டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், என்-95 என்ற மாஸ்க்கைப் பயன்படுத்தும்போது அவற்றை பின்னர் முறைப்படி அப்புறப்படுத்தி விட வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யாமல் கண்ட இடத்தில் தூக்கிப் போட்டு விட்டால், அதிலிருந்து வைரஸ் பரவம் அபாயம் உள்ளது.

அதேசமயம், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் இந்த என் -95 முகக் கவசமும் கூட முழுமையாக வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது என்று டெல்லி எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.

பன்றிக் காய்ச்சல்: ஒரே நாளில் சென்னை சிறுவன், புனே டாக்டர் பலி!

August 10, 2009 by  
Filed under General

பன்றிக் காய்ச்சல்: ஒரே நாளில் சென்னை சிறுவன், புனே டாக்டர் பலி!

சென்னை: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 10-swine-flu1-200தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 4 வயது சென்னை சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான். அதேபோல புனேவைச் சேர்ந்த டாக்டர் ஒருவரும் உயிரிழந்தார். இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் இறந்தவார்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மருத்துவமனைகள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கயுடன், சுகாதாரமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மெக்ஸிகோவில் துவங்கிய பன்றிக் காய்ச்சல் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில்தான் இதன் பாதிப்பு அதிகம் இருந்தது. இப்போது தமிழகத்திலும் உயிர்ப்பலி அளவுக்கு பரவிவிட்டது இந்த நோய்.

இதற்கு முக்கிய காரணம் மக்களின் அலட்சியம் மற்றும் சுகாதாரமின்மையே. இந்த அலட்சியத்துக்கு ஒரு பள்ளிச் சிறுவன் பலியாகிவிட்டதுதான் கொடூரம்.

சென்னையில் சஞ்சய் என்ற 4 வயது சிறுவன் சில தினங்களுக்கு முன் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான்.

வேளச்சேரி எல்.ஐ.சி காலனியில் வசித்து வந்தான். முதலில் வடபழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் அவனுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. சிறுநீர் வெளியேறுவதும் குறைந்து விட்டது. உடல் நிலை மோசமாகி வருவதால் வந்ததால் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவன் சேர்க்கப்பட்டான்.

சிறுநீரகம் செயல் இழந்து, கல்லீரலும் பாதிக்கப்பட்டது. மூச்சுவிட திணறினான்.

அதனால் உடனடியாக தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை சிறுவன் சஞ்சய் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவன் சஞ்சய் மரணத்தால் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளது, பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

புனே டாக்டரும் பலி!

அதே போல் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட புனே டாக்டர் பாபாசாகிப் மானே என்பவரும் இன்று மரணமடைந்தார். இதையடுத்து இந்தியாவில், பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இருமல், காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்..

முன்னதாக குழந்தைகளுக்கு தும்மல், இருமலுடன் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்பவேண்டாம் என்றும் உடனடியாக அருகில் உள்ள டாக்டரிடம் காண்பித்து தொண்டை சளியில் பரிசோதனை செய்யவேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கு இப்போது 7 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கோவையிலும், 4 பேர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் சஞ்சய்க்கு நோய் எப்படி வந்தது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சஞ்சயின் தந்தை குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூர் சென்று வந்துள்ளார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் இல்லை. ஆனால் அவர் மூலம் வர வாய்ப்பு உள்ளது.

அதாவது பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் அவரை அறியாமல் பல வருடங்களாக டைபாய்டு காய்ச்சலை பிறருக்கு பரப்பி வந்தார். ஆனால் அந்த நோய் அவரை தாக்கியது இல்லை. எனவே சஞ்சய்க்கு எப்படி வந்தது என்று பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகிறோம்.

பன்றிக்காய்ச்சலால் இறந்த மாணவர் சஞ்சய் வீடு வேளச்சேரி எல்.ஐ.சி. காலனியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது. அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்களில் யாருக்காவது தும்மல் இருமல் உள்ளதா? காய்ச்சல் உள்ளதா? என்பதை கண்டறிய சுகாதாரக் குழுவினர் நேற்று நேரில் சென்றனர்.

அதேப்போல சஞ்சய் படித்த அக்ஷயா மெட்ரிகுலேசன் பள்ளியில் தும்மல் இருமல் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கி உள்ளோம்.

ஒரு வாரம் விடுமுறை…

அதுமட்டுமல்ல பன்றிக்காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவுவதால் பல பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள் என்னை அணுகி பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடட்டுமா என்று கேட்டனர். அவ்வாறு விடுமுறை விடுவது சரி அல்ல.

மாணவர் சஞ்சய் படித்த வகுப்பிற்கு மட்டும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கலாம் என்று கூறியிருக்கிறேன். மற்ற பள்ளிகளை சேர்ந்த முதல்வர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இருமல் சளி இருப்பது வழக்கம் தான். ஆனால் தும்மல், இருமலுடன் காய்ச்சல் இருந்தால் பள்ளிக் குழந்தைகள் அல்லது மாணவர்களை ஒருவாரம் பள்ளிக்கு அனுப்பவேண்டாம்.

அதுமட்டுமல்ல அந்த குழந்தைகளை அருகில் உள்ள குழந்தைகள் நல டாக்டரிடம் பரிசோதியுங்கள். தேவைப்பட்டால் அவருடைய ஆலோசனையின்படி தொண்டை, மூக்கில் சளி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக ஒட்டுமொத்த பள்ளிக்கு விடுமுறை தேவையில்லை.

வகுப்பிற்கு வந்தபிறகு காய்ச்சலுடன் இருமிக்கொண்டே குழந்தைகள் இருந்தால் உடனே பெற்றோரை அழைத்து டாக்டரிடம் காண்பிக்கும்படி அறிவுரை கூறுங்கள். இருமிய குழந்தைகளுக்கெல்லாம் பன்றிக் காய்ச்சல் என்று நினைத்து பயப்பட வேண்டாம்.

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க முன் எச்சரிக்கையாக, முடிந்தவரை குழந்தைகளை, மாணவர்களை சுற்றுலா அனுப்ப வேண்டாம். தேவை இன்றி மருத்துவமனைகள், ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றார்.

திருச்சியில் 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல்?

இந்த நிலையில், திருச்சியில் ரயில்வே போலீஸ்காரர் உள்பட 2 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று மாலை கடுமையான காய்ச்சல், சளி, இருமல் ஆகிய நோய்களுடன் 2 ஆண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ரயில்வே ஆஸ்பத்திரியில் முதலில் சிகிச்சை பெற்று விட்டு அங்கிருந்து அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவரது பெயர் பதம்சிங். இன்னொருவது பெயர் விஜயன்.

அவர்களுக்கு பன்றி காய்ச்சல் நோயின் அறிகுறிகள் அதிகமாக தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள், நர்சுகள், மற்றும் மருத்துவ உதவியாளர்கள் அனைவரும் முகத்தில் நோய் தடுப்பு முகமூடி அணிந்து கொண்டனர். அதன் பின்னரே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கியது.

பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியுடன் வந்த 2 நோயாளிகளும் உடனடியாக அதற்கென்று ஏற்கனவே அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தனி வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்தம், சளி போன்றவை மாதிரி எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

பதம் சிங் ரயில்வே போலீஸ்காரர். அலுவலக வேலையாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக புனேக்கு சென்று இருக்கிறார். அதனால் அவர் பன்றி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ என்ற கேள்வி எழுந்து உள்ளது. விஜயன் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் ஆவார்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவ கல்லூரி டீன் பாலசுப்பிரமணியன் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே பன்றி காய்ச்சல் நோய் தடுப்பிற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ள 2 பேருக்கும் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உறுதியாக சொல்ல முடியும். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் இருவரும் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

2 பள்ளிகளுக்கு விடுமுறை..

இதற்கிடையே, சஞ்சய் படித்து வந்த அக்ஷயா பள்ளிக்கு ஏற்கனவே ஒரு வார விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல அடையாரில் உள்ள இன்னொரு பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சஞ்சய்யின் அண்ணனுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதையடுத்து அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் 22 பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்லியில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதுவரை 22 பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மறுதிறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை மனுசக் காய்ச்சலா இருக்குமோ!

June 24, 2009 by  
Filed under Cartoon

பன்றிக் காய்ச்சல் பத்தியே பேசுறீங்களே… எங்களுக்கும் இப்ப காய்ச்சல்தான்… ஒருவேளை இது மனுசக் காய்ச்சலா இருக்குமோ!


cart-21

நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

சென்னை, கோவை, மதுரை… பரவுது பன்றிக் காய்ச்சல்!

June 20, 2009 by  
Filed under General

சென்னை, கோவை, மதுரை… பரவுது பன்றிக் காய்ச்சல்!

மதுரை: சென்னை, கோவையைத் தொடர்ந்து மதுரைக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. அமெரிக்காவிலிருந்து மதுரை திரும்பிய swine-flu-cases2-313சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தோன்றியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அனுஷம். 8 வயதாகும் இவர், தனது பெற்றோருடன் அமெரிக்கா போயிருந்தார். அங்கிருந்து மதுரை திரும்பிய அனுஷத்தை மதுரை விமான நிலையத்தில் மருத்துவ சோதனைக்குட்படுத்தினர்.

அப்போது அனுஷத்திற்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு டாக்டர்கள் அனுஷத்தின் பெற்றோரை அறிவுறுத்தினர். ஆனால் அதை நிராகரித்த பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனை டீன் கூறுகையில், சிறுவனின் ரத்த சாம்பிளை கோவைக்கு அனுப்பவுள்ளோம். அதில் ஸ்வைன் அறிகுறி தெரிந்தால் சிறுவனக்கு தனியார் மருத்துவமனையிலேயே வைத்து தீவிர சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

இத்துடன் சேர்த்து இதுவரை இந்தியாவில் 50 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்களில் 16 பேர் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 10 பேர் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஆளாகியுள்ளனர். அனைவரும் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகளை வரவழைக்க அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சுகாதாரமான அசைவ உணவுகளைப் பயன்படுத்த வேண்டும், முடிந்தவரை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Posts with Thumbnails