Breaking News

சென்னைக்கு மட்டும் 2 மணி நேரம்.. மீதி தமிழகத்துக்கு கணக்கு வழக்கின்றி மின்வெட்டு!!

December 3, 2013 by  
Filed under election, election 2011, General, Nation, Politics

சென்னைக்கு மட்டும் 2 மணி நேரம்.. மீதி தமிழகத்துக்கு கணக்கு வழக்கின்றி மின்வெட்டு!!

powercut-mdu2

மதுரை உழவன் உணவகத்தில்–

சென்னை: மொத்த தமிழகமும் தாறுமாறான மின்வெட்டில் தவித்துக் கொண்டிருக்க, 24 மணிநேரமும் மின்சாரம் அனுபவித்த சென்னைக்கு, திங்கள்கிழமையிலிருந்து 2 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வந்தது.

அதிமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து மின்வெட்டு பிரச்சினை தீர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. திமுக ஆட்சியிலாவது மின்சாரம் ஒன்று முதல் நான்கு மணி நேரம் வரை இல்லாமல் இருந்தது.

ஆனால் அதிமுக ஆட்சியிலோ வரலாறு காணாத அளவுக்கு மின்வெட்டு. கிராமப்புற தமிழகத்தில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் மின்சாரம் வருவதே சாதனை என்பதுதான் நிலைமை.

ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டுக்குக் காரணமே திமுகதான் என்று திட்டியதோடு முதல் மூன்று மாதங்களில் மின்வெட்டை ஒழித்துவிடுவோம் என முழங்கிய முதல்வர் ஜெயலலிதாவும், அவரது அமைச்சர்களும், இதோ.. மூன்றாண்டுகள் முடியும் தறுவாயிலும் அதே பல்லவியைப் பாடிக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் சிறு, குறு தொழில்கள் பலமாக நசிவுக்குள்ளாகியுள்ளன இந்த மின்வெட்டுப் பிரச்சினையால். திமுக ஆட்சியில் பாதி நேரமாவது உற்பத்தியை செய்ய முடிந்தது. இப்போதோ, முழுமையாக தொழிற்கூடங்களை மூடிவிட்டு, தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர் சிறு தொழில் முனைவோர்கள்.

விவசாயத்தின் நிலை சொல்லத்தரமற்றதாகிவிட்டது. மூன்றே மணிநேரம்தான் விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம். இப்போது அதிலும் மண். தொடர்ச்சியாக மூன்று மணிநேரம் தருவதில்லை. ஒருமணி நேரம் மின்சாரம், அடுத்த ஒருமணிநேரம் மின்வெட்டு, மீண்டும் ஒரு மணிநேரம் மின்சாரம். அவ்வளவுதான் விவசாயத்துக்கு மின்சாரம்… அதாவது வெறும் இரண்டு மணிநேரம்!

இதனால் கிராமங்களில் குடிநீர் கூட கிடைக்காமல், பக்கத்து பக்கத்து கிராமங்களுக்கு தண்ணீருக்குப் படையெடுத்து, அது சாதிச் சண்டையில் வந்து நிற்கிறது.

power cut  - Madurai

இதுவும் மதுரைதான் – இருட்டில் ஷேவ் செய்யும் ஒரு சலூன்காரர் (ரெண்டு பேருக்கும் என்னா தைரியம்!!)

இடையில் சில மாதங்கள் மட்டும் பரவாயில்லாமல் மின்சாரம் கிடைத்தது, அதுவும் காற்றாலைகள் புண்ணியத்தில்.

இப்போது மீண்டும் முழுமையான மின்வெட்டு. மொத்த தமிழகமும் இப்படி மின்வெட்டில் தத்தளிக்கையில், தலை நகர் சென்னை மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் பெற்று வந்தது, கடந்த ஞாயிறு வரை.

நேற்று, திங்கள்கிழமை முதல் இரண்டு மணிநேர மின்வெட்டை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அமல்படுத்தியும்விட்டது.

சில இடங்களில் இரண்டு மணிநேரம் தொடர்ச்சியாக மின்வெட்டு. சில இடங்களில் ஒரு மணிநேரக் கணக்கில் இரு முறை மின்வெட்டு. இன்னும் சில இடங்களில் அரை மணி கணக்கில் நான்கு முறை கட் பண்ணியிருக்கிறார்கள்.

பதவியில் உட்கார்ந்து மூன்றாண்டுகளான பிறகும், முந்தைய ஆட்சியாளர்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது எந்த வகை நிர்வாகத் திறனோ… இருக்கிற மின் நிலையங்களை இந்த அரசால் ஒழுங்காக பராமரிக்கவும் முடியவில்லை… புதிதாக ஒரு மின்திட்டத்தைக் கூட உருவாக்கி அறிவிக்கவும் இவர்களால் முடியவில்லை என்பதே இவர்களின் தொலைநோக்கின்மைக்கு உதாரணம்.

பதவி முடியும் தருணத்திலும், மீண்டும் என்னை பதவியில் அமர்த்துங்கள், ஆறே மாதங்களில் மின்வெட்டை ஒழிப்பேன் என 2016-லும் ஜெயலலிதா முழங்கினாலும் ஆச்சர்யமில்லை!

-என்வழி ஸ்பெஷல்

‘மீன் பிடிக்க’வும் கற்றுக் கொடுங்கள் முதல்வரே!

‘மீன் பிடிக்க’க் கற்றுக் கொடுங்கள் முதல்வரே!

jj-cm

ன்றைய நிலவரப்படி சென்னையில் வசிக்க ஒரு சிறு அறையும், நாளொன்றுக்கு 30 ரூபாயும் இருந்தால் போதும். காலையில் 5 ரூபாய்க்கு சிற்றுண்டி, பிற்பகல் 8 ரூபாயில் பிரமாதமான மதியச் சாப்பாடு, இரவு ஏதாவது சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை. காரணம், அம்மா உணவகங்கள். சும்மா சொல்லக் கூடாது, தரமான – சுவையான உணவு வகைகள், சுத்தமான தயாரிப்பு.

கூலித் தொழிலாளர்கள் முதல் ஐடி பணியாளர்கள் வரை பேதமின்றி அம்மா உணவகங்களில் குவிந்து கிடக்கின்றனர். ஆனால் வெளியில்…ஒரு சாப்பாடு விலை சராசரியாக ரூ 100-ஐத் தாண்டிவிட்டது.

ரேஷன் கடைகளில் இலவச அரிசி கிடைக்கிறது. ஆனால் ஓரளவு தரமான அரசிக்குக் கூட கிலோ ரூ 40 வரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. காய்கறிகள் விலையோ கற்பனைக்கெட்டாத தூரத்துக்குப் போய்விட்டது. விளைவிக்கும் விவசாயிகள் நஷ்டம் நஷ்டம் என்று கூறி விவசாயத்தைக் கைவிட்டு, நிலத்தை ப்ளாட் போடக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் இலவசங்கள், மலிவு விலை உணவுகள்.. காய்கறிகள்… இன்னொரு பக்கம் அசாதாரண வெளிச்சந்தை விலையேற்றம்… அருகி வரும் விவசாயம்!

எத்தனை முரண்பாடுகள்? இதற்குக் காரணம் என்ன?

நமது சமூகக் கட்டமைப்பு சிதைந்து வருவதுதான். படித்தவர்கள் யாரும் கிராமத்திலேயே இருக்கக் கூடாது என்ற சிந்தனை வளர்ந்துவிட்டது. படித்தால் என்ன.. கிராமங்களிலிருந்தபடி விவசாயம் செய்யலாமே என்றால், அதனை பிற்போக்குத்தனம் என்று கூப்பாடு போட கோஷ்டி கோஷ்டியாய் அலைகிறார்கள்.

எல்லாவற்றுக்குமே அரசை / அரசியலைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளும் மனநிலைக்கு பழகிவிட்டார்கள் தமிழக மக்கள். தன் பங்கு என்ன, தான் செய்ய வேண்டியது என்ன என்பதை யோசிக்கவும் மறுக்கிறார்கள்.

இந்த சூழலில் ஜெயலலிதாவின் தமிழக அரசு அளிக்கும் சலுகைகளும் இலவசங்களும், மேலும் மேலும் புதிய இலவசங்களுக்கு அவர்களை ஏங்க வைத்துள்ளன.

இலவச ரேஷன் அரிசி… அடுத்து அம்மா உணவகம் வந்துடுச்சி… இப்போ அம்மா மலிவு விலை காய்கறியும் வந்துடுச்சி… மலிவு விலை மினரல் வாட்டரும் கொடுத்துட்டாங்க…. அப்படியே மலிவு விலை டாஸ்மாக், மலிவு விலை பெட்ரோல் பங்க்கையும் ஆரம்பிச்சிட்டா வாழ்க்கை தொல்லையில்லாம ஓடிடும் என சீரியஸாகவே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

malivu-vilai-unavagam

எடுக்கிற முடிவில் உறுதியாக இருப்பவர் என்ற பெயரைச் சம்பாதித்துள்ள முதல்வர், இந்த மாதிரி குறுகிய கால பலன்கள் தரும் திட்டங்களை முதலில் விட்டொழிக்க வேண்டும்.

தமிழகத்துக்கு இப்போதைய இன்றியமையாத தேவை, விவசாயத்துக்குப் பாதுகாப்பும், தண்ணீர் மேலாண்மையும்தான்.

ஆண்டில் 9 மாதங்கள் மழையில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த மூன்று மாதங்களில் கிடைக்கும் மழை நீர் மற்ற 9 மாதங்களுக்கும் பலன் தரும் அளவுக்கு திட்டமிடல் அவசியமாகிறது.

கருணாநிதி முதல்வராக இருந்த 1996-2001 ல் காவிரிப் பாசன மாவட்டங்களில் முழுமையாக ஆறு, கால்வாய் மற்றும் ஏரிகளை மராமத்து செய்தார். அதன் பலன் இன்றும் தொடர்கிறது. ஏனோ மற்ற மாவட்டங்களில் அதைச் செய்யவில்லை.

முதல்வர் ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்திலாவது, தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளை முழுவதுமாக மராமத்து செய்ய திட்டங்களை வகுக்க வேண்டும். ஆக்கிரமிப்பிலுள்ள நீர்நிலைகள், தூர்ந்து அல்லது அழிக்கப்பட்டுவிட்ட நீர்வழித் தடங்களை சீரமைக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் காலத்துக்குப் பிறகு இந்தப் பணி அப்படியே முடங்கிக் கிடக்கிறது. அதனை முழுவீச்சில் ஜெயலலிதா செய்வாரேயானால்…. அம்மா உணவகங்களுக்கோ, மலிவு விலை காய்கறி கடைகளுக்கோ கூட அவசியமிருக்காதே.

இன்னொரு பக்கம், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மக்கள் முன்னெடுக்க, அதன் பலன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும். கோவையில் கிலோ 4 ரூபாய்க்கு வாங்கும் தக்காளியை கோயம்பேட்டில் ரூ 60 க்கு விற்கிறார்கள் என்றால் இடையில் எத்தனை சதவீதம் கொள்ளை லாபம் அடிக்கப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

மன்னார்குடியில் ரூ 22-க்குக் கிடைக்கும் நல்ல பொன்னி அரசி, சென்னையில் ரூ 48-க்கு விற்கப்படுகிறதென்றால்…  இடையில் புகுந்து இவ்வளவு விலையை உயர்த்தும் காரணிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து களைவதுதானே அரசின் பொறுப்பு?

அந்த தலையாய பணியை விட்டுவிட்டு, தயிர் சாதம் விற்றுக் கொண்டிருப்பது,  விவசாயத்தை மியூசியத்தில்  கொண்டுபோய் வைத்துவிடாதா?

அம்மா உணவகங்களும், மலிவு விலை காய்கறிக் கடைகளும் குறுகிய கால நோக்கில் நல்ல விஷயங்கள்தான். தேர்தல் ஆதாயங்களுக்கு வண்ணமிகு பிரச்சாரமாக அமையக் கூடியவைதான். அவை ஒரு பக்கம் தொடரட்டும். அதே நேரம் ஒழுங்கற்றுக் கிடக்கும் இந்த சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை சீரமைப்பதுதான் அரசின் பிரதான பொறுப்பு. அது.. தேர்தல் லாபங்களைத் தாண்டி, சரித்திரமாய் நிற்கும் சாதனை.

முதல்வர் கவனம், இந்த சாதனையை நோக்கித் திரும்பினால் தமிழகம் பேறு பெறும்!

விதுரன்
-என்வழி

எனக்கு தெரியாமலேயே ஆங்கிலத்தில் கல்லூரி தேர்வு எழுத உத்தரவு போட்டிருக்கிறார்கள்! – ஜெயலலிதா

May 28, 2013 by  
Filed under election, election 2011, General, Nation, Politics

கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தேர்வுகள் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் – ஜெ

banner-1-6708
சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள்தேர்வுகளை பயிற்சிகள் மற்றும் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமக்குத் தெரியாமலேயே, தன் கவனத்துக்கு கொண்டு வராமலேயே வெளியிடப்பட்டது என்றும், இந்த உத்தரவை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக அரசு அறிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.

இந்த விவாதத்தின் போது, ஆங்கில வழியில் பயிலும் மாணவ மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

என் கவனத்துக்கு வராமலேயே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழி வழியில் அல்லது தமிழ் மொழி வழியில் பயின்றாலும், மாணவ மாணவியர் தமிழில் உள்தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் ஆகும்.

எனவே, ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவ மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதிக்குமாறு நான் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற நான் ஆணையிட்டுள்ளேன்.

எனவே, அனைத்து மாணவ மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முதல்வர் கூறியுள்ளார்.

-என்வழி செய்திகள்

சிறுநீரை குடிக்க வைத்து மாணவர் சித்ரவதை – தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது

July 22, 2012 by  
Filed under General, Nation, Politics

சிறுநீரை குடிக்க வைத்து மாணவர் சித்ரவதை – தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது

பெரம்பலூர்: சிறுநீரை குடிக்க வைத்து வற்புறுத்தி மாணவரை சித்ரவதை செய்த பள்ளி ஆசிரியர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அகரம்சிகூரில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பரத்ராஜ் (வயது 16) என்ற மாணவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்த தேசிங்குராஜன் மகனான பரத்ராஜ் பள்ளி அருகில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தான்.

கடந்த 19-ந் தேதி இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் சிறுநீர் கழிக்க வெளியில் செல்ல அனுமதிக்குமாறு அங்கு இருந்த ஆசிரியர்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள் படிக்காமல் அடிக்கடி வெளியில் செல்கிறாயா என கேட்டு பரத்ராஜை சிறுநீரை இங்கேயே குடி என்று வற்புறுத்தி பிரம்பால் அடித்ததாகவும் புகார் செய்யப்பட்டது.

அடுத்த நாள் மாணவன் பரத்ராஜ் விடுதியில் இருந்து வெளியேறி சொந்த ஊரான கும்பகோணம் சென்று விட்டான். இந்த சம்பவம் குறித்து மாணவனின் தந்தை தேசிங்குராஜன் கும்பகோணம் மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே கும்பகோணம் போலீசார் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீசுக்கும், சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் விடுதிக்கும் தகவல் தெரிவித்தனர்.

பரத்ராஜ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மல்லிகா, மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேற்று காலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கருப்பையா, சக்திவேல், இளையராஜா ஆகிய 3 பேரும் மாணவன் பரத்ராஜை அடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மல்லிகா உத்தரவிட்டார்.

தலைமை ஆசிரியர் மறுப்பு

இதற்கிடையே கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் பரத்ராஜை பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு நேற்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மாணவன் பரத்ராஜ்க்கு ஏற்கனவே புகையிலை போடும் பழக்கம் இருந்து உள்ளது. ஹேன்ஸ் எனப்படும் புகையிலை பாக்கெட்டை மாணவன் பரத்ராஜ் பையில் வைத்து இருந்ததை மற்ற மாணவர்கள் பார்த்து ஆசிரியர்களிடம் சொல்லி உள்ளனர். இததைத்தொடர்ந்து அந்த மாணவனை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்தனர். இனிமேல் புகையிலை போடக்கூடாது என்று அறிவுறுத்தினர். ஆசிரியர்கள் கண்டித்த பின்னரும் அந்த புகையிலை பாக்கெட்டை அவன் தூக்கிப்போடாமல் மறைத்து வைத்து இருந்ததால் மாணவனை மீண்டும் கண்டித்த ஆசிரியர்கள் புகையிலை பாக்கெட்டை பறித்துக்கொண்டதுடன் மாணவனையும் அடித்தனர். ஆனால் சிறுநீரை குடிக்க சொல்லி சித்ரவதை செய்யதாக சொல்வதில் சிறிதளவும் உண்மை இல்லை,” என்றார்.

ஆனால் ஆசிரியர்கள் கடுமையாக அடித்ததில், அந்த மாணவனின் விரல்கள், தொடைகள் கடுமையாக வீங்கியிருந்தது குறித்து அவர் எதுவும் பேசவில்லை!

மாணவனை சிறுநீர் குடிக்க வைத்து அடித்த தனியார் பள்ளி ஆசிரியர்கள்

இந்த நிலையில் நேற்று மதியம் ஆசிரியர்கள் கருப்பையா, சக்திவேல், இளையராஜா ஆகிய 3 பேரையும் மங்களமேடு போலீசார் கைது செய்தனர். மாணவன் பரத்ராஜை அடித்து துன்புறுத்திய வழக்கில் இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பள்ளிகள் என்பவை மாணவர்களை பண்புள்ளவர்களாக மாற்றத்தான். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலான ஆசிரியர்கள் வக்கிர புத்தி கொண்டவர்களாகவும்,  வெறும் பணத்தில் மட்டுமே கவனமாகவும் உள்ளதன் விளைவுதான் இந்த மாதிரி சம்பவங்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மேற்கு வங்கத்தில் ஒரு 6 வயதி சிறுமியை துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அடுத்து தமிழகத்திலும் இப்படியொரு அவலம் அரங்கேறியுள்ளது.

இன்னும் வெளியில் சொல்லாமல் மறைக்கப்பட்ட பள்ளிகள், அவலங்கள் எவ்வளவோ!

இப்படி ஒரு கேவலமான சம்பவம் நடந்தும் அதை வெளிப்படுத்தி, கொடுமைக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதில் காட்டும் அக்கறையைவிட, குற்றவாளிகளை மறைக்கவும் காப்பாற்றவுமே தலைமை ஆசிரியர் முனைப்பு காட்டுவதுதான் கொடுமையின் உச்சம்!

இந்த அவலம் வெளியில் தெரிந்தால் அதை கவுரவப் பிரச்சினையாகக் கருதும் மாநில அரசும் போலீசும், வழக்கை நீர்த்துப்போக வைப்பதில் குறியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

என்வழி செய்திகள்

அறிவிப்புக்குப் பின் இன்னும் அதிகமான மின்வெட்டு – மக்களைத் தொடரும் துன்பம்!

February 28, 2012 by  
Filed under General, Nation, Politics

அறிவிப்புக்குப் பின் இன்னும் அதிகமான மின்வெட்டு – மக்களைத் தொடரும் துன்பம்!

சென்னை: சென்னையிலும் புறநகர்களிலும் 2 மணி நேர மின்வெட்டு, மாநிலத்தின் பிற பகுதிகளில் 4 மணி நேரம் மின்வெட்டு என்று மின்வாரியம் அறிவித்து அது நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக கூறப்பட்டாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை நீடித்ததால் மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக மாணவர்களும் முதியோரும் பெரும் அவதிக்குள்ளாகிவிட்டனர்.

புதிய மின்தடை திட்டத்தை நேற்று முதல் மின்வாரியம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அமல்படுத்தியதாக அறிவித்தது. அதன்படி இதுவரை ஒரு மணி நேர மின்வெட்டை சந்தித்து வந்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 2 மணி நேரமாக மின்வெட்டு உயர்த்தப்பட்டது. மேலும் பல பகுதிகளில் அறிவிக்கப்படாமல் 1 மணி முதல் 2 மணி வரை பழுதுபார்ப்பு என்ற பெயரில் மின்சாரத்தை துண்டித்தனர்.

ஆக சென்னை மாநகரின் பல பகுதிகள், குறிப்பாக புறநகர்களில் 4 மணிநேரம் மின் வெட்டப்பட்டது.

மாநிலத்தின் பிற பகுதிகளில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த 10 மணி நேர மின்வெட்டு என்பது 4 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இங்குதான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டின் அளவு தொடர்ந்து அப்படியேதான் இருப்பதாக மக்கள் கொந்தளிப்புடன் கூறியுள்ளனர்.

உதாரணத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் கோடி மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் தொடர்நது 8 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. அதேசமயம் கிராமப்புறங்களில் இதை விட கூடுதலான மின்வெட்டை அமல்படுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நிலைதான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டுமே நான்கு மணி நேர மின்வெட்டு அமலாகியுள்ளதாம். பெரும்பாலான இடங்களில் 5 மணி நேரம், 6 மணி நேரம் என்றுதான் உள்ளதாம். பெரும்பாலான இடங்களில் 8 மணி நேரமே தொடர்கிறதாம்.

மதுரையில் மட்டும் இதுவரை 8 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 5 மணி நேரமாக குறைந்துள்ளதாம். அதாவது மின்வாரியம் சொன்ன 4 மணி நேர மின்வெட்டாக அது இன்னும் குறைக்கப்படவில்லை.

ஏன் இந்தக் குழப்பம் என்று மின்வாரியத் தரப்பி்ல விசாரித்தபோது, பல ஊர்களில் லோக்கல் ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் தலையீடு காரணமாக, முறையாக மின் விநியோகத்தை வழங்க முடியவில்லை. மின்வெட்டையும் சரியாக அமல்படுத்தவில்லை என்றனர் அதிகாரிகள்.

பல மின் அலுவலகங்களுக்கு உத்தரவும் முறைப்படி சென்று சேரவில்லையாம். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மின்விநியோக அலுவலகங்களுக்கு இதுதொடர்பான உத்தரவு கயத்தாரிலிருந்து வர வேண்டுமாம். ஆனால் இன்னும் இந்த உத்தரவு அங்கிருந்து போகவில்லையாம். இனால் தொடர்ந்து பழைய மின்வெட்டே நீடிக்கிறதாம்.

இதற்கிடையே, மின்வெட்டை முறையாக சரியாக அமல்படுத்துகின்றனரா, விதிமீறல் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க 32 மாவட்டங்களுக்கும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனவாம். இதில், மின் மண்டல தலைமை பொறியாளர்கள் தலைமையில், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தெரியவிந்துள்ளது.

முதல்வரே நேரடியாக ஆலோசனை நடத்தி பல கட்ட ஆய்வுக்குப் பின்னர்தான் திருத்தப்பட்ட மின்வெட்டை மின்வாரியம் அறிவித்தது. அதை உடனடியாக அமல்படுத்தாமல் இப்படியா குழப்புவது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது என்று தமிழக மக்கள் குமுறுகிறார்கள்.

-என்வழி செய்திகள்

இதானா சார் உங்க ‘டக்கு’!

இதானா சார் உங்க ‘டக்கு’!டா
ஸ்மாக்ல சரக்கு பத்திரமா இருக்கு… கல்லாவும் பத்திரமாத்தான் இருக்கு. ஆனா பேங்க்ல, நகைக் கடைல, வீடுகள்ல மட்டும் கொள்ளை போகுது.  கொள்ளையனை டக்குனு புடிச்சிருவோம்னு சவால் விடறீங்க. நாட்கள் ஓடினதுதான் மிச்சம்… இதானா சார் உங்க ‘டக்கு’!

-என்வழி

அந்தமானில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்; சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளிலும் பாதிப்பு!

August 11, 2009 by  
Filed under General

அந்தமானில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்; சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளிலும் பாதிப்பு!

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. earthquakeஇதனால் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நாகை, கடலூர் மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

நேற்று நள்ளிரவுக்கு மேல் 1.26 மணியளவில் போர்ட் பிளேருக்கு வடக்கே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவாகியிருந்தது.

அதிகபட்ச நிலநடுக்கம் இது.

இதனால் அந்தமான் முழுவதும் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். வீடுகளில் உள்ள பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. கட்டடங்களும் ஆடியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இருப்பினும் அந்தமான் நிர்வாகம் சுனாமி எச்சரிக்கை எதையும் பிறப்பிக்கவில்லை. விடிய விடிய மக்கள் தெருக்களிலேயே குழுமியிருந்தனர். சேத விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று தெரிகிறது.

தமிழக கடலோர மாவட்டங்களில்…

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டனம், கடலூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

சென்னை நகரில் மயிலாப்பூர், அண்ணா நகர், பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், தி.நகர், மடிப்பாக்கம், திருவான்மியூர், கொட்டிவாக்கம், திரு.வி.க.நகர், திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

வீடுகள் மற்றும் பொருட்கள் ஆடின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பீதி காரணமாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசித்து வருவோர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

ஆனால் வெளியில் வந்தால் கன மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வெளியிலும் இருக்க முடியாமல், வீட்டுக்குள்ளும் இருக்க பயமாக இருந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

நாகையில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

ஹைதராபாத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ப்ளாஷ்பேக்: ‘அரசியலுக்கு நல்லவங்கதான் வேணும்; வல்லவங்க அவசியல்லை!’

July 30, 2009 by  
Filed under Fans Activities

ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? – பிரபல தொழிலதிபர் சொன்ன விளக்கம்!

எம்வி என்று அழைக்கப்பட்ட காலம் சென்ற தொழிலதிபர் எம் வி fasting-for-cauvery-water-32அருணாச்சலம் முருகப்பா குழுமத்தின் தலைவராக இருந்தவர். அனைத்து அரசியல்வாதிகளையும் நன்கு அறிந்தவர்.

ஒருமுறை திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனிடம் அவர் இப்படிக் கூறியுள்ளார்:

“சரவணன், நீங்க சொன்னா ரஜினி கேப்பார்… அவரை தயவு செய்து அரசியலுக்கு வரச் சொல்லுங்கள்..”, என்றாராம்.

அதற்கு சரவணன், “ரஜினி நல்ல மனிதர். ஆனா அவருக்கு பாலிடிக்ஸ் தெரியாது. அவரது மனப்போக்குக்கு பாலிடிக்ஸ் ஒத்து வராது!”, என்று பதில் கூறியுள்ளார்.

உடனே, “பாலிடிக்ஸ் தெரியாவிட்டாலும் தப்பில்லை. இன்னிக்கு நம்ம நாட்டு அரசியலுக்கு நல்லவங்க வரணும். அவங்க வல்லவங்களா இருக்க வேண்டிய அவசியமில்லை. வல்லவங்க ஆலோசனைக் கேட்டு நல்லவங்களால சிறப்பாக ஆள முடியும்” என்றாராம் எம் அருணாச்சலம்.

குமுதம் இதழின் தீபாவளி சிறப்பிதழில் (14.11.1996) வெளியான தனது அனுபவ கட்டுரையில் இதைக் குறிப்பிட்டிருந்தார் ஏவிஎம் சரவணன்.

ரசிகர்களான நாம், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது போல,  எப்படிப்பட்ட பெரிய மனிதர்களெல்லாம் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியிருக்கிறார்கள் / விரும்புகிறார்கள் என்பதை நினைக்கையில் ரஜினி மீதான நம் மரியாதை பல மடங்கு கூடுகிறது. ரஜினி ரசிகனாக பெருமையாகவும் உள்ளது.

இதனை ‘என்வழி ‘ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்தக் கட்டுரை வெளியான குமுதம் பக்கம் (14.11.1996):

rajini
-ஆர் வி சரவணன்

kmrvsaravanan@hotmail.com

30 நதிகளை இணைப்பது சாத்தியமே: ஆய்வறிக்கை தாக்கல்

July 20, 2009 by  
Filed under General

நதி நீர் இணைப்பு: முதல் கட்ட ஆய்வறிக்கையை சமர்பித்தது நதிநீர் மேம்பாட்டு அமைப்பு!

டெல்லி: இந்தியாவின் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையக்கூடிய நதிநீர் இணைப்பு பற்றிய பூர்வாங்க வேலையின் முதல் படிக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு.

கோப்புப் படம்

கோப்புப் படம்

மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நதி நீர் இணைப்பு குறித்த ஒரு ஆரம்பகட்ட ஆய்வறிக்கையை தயார் செய்து அளித்துள்ளது தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு.

இந்தியாவில் 30 முக்கிய நதிகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக இந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது.

கடந்த பாஜக ஆட்சியின்போது நதிகள் இணைப்பு தொடர்பான ஆய்வுகள் தொடங்கின. சென்னையில் காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்ணாவிரதமிருந்தார். அப்போது நதி நீர் இணைப்புதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கு பெரிய தீர்வு என வலியுறுத்தியவர், அந்த முக்கியத்துவத்தை நச்சென்று புரிய வைக்கும் விதத்தில், நதிநீர் இணைப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், முதல் ஆளாக தானே ரூ.1 கோடி நிதி தருவேன் என்றும், மேலும் அதற்கான பல முயற்சிகளின் பங்கேற்க முன்வருவதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்து நதி நீர் இணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இதற்கு பல ஆண்டுகள் முன்பே நதி நீர் இணைப்பு குறித்து மத்தியில் அமைந்த பல்வேறு அரசுகள் பேசி வந்தாலும், இந்த சந்திப்புக்குப் பிறகு, நதி நீர் இணைப்பு குறித்த பேச்சுகள் தீவிரமடைந்தன.

இதற்காக தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு (National Water Development Agency-NWDA) உருவாக்கப்பட்டு நாட்டின் நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உத்தரவிடப்பட்டது. இதற்கென அப்போது ரூ.5 லட்சம் கோடிகள் செலவாகும் என மத்திய அரசு மதிப்பிட்டது.  இதுகுறித்த முறையான அறிவிப்பினையும் வாஜ்பாய் அரசு வெளியிட்டது.

river-link-map

ஆனால் உடனடியாக இந்த பூர்வாங்க ஆய்வு முடிந்தபாடில்லை.

இந்த ஆய்வை முடிக்க தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு 7 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. அதற்குள் மூன்று அரசுகள் மாறிவிட்டன. திட்டமதிப்பும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் 30 முக்கிய நதிகளை இணைக்க சாத்தியக்கூறுகள் இருப்பது இதன் ஆய்வில் தெரியவந்துள்ளது நீர் மேம்பாட்டு அமைப்பு.

இந்த ஆய்வறிக்கையின்படி, இமயமலையை சேர்ந்த 14 ஆறுகளையும், தென்னிந்தியாவில் உள்ள 16 ஆறுகளையும் இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேன்-பேட்வா நதிகளை இணைப்பது குறித்த விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.Cauvery

இமயமலையை சேர்ந்த 14 நதிகளில் கோசி-மெச்சி, கோசி-காக்ரா, காக்ரா-யமுனா, கங்கை-கண்டாக், யமுனா-சாரதா, யமுனா-ராஜதான், மானஸ்-சந்தோஸ்-தீஸ்தா-கங்கா ஆகியவை முக்கியமானவை.

காவிரியும் வைகையும்

அதுபோல தென்னிந்தியாவை பொறுத்தவரை மகாநதி-கோதாவரி நதிகளும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைக்க முடியும் என்றும் அதில் கோதாவரி-கிருஷ்ணா ஆகிய இரண்டு ஆறுகளும் மூன்று இடங்களில் இணைக்கப்படலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ சைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியை இணைக்கலாம். சோமசீலம் மற்றும் கிராண்டு அனிகட் ஆகிய இடங்களில் பெண்ணாறு, காவிரி ஆறு ஆகியவற்றை இணைக்கலாம்.

கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்கலாம்.

பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆகியவையும் இணைப்புக்கு சாத்தியமான ஆறுகளே என இந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிக கல்விக் கட்டணம்: தமிழக அரசு புதிய சட்டம்!

June 23, 2009 by  
Filed under General

பள்ளிகளில் அதிக கல்விக் கட்டணம்: தடுக்க அரசு புதிய சட்டம்!

சென்னை: தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் இந்த சட்டசபைக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.0204

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தீர்மானத்தின் மீது அதிமுக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.வி.சேகர், காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சிவபுண்ணியம் ஆகியோர் பேசினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தவுடனேயே அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ், இலவச சீருடை போன்றவற்றை வழங்கி இந்த அரசு கல்வியின் தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறது.

இந் நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வருவது கவலை அளிப்பதாக தெரிவித்த முதல்வர் கருணாநிதி அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

கல்விக் கட்டணங்களில் எல்லா மாநிலங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது ஒரு மோகமாக உருவாகிவிட்டது.

அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றதை குறிப்பிடலாம்.

சுய நிதி கல்வி நிறுவனங்கள் அவர்களே தங்கள் கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதால் இந்த விஷயத்தில் மாநில அரசு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும்.

இப்போதும் கூட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

116 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். நிச்சயமாக பள்ளியின் அங்கீகாரம் ரத்து என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

பள்ளிகளில் அதிக கட்டணங்கள் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத்தை இந்தக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் கட்டணத்தை முறைப்படுத்த ஒரு குழு அமைப்பது, மீறினால் நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட ஷரத்துக்கள் இந்த சட்ட மசோதாவில் சேர்க்கப்படும்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது என்றார் தென்னரசு.

Related Posts with Thumbnails