Breaking News

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அதற்குப் பிந்தைய தமிழக அரசியல் களமும்!

உள்ளாட்சி முடிவுகள் சொல்வதென்ன?

-ஸ்கார்ப்பியன்

நீதிபதி: உன்னோட கடைசி ஆசை என்ன?’

‘தூக்கு தண்டனை கைதி : பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டு போடவேண்டும் எஜமான்’

-இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் வரை, ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட இதழ்களில் உள்ளாட்சி குறித்து இதைப் போல் ஏகப்பட்ட ஜோக்குகள் வந்த காலம் உண்டு.

1984-86 ஆண்டுகளில் கலைஞர் மேலவை உறுப்பினராக இருந்த கால கட்டத்தில், பல்வேறு வற்புறுத்தலுக்கு பிறகு முதல்வராக இருந்த எம்ஜிஆர் பஞ்சாயத்து தேர்தலை நடத்தினார். சென்னை திமுகவினரின் கோட்டை என்று சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தவில்லை. ஆனாலும் எம்ஜிஆர் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மாநிலம் முழுவதும் திமுக பெருவாரியான வெற்றிகளை பெற்றது.

பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்யும் உறுப்பினர்களால் மேலவையில் திமுக பெரும்பான்மை பலம் பெறும் சூழல். கலைஞர் வேறு மேலவை உறுப்பினராக இருக்கிறார். அவர் மேலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ள நிலை..

சட்டமன்றத்தில் முதல்வராக எம்ஜிஆர், மேலவைத் தலைவராக கலைஞர் என்ற சுவாராஸ்யமான காட்சிகளை, அரசியல் நோக்கர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், அதிரடியாக மேலவையை கலைப்பதாக அறிவித்தார் எம்ஜிஆர். கொஞ்ச காலத்திற்கு பிறகு பஞ்சாயத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டுவிட்டன.

அடுத்து வந்த குறுகிய கால திமுக ஆட்சியில் மேலவையும் வரவில்லை, பஞ்சாயத்து தேர்தலும் இல்லை. தொடர்ந்து வந்த ஜெயலலிதா பஞ்சாயத்து அமைப்பு என்பதையே மறந்து விட்டார்.

மீண்டும் 1996 ஆண்டில் முதல்வரான கலைஞரின் முதல் முக்கிய முடிவு . சீரமைக்கப்பட்ட பஞ்சாயத்து தேர்தல். ஊரெங்கும் தெருவிளக்குகள், சாலைப் பிரச்சனைகள், குடிநீர் திட்டங்கள் என்று முதல் ஐந்தாண்டு உள்ளாட்சி அமைப்புகள் பெரும்பாலும் நல்ல முறையிலேயே நடந்தது.

1996 முதல் இன்று வரை நான்கு உள்ளாட்சி தேர்தல்களை தமிழகம் சந்தித்து விட்டது.. சட்டமன்ற தேர்தல் முடிந்து ஐந்து அல்லது ஆறு மாதத்திற்குள்ளாகவே உள்ளாட்சி தேர்தல் வந்து விடுவதால் ஆளுங் கட்சியினரே தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.

அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணி உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கிறது. அதனால்தான் உள்ளாட்சியில் எதிர்க்கட்சியினர் வருவதை ஆளுங்கட்சி விரும்புவதில்லை. மக்களும் சரியாக இதை புரிந்து கொண்டுதான் எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை.

உள்ளாட்சி அமைப்புகளின் மகத்துவம் தெரிந்து தான் முதன் முதலாக அமைச்சராக பதவியேற்ற ஸ்டாலின் உள்ளாட்சி பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவரது தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சி மற்றும் மக்கள் நலப்பணியில் பெரும் பங்காற்றியது என்பது மறுக்க முடியாத உண்மை.

அவருக்கு முன்னால் எந்த ஒரு உள்ளாட்சி அமைச்சரும் இருந்ததும் தெரியாது. போனதும் தெரியாது. இப்போதைய ஆட்சியில் கூட யார் உள்ளாட்சி அமைச்சர் என்று தெரியாத நிலைதான்.

என்னதான் ஸ்டாலின் நன்றாக பணியாற்றினாலும் அவரது கட்சியினர் உள்ளாட்சி அமைப்புகளில் பண விஷயத்தில் புகுந்து விளையாடியதை ஸ்டாலினால் தடுக்க முடியவில்லை அல்லது தடுக்க முயலவில்லை. ஆனால் மக்கள் யார் யார் எப்படி கொள்ளை அடித்தார்கள் நேரடியாக தெரிந்து கொண்டார்கள்.

எம்.எல்.ஏக்களை விட மக்கள் வெறுப்பை அதிகமாக சம்பாதித்துக் கொண்டவர்கள் கவுன்சிலர்களும், வார்டு மெம்பர்களும்தான். உண்மையிலேயே மக்கள் பணி செய்தவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

2011 உள்ளாட்சி தேர்தல் என்ன வித்தியாசம்

எல்லா கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தது இதுதான் தமிழகத்தில் முதல் தடவை.

தனியாக நின்று யார் யார் என்ன சாதித்தார்கள்?

கலைஞருக்கு காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியை சரியான தருணத்தில் திருப்பி கொடுத்து விட்டார்.

தமிழக அரசியலை நிர்ணயிப்பது காங்கிரஸ்தான் என்று ஒரு தோற்றம் கொண்ட நிலையில் அவர்களது நெருக்கடியும் அதிகரித்து கொண்டே போனது.

”பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா” என்று கலைஞர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை வெட்டி விட முயன்ற போது அழகிரி போன்றவர்கள் காங்கிரஸின் நிர்பந்தத்தை வலிந்து ஏற்றுக்கொண்டார்கள். அது கனிமொழி கைது செய்யப்படுவதை தள்ளிப் போடத்தான் உதவியதே தவிர திமுகவுக்கு இழப்புதான் அதிகம். உதறிவிட்டு கனிமொழி கைது ஆகியிருந்தால் கூட ’பழி வாங்குகிறது காங்கிரஸ்’ என்று அனுதாபத்தை தேடியிருக்கக்கூடும். காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளை மொத்தமாக அள்ளி விட்டது அதிமுக.

இப்போது தனித்து போட்டியிட நிர்பந்தித்து காங்கிரசின் சுயபலத்தை தெளிவடைய வைத்து விட்டு சோனியாவை சந்திக்க சென்றிருக்கிறார்..

உள்ளாட்சி தேர்தல் கலைஞரின் ’பார்கெயினிங் பவரை’ உயர்த்தி இருக்கிறது என்றால் மிகையல்ல.

இன்னொரு பக்கம், எங்களால்தான் அதிமுக வென்றது என்ற ஒரு வித தோற்றத்தை உருவாக்கிய தேமுதிகவை முதல்வர் ரசிக்கவில்லை.

எப்படியும் ஆளுங்கட்சியைத்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். எதற்கு எக்ஸ்ட்ராக்கள் என்று கூட்டணி கட்சிகள் என்று இருப்பதையே மறந்து தொகுதி வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தார்.

அல்லாடிப்போன கூட்டணி (முன்னாள்?) கட்சிகள் தனியே தள்ளிவிடப் பட்டார்கள்

இதில் அதிக டேமேஜ் விஜயகாந்துக்குத்தான். அவரும் அவரது மனைவியும் முதல்வரை ஏக வசனத்தில் திட்டித்தீர்த்தது ஒன்றுதான் அவர்களுக்கு ஆறுதல் தருமேயன்றி, அரசியலில் பெரிய இறங்கு முகத்தை கண்டுள்ளார்கள்.

கூட்டணி அரசியலில் சேர்ந்து ‘தனித்துவம்’ தொலைந்து மீண்டும் ‘தனியாக’ நின்ற போது மக்கள் அவர்களை சீந்தவே இல்லை..

பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2009 பாராளுமன்ற தேர்தலில் இருந்தே இறங்குமுகமாக போய் இன்று அவர்களது பலமான வடமாவட்டங்களிலேயே கட்சியை தேடிப்பார்க்க வேண்டிய நிலைமை.. இனியும் பாமகவுடன் யாரும் கூட்டணிக்கு வருவார்களா? அல்லது இவர்கள் இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேரம் பேசத்தான் முடியுமா? திமுக, அதிமுக இரு கட்சியினருக்குமே பாமகவின் சரிவு பெரிய நிம்மதியாக இருக்கக்கூடும்.

மதிமுகவுக்கு எதிர்காலம் இருக்கிறது!

எல்லோரும் வியக்கும் வண்ணம் ஏறுமுகத்தை அடைந்த மதிமுக இந்த தேர்தலில் ஒரு ஆச்சரியம்தான்..

மதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள்தான் மற்ற அரசியல் கட்சிகளுக்கு பாடம். மக்கள் என்னதான் சொல்கிறார்கள்.?

1.நேர்மையானவர்களை தேடுகிறார்கள்.

2.அரசியலில் மாற்றுப்பாதையை யோசிக்கிறார்கள்

3.இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளை தவிர்க்க விரும்புகிறார்கள்.

4. உண்மையிலேயே மக்களை மட்டும் நம்புகிறவர்களை அவர்களும் நம்புகிறார்கள்

5.பண பலத்தால் மக்களை ஏமாற்ற முடியாது

விஜயகாந்துக்காக இதுவரை கிடைத்த வாக்குகள் அவரது சொந்த செல்வாக்கினால் அல்ல. அவரை மக்கள் ஒரு மாற்றாக நம்பினார்கள். கூட்டணி அரசியலில் சிக்கிய பிறகு ‘மாற்று சக்தி’ என்ற மந்திரத்தை அவர் பறிகொடுத்து விட்டார். மக்களும் கை விட்டு விட்டார்கள்.

முன்னர் அதிமுவுடன் கூட்டு சேர்ந்ததால் அதே நிலைக்கு தள்ளப்பட்ட வைகோ, தேர்தல் புறக்கணிப்பு மூலம், தான் இரு திராவிடக்கட்சிகளுக்கும் மாற்று என்ற நிலையை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.

தொடர்ந்து சரியான பாதையில் பயணித்தால் மூன்றாவது தலைவர் என்ற நிலைக்கு வைகோ உயர்வது நிச்சயம்.

அடுத்தது என்ன?

அரசியலில் வெற்றி தோல்வி சகஜமப்பா என்று பேசும் அரசியல் கட்சிகளின் அடுத்த நிலை என்ன?

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கின்றன. உள்ளாட்சியிலும் வெற்றி பெற்று விட்ட முதல்வர் அவரது விருப்பம் போலவே தொடர்ந்து செயல்படுவார்.

குழந்தைக்கு என்ன தேவை என்று அறிந்து கொடுக்கும் ’அம்மா’ போல், எது மக்களுக்கு சரியென்று ‘தன் மனதில் பட்ட்தைத்தான்’ இந்த ’அம்மாவும்’ செய்வார்.. அது நல்லதாகவும் இருக்கலாம்..அல்லது ‘சமச்சீர் கல்வி’ போலவும் இருக்கலாம்..

இடையில் 2014 ல் பாராளுமன்ற் தேர்தல் வருகிறதே? அம்மாவின் நிலை என்னவாக இருக்கும்?. தொடர்ந்து வெற்றி பெற்றதால், பாராளுமன்றத்தையும் கலக்கிவிடுவோம் என்று தனித்து நாற்பது தொகுதியிலும் போட்டியிடுவாரா?. நாற்பதிலும் ஜெயித்தால் பிரதமர் கூட ஆகலாமே? என்ன முடிவு செய்வார் முதல்வர்..? அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் அது..

கலைஞரின் நிலை என்ன?

நீதிமன்றத்தின் முடிவில் கனிமொழி ஜாமீன் உள்ளதால், மத்தியில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று உன்னிப்பாக கவனிப்பதே அவரது தற்போதைய பெரிய வேலை.

நாடெங்கிலும் உள்ள அரசியல் சூழலைக்கொண்டே அவர் ஒரு முடிவுக்கு வருவார். 2 ஜி வழக்கு விசாரணை கட்டத்தை எட்டியுள்ளதால், தீர்ப்பு சாதகமாக வருமா என்று ஒரு பக்கம். சாதகம் என்றால் காங்கிரஸ், பாஜக இரண்டில் யார் அவருடன் அனுசரித்து செல்கிறார்களோ அப்படியே செல்வார்.

தமிழகத்தில் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் பாஜக பக்கம் திமுக செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அது தமிழகத்தில் அவருக்கு அதிக வெற்றியை பெறுவதற்கு கூட உதவலாம். 2 ஜி தீர்ப்பு பாதகம் என்றாலும் காங்கிரஸ் பழி வாங்கி விட்டது என்று தேர்தல் நேரத்தில் புலம்பலாமே.

தேமுதிக, பாமக கட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தலில் வேலை இருக்குமா என்று தெரியவில்லை.. முடிந்தால் இன்னொரு தடவை தனியாக நின்று தங்கள் வாக்கு எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

வைகோ என்ன செய்வார்?

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால் பாஜகவிடம் அணி சேர வாய்ப்புள்ளது. பாஜவுக்கு வைகோ மீது தனிப் பாசம், மரியாதை எப்போதுதுமே. ஆனால் அம்மையார் ஒருவேளை அங்கே துண்டு போட்டு விட்டால் இவருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பெரிய வேலை இருக்காது. தனித்து நின்று தன்னை இன்னும் பலப்படுத்திக் கொள்ளலாம்.

உள்ளாட்சி தேர்தல்தான் என்றாலும் அரசியல் கட்சிகளுக்கு நிறைய சிந்திக்க வேண்டிய வேலையை விட்டுச் சென்றுள்ளது இந்த அக்டோபர் மாத தேர்தல்.

“எங்களை யாராலும் ஏமாற்ற முடியாது!” என்று மக்கள் சொல்வதாகவே தெரிகிறது!

-என்வழி ஸ்பெஷல்

 

இதான் ஜெ ‘வாங்கிய’ அந்த ‘வெளி மாநில கரன்ட்’டா?

அடடே.. இரு தினங்களாக மின்வெட்டே இல்லையே!

டந்த இரு தினங்களாக ஒரு நொடி கூட மின்வெட்டே இல்லாமல் ‘ஒளிர்கிறது’ தமிழகம்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின்வெட்டில்லாமல் இருப்பது அநேகமாக கடந்த இரு தினங்கள்தான் என்று நினைக்கிறேன். 12  மணி நேரம் வரைகூட மின்வெட்டு அமலில் இருந்த வட தமிழகம் அதிசயித்து நிற்கிறது, இந்த இடைவிடாத மின் விநியோகத்தைப் பார்த்து.

எப்படி இந்த அதிசயம்?

இப்போது தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாம் சீராகிவிட்டனவா?

தென் தமிழகத்தில் காற்று நன்றாக வீசத் தொடங்கி, காற்றாலை மின்சாரம் எக்கச்சக்கமாகி விட்டதா?

தனி தெலுங்கானா பிரச்சினை ஓய்ந்து, அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி வரத்து சீராகிவிட்டதா?

மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வெள்ளம் பெருகி நீர் மின்சக்திதான் அதிகரித்ததா?

அல்லது, எங்கோ வெளிமாநிலங்களில் வாங்குவதாகச் சொன்னார்களே… அந்த மின்சாரம் கம்பி வழியே திடுதிப்பென்று குதித்து வந்துவிட்டதா?

ஒரு புண்ணாக்குமில்லை. தேர்தல்…. உள்ளாட்சித் தேர்தல் செய்யும் சித்து விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று!

தமிழகத்தின் மின் உற்பத்தி அதேதான். மின்வெட்டு நேரமும் அமலில் உண்டு. ஆனால் இந்த இரண்டு மூன்று தினங்களும் மக்களின் அன்றாட பயன்பாட்டு மின்சாரத்தில் கைவைக்கவில்லை. தொழிற்சாலைகளுக்கு மட்டும் மின்வெட்டை அமல்படுத்தியிருக்கிறார்கள், முன்கூட்டியே பேசி வைத்து.

என்ன ஒரு கிரிமினல் யோசனை… அப்படியெனில், தேர்தல் முடிந்ததும், மீண்டும் இருளில் தள்ளிவிடுவோம் என்பதை அப்பட்டமாகவே அறிவித்துள்ளது இந்த அரசு.

கருணாநிதிக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லையா அல்லது அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லையா புரியவில்லை. சட்டமன்றத் தேர்தல் நாளன்றுகூட அவர் ஆட்சியில் சிறிதுநேரம் மின்சாரம் தடைப்பட்டது!

ஆனால் இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அபாரம்.

நாணயம் தவறாத, யோக்கியமான அரசாக இருந்தால், தினசரி மின்வெட்டுக்கான நேரத்தை தேர்தல் நாளன்றும் கடைப்பிடித்திருக்க வேண்டும். மின்னணு எந்திரங்களில் வாக்குப் பதிவு செய்ய தடையின்றி மின்சாரம் வேண்டும் என்றால் பகலில் மின்சாரத்தை நிறுத்தாமல், மாலையில்  செய்திருக்கலாமே!

ஆக இவர்களின் நோக்கம், அரசு எந்திரத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் வாக்குகளை கவர்வதுதான். மீண்டும் தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா என்றே தோன்றுகிறது!

- விதுரன்

உள்ளாட்சி தேர்தல் 2011 = தில்லுமுல்லு, வன்முறை, விதிமீறல்!

October 18, 2011 by  
Filed under election, election 2011

உள்ளாட்சி தேர்தல் 2011 = தில்லுமுல்லு, வன்முறை, விதிமீறல்!

சுர பலம் என்பது ஆள்வோருக்கு மட்டும்தான் ஆதாயமாக உள்ளது. வாக்களித்தவர்களுக்கு வரம் கொடுத்தவன் தலைமேல் கைவைத்த கதைதான்!

திங்கள் கிழமை நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவு நிலவரம் இதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இந்த முறை வாக்களிக்க வந்த பொதுமக்களின் பெயர்கள் விடுபட்டுப் போனதில் பெரும் குழப்பம், அதைக் கண்டு கொள்ளாமல் போலீஸ் துணையுடன் அதிகாரிகள் மக்களை விரட்டியடித்த கொடுமை, அதிகாரிகள் துணையுடன் ஆளும் கட்சியினர் அரங்கேற்றிய தில்லு முல்லு, பரவலான அடிதடி ரகளை, வெள்ளமாய் பாய்ந்த பணம், அன்பளிப்புகள், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும் தாராளமாய் ஓடிய சரக்கு…. என ஏக குற்றச்சாட்டுகளுக்கு நடுவில்தான் இந்த முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ளது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், ஈரோடு ஆகிய பத்து மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியப் பதவிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவீதம் இல்லை. சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் 48 சதவீதமும் மற்ற இடங்களில் 55 சதவீதத்துக்குள்ளும்தான் வாக்குகள் பதிவாகியுள்ளது.

பெரும்பாலும் நகர்ப் பகுதிகளில் நடந்த இந்தத் தேர்தலில் பெருமளவு முறைகேடுகள். வாக்குச் சாவடிகளில் வன்முறை, தேர்தல் அலுவலர்கள் துணையுடன் விதி மீறல்கள் மிக சகஜமாக நடந்துள்ளன. குறிப்பாக அதிமுகவினரை எதிர்த்து யாருமே எதுவும் செய்ய முடியாத அளவுக்கு புறநகர்ப் பகுதிகளில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததை கண்கூடாக வாக்காளர்கள் பார்த்தனர்.

தங்கள் விதிமீறல்களுக்கு ஒத்துழைக்க மறுத்த பிற கட்சியின் தேர்தல் முகவர்கள் ஆளும்கட்சியினரால் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இது குறித்து அனைத்துக் கட்சிகளுமே புலம்பித் தள்ளின, அதிமுக தவிர!

வாக்குச் சாவடிகளுக்கு சில அடி தூரம் முன்பு வரை ஆளுங்கட்சிக்கான தேர்தல் பிரச்சாரம் சத்தமின்றி நடந்தது. பிரியாணி பொட்டலங்கள், குவார்ட்டர்கள், அன்பளிப்புகள் என அனைத்து வகையிலும் வாக்காளர்களுக்கு லஞ்சம் தாராளமாகத் தரப்பட்டது.

இதில் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று சளைத்தவையாகவே தெரியவில்லை. போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைத்தன. மேடவாக்கம், கீழ்க்கட்டளை போன்ற பகுதிகளில் வாக்களிக்கச் செல்லும் சில நிமிடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வாக்காளரையும் தனித்தனியாகச் சந்தித்து தேமுதிக வேட்பாளர் ஒரு குடும்பத்துக்கு ரூ 2000மும், அதிமுக வேட்பாளர் அவரை விட இருமடங்கு ரூ 4000-ம் கொடுத்துள்ளனர். அதாவது வாக்கு கணக்கில்லை. குடும்பத்துக்கு இவ்வளவு என்று அள்ளி விட்டுள்ளனர்.

நெல்லை, மதுரை பகுதிகளில் வீடுதேடிப் போய் மூக்குத்தி, அரை கிராம் தங்கக் காசு, பரப்புரை நோட்டீஸில் மடித்து வைக்கப்பட்ட ரூ 500 தாள் என கொடுத்துள்ளார் ஒரு தேமுதிக வேட்பாளர்.

தூத்துக்குடி பகுதியில் அதிமுக வேட்பாளர் எவ்வளவு தருகிறார் என்று சொல்லுங்கள், அதற்கு மேல் நாங்கள் 100 ரூபாய் அதிகம் தருகிறோம் என்று உறுதி கூறி, சொன்னபடியே செய்தார்களாம் தேமுதிகவினர். அடேங்கப்பா… எதிர்க்கட்சியாகி குறுகிய காலத்துக்குள் ‘தமிழ் நாட்டு அன்னா ஹஸாரே’ கட்சிக்கு  ‘அசுர வளர்ச்சிதான்’ போங்கள்!

நகரப் பகுதிகளில் நடந்த இந்தத் தேர்தலே இந்த லட்சணத்தில் என்றால், கிராமங்களில் உள்ளூரில் செல்வாக்கு மிக்க மனிதர்கள் போலீஸ் துணையுடன் எந்த அளவுக்கு அத்து மீறுவார்கள் என்பதை இப்போதே உணரலாம்.

இதை இந்த ஆட்சி நிச்சயம் தடுக்காது. அதை எதிர்த்தோ முறைகேடுகளை அம்பலப்படுத்தும் நோக்கிலோ எழுத தமிழகத்தில் உள்ள தமிழ் / ஆங்கில தினசரிகளுக்கு நெஞ்சில் உரமோ நேர்மைத் திறமோ சாதீய பார்வைக்கப்பாற்பட்ட  நடுநிலைமையோ கிடையாது என்பதால் இந்த ஆட்சியிடம் நடவடிக்கையை எதிர்ப்பார்க்கவும் முடியாது!

புதன் கிழமை நடக்கும் தேர்தல் கூத்துக்களையும் பார்த்து வைப்போம், வேதனையுடன்!

-வினோ

தேமுதிக… சிங்காரித்து மூக்கறுத்த ஜெயலலிதா!

September 23, 2011 by  
Filed under election, election 2011

தேமுதிக… சிங்காரித்து மூக்கறுத்த ஜெயலலிதா!

நாம் முன்பே சொன்னது போல, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

கூட்டணி கட்சிகளின் தயவு இந்தத்தேர்தலைப் பொறுத்த வரை தனக்குத் தேவையே இல்லை என்று முடிவு செய்துவிட்டார். கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் போனால் போகட்டும் என சில தொகுதிகளை அவர் தரக்கூடும். அவரது இந்த முடிவில் தவறு காண ஒன்றுமில்லை!

41 இடங்களைக் கொடுத்து, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக தேமுதிக அமரக் காரணமாக இருந்த அதே ஜெயலலலிதா, தேர்தல் முடிந்து 100 நாட்களைக் கடந்த கையோடு விஜயகாந்தின் தேமுதிகவைக் கழட்டி விட்டுள்ளார்.

எனவே வேறு வழியின்றி, அதிமுக ஏமாற்றிவிட்டதென்ற புலம்பலுடன் தனியாகப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறி, தனியாகவே நின்று வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக என்ற குதிரையில் ஏறி ஜம்மென்று சட்டசபைக்குள் போய் விட்டது. ஆனால் இப்போது ஏற்றிய இடத்திலேயே மீண்டும் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது அதிமுக. இதற்குப் பெயர்தான் சிங்காரித்து மூக்கறுப்பதென்பது!

எனவே முன்பைக் காட்டிலும் பெரும் நெருக்கடி விஜயகாந்துக்கு. இந்த முறை தனது செல்வாக்கை அவர் நிரூபித்தே தீரவேண்டிய கட்டாயம். காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்றால், ஒரேயடியாக வாக்காளர்கள் புறக்கணித்துவிடுவார்களோ என்ற பயமும் அவருக்கு உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான பிறகு, சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான ஒரு கருத்தைக் கூட எந்தப் பிரச்சினையிலும் அவர் முன் வைத்ததில்லை. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நைஸாக அதிமுகவிடம் அதிக சீட் பெறுவதுதான் அவர் நோக்கமாக இருந்தது.

இதைப் புரிந்து வைத்திருந்த முதல்வர், ஆரம்பத்திலேயே தட்டி வைக்க நினைத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமான பிரிவா என்பது தெரியவில்லை!

ஆனால் ஒரு விஷயத்தில் ஜெயலலிதாவைப் பாராட்டியே தீர வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்ததும், தங்களால்தான் ஜெயலலிதா முதல்வரானார் என்கிற ரீதியில் பேசி வந்த கூட்டணிக் கட்சிகளை, அவரவர் பலம் என்னவென்று காட்டுங்கள்… பிறகு பேசுங்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.

இந்த துணிச்சல் கூட்டணிக் கட்சிகளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… வாக்காளர்களுக்குப் பிடிக்கும்!

-எஸ்எஸ்

யாருடனும் கூட்டணி இல்லை… மதிமுக தனித்துப் போட்டி! – வைகோ

September 17, 2011 by  
Filed under election, election 2011

யாருடனும் கூட்டணி இல்லை… மதிமுக தனித்துப் போட்டி! – வைகோ

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல், மதிமுக தனித்தே போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ  அறிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. களம் இறங்கும் யாருடனும் கூட்டணி சேரமாட்டோம். தனித்துப் போட்டியிடுவோம். மதிமுகவை மாற்று அரசியலுக்கான சக்தி என மக்கள் நம்புகிறார்கள். இந்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம்,” என்றார்.

நெல்லை மாநாடு

மேலும் பேசுகையில், “நெல்லையில் நடந்த ம.தி.மு.க. மாநாடு 18 ஆண்டு வரலாற்றில் பெரிய உந்துலை ஏற்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஊழலற்ற நிர்வாகத்தை தரவேண்டும்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு கயிறு அறுக்க ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூவர் உயரும் காப்பாற்றப்படும் என மதிமுக நம்புகிறது.

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியானதற்கு காரணமான போலீசாரை பணிநீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை அறிக்கை முறையாக இருக்குமா? என்று தெரியவில்லை.

இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை. படுக்கை வசதி, வழங்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும். அது பேரழிவை ஏற்படுத்தும். சுனாமி அலைகள் தாக்கும்போது தென் மாவட்டத்திற்கு பெரும் சேதம் ஏற்படும்.

இடிந்தகரையில் 7-வது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது. மத்திய-மாநில அரசுகள் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அமைச்சர் ஜார்ஜ் முயற்சி செய்கிறார். இது நமது மக்களின் ஜீவாதாரப் பிரச்சினை. மாநில அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது,” என்றார்.

Related Posts with Thumbnails