Breaking News

‘தமிழர்கள் கல்வி மற்றும் அறிவு பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஜெ!’

November 4, 2011 by  
Filed under election, election 2011

தமிழர்கள் கல்வி மற்றும் அறிவு பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும்  ஜெ!

சென்னை: உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக் கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார் என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மணியரசன் சமீபத்தில் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். கல்வி விஷயத்தில் தமிழருக்கு எதிராக எந்த அளவு திட்டமிட்டு ஜெயலலிதா செயல்படுகிறார் என்பதை மிகத் தெளிவாக, விரிவான அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

பதவிக்கு வந்த ஆறே மாதங்களில் எந்த மாற்றுத் திட்டமும் இல்லாமல், கல்வித் துறையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் செயல்படுவது, அரிய நூல்கள் மற்றும் இலக்கிய நூலகங்களை உருப்படாமல் செய்ய வைத்ததை மணியரசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவரது முழு அறிக்கை:

உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதற்கென எழுப்பட்ட கோட்டூர்புரம் கட்டடத்திலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக்கூடாது.

அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார். கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான செயலலிதாவின் மன நிலைக்கு நிறைய சான்றுகள் தரலாம்.

முதல் தடை சமச்சீர் கல்விக்கு…

கடந்த மே மாதம் முதலமைச்சரான உடனேயே கல்வியாளர்களால் பாராட்டப்பெற்ற சமச்சீர்க் கல்வியை தடைசெய்தார். தமிழகத்தில் பெரும்பாலானோர் சமச்சீர்க் கல்வியை மீட்க கருத்துகள் கூறினார்கள், போராடினார்கள். பரவலான மக்கள் கருத்தை செயலலிதா மதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட பிறகு வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சமச்சீர்க் கல்வியை செயல்படுத்தி வருகிறார்.

பல தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி இல்லாமல் இஷ்டத்துக்கும் பாடம் நடத்துவதாக ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

செம்மொழி ஆய்வு மையத்துக்கு சிறுமை

இந்திய அரசின் கீழ் செயல்படும் செம்மொழி மையம் தமிழக அரசுக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சரை குடியேற்றி செம்மொழி மையத்தை ஒரு சிறு பகுதியில் செயல்படும் நிலைக்கு உள்ளாக்கினார்.

தமிழக அரசின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் செம்மொழி ஆய்வகத்தையும் பாலாறு இல்லத்திலிருந்து வெளியேற்றி எழும்பூரில் ஒரு சிறிய இடத்திற்கு மாற்றினார். அத்துடன் பாரதிதாசன் செம்மொழி ஆய்வு மையத்திற்கு உரிய நிதி ஒதுக்காமலும், உரிய ஆய்வுத்திட்டம் வகுக்காமலும் முடக்கிவிட்டார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் விட்டு வைக்கவில்லை

தஞ்சையில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் செயலலிதா விட்டு வைக்கவில்லை. தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எம்.ஜி.ஆர்  உருவாக்கியபோது அதன் விரிவாக்கத்திற்கென ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கினார்.

ஏற்கனவே அவ்வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்தார்கள். இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கட்ட அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

தமிழர்களின் அறிவு வளரக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் அக்கறையில்லை என்பது மட்டுமல்ல, எதிர்நிலைக் கருத்தை கொண்டுள்ளார் எனபது தெரியவருகிறது.

இலவசங்கள் வழங்கி, வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வது என்ற அதிகார அரசியலில் மட்டுமே செயலலிதா குறியாக இருக்கிறார். மக்கள் அறிவு வளர்ச்சிப் பெறுவதும், விழிப்புணர்ச்சி அடைவதும் அவரது வாக்கு வங்கி அரசியலுக்கும் அவரின் எதேச்சாதிகார மனப்போக்கிற்கும் இடையூறு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறார்.

அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான அவரது மன நிலை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான அவரது பழிவாங்கும் அரசியலோடு இணைந்து போகிறது. இதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அறிவு தாகத்தின் மீதான தாக்குதல்

தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களும், விழிப்புற்ற மக்களும் கல்வி மற்றும் அறிவு தாகத்தின் மீது செயலலிதா நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க வேண்டும். கோட்டூர்புரத்தில் இப்பொழுதுள்ள கட்டடத்திலேயே அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து செயல்படவும், தமிழக முதல்வரின் இடமாற்ற முயற்சியை தடுக்கவும் போராட வேண்டும்.

ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் – வைகோ மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் கண்டனம்

November 3, 2011 by  
Filed under election, election 2011

ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் – வைகோ, வீரமணி, எழுத்தாளர்கள் கண்டனம்

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள சர்வதேச தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா துக்ளக் தர்பார் நடத்துகிறார் என அவர் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், “முன்பு இருந்த கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்தது என்ற ஒரு காரணத்திற்காக இந்த நூலகத்தை அங்கே இருந்து அகற்ற முடிவு செய்திருப்பது தான்தோன்றித்தனமான முடிவாகும். ‘துக்ளக் தர்பார்’ என்பதற்கு வேறு எந்த உதாரணமும் இருக்க முடியாது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு, அங்கே உரையாற்றுகிறபொழுது ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலமாக இது அமைந்திருக்கிறது பாராட்டிச் சொன்னார்.

முந்தைய திமுக அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில், அதிமுக அரசு நடந்து கொள்கிறது. நூலகத்திற்காக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பை எவ்வாறு மருத்துவமனையாக பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. அறிவுக்கு உகந்த செயல் எதையும் செய்யக் கூடாது என்பதில் ஜெயலலிதா பிடிவாதமாக உள்ளார். அவரைத் திருத்த முடியாது. இனி வரும் நாட்கள் தமிழ் மக்களுக்கு சோதனைக்காலம்தான்,” என்றார்.

கி.வீரமணியும் கண்டனம்:

இதுகுறித்து திக தலைவர் வீரமணி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், “சென்னை கோட்டூர்புரத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும், இந்த நூலகம் நுங்கம்பாக்கம் டிபிஐ கல்வி வளாகத்திற்கு மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.

172 கோடி ரூபாய் செலவில் இந்த நூலகம் முதல்வராக இருந்த கருணாநிதியின் ஆட்சியில் கட்டப்பட்டது; உலகத்தரம் வாய்ந்த-ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்ற அளவில், ஒரே நேரத்தில் 5000 பேர்கள் அமர்ந்து படிக்கவும் வசதிகளைக் கொண்ட- நூலகத்திற்கென்றே திட்டமிட்டு, அதற்கேற்ப நவீன கணினி தொழில் நுட்பங்களைக் கையாண்டும், மாற்றுத் திறனாளிகள் கூட வசதியாக அமர்ந்து படிக்கும் வண்ணமும், தனித்தனிப் பகுதிகளைக் கொண்ட நூலகம் என்ற தனிச்சிறப்புடையது.

5.5 லட்சம் புத்தகங்களைக் கொண்டதோடு பழைய ஓலைச்சுவடிகளை கூட ஆய்வுக்காக சிறப்பாகப் பாதுகாத்துப் பயன்படுத்தும் வசதிகளை உள்ளடக்கி, சிறப்பாக செயல்படுகின்ற நூலகம் இது. உணவகம், மிகச்சிறந்த அரங்குகள் ஆகியவைகளை உள்ளடக்கியது. இதனை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்றே புரியவில்லை.

குழந்தைகள் நல மருத்துவமனை கட்ட சென்னையில் இடங்களா அரசுக்கு இல்லை? நூலகத்திற்கென வடிவமைக்கப்பட்டதை மருத்துவமனையாக மாற்றுவதற்கு மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் செலவாகத்தானே செய்யும்? அது எவ்வகையில் ஏற்கக்கூடிய ஒன்று?

இதனை தமிழக அரசும் முதல்வரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அண்ணா நூலகம் அதே கட்டடத்தில் தொடரும் வண்ணம் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்,” என்றார்.

ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ் எழுத்தாளர்கள் போராட்டம் அறிவிப்பு

இதற்கிடையே, நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது என்ற தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம். அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத் திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச, தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

8 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

முந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.

நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது.

டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.

அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.

ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

-இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

-என்வழி செய்திகள்

அறிவாலயத்தில் என்ன மருத்துவமனை அமைக்கலாம்?

அறிவாலயத்தில் என்ன மருத்துவமனை அமைக்கலாம்?

* கருணாநிதி திறந்த சட்டசபை வளாகம் பொது மருத்துவமனையாகிறது

* கருணாநிதி உருவாக்கிய செம்மொழி நூலகம் செயல்படாமல் முடங்கி, புத்தகங்கள் சேதமடைந்து கிடக்கின்றன

* கருணாநிதி திறந்த அண்ணா நூற்றாண்டு சர்வதேச நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாகிறது

* நூலகம் டிபிஐ வளாகத்திற்கு மாறுகிறது.. டிபிஐ வளாகம் அறிவு சார் பூங்காவாகிறது

* கருணாநிதி அறிவித்த அத்தனை திட்டங்களுக்கும் பெயர் மாற்றப்பட்டன அல்லது இருக்குமிடம் தெரியாமல் ஆக்கப்பட்டுவிட்டன

* விரைவில் செம்மொழிப் பூங்கா யாரோ ஒரு உடுப்பிக்காரனுக்கோ அல்லது தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி ஆதரவு பெற்ற டுபாக்கூர் சங்கத்துக்கோ தாரை வார்க்கப்படவிருக்கிறது

-முதல்வரிடம் சில கேள்விகள்… கோபாலபுரத்தை எங்கே மாற்றத் திட்டம்?  அண்ணா அறிவாலயத்தில் என்ன மருத்துவமனை அமைக்க உத்தேசம்? மனநல மருத்துவமனையா!

-வினோ

Related Posts with Thumbnails