BREAKING NEWS
Search

இந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்துக்கு வருவாரா தலைவர்?

சென்னை மாவட்ட ரசிகர்கள் சார்பில் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் 13.12.12-ல் கொண்டாடப்படவிருக்கிறது. அதுபற்றி விகடன் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை…

‘பல்லேலக்கா பல்லேலக்கா… சூப்பர் ஸ்டார் ரஜினி வந்தா, தமிழ்நாடு அமெரிக்கா…’ _ என்பது போன்ற பேனர்கள், ரஜினி பிறந்த நாள் விழாவை சென்னையில் அமர்க்களப்படுத்த இருக்கின்றன.

12.12.12 அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் 63-வது பிறந்த நாள். இந்தமுறை நாள், மாதம், வருடம் அனைத்தும் 12 என்று வருவதால், அவருடைய ரசிகர்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டம்!

அன்றைய தினம் பெசன்ட் நகர் மாதா கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம், மவுன்ட் ரோடு தர்கா, சைதை இளங்காளி அம்மன், தாம்பரம் செல்வ விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும் ரஜினி ரசிகர்கள், அடுத்த நாள் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 63 கிலோ கேக் வெட்டி விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

அன்று மாலை நடக்கும் விழா வில், ம.தி.மு.க-வில் சர்ச்சையைக் கிளப்பிவரும் நாஞ்சில் சம்பத், முதன் முதலாக ரஜினி ரசிகர் மன்றத்தின் மேடையில் ஏறுகிறார்.

அவர் தலை மையில், ‘கோடி நிலாக்களுக்கு குளிர்ச்சி தருகிற எங்கள் சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்குக் காரணம் நடிப்பா… பண்பா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

ரஜினி பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக் கச்சேரியோடு, திண்டுக்கல் ரஜினி சோமுவின் வித்தியாசமான ரஜினி ஷோவும் நடக்கிறது. ஏராளமான திரை நட்சத்திரங்களும் வாழ்த்திப் பேச வருகிறார்கள். 12 ஏழை மாணவர்கள், 12 முதியோர் இல்லங்கள், 12 ஏழைக் குடும்பங்கள்… என்று 15 லட்ச ரூபாய்க்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ரஜினி ரசிகர்கள் 5,000 பேர் கண்தானம் செய்கின்றனர். விழாக்குழுவினர் 20 பேர் உடல்தானம் செய்கிறார்கள். விழாவுக்கு 30 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவச மரக்கன்று கொடுக்கிறார்கள்.

இயற்கையைப் பாதுகாக்க மரம் வளர்க்கவேண்டும் என்று ரஜினி விரும்புவதால், இந்த ஸ்பெஷல் ஏற்பாடாம். ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக, ரஜினி படத்தில் உள்ள பஞ்ச் டயலாக்குகள், தத்துவப் பாடல்களை அகன்ற திரையில் போட்டுக் காட்டுகிறார்கள். ‘ஆண்டவன் சொல்றான்… அருணாச்சலம் செய்றான்’, ‘ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி…’, ‘நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது… ஆனா, வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்…’ என்று, பல அதிரடி வசனக் காட்சிகளைத் தயார்செய்து வைத்திருக்கிறார்கள்.

”13-ம் தேதி விழா எளிமையாகவும், அதேநேரத்தில் ரஜினியின் பண்புகளை எடுத்துச் சொல்லும் வகையிலும் இருக்கும்” என்கிறார்கள் சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் விழாக் குழுவினர் ராம்தாஸ், சூர்யா, ரவி, சினோரா அசோக் மற்றும் சைதை ரவி ஆகியோர்.

கடந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியின் 62-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. விழா, கட்-அவுட்டுகள், பேனர்கள், அதில் இடம்பெற்று இருந்த வாசகங்கள் குறித்து ரஜினிக்குத் தகவல் சென்றதை அடுத்து, அதில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னாராம். அதனால், இந்த ஆண்டு அவருடைய முழுமையான ஒப்புதலோடுதான் விழாவை நடத்துகிறார்களாம்.

இந்தத் தடவை ரஜினி நிச்சயம் விழாவுக்கு வருவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

லேட் என்றாலும் லேட்டஸ்ட்டாக வருவாரா ரஜினி?

நன்றி: விகடன்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *