BREAKING NEWS
Search

ரசிகர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்களைப் பரபரக்க வைத்த தலைவர் ரஜினியின் பேச்சு – முழுமையாக!

தலைவரின் ‘தி பெஸ்ட்’ உரை.. முழுமையாக!

Rajini-meet

இன்றைய ரசிகர் சந்திப்பில் தலைவர் ரஜினியின் பேச்சுதான் வழக்கம்போல ஹைலைட். என்றாலும் இதுவரை யாரும் பார்த்திராத பளிச் பேச்சு. மிக இயல்பாக, தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினி பேசியிருந்தார்.

அதில் ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை, அறிவுரை இருந்தது. அரசியல்வாதிகளுக்கு ஒரு குறிப்பு இருந்தது. அவரது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு யூகங்களுக்கான வாய்ப்புக்கும் இடமிருந்தது.

தலைவர் ரஜினியின் பேச்சு முழுமையாக:

மதிப்பிற்குரிய இயக்குநர் எஸ். பி. முத்துராமன் என்னுடைய இன்னொரு சகோதரர். எனக்கு சென்னையிலிருக்கும் சத்தியநாராயணா கெய்க்வாட். அவர் என் மேல் காட்டிய அக்கறை, அன்பு, அவர் எனக்கு கத்துகொடுத்து பாடங்கள் பல. அவரிடமிருந்து நான் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டேன். சினிமா துறையில் அவரை போல நேர்மையான மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.

என்னை எஸ்பிஎம் எப்போது மீட் பண்ணாலும் என்னிடம் சொல்வது இரு விஷயங்கள்.. ‘ரஜினி உடம்பைப் பாத்துக்க… அடுத்து ரசிகர்களைச் சந்தித்து போட்டோ எடுத்துக்க’ என்பதுதான்.

அவர் சொன்ன மாதிரியே இந்த நிகழ்வு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் தான் நான் முத்துராமன் அவர்கள் படத்தில் முதன்முறை கதாநாயகனாக நடித்தேன். அந்த படத்தில் அவரால் பஞ்சுவாலிட்டியை கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் நடித்த போது, சொல்ல வெட்கமாக இருக்கிறது, எனக்கு குடிப்பழக்கம் எனும் கெட்ட பழக்கம் இருந்தது. அதனால் என்னால் நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வர முடியவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் அப்படிப் போனேன்.

ஒரு நாள் எல்லாரையும் அனுப்பிவிட்டு, ஏவிஎம் ஸ்டுடியோவில் எஸ்பிஎம் என்னிடம், ‘இதோ பார் ரஜினி… இப்போது நீ ஹீரோ. ஒரு ஹீரோ சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தால்தான், மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரும் நேரத்துக்கு வருவார்கள்.. அதனால நீ முதல்ல ஷூட்டிங்குக்கு வந்துடு,’ என்றார். அதன் பிறகு நான் தாமதமாக படப்பிடிப்புக்குச் சென்றதில்லை.

எனது வழிகாட்டியாக இருப்பவர் எஸ்பிஎம் சார்.

12 வருசமாச்சு உங்களை முறையாகச் சந்தித்து. முதல்ல எல்லாம் படங்களின் வெற்றி விழாவில் சந்திப்போம். எந்திரன் நல்லபடியா போச்சு. ஆனா வெற்றி விழா கொண்டாட முடியல. அதன் பிறகு கோச்சடையான் போன்ற பிரச்சினைகள். இப்போ கபாலி நல்லா போச்சு. ஆனா சில விஷயங்களால கொண்டாடல. அததை அந்த நேரத்துல செஞ்சாதான் நல்லாருக்கும்.

முதலில் நடக்க இருந்த சந்திப்பு ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. அடுத்த படங்களுக்கான வேலைகளில் சந்திப்பை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை. இப்போ ஏற்பாடு பண்ணியிருக்கோம்.

அதே சமயம், இலங்கை செல்ல பயணத்தை ரத்து செய்த பொழுது சில ஊடகங்களும், சிலரும் நான் பின் வாங்கிவிட்டது போல் பேசினார்கள்.

ரஜினி முடிவு எடுக்க திணறுகிறார், மைன்ட் சேஞ்ச் பண்ணிக்கிட்டே இருக்கார் தயங்குகிறார், பயப்படுகிறார் என்றார்கள். எழுதினார்கள்.

நான் எந்தவொரு முடிவு எடுக்கும் போதும் நான் என்னளவில் தீர யோசிப்பேன். நல்லா சிந்திச்சு முடிவு எடுக்கணும்னு நினைப்பேன். சில விஷயங்களில் நாம் முடிவு எடுத்த பிறகு அதில் பிரச்சனைகள் இருப்பது தெரியும். அதுபோன்ற தருணங்களில் நாம் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.

தண்ணீரில் கால் வைக்கிறோம். கால் வைத்த பிறகு தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் இருக்கின்றன என்று. எடுத்த வைத்த காலை பின்னால் எடுக்க மாட்டேன் என்று சொன்னால் என்ன ஆகும். எடுக்கணும். முரட்டு தைரியம் இருக்க கூடாது. பேசுறவங்க பேசிக்கிட்டேதான் இருப்பாங்க.

என்னை பற்றி மற்ற விதமாகவும் பேசுகிறார்கள். ரஜினி, தன் பட ரீலீஸின் போது மட்டும் தான் ஏதாவது ஸ்டன்ட் பண்ணுவார், யுக்திகள் செய்வார் என்றெல்லாம் சொல்கிறார்கள். உங்களுடைய ஆசிர்வாதத்தால், அன்பால் எனக்கு அது போன்று யுக்திகள் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

என் ரசிகர்களை, தமிழ் மக்களை அப்படியெல்லாம் ஏமாற்றி விட முடியாது, அவர்கள் ஏமாற மாட்டார்கள். அவர்கள் ஏமாறுவது ஒரு விஷயத்தில் மட்டும்தான் அது பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை.

அரிசி வெந்தால்தான் சோறாகும், படம் நல்லா இருந்தாதான் வெற்றியடையும். என்னதான் தலை கீழாக குட்டிக்கரணம் அடிச்சாலும் ஒண்ணும் பண்ண முடியாது. என்னை இயக்கியவர்கள் நல்ல கதை, பாடல், கருத்து அமைத்து நல்ல படம் கொடுத்ததால் தான் நான் இப்போது இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.

டெபினிட்லி ரஜினி நல்ல படம் தருவார், ஏமாத்த மாட்டார் என்று நீங்கள் நம்புவதால்தான் இங்கு வந்திருக்கிறீர்கள்.

அரசியல் விஷயம் வரும் போது, ரசிகர்களை படம் பார்க்க வைப்பதற்காகவே நான் அரசியல் மாயை காட்டுவதாக சிலர் சொல்கிறார்கள், செய்திகள் வருகின்றன. 21 வருடங்களுக்கு முன்பாக ஒரு அரசியல் விபத்து என்று சொல்லலாம் அந்த நிகழ்வை, அப்போது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது போன்ற சூழ்நிலை உருவானது. அப்போது என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்கள் அமோக ஆதரவளிச்சி அந்த அணியை ஜெயிக்க வைத்தார்கள்.

அப்போது சில ரசிகர்கள் அரசியலில் சற்று ஆர்வம் காட்டினார்கள். அதில் சிலர் தவறான வழிகாட்டுதலிலும் சென்றார்கள். நிறைய பணம் கூட பார்த்துவிட்டார்கள். அப்போதிலிருந்து அவர்கள் ருசி கண்ட பூனையாகிவிட்டார்கள்.

என்னுடைய ஆதரவு அவர்களுக்கு இருப்பது போலக் காட்டிக் கொண்டு செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு பிறகு தான் நான் எந்த ஒரு கட்சிக்கும் நான் ஆதரவு கொடுக்கவில்லை என்று பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது.

எனக்கே பல ரசிகர்கள் கடிதம் எழுதி, ‘நமக்கு பின்னாடி வந்தவங்கள்லாம் வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கிட்டு பதவிகளைப் பிடிச்சிட்டாங்க. நாம எப்ப கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி ஆகறது’ன்னு கேட்டிருந்தாங்க. ஆகலாம். ஆசையில் தப்பில்ல. ஆனா அரசியல்ல இறங்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை நினைத்து சிரிப்பதா கோபப்படுவதா தெரியவில்லை.

நாளை நான் எப்படி இருப்பேன் என்பதை இறைவன் தீர்மானிப்பார்.  இப்போது ஒரு நடிகனா என்னை பயன்படுத்திக்கிட்டிருக்கான். நாளை என்னவா பயன்படுத்துறானே… தெரியல. அவன் என்னவாகப் பயன்படுத்தினாலும் நியாயமா, உண்மையா, தர்மமா, மனசாட்சியோட பண்றேன்.

இப்ப நடிகனா நா எப்படி என் கடமையை செஞ்சிட்டிருக்கேன்… மக்களை மகிழ வைக்கணும். பணம் எல்லாம்  அப்புறம்.

அதே மாதிரி என்ன பொறுப்பு கொடுத்தாலும் நியாயமா உண்மையா சத்தியமா நடந்துக்குவேன். அது என்ன பொறுப்புன்னு கடவுள்தான் தீர்மானிக்கணும். எல்லாமே கடவுள் கைலதான் இருக்கான்.

அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவங்களுக்கு இப்பவே நான் சொல்லிக்கிறேன், ஒருவேளை நான் அரசியலுக்கு வர்ல… அப்படி எழுதலைன்னு தெரிஞ்சா நீங்க ஏமாந்து போய்டுவீங்க. ஒருவேளை நாளை அப்படி அரசியலுக்கு நான் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பவர்களை கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். நுழையக் கூட விட மாட்டேன். ஆக இப்பவே ஒதுங்கிடுங்க. ஏன்னா ஏமாந்துடுவீங்க.

தயவு செய்து குடும்பம், குழந்தைங்கள மட்டும் பாத்துக்கங்க. இந்த குடிப்பழக்கம், புகைப் பிடித்தல் ஆகியவற்றை விட்டுடுங்க. ஏன்னா நான் அடிப்பட்டு சொல்லிட்டிருக்கேன்.

இந்த குடிப்பழக்கம் பத்திச் சொல்லும்போது, நிறைய பேர் சொல்றதுண்டு… கோடி கோடியா பணம் இருந்தது. ஆனா குடிச்சே எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டான்னு.  நான் யோசிப்பேன். என்னய்யா இது.. இவ்ளோ கோடிங்க இருக்கு. ஊருக்கெல்லாம் தண்ணி வாங்கிக் கொடுத்தா கூட இவ்வளவு ஆகாதேன்னு நினைக்கிறதுண்டு. அதெப்டின்னு சொன்னா.. குடிப்பழக்கத்தால உடம்பு மட்டும் கெட்டுப் போகாது. மைண்டும் கெட்டுப் போகும். நம்முடைய யோசனை, சிந்தனை சக்தியே வேற மாதிரி மாறும். அப்டி மாறும்போது நாம எடுக்கற முடிவுகள் எல்லாம் தப்பா போகும். அதனால வாழ்க்கையே அழிஞ்சி போகும். அதனால, குடிப்பழக்கம் இல்லாதவங்க தயவு செஞ்சி தொட வேண்டாம். குடிப் பழக்கம் உள்ளவங்க ஒரேயடியா நிறுத்திடுங்கன்னு சொல்றதுக்கு நீங்க எல்லாம் யோகியா சித்தரா.. கிடையாது. ஏதோ ஒரு கொண்டாட்டத்துல சந்தர்ப்பத்துல அதை என்ஜாய் பண்ணுங்க.

என்னதான் பாத்து செஞ்சாலும் ஏதாவது ஒரு குறை இருக்கும். அதை நீங்க பொறுத்துக்கிட்டு போட்டோ எடுத்துக்கங்க. முதல்ல நான் எல்லாரோடும் நின்னுக்கிட்டு படம் எடுத்துக்கத்தான் முடிவு பண்ணியிருந்தேன். ஆனா ரொம்ப நேரம் ஆகும் என்பதால், நான் உட்கார்ந்துக்கிறேன். நீங்க வந்து என்கூட நின்னு போட்டோ எடுத்துக்கங்க. எல்லோருக்கும் போட்டோ எடுக்க வாய்ப்பு இல்லையே என்ற வருத்தம் இருக்கும். எல்லாம் நல்லபடியா நடந்தா, வருங்காலத்துல அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

நன்றி, வணக்கம்.

 

– என்வழி ஸ்பெஷல்
8 thoughts on “ரசிகர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்களைப் பரபரக்க வைத்த தலைவர் ரஜினியின் பேச்சு – முழுமையாக!

 1. arulnithya

  unmaiyaana manithan, thalaivanidam irunthu velippadum sathiyamana vaarththaikal

 2. Rajagopalan

  நாளை நான் எப்படி இருப்பேன் என்பதை இறைவன் தீர்மானிப்பார்.
  Dont mistake me for telling this. But for how many years thalaivar going to say the same thing & confuse…
  My honest opinion on this issue is Politics wont set for Thalaivar. Please dont come to politics.
  But other things stated by thalaivar are gems…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *