BREAKING NEWS
Search

அணுசக்தி வேண்டாம்; ஆனால்…

அணுசக்தி வேண்டாம்; ஆனால்…

-சுஜாதா

ணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள். எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:

முதலில் விபத்துகள். அமெரிக்காவில் ‘மூன்று மைல் தீவு’ என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.

அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் – அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:

அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.

அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:

அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் ‘டெட்பாடி’ போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை ‘நாடுயுல்ஸ்’ (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:

உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் ‘கைகா’ வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:

இந்த எதிர்ப்புகள் நியாயமானவைதான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:

நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:

அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!

மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:

நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:

ஹைட்ரஜன் – ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.


“சைவ” பெட்ரோல்:

அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் ‘சைவ பெட்ரோல்’. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன்தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்றுதான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.

இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.

( தினமணியில் வெளியான கட்டுரை. வெளியான தேதி 1-10-1988… செர்னோபில் பயங்கரம் நடந்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு!)

அனுப்பியவர் ‘ஜேபி.’
17 thoughts on “அணுசக்தி வேண்டாம்; ஆனால்…

 1. குமரன்

  இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது.

 2. குமரன்

  1 .10 .1988 அன்று வெளிவந்த இந்தக் கட்டுரையை தக்க சமயத்தில் மீள்பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

  சுஜாதா மிகச் சிறந்த எழுத்தாளர், உயர்ந்த மனிதர்.

  ///அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.///

  ஏதொ இப்போதுதான் எதிர்ப்பு வந்திருக்கிறது என்று சொன்னவர்களுக்கு சரியான ஆதாரம். 1988 இலேயே எதிர்ப்பு இருந்தது. அதுவும் இப்போது சொல்லும் அதே கருத்துக்களோடு எதிர்ப்பு இருந்தது.

  அப்போதே சுஜாதா கூறுகிறார் – கல்பாக்கத்திலும் விபத்துக்கள் இருந்தன.

  சுஜாதா வெகு அழகாக அணு உலைகள் இந்தப் பேரண்டத்துக்கு வைக்கும் உலை பற்றி எழுதி இருக்கிறார்.

  மாற்று வழிகளில் சூரிய சக்தி ஒன்றே சிறந்தது என்பதை நன்கு விளக்கி இருக்கிறார்.

  எல்லாம் சரி, இதற்கு மதிப்பும் போட்டு …. நம்மைக் கேட்க வைக்கிறார் ….
  “பத்தவச்சுட்டியே பரட்டை”

  /// இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது.///

  1998 -இலேயே ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்பு என்றால் இப்போது எத்தனையோ லட்சம் கோடி வந்துவிடாதா.

  ஸ்பெக்ட்ரம் மாதிரி இதையும் விற்றால் ஆஹா ——
  சூரிய சக்திக்கு தனியாக அமைச்சகம் அமைத்து நமது தமிழினத்தலைவர் தமது மகளுக்கு – திகார்ச் சூரியனைச் சுட்டெரித்த சுடர்க் கொடி – கனிமொழிக்குப் பெற்றுத் தரலாமே ………

 3. JB

  Australia’s Energy Security – 24/7 Concentrated Solar Thermal Power plus Molten Salt Storage (CSP+)

  http://www.youtube.com/watch?v=LMWIgwvbrcM

  நாம ஏன் இப்படி எதாவது முயற்சி பண்ணகூடாது…யாருக்கும் இடைஞ்சல் இல்லாம…

 4. JB

  அவன் ஒரு கைக்கூலி. வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கியவன். ஒரு ட்ரஸ்ட் அமைத்து வெளிநாட்டுப் பணத்தை அபகரித்தவன். மக்களை மிரட்டுபவன். பல கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளவன். அயோக்கியன். அமெரிக்க கைக்கூலி. இவ்வாறெல்லாம் மத்திய அரசு மந்திரிகளும், மாநில அரசின் காவல்துறையும் சொல்கின்றன. விஷயத்தை விசாரித்தால், பல உண்மைகள் தெரிய வருகின்றன.
  நாகர்கோயில் அருகே, கோட்டாரில் உள்ள இசங்கன் விளையில் பிறந்தான் ஒருவன். அவன் தந்தை பெயர் பரமார்த்தலிங்கம். அவன் தந்தை திராவிடர் கழகத்திலும் பின்னர் திமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். போராட்டம் என்பது அவனுக்கு புதிதல்ல. வளரும் பருவத்திலேயே அவன் தந்தை காங்கிரசின் கோட்டையாக இருந்த அந்த ஊரில் திராவிடர் கழக கொள்கைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், அவர் தாக்கப்பட்டதை பல முறை தன் தங்கைகளோடு நின்று தடுத்திருக்கிறான். அதனால் போராட்டங்கள் அவனுக்கு புதிதல்ல.
  அவன் அம்மா கல்லுப்பட்டியில் உள்ள காந்திய ஆசிரமத்தில் படித்தவர்கள் அவர்களின் சொந்த ஊர் நாகர்கோவில். அவர் அப்பா திமுக என்றால் அம்மாவோ தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். நேரெதிரான அரசியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவனின் தாய் தந்தையரின் சிறப்பான வாழ்வில் அரசியல் பிடிப்புகள் பிளவை ஏற்படுத்தவில்லை. இரண்டு அரசியல் சிந்தனைகளுக்கும் அந்த வீட்டில் இடம் இருந்தது. அவன் தந்தையின் விருப்பப்படி வீட்டில் பெரியார் அண்ணாவின் படங்கள் இருந்தன. அவன் தாய் விருப்பப்படி, காமராஜர் படமும் வீட்டில் இருந்தது. அவன் குடும்பம் இந்துக் குடும்பம். ஆனாலும் அவன் அம்மா சமூக நலத்துறையில் செய்து வந்த பணியின் காரணமாக பால்வாடி மற்றும் பல வீடுகளுக்கு சென்று வந்ததால் அந்த வீடுகளில் கிறித்துவ மதத்தினர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து, தனது பிள்ளையையும் பிரார்த்தனை செய்யச் சொல்வார்.
  அவனுக்கு கிறித்துவ மதத்தின் மீது மரியாதை உண்டு. அவன் அம்மா கிறித்துவ மதத்தினர் போல பிரார்த்தனை செய்தாலும் அவன் வீட்டின் அருகிலிருந்த சுடலைமாடன், இசக்கியம்மன் கோயிலுக்குச் செல்வதையும் தவிர்த்ததில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை உடைய அவன் தந்தை இந்த வழிபாடுகளில் கலந்து கொள்வதில்லை.
  நாகர்கோயிலில் உள்ள டிவிடி மேல்நிலைப் பள்ளியில் படித்தான். அவன் படித்தது தமிழ் மீடியம் என்றாலும், ஆங்கில மொழி மீது இருந்த ஆர்வம் காரணமாக ஆங்கில மொழியை ஆர்வத்தோடு கற்றான். அவன் தந்தை அவனை இன்ஜினியர் ஆக்க விரும்பினாலும், அவன் தனக்கு விருப்பமான, சமூக அறிவியலைப் படித்தான். சமூக அறிவியலை படித்ததாலோ என்னவோ சமூகத்தின் மீது தீராத காதல் கொண்டவனாக மாறினான். கேரளாவில் ஆங்கில இலக்கியம் படித்தான். பின்னர் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அவன் அறிவை விசாலமாக்கியது. மார்க்சியம் கற்று, மார்க்சியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், மார்க்சியம் அமல்படுத்தப்பட்ட எத்தியோப்பியாவின் யதார்த்த நிலைமைகள் அவனை மார்க்சியம் மீது நம்பிக்கை இழக்கச் செய்தது. ஆசிரியர் வேலை கிடைத்து எத்தியோப்பியாவுக்கு பயணம் செய்த அவன், அப்போது எத்தியோப்பியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த மெங்கிஸ்டு ஹெல்மெரியம் என்பவர் கம்யூனிசம் என்ற பெயரில், சோவியத் ரஷ்யா துணையோடு தனி மனித சுதந்திரத்தை ஒடுக்கியதையும், பார்த்து மனம் வெறுத்தான். 1987 வரை எத்தியோப்பியாவில் பணியாற்றினான் அந்தக் கைக்கூலி. யுனெஸ்கோ துணையோடு, எத்தியோப்பியாவிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணியாற்றினான். அவன் பணியை எதியோப்பிய அரசாங்கம் நட்பாக பார்க்கவில்லை. எத்தியோப்பிய அரசாங்கத்தின் உளவுப்படை அவனை கண்காணிப்புக்குள்ளாக்கியது. யுனெஸ்கோ அமைப்பின் மூலமாக, எத்தியோப்பிய அரசாங்கத்துக்கு எதிராக அவன் செயல்படுகிறான் என்று அந்த அரசாங்கம் சந்தேகித்தது. நிம்மதியாக பணியாற்ற முடியாத சூழல். அந்தச் சூழலில், அவன் மேலும் பணியாற்ற விருப்பம் தெரிவிக்காமல் திரும்பி வந்தான்.

  மெங்கிஸ்டு ஹெல்மெரியம்
  எத்தியோப்பியாவில் பணிக்குச் செல்வதற்கு முன்பே, இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவற்றின் அணுசக்திக் கப்பல்கள் நிலை கொண்டிருப்பதை எதிர்த்து, இந்துமகா சமுத்திர அமைதிக் குழு என்ற ஒரு அமைப்பை தன்னுடைய 21வது வயதில் ஏற்படுத்தினான். வளர்ந்த நாடுகளுக்கிடையிலான பனிப்போர், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் குழு பணியாற்றியது. அணு ஆயுதம் தாங்கியுள்ள அந்தக் கப்பல்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தினால், இந்தியாவுக்கு நேரும் பேரழிவைப் பற்றி பேசியது அந்தக் குழு.
  அந்த சமயத்தில்தான் அவனுக்கு அணு ஆயுதங்கள், அணு சக்தி தொடர்பான விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டது. அணு சக்தியும், அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது அணு ஆயுதத் தயாரிப்புக்காகவே அணு சக்தி என்ற சிந்தனையே உருவானது என்பதை புரிந்து கொண்டான்.
  எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் உள்ள நாட்டர்டாம் பல்கலைக்கழகத்தில் தன் மேற்படிப்பை தொடர்ந்தான். அங்கே மேற்படிப்பு முடிந்ததும், ஆஸ்திரேலியா சென்று உதவித்தொகையோடு படிப்பை தொடர்ந்தான். அங்கே ஒரு பேராசிரியரின் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டே, முனைவர் படிப்பையும் அவன் முடித்தான். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வேலை கிடைத்தது. அங்கும் பணியாற்றி விட்டு, 2001ல் முழு நேரமாக இந்தியாவுக்கு திரும்பினான்.
  இந்தியாவில் பிஜேபி அரசு செய்த அணு ஆயுதச் சோதனையின் விளைவுகள் இதற்கு எதிராக பணியாற்ற வேண்டிய கடமையை அவனுக்கு உணர்த்தியது. வலதுசாரி தீவிரவாதிகளாக இருந்து அப்பாவி முகமூடி போட்டுக்கொண்டு வலம் வரும் ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி ஆகிய அமைப்புகளைப் பற்றியே அவன் முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்திருந்ததால், இது பற்றி எழுதுவதும், விவாதிப்பதும் அவனுக்கு எளிதாக இருந்தது.
  பிஜேபி அரசாங்கம் இந்தியாவில் பதவியேற்றதும், இந்தியா சந்திக்கப்போகும், ஆபத்துக்கள் குறித்து அவன் தொடங்கிய பிஜேபி அரசு கண்காணிப்புக் குழுவில் இந்து ராம், கே.எம்.பணிக்கர், ரொமிலா தாப்பர், ஏ.ஜி.நூராணி, அஸ்கர் அலி இன்ஜினியர் ஆகியோர் அதில் இணைந்தார்கள். பாரதீய ஜனதா கட்சி பதவியிழக்கும் வரை அந்த அமைப்பு தொடர்ந்தது. அந்த அரசு வீழ்ந்ததும், இந்த அமைப்பை கவர்மென்ட் வாட்ச் என்ற அமைப்பாக மாற்றி தொடர்ந்து அதில் செயல்பட்டு வந்தான்.
  2001ல் பழவிளை என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கி தன் மனைவியோடு சேர்ந்து, அங்கே ஒரு பள்ளியைத் தொடங்குகிறான். பழவிளை என்பது ஒரு கிராமம். அவனின் கல்வி பின்புலத்திற்கும், அறிவாற்றலுக்கும், திருநெல்விலியில் நல்ல கல்விக்கு இருந்த வற்றாத தேவைக்கும் ஏற்ப, அவன் நெல்லை நகரத்தில் இந்தப் பள்ளியைத் தொடங்கயிருந்தானென்றால், இன்று ஜேப்பியார் போலவோ, ஏ.சி.சண்முகம் போலவோ ஒரு கல்வித்தந்தை ஆகியிருப்பான். ஆனால் கிராமப்புற மக்களுக்குத்தான் கல்விக்கான தேவை இருக்கிறது என்பதற்காக அந்தக் கிராமத்திலேயே அந்தப் பள்ளியை தொடங்கினான். வழக்கமான பள்ளிக் கல்வித் திட்டத்தோடு, விவசாயம், இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல், போன்றவற்றையும் அவன் பள்ளியில் அந்தப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தான். பெற்றோர்களிடத்தில் பத்து ரூபாய் கூட நன்கொடை வாங்காமல் பள்ளியை நடத்தினான். அவன் தொடங்கிய பள்ளியின் பெயர் சாக்கர். (SOCCER) சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் ஃபார் இடிகேசன் ரிசர்ச் என்பதுதான் அதன் விரிவாக்கம். அவன் இருந்த பகுதியில், மத மோதல்களுக்குப் பஞ்சமே இல்லை. வலதுசாரி இந்து அமைப்புகள் எப்போது பிரச்சினையைக் கிளப்பலாம் என்று காத்துக் கொண்டிருக்கும். ஒருவன் நல்ல பள்ளியை நடத்தி, சுற்றுப்புற மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்கினால் மதவாதிகளுக்குப் பொறுக்குமா என்ன ?
  அந்தப் பள்ளிக்கான ஆதரவை குலைக்க வேண்டும் என்பதற்காக, சாக்கர் என்பது கிறித்துவ அமைப்பு. அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விஷப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால் இந்தப் பிரச்சாரங்கள் அந்தத் தரமான பள்ளியின் புகழை குலைப்பதில் வெற்றி பெறவில்லை. வழக்கமான பள்ளியாக இருந்தால் ஒரு வேளை புகழ் குறைந்திருக்கும். ஆனால் அந்தப் பள்ளியில் கல்வி வித்தியாசமாக அல்லவா வழங்கப்பட்டது …!!! கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அந்தப்பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்தார்கள். கல்லூரிகளில் நடத்துவது போன்ற செமினார்கள் பள்ளியில் நடத்தப்பட்டன.
  இயல்பாகவே சுற்றுச் சூழல் குறித்து இருந்த அவனது ஆர்வம், கூடங்குளம் அணு உலை நோக்கி அவனது கவனத்தை திருப்பியது. அணு உலையை எதிர்க்கும் அவனது பொதுநலத்தில் சுயநலமும் கலந்திருந்தது. அவனது தாத்தா பாட்டிகளில் நான்கு பேர் புற்றுநோயால் இறந்திருந்தனர். அவனது அப்பாவின் அம்மாவை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பாட்டி என்றால் உயிர். அந்தப் பாட்டி, அவனுக்கு ராமாயணம், மகாபாரதம் என்று பல்வேறு கதைகளைச் சொல்லி அவன் அறிவை விரிவாக்கியிருந்தார். அந்தப் பாட்டி கதை சொல்லும் அழகும் திறமையுமே பின்னாளில் அவன் பேச்சுத்திறனுக்கு உந்துசக்தியாக அமைந்தது.
  அந்தப் பாட்டிக்கு புற்று நோய் வந்தது. அந்த நோயை, உரிய நேரத்தில் கண்டுபிடிக்காமல் விட்டதால் நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாட்டியின் கன்னத்தில் ஓட்டை விழுகிறது. எந்தப் பாட்டி தனக்கு கதை சொல்லி அவன் அறிவை விரிவாக்கினார்களோ, அந்தப் பாட்டிக்கு அன்போடு ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாத கொடுமையை அவன் அனுபவித்தான். அவன் சொந்த ஊரான இசங்கன்விளையில் பலர் புற்றுநோயால் அவதிப்பட்டதை பார்த்துப் பார்த்து, அணு உலை மற்றும் அணு சக்திக்கு எதிரான அவனது உணர்வுகள் பலப்பட்டன.
  அவன் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்த சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடுப் புதூர், கொட்டில்பாடு போன்ற கடற்கரை கிராமங்களில் புற்றுநோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது குறித்து அவன் ஆய்வில் இறங்கியபோது, அக்கடற்கரைப் பகுதியில் தோரியம் கிடைப்பதைக் கண்டறிந்தான். தோரியம் கதிரியக்கம் கொண்டது என்பதையும் கண்டு கொண்டான். அந்த மணலை தோண்டியெடுத்து ஏற்றுமதி செய்யும் ஆலைகள் அந்தக் கதிரியக்கத்தை அதிகப்படுத்துவதையும் கண்டுபிடித்தான். அந்தப் பகுதியில் வசிக்கும் ஆண்களுக்கு விரைப்பையில் புற்றுநோய் அதிகமாக வருவதற்கான காரணம், அந்த மணல் மீதே அமர்ந்து வலைப்பின்னுதல், சீட்டாடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு புற்றுநோய் அதிகமாக வருகிறது என்பதைக் கண்டறிந்தான். உலகிலேயே நார்வே, துருக்கி மற்றும் இந்தியாவில் மட்டும்தான் தோரியம் கலந்த மணல் இருக்கிறது என்பதையும், அந்த மணலை ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும், இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்பதை கண்டுபிடித்தான்.
  2001ல் இந்தியா வந்தபிறகு, கூடங்குளம் அணு உலையைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்கிறான்.
  20 நவம்பர் 1988ல், இந்தியாவுக்கும், அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த செர்னோபில் விபத்தைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் சோவியத் யூனியனோடு இந்த ஒப்பந்தத்தைப் போடுகிறது இந்தியா. சோவியத் யூனியன் உடைந்ததும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிறது. 1997ல், அப்போதைய பிரதமர் தேவகௌடாவும், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்ஸினும் மீண்டும் ஒரு கூடுதல் ஒப்பந்ததைப் போட்டு, அணு உலைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார்கள். முதன் முதலில் 1988ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூடங்குளம் அணு உலைக்கு ஆவதாக மதிப்பிடப்பட்ட செலவு 6000 கோடி. இதே தொகை 1997ல் 17,000க கூடுகிறது. முதலில் அணு உலைக் கழிவுகளை திருப்பி எடுத்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்த ரஷ்யா, பின்னாளில் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டது.
  கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 20 நவம்பர் 1988ல் கையெழுத்தான உடனேயே அடுத்த மாதமே, 19 டிசம்பர் 1988 அன்று சமத்துவ சமுதாய இயக்கம் ஒன்ற ஒரு இயக்கத்தை அணு உலைக்கு எதிராக தொடங்குகிறார் டேவிட் என்பவர். இந்த அமைப்பில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சேருகின்றன.
  1989ல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. தொடர்ந்து நடந்து வந்த இந்தப் போராட்டங்கள் 1989ல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நின்று போகின்றன. அணு உலையின் எதிர்காலம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியோடு முடிந்துவிட்டது என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன.
  1998ல் ரஷ்யாவோடு மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, போராட்டங்கள் மீண்டும் தொடங்குகின்றன. மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு கூடங்குளம் அணு உலையின் ஆபத்து குறித்து மாநாடு நடத்துகின்றது. பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் அணு உலைக்கு எடுக்கப்பட்டால், எப்படி அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது விரித்துரைக்கப்படுகிறது.
  இதற்கிடையே அணு உலைக்கான வேலைகள் தீவிரமாக மத்திய அரசால் தொடங்கப்படுகின்றன. 2001 நவம்பர் 10 அன்று அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு மதுரையில் உருவாக்கப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு உருவானதில் முக்கியப் பங்கு வகிக்கிறான் அவன்.
  2002 ஜனவரி முதல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கருத்தரங்குகள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், என்று பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அத்தனையும், இவன் ஒருவனின் முன் முயற்சியால் நடைபெறுகின்றன. கிராமம் கிராமமாகச் சென்று, அணு உலைக்கு எதிராக தெரு முனைக் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறான்.
  ஆனால், இவன் சொல்வதை யாருமே காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அந்த அணு உலையால் கடுமையாக பாதிக்கப்படும் கூடங்குளம் மக்களே கூட இவன் சொல்வதை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில், மத்திய உளவுத்துறையின் ஆதரவில், சில போக்கிலிகள் இவன் கூட்டம் நடத்தும் இடங்களுக்கு வந்து இவனையும், இவனோடு இருந்தவர்களையும் விரட்டி அடிக்கின்றனர்.
  2001 முதல் இவன் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கான பலன், 2007 முதல் லேசாகத் தெரியத் தொடங்குகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இவன் பிரச்சாரம் செய்தபோதெல்லாம், அம்மக்கள், சிங்கப்பூராக மாற இருக்கும் கூடங்குளத்தை கெடுப்பதற்காக வந்திருக்கிறான் என்றே நினைத்தார்கள். அணு உலை வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் வரும், தங்கும் விடுதிகளைக் கட்டி வாடகைக்கு விட்டால், இங்கே தங்க வருபவர்களின் மூலம் ஏராளமான வருமானம் வரும் என்றே நம்பினார்கள். இந்த நம்பிக்கையால் கூடங்குளம் ஊருக்குள்ளே அவன் அனுமதிக்கப்பட்டதேயில்லை.
  அந்தப் பகுதியில் பெரும்பாலாக இருந்த நாடார் இன மக்கள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நாம் சம்பாதித்து பெரிய ஆளாக ஆவதை தடுப்பதற்காக பிரச்சாரம் செய்கிறான் என்றே நினைத்தார்கள். 2007ல் தான் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. அணு உலை வேலைகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது, இவர்கள் சொன்ன மாற்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லையே என்பதை அம்மக்கள் உணரத் தொடங்குகின்றனர்.
  அதன் பிறகு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், எல்லா இடங்களுக்கும் பயமின்றி சென்று பிரச்சாரம் செய்ய முடிந்தது. இந்த புதிய உத்வேகத்தில், நண்பர்களின் உதவியோடு துண்டுப் பிரசுரங்கள் போடுவது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று தன் பணியை வேக வேகமாகச் செய்யத் தொடங்கினான்.
  கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் ? கூடங்குளம் அணு உலை ஆபத்தில்லாதது, கூடங்குளத்தை சிங்கப்பூராக்கும் என்ற அவர்களின் பிரச்சாரத்துக்கு அவர்களே வேட்டு வைத்தார்கள். 2011ல் மார்ச் 11 அன்று ஜப்பானின் புக்குஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து இந்திய அணு சக்தியாளர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. என்னடா இது.. ஏற்கனவே இந்தப் பயல்கள் அணு உலை என்றால் ஆபத்து என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த விபத்து வேறு நடந்திருக்கிறது. விட்டால் இதை வைத்தே இவர்கள் மக்களைத் திரட்டி விடுவார்கள். அவனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளலாம் என்று மத்திய அணு விஞ்ஞானிகள் களம் இறங்கினார்கள்.
  ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துப் போல விபத்து ஏற்பட்டால், அனைவரும் வீட்டுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு வெளியாகும். வேகமாக மூச்சு விடக் கூடாது. இந்த இடத்திலிருந்து உங்களை அப்புறப்படுத்த அரசு வாகனங்கள் வரும். 30 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப் படுவார்கள். ஆறு மாதத்துக்கு ஊருக்குள் வரக்கூடாது. அரசு உத்தரவிட்ட பிறகே ஊருக்குள் வர வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.
  அத்தனை நாள் அரசு சொல்லும் அத்தனை விஷயங்களையும் கண் மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்த அப்பகுதி மக்களுக்கு அடடா, உதயக்குமாரும் அவரோடு இருக்கும் மற்றவர்களும் இத்தனை நாட்களாக சொல்லி வந்த விஷயத்தை தற்போது அரசு அதிகாரிகளே சொல்லுகிறார்களே என்பது உறைக்கத் தொடங்கியது.
  அதுவும் புக்குஷிமா விபத்து நடந்து அது தொடர்பான விவகாரங்களை மக்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு மக்களிடம் விபத்துக்கான ஒத்திகையும் நடத்தியாயிற்று. இந்த நேரத்தில் அணு உலையைத் திறந்தால், மக்களிடம் எதிர்ப்பு வலுக்கும் என்பது புரிய வேண்டாமா… ? நாராயணசாமி போன்றவர்கள் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தால் அரசு எப்படி செயல்படும்… இப்படித்தான்.. புக்குஷிமா விபத்து நடந்து முடிந்து, ஒத்திகையும் நடத்தி முடித்த ஒரு சில வாரங்களில், கூடங்குளம் அணு உலை தொடங்கப்போகிறது என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள். ஜுன் 1, 2011ல் கூடங்குளம் அணு உலையில் பரீட்சார்த்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கிறார்கள். அணு உலை புகைப்போக்கியிருந்து வெள்ளை நிறப்புகை வெளியேறுகிறது. அந்தப் பாமர மக்கள், அந்தப் புகையே நம்மைக் கொன்று விடும் என்று அஞ்சுகிறார்கள். ஏற்கனவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மக்களுக்கு சொல்ல வேண்டுமா ? இத்தனை நாட்களாக இந்த அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிச் சொன்ன அவனைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அய்யா, எங்களைக் காப்பாற்று, எங்கள் உயிரைப் பறிக்க வருகிறார்கள் அணு விஞ்ஞானிகள் என்று அவனிடம் தஞ்சம் புகுகிறார்கள்.

  புக்குஷிமாவுக்குப் பின் கதிர்வீச்சுக்காக சோதிக்கப்படும் ஜப்பானியக் குழந்தை
  2001 முதல் தொடர்ச்சியாக அணு உலைக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருந்த அவனுக்கு மக்கள் திரளாக வந்து, எங்களுக்காக போராடு என்று கோரிக்கை வைத்தால் கசக்குமா என்ன..? ஒரு படைத் தளபதியைப் போல களத்தில் இறங்கினான். வாருங்கள் நான் இருக்கிறேன்… மோதிப் பார்த்து விடுவோம் என்று போர் முரசறைந்தான். ஊழல் செய்து சொத்து சேர்த்து, அதைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் போன்றவனா அவன் ? அவனிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது…. அவன் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட அவனுக்கு வேறு என்ன பேறு அமைய முடியும் ?
  இறங்கினான் களத்தில். அவன் ஒலித்த போர் முரசம் டெல்லியை நடுநடுங்க வைத்தது. மக்கள் அவன் பின்னால் திரண்டார்கள். ஆகஸ்ட் 16ம் தேதி இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரதத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
  நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது. அத்தனை நாள் வரை அவனை எதிரியாகப் பார்த்தவர்கள், அவனோடு சேர்ந்து அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர். சிறு ஓடையாக இருந்த போராட்டம் நதிப்பிரவாகமாக பெருக்கெடுத்தது.
  அது வரை டெல்லியின் சந்து பொந்துகளில் அலைந்து திரிந்து இரை தின்றுக் கொண்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு நரி, அவனைப் பார்த்து ஊளையிட ஆரம்பித்தது. அந்த நரியின் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய உளவுத்துறை, சிபிஐ போன்றவற்றை அவன் மீது கட்டவிழ்த்து விட்டது.
  நேரடியாக அவனோடு பேரம் பேசியது அந்த நரி. குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகிவிடு. அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். அவன் நான் இந்தியாவுக்கு விபச்சாரம் செய்ய வரவில்லை என்று திருப்பியடித்தான். அவனைக் கடத்தி வைத்து விட்டு, அவன் மக்களை நிர்கதியாக்கிவிட்டு ஓடி விட்டான் என்று பிரச்சாரம் செய்ய முயற்சித்தார்கள். அது பலிக்கவில்லை.
  அவனுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்று அந்த நரி, ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஊளையிட்டது. அவன், அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நான் பொதுவாழ்விலிருந்து விலகுகிறேன். கொடுக்கவில்லையென்றால், நரி விலகுமா என்று கேட்டான். அது குறித்து அந்த நரி வாயே திறக்கவில்லை. அவன்தான் பேரத்திற்கு படியவில்லை. அவனோடு இருப்பவர்களை விலைக்கு வாங்கலாம் என்று அந்த நரி முயற்சித்தது. அவர்களோடு இருப்பவர்கள், அவனை விடத் தீவிரமாக இருந்தனர்.
  அந்த நரிதான் அப்படி ஊளையிடுகிறது என்றால், அந்த நரிக்கும் மற்ற நரிக்கூட்டத்திற்கும் தலைவனாக தலைப்பாகை அணிந்த ஓநாய் ஒன்று இருந்தது. அந்த ஓநாய் ஒரு நாள், அவன் வெளிநாட்டில் பணம் வாங்குகிறான் என்று வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தது. அவன் அந்த ஓநாய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான். அன்று பம்மிய அந்த ஓநாய் இன்று வரை வாய்த் திறக்கவில்லை.
  அவன் வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ளான். கருப்புப் பணம் பதுக்கியுள்ளான் என்றது அந்த நரி. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள், கண்ணப்ப நாயனார் சிவபெருமானை கல்லால் வழிபட்டது போல, மலர்களாக அவன் மீது விழுந்தன.
  அவன் போராட்டத்துக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு வந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடியில் வந்து, கூடங்குளம் மக்களோடு நான் ஒருத்தி. உங்கள் கவலைகள் தீர்க்கப்படும். பயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அறிவித்தார். அவனும் அவனோடு சேர்ந்த மக்களும் மகிழ்ந்தனர். ஆர்ப்பரித்தனர்.
  அந்த மக்கள் கருப்பாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சிகப்பாக இருக்கிறார். அவர் எப்படி அம்மக்களில் ஒருத்தியாக முடியும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மறுநாளே, காவல்துறையை இறக்கினார். காவல்துறையின் பெரும்படை நீண்ட நாட்களாக இரையின்றி கட்டி வைக்கப்பட்டிருந்த வேட்டை நாயாக காத்திருந்தது. அந்த “உங்களில் ஒருத்தி” பாண்டிச்சேரி நரியின் சதிக்குப் பலியானார். அந்த நரி என்ன நடக்கவேண்டுமென்று விரும்பியதோ, அதை முழு வீச்சோடு நடத்தினார்.
  அவனை மிரட்ட அடுத்து என்ன செய்வதென்று, அவன் மீதும், அவனோடு இருந்த தோழர்கள் மீதும் தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தார்கள் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரு வழக்கு இரு வழக்கு அல்ல. இருநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள். கலவரம் ஏற்படுத்தியது, வன்முறையைத் தூண்டியது. தேசத்திற்கு எதிராக போர்த் தொடுத்தது, என்று சரமாரியாக வழக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். .
  அது மட்டுமா… ? அவன் தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதி நடத்திய பள்ளியை அடித்து நொறுக்கினர். சிபிஐ மற்றும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை வைத்து, அவன் பள்ளி மற்றும் ட்ரஸ்டுகளில் சோதனை நடத்தினர். மடியில் கனம் இருந்தால்தானே அவன் பயப்படுதவற்கு… ? சோதனை நடத்துவதை பிரபலமாக விளம்பரப்படுத்திய அரசு நிர்வாகம், சோதனையில் எதுவும் கிடைக்காத விவகாரத்தை வெளிப்படுத்த மறுத்தது. அவன் நடத்திய போராட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் வந்த கலந்து கொண்டார். அந்த ஜெர்மானியரை இரவோடு இரவாக நாடு கடத்தி, அவனை வெளிநாட்டு உளவாளி என்று சித்தரிக்க முயற்சி செய்தனர். அதுவும் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக மாவட்ட ஆட்சியரோடு பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது, சங் பரிவாரக் கும்பல்களால் அவனும் அவன் குழுவினரும் தாக்கப்பட்டனர். அவதூறான வார்த்தைககள் அவனை நோக்கி வீசப்பட்டன. ஆனால் அவன் கலங்கவில்லை.
  தான் எடுத்த போராட்டத்திலிருந் பின் வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தான். ஆரம்ப காலத்திலிருந்து அவனோடு உடன் இருந்த பிரஜாபதி அடிகளார், போன்றவர்களை பாண்டிச்சேரி நரி சதி வேலையால் அவனுக்கு எதிராக திருப்பியது. பிரஜாபதி அடிகளார் அவனுக்கு எதிராக பேட்டியளித்தார் அவர். அவன் மன உறுதியை குலைக்க பல வேலைகளில் ஈடுபட்டனர் அவன் எதிரிகள்.

  அவன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களை அவன் சமாளித்தான். ஆனால் வெளிநாட்டிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறான் என்ற குற்றச்சாட்டை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இந்தாருங்களடா… பார்த்துக் கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் சொத்துக்கள் இவ்வளவுதான் என்று பகிரங்கமாக அறிவித்தான்.
  அடுத்ததாக அவன் மீது தாக்குதல் தொடுக்க ஊடகத்தை கட்டவிழ்த்து விட்டனர்.
  எழுத்து விபச்சாரம் செய்யும் ஒரு நாளிதழை வைத்து, அவனது உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது அந்த நாளிதழ். அவனும் அவன் கூட்டாளிகளும் திருட்டுத்தனமாக தின்று விட்டு உண்ணாவிரதம் என்று நடிக்கிறார்கள் என்று எழுதியது அந்த நாளிதழ். காலையில் இட்லியும் பூரியும் தின்கிறார்கள் என்று பச்சைப் பொய்யை கூசாமல் எழுதியது. அறிவில்லா அரசு என்ற மண் தொலைக்காட்சியின் நிருபர், காவல்துறை வீசிய எலும்புகளை பொறுக்கிய விசுவாசத்தில் அவனுக்கு எதிராக விஷத்தைக் கக்கினார். அதே தொலைக்காட்சியின் நாம செல்வராஜ் என்ற நிருபர், அவனுக்கு நக்சலைட்டோடு தொடர்பு உள்ளது என்று அவர் பங்குக்கு அவன் மீது அவதூறை அள்ளி வீசினார். ஆனால், மக்களுக்கான போராளி மீது இது போன்ற அவதூறுகள் வீசப்படத்தானே செய்யும். அவன் அந்த அவதூறுகளை புறந்தள்ளி விட்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தான்.
  தங்கள் முயற்சி இப்படிக் கேவலமாக தோல்வியிடைந்து விட்டதே என்று பாண்டிச்சேரி நரியும், டெல்லி ஓநாயும் மனம் வெதும்பின. ஆனாலும் விட்டு விடுவார்களா என்ன ? எங்கள் வேலை முடிந்து விட்டது, நீங்கள் உங்கள் வேலையைத் தொடங்குங்கள் என்று ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர். சிகப்பு ஜெயலலிதாவுக்கு உண்மையில் கொஞ்சமாவது அறிவோ அரசியல் ஞானமோ இருந்திருந்தால், நான் ஏன் அம்மக்களை விரட்ட வேண்டும்… நான் ஏன் அம்மக்களுக்கு விரோதியா வேண்டும்.. அது பாண்டிச்சேரி நரி செய்ய வேண்டிய வேலை என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதி விரிக்கும் வலையில் எப்போதும் விழுந்து விழுந்து பழக்கப்பட்ட ஜெயலலிதா, நரி வலையிலும் விழுந்தார்.
  கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று நரி சொன்னதும் சிகப்பு ஜெயலலிதா துடித்தார்… போராடும் மக்களை உடனே விரட்ட வேண்டுமே என்று பதறினார். காத்திருந்த காவல்துறையை ஏவினார்.
  மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். தடியால் தாக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுடப்பட்டனர். வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த வன்முறை அம்மக்களை அச்சப்படுத்தும், அவர்களை அவனிடமிருந்து அந்நியப்படுத்தும், அம்மக்கள் வன்முறையை கண்டு பயந்து, அவனை வெறுத்த ஒதுக்குவார்கள் என்று எதிரிகள் நம்பினர்.
  ஆனால் அம்மக்களை அவன் ஆடு மாடுகளாக வைத்திருக்கவில்லை. அம்மக்கள் ஒவ்வொருவரையும் கற்றறிந்த போராளியாக மாற்றி வைத்திருந்தான். போராட்ட களத்தில் இருக்கும் போராளிக்கு வேண்டிய உத்வேகத்தோடு அவர்கள் அவன் பின்னால் திரண்டனர். அவனைக் கைது செய்யப் போகிறோம் என்று அரசாங்கம் மிரட்டியது. தம்மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக அவன் சரணடைய முன் வந்தான். ஆனால், அவனை உயிராக நேசிக்கும் மக்கள் அவனைச் சரணடைய விடவில்லை. நீ சரணடையாதே… எங்களுக்கு தலைமையேற்று போராட்டத்தை நடத்து… இறுதி வெற்றி நமதே என்று முழக்கமிட்டார்கள். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்… ? அவன் அம்மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டான்.
  போராட்டத்தை தொடர்ந்து நடத்த இசைந்தான். அவனைத்தான் துரோகி என்கிறார்கள். அவனைத்தான் வெளிநாட்டின் கைக்கூலி என்கிறார்கள்.
  அவன் வேறு யாருமல்ல தோழர்களே… கூடங்குளம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் சுப.உதயக்குமார்தான் அந்தக் கைக்கூலி. நான் அந்தக் கைக்கூலியை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். இப்படி ஒரு கைக்கூலி வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோமே என்று பெருமைப்படுகிறேன். அந்தக் கைக்கூலியைப் பாராட்டி என் உயிர் இருக்கும் வரை எழுதுவேன், பேசுவேன். நீங்கள்… .. ?

 5. கிரி

  ” சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்றுதான் சொல்லலாம். ”
  🙂 அருமை.

 6. Ram

  கலாமுக்கே ஒன்னும் தெரியாது ன்னு சொல்றிங்க.அப்போ சுஜாதா வை எந்த கணக்குல செர்கறது…நான் புடிச்ச முயலுக்கு முனு கால் இருக்கறவங்களை ஒன்னும் பண்ண முடியாது

 7. palpalani

  @Ram: காலம் அணு விஞ்ஞானி இல்லை. ஆனால் அவர் சொன்னது நான் பார்தேன் நாள் இருக்குன்னு… மேலும் ஏதோ அரசியல்வாதி போல மக்களுக்கு நலத்திட்டங்கள் எல்லாம் அறிவிச்சார்!

  சுஜாதா தான் படித்ததை பகிர்ந்திருக்கார். மேலும் சும்மா போரட்டிபாத்துட்டு எழுதல்ல, இருக்குற எல்லா வாய்ப்புகளையும் அலசி எழுதி இருக்கார்.

 8. arulnithya

  நன்றிகள் பல JB. திரு உதயகுமார் அவர்கள் பற்றி தெரிந்து கொண்டதற்கு.
  போராட்டம் நிச்சயம் வெல்ல வேண்டும். இல்லையென்றால் அழிவு தான்

 9. vasagan

  @palpalani,

  //காலம் அணு விஞ்ஞானி இல்லை. ஆனால் அவர் சொன்னது நான் பார்தேன் நாள் இருக்குன்னு… மேலும் ஏதோ அரசியல்வாதி போல மக்களுக்கு நலத்திட்டங்கள் எல்லாம் அறிவிச்சார்!

  சுஜாதா தான் படித்ததை பகிர்ந்திருக்கார். மேலும் சும்மா போரட்டிபாத்துட்டு எழுதல்ல, இருக்குற எல்லா வாய்ப்புகளையும் அலசி எழுதி இருக்கார்.//

  இதே சுஜாதா அணு உலையை ஆதரித்து எழுதியிருந்தால் நீங்கள் இப்படி சொல்வீர்கள?

 10. Ram

  //இதே சுஜாதா அணு உலையை ஆதரித்து எழுதியிருந்தால் நீங்கள் இப்படி சொல்வீர்கள?//

  ஏன்? சுஜாதா ஒன்னும் விஞ்ஞானி இல்லை ஒரு எழுதாலன் ன்னு சொல்வாரு

 11. palPalani

  @vasagan, @Ram: இப்பவும் சொல்றேன் ‘சுஜாதா ஒன்னும் விஞ்ஞானி இல்லை’. அவர் முன் முடிவோடு இதை எழுத ஆரம்பிக்கவில்லை. அதை கட்டுரை படித்தாலே தெரியும்.

  அனால் அப்துல் கலாம் அப்படி இல்லை, அவர் ஆதரித்தே ஆக வேண்டும் என்ற முன் முடிவோடு சென்றுதான், சுற்றி பார்த்துவிட்டு சொல்றார். இந்த விசயத்தில் இருவருக்கும் உள் கட்டமைப்பை பற்றிய அறிவு ஒன்றுதான். ஆனால் அதில் இருக்கும் அரசியல் சுஜாவுக்கு தெரியும், கலாம் அதைபற்றி பேச தயாரில்லை.

 12. sathishkumar

  காஸ் சிலிண்டர் வெடித்தால் ஆபத்து அதனால் நமபயன் படுதம்மல் இருக்கிறோமா ?, சாலை வீப்பத்து ஆதனால் நாம் ரோட்டில் போகாம இருக்கோம ,

  கத்திய வச்சு கொலையும் பண்ணலாம் அதுக்காக கத்திய தொடமாட்டேன் என்று சொல்லலாமா ?, ஆபத்து எதில் இல்ல , அப்பது ஏற்படாதவரை அதனால் நமக்குக்கிடைக்கும் நன்மை அதிகம் , எதிலையும் பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் இருக்காது அதை நம்பி தன ஆகனும். வந்த இப்படி ஆகும் என்று பேசிகிட்டே இருத்தல் நாம் அன்றாடம் பயன் படுத்தும் அணைத்து பொருளிலும் ஆபத்து இருக்கிறது , இன்றைக்கு இருக்கிற நிலைமையில் நாம் அணு உலையை பயன்படுத்தித்தான் அகவேண்டும ஆபத்து என்றல் கடல்ல மீன்பிடிக்க போறப்ப ஆபத்து இல்லையா கொஞ்சம் சிந்தியுகள் உங்களால் கூடங்குளம் இல்ல்லை ஒட்டுமொத தமில்னட்டிருக்கு நஷ்டம்
  எபடயும் நீங்க கேட்ட்க போறது இல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *