BREAKING NEWS
Search

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோர் – ரஜினி அதிரடிப் பேச்சு

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோர் – ரஜினி அதிரடிப் பேச்சு

சென்னை: வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட, காலத்தை வென்ற மனிதர்கள் ஒரு சிலர்தான். அப்படிப்பட்டவர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் மற்றும் ஜெயலலிதா என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஜெயா டிவியின் 14வது ஆண்டு விழாவுக்கு தலைமை தாங்கி, மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் – ராமமூர்த்தியை கவுரவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாஸன், இயக்குநர் கே பாலச்சந்தர், தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவின் சிறப்பாக அமைந்தது வழக்கம் போல சூப்பர் ஸ்டாரின் பேச்சுதான். அவரது பேச்சின் சிறப்பு பற்றி தனியாக பார்ப்போம். முதலில் ரஜினியின் பேச்சு முழுமையாக..

“இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே, என்னுடைய அருமை நண்பர் கமல் ஹாசன் அவர்களே, (கீழே பார்த்து) விழாவுக்கு வந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, திரையுலக பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும், வாழ வைத்த தமிழக மக்களே அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

சிஎம்மா பதவியேற்ற பிறகு அவருக்கு திரையுலகின் சார்பில் பாராட்டு விழா நடத்தணும்னு சொல்லி நிறையபேர் விரும்பினாங்க. ஆனா முதல்வர் இப்போதைக்கு வேணாம்னு சொன்னதா கேள்விப்பட்டேன்.

இப்போ, அவங்களே வந்து இங்கே, எம்எஸ்விக்காக பெரிய பாராட்டு விழா நடத்துறாங்கன்னு சொன்னா.. அது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச மாதிரிதான். இது திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் கூட பெரிய வாய்ப்பு. பெரிய விஷயம். உங்களை (முதல்வரை) பாராட்ட இப்போ எங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.

ஜெயா டிவி 13 ஆண்டுகள் முடிந்து 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அந்த சாதனைக்காக அங்கே பணியாற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சிக்கிறேன்.

எனக்கும் ஜெயா டிவி பிடிக்கும். பல நல்ல நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பேன். காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எனக்கும் பிடிக்கும். அதேபோல, செய்திகளுக்கு முன்னாடி வரும் வரலாற்றுச் சுவடுகள் மிகவும் அருமையாக இருக்கும்.

அப்புறம் சோவின் எங்கே பிராமணன், தொடரை நான் விரும்பிப் பார்ப்பேன். சோ கொடுக்கிற விளக்கங்கள் நல்லா இருந்தது. ஆனா அதுக்கப்புறம் நின்னுடுச்சி. நான்கூட சோ கிட்ட, ஏன் நிறுத்திட்டீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார், ‘சிஎம் கூட என்கிட்ட கேட்டாங்க.. ஆனா எனக்குத்தான் நேரமில்லே’ன்னார். இந்த தமிழ்நாட்ல, சிஎம் சொல்லியும் கேட்காத ஒரு ஆள் இருக்கார்னா அது சோ சார்தான்… (அரங்கமே கைத்தட்டலிலும் சிரிப்பிலும் அதிர்ந்தது…)

ஒரு சின்ன செடியா இருந்த ஜெயா டி.வி. இன்னைக்கு கமல் சொன்ன மாதிரி ஒரு மரமா வந்திருக்கு தன்னோட சொந்த முயற்சியால.

இது எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா. இங்கே உள்ள எல்லாரை விடவும் நான்தான் ஜூனியர்னு நினைக்கிறேன் சினிமாவில். எம்எஸ்வி அவர்களைப் பாராட்ட இளையராஜா சார், கமல் போன்றவர்களே வார்த்தையில்லாமல் தயங்கும்போது, நான் மட்டும் என்ன சொல்லிடப் போறேன்.

அவருடன் நான் நிறைய படங்கள் கூட செய்யவில்லை. ஆனால் நான் பெங்களூரில் இருக்கும்போது, தமிழே தெரியாத கன்னடாக்காரங்க கூட, அர்த்தம் தெரியாமலே பாடும் பாட்டு போனால் போகட்டும் போடா… நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…

எனக்கு அப்போ மொழி தெரியலேன்னாலும் தமிழ்ப் படங்களுக்கு அதிகமா போவேன். அப்படி ஒருமுறை சர்வர் சுந்தரம் படத்துக்குப் போனேன். ஒரு சாதாரண சர்வர் சினிமா நடிகனாக எப்படி ஆகிறான் என்பது கதை. நானும் கண்டக்டரா இருந்து, சினிமா நடிகனாகணும்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம் அது.

அந்தப் படத்துல ஒரு பாட்டு, ‘அவளுக்கென்ன அழகிய மனம்..’. அதுல ஒரு சீன்ல மட்டும் எல்லோரும் கைத் தட்டறாங்க. எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இவங்களோட படங்கள்ல அறிமுகக்காட்சிக்கு எப்படி கைத்தட்டல், விசில் கிடைக்குமோ.. அப்படி ஒரு ரெஸ்பான்ஸ். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கைத்தட்டுறீங்கன்னு பக்கத்துல இருந்தவரைக் கேட்டேன்.

‘அங்க கோட் போட்டுக்கிட்டு மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரைக் காட்டறாங்களே… அவர்தான் இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் எம்எஸ் விஸ்வநாதன். அவருக்காகத்தான் இந்தக் கைத்தட்டல்,’ என்றார்.

ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வளவு வரவேற்பா.. ரசிகர்களா… இத்தனை மதிப்பான்னு ஆச்சர்யமா இருந்தது.

நான் இங்கே வந்த பிறகு, அபூர்வ ராகங்கள் சமயத்துலதான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது… என்ன அவர் காவி உடை போடல… மத்தபடி நெத்தியில நீறு, குங்குமம் வெச்சிக்கிட்டு சாதாரணமா இருந்தார்.

மூன்று முடிச்சு படத்துல நான் பாடற மாதிரி ஒரு பாட்டு, அந்த போட் ஸாங். ‘மண வினைகள் யாருடனோ..’ எனக்கு தனித்துவமான முகம்.. அதுக்கேத்தமாதிரி Peculier வாய்ஸ் வேணும்னு கேட்டபோது, எம்.எஸ்.வி.சார்தான் எனக்காக குரல் கொடுத்தார்.

சினிமாவில் எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி சார்தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும் படத்துல ‘சம்போ சிவ சம்போ…’ பாட்டு பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.

எம்.எஸ்.வி. – ராமமூர்த்தி மாதிரி சாதனையாளர்களைப் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது.

இந்த மரணம் என்பது இயற்கையானது. எல்லாருக்கும் வரக் கூடியது. இந்த மரணம் ஒரு தடவைதான் என்றில்லை… ரெண்டு முறை நிகழும். நிறைய பேருக்கு அதாவது தொன்னூறு சதவீத மக்களுக்கு மரணம் ஒரு தடவைதான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா முடிஞ்சது… பினிஷ்.. அவ்வளவுதான்.

இன்னொரு வகை… மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள். அந்த பேரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களாலேயோ இழந்துட்டா, அப்போ அவங்களுக்கு முதல் மரணம் வருது. அதற்கடுத்து இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும்.

ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க ஒரு பர்சன்ட்தான். அவங்க வாழும்போதும் சரி, இறந்து போன பிறகும் சரி, அவங்க பேரும் புகழும் எப்பவுமே நிலைச்சிருக்கும். அவங்கள்லாம் சாகாவரம் பெற்றவர்கள். தனிப்பிறவி.

ஆருயிர் நண்பர் கலைஞர்..

வடக்கில் பார்த்தீங்கன்னா…  சினிமாவில வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே,  எஸ்.டி.பரமன், நம்ம தமிழ்நாட்டுல பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி சார், கண்ணதாசன்… இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. இன்னும் அவர்கள் நம்மோடு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள் (அதிர்ச்சியில் அரங்கமே பேரமைதியாகிவிட்டது! ), புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி… இவங்களுக்கெல்லாம் வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இவங்களைப் பொறுத்தவரை வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது.

ஏன்னா… அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வெற்றி, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் சமமான மனநிலையில இருப்பாங்க.

அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன். அவங்க கூட பழகியிருக்கேங்கிற சந்தோஷத்தோட,இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு, முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செய்து, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும், அதற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் இறைவன் அவருக்கு வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன்.”

-பெரும் ஆரவாரம், விசில்களுக்கிடையில் இவ்வாறு பேசி முடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவரது இந்தப் பேச்சுக்கான ரியாக்ஷன்களை தனியாகத் தருகிறோம்…!

-வினோ
என்வழி ஸ்பெஷல்

ஜெயாடிவி விழாவில் முதல்வர் ஜெயலலிதா – சூப்பர் ஸ்டார் ரஜினி – கேலரி
21 thoughts on “வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் காமராஜர், எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றோர் – ரஜினி அதிரடிப் பேச்சு

 1. தினகர்

  “இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள் ”

  இது தான் அவருடைய தனித்துவம். முதல்வரைப் பற்றி தெரிந்த யாருக்கும், அவர் இருக்கும் மேடையில் இப்படி சொல்வதற்கு இந்த துணிச்சல் வருமா?. இது தான் தலைவரின் நேர்மை. யாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்காத நேர்மை. இத்தனை பெரிய தலைவர்களை குறிப்பிட்டாலும், தனக்கும் கலைஞருக்கும் உள்ள நெருக்கத்தையும் சுட்டிக்காட்டி விட்டார். அது எந்த மேடை என்ற கவலை அவருக்கில்லை.. மனசாட்சிக்கு மட்டுமே மதிப்பளிப்பவர் அல்லவா!

 2. anbudan ravi

  மிக மிக அருமையான பேச்சு…யார் மனதும் புண்படாமல் மிகத்தெளிவான பேச்சு….மனதில் உள்ளதை பட்டவர்த்தனமாக சொல்வதில் தலைவருக்கு நிகரில்லை. கலைஞரும் பத்திரிக்கைகளும் கூட ‘காக்காய் கூட்டங்கள்’ என்று விமர்சிக்க முடியாத அளவிற்கு பெடலெடுத்திருக்கிறார். திரு எம்.எஸ்.வி மற்றும் திரு ராமமூர்த்தி அவர்களின் பாடல்கள் புகழ் என்றும் அழியாது.

  அன்புடன் ரவி.

 3. மிஸ்டர் பாவலன்

  முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கிய விழாவில் கலைஞரைப்
  பாராட்டி ரஜினி பேசியது சரியா? தவறா?

  திருவள்ளுவர் என்ன சொல்கிறார்?

  “அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
  தொகையறிந்த தூய்மை யவர்.”

  மு.வ உரை:

  “சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.”

  நண்பர்களே.. திருக்குறள் வழியில் பார்த்தால் ரஜினி கலைஞரைப்
  பாராட்டி அதிமுக விழாவில் பேசி இருக்கக் கூடாது என்று தான்
  கருதுகிறேன். உலக நாயகன் கமல் ஹாசன் இது போன்ற தவறுகளை
  செய்வதில்லை. எந்த மேடையில் யார் தலைமை ஏற்கிறார்களோ
  அவர்களைப் பாராட்டி சுருக்கமாக நாலு வார்த்தை பேசி விட்டு வருவது
  கமல் ஸ்டைல். இந்த MSV விழாவில் அரசியலையே பற்றி யாரும்
  எதுவும் பேசி இருக்க வேண்டாம் எனவும் நான் நினைக்கிறேன்.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 4. raj

  Why did he not speak about Jayalalitha in any of the functions when Karunanithi was CM?
  __________________

  அடுத்த கட்டுரையைப் படிங்க…
  -வினோ

 5. kabilan

  தலைவர் பயம் அறியாதவர் .மிக அருமையான பேச்சு.நாளுக்கு நாள் தலைவரின் பேச்சு ஒவ்வொரு மேடையிலும் மெருகேறி கொண்டே போகிறது

 6. swami

  //அவரது இந்தப் பேச்சுக்கான ரியாக்ஷன்களை தனியாகத் தருகிறோம்…!//
  Expecting soon….Swami

 7. குமரன்

  இது, இதுதான் சூப்பர் ஸ்டார் எப்படிப்பட்ட உயர்ந்த மனிதன் என்பதைக் காட்டுகிறது. உண்மை, நேர்மை, தெளிவு, மக்களின் பேராதரவு இவை இருந்தால் மட்டுமே இப்படி ஜெயலலிதாவின் முன்னிலையில் அதுவும் ஜெயா டி.வி.நிகழ்ச்சியில் வெளிப்படையாக மனம் திறந்து இப்படிப் பேச முடியும், எனவே இவை அனைத்தும் ஒருசேரப் பெற்றவர் தாம் எனபதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்து விட்டார். உண்மை, நேர்மை இவற்றால் வருகின்ற இந்த வகையான தைரியம் அபூர்வமானது, அசைக்க முடியாதது, நிரந்தரமானது.

 8. Sebastian

  Great speech by Superstar. But the problem is Jaya TV will edit it suitably, so that we will never have the full speech video of Superstar.

 9. sundhar

  2009 ஆம் ஆண்டு, அக்டோபர் 9 அன்று இதே நேரு உள்விளையாட்டரங்கில், பெப்சி தொழாளர்கள் சார்பாக அவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அப்போதைய முதல்வர் கலைஞருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரஜினி, பெப்சி தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா அவர்கள் உதவ முன்வந்ததை பற்றி மறக்காது குறிப்பிட்டார்.

 10. kumaran

  தலைவரின் நேர்மையையும், தைரியத்தையும் , என்ன பேசவேண்டும் என்று திட்டமிட்டு , அதை மட்டும் தெளிவாக பேசிய தலைவர் முன்பைவிட இன்னும் தெளிவாகவும் தெம்பாகவும் இருபது தெரிகிறது .

 11. Nirmal

  இப்படி பேசுவததிற்கு கண்டிப்பாக தைரியம் இருந்தால் மட்டும் போதாது நேர்மையும் வேண்டும். எல்லோராலும் இது முடியாது.

 12. மிஸ்டர் பாவலன்

  ///இப்படி பேசுவததிற்கு கண்டிப்பாக தைரியம் இருந்தால் மட்டும் போதாது நேர்மையும் வேண்டும். எல்லோராலும் இது முடியாது./// (நிர்மல்)

  மிக, மிக சரி! சூப்பர் ஸ்டார் என்றும் சூப்பர் ஸ்டார் தான்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 13. எப்பூடி....

  @ மிஸ்டர் பாவலன்

  கலைஞரை ஒன்றும் ரஜினி வேண்டும் என்றே திணித்து அந்த இடத்தில் கூறவில்லை; வெற்றி தோல்விக்கு அப்பாற்ப்பட்டவர்களது வரிசையில் வேறு சிலரோடு சேர்த்துத்தான் குறிப்பிட்டுள்ளார்!! இதில் எந்த தவறும் இல்லை; இன்னும் சொல்லாபோனால் அது அவரது நடுனில/துணிவான தன்மைக்கு சான்று!!!

  கமல்ஹாசன் ஒருவரை பற்றி பேசபோனால் சுருக்கமாக நாலு வார்த்தை பேசிவிட்டு அமருவாரா; செம காமடி!!! 🙂 அவர் என்ன பேசிகிறார் என்பது புரியாமல் விழா நாயகர்களே விழி பிதுங்குவது கமல் பேச்சை கேட்க்கும்போது மட்டும்தான்!! மற்றும் தன்னைவிட வயது குறைந்த, அனுபவம் குறைந்த ஒருவரை பற்றி பேச சொன்னால், அவரைப்பற்றி பேசாமல், தானும் அவரும் சேர்ந்து புடுங்கிய ஆணிக்கனக்குகளை பற்றி பேசுவது எந்த கணக்கில்?

  அரசியல்வாதிகள் உள்ள மேடையில் அரசியல் பேசினாலும் தப்பில்லை; அதுவும் ஜெயலிதா போன்ற அரசியல்வாதி உள்ள மேடையில் தாரளமாக பேசலாம்!!!

  தேவையில்லாமல் சிவனேன்னு இருந்த திருவள்ளுவரை இழுத்து ஜெயலிதா என்னும் ஆணவத்திற்கு செம்பு தூக்க ரஜினியை குற்றம் சொல்ல வேண்டாம்!!!

 14. Manoharan

  @ மிஸ்டர் ராஜ்.
  கருணாநிதி தலைமை ஏற்ற சினிமா விழாவில் ஜெயலலிதா பெப்சிக்கு உதவ முன்வந்ததை ரஜினி குறிப்பிட்டார். அவர் யாருக்காகவும் பேசுவதில்லை. தனக்கு பட்டதை மற்றும் பேசுகிறார். அவர் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். அதனால் பேசுகிறார். இதே கருத்தை ஒரு சந்தானமோ அல்லது அஜீத்தோ கூறியிருந்தால் மேட்டர் க்ளோஸ். நியாபகம் இருக்கிறதா கருணாநிதி விழாவில் அஜித் பேசி ரஜினி எழுந்து கைதட்டினார். ரஜினியை ஒன்றும் கேட்க முடியவில்லை. ஆனால் அஜித் பட்டபாடு எல்லோருக்கும் தெரியும். திருவள்ளுவரின் கருத்து நம் போன்ற சாதாரண மக்களுக்குத்தான். ரஜினிக்கு இல்லை.

 15. மிஸ்டர் பாவலன்

  ///தேவையில்லாமல் சிவனேன்னு இருந்த திருவள்ளுவரை இழுத்து ஜெயலிதா என்னும் ஆணவத்திற்கு செம்பு தூக்க ரஜினியை குற்றம் சொல்ல வேண்டாம்!!!/// (எப்பூடி)

  அரசியல் பேசி இருந்திருக்க வேண்டாம் என்று தான் நான் எழுதி
  இருந்தேனே தவிர நீங்கள் சொன்னது போல் ஜெயலலிதாவை மட்டும்
  பாராட்டி இருக்க வேண்டும் என்ற பொருள்பட நான் எழுதவில்லை.
  நான் அரசியலில் ஈடுபாடு இல்லாதவன். கட்சி சார்பற்றவன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 16. மிஸ்டர் பாவலன்

  மனோகரன் – உங்கள் கருத்து சூப்பர்.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 17. Srini

  கருணாநிதி பற்றி ஜெ முன்னாடி பேச தைரியம் வேணும்.. ஆனா கருணாநிதி, ஜெ போய் காமராஜர் இடத்துல வச்சு பேசி இருக்கற கூடாது.. கருணாநிதி, ஜெ சாகா வரம் பெற்று வரல நம்மை சாகடிக்கிற வரம் பெற்று வந்து இருகாங்க.. அவங்கள போய் காமராஜர் கூட… சே !! சே !!.. என்ன தலைவரே !!

 18. Mamta

  ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது என்று சொன்ன ரஜினி இன்று ஜெயலலிதா விழாவில் ஜெயலலிதாவை பாராட்டி பேசுகிறார். அது தான் ஜெயலலிதாவின் கலக்கல் ரஜினியின் நிலைமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *