BREAKING NEWS
Search

ஸ்ட்ராபெரி – விமர்சனம்

ஸ்ட்ராபெரி – விமர்சனம்

 

நேற்று பார்த்த தமிழ்ப் படம் இது. மேக்கிங் எனப்படும் உருவாக்கம் சுமார்தான் என்றாலும், இயக்குநராக அறிமுகமாகும் பாடலாசிரியர் பா விஜய் கையிலெடுத்த விஷயம் வலுவானது. இன்றைய சுரணை கெட்ட சமூகத்துக்குத் தேவையானது.

அங்கும் இங்கும் காட்சிகள் அலைந்தாலும், சொல்ல வந்த விஷயத்தை கடைசி ப்ரேம் வரை சமரசமின்றி சொல்லியிருக்கிறார்.

கிடைக்கிற கேப்பிலெல்லாம் சலிக்காமல் பெற்றோரிடம் பணத்தை உருவிக் கொண்டே இருக்கும் தனியார் கல்வி வியாபாரிகளை நோக்கி நான்கே நான்கு காட்சிகள். நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படியான கேள்விகள்.

அந்த ஒரு காரணத்துக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்றிருந்தது.

தேவதை மாதிரி ஒரு குழந்தை. காலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி பள்ளிக்குப் போகிறாள். ஆனால் பொட்டலமாய் அவள் சடலம் மட்டுமே வீடு திரும்புகிறது. பெத்தவர்கள் மனசு என்ன பாடு படும்.. அந்த வேதனையை இயல்பாகக் காட்டியிருக்கிறார்கள் பெற்றோராக வரும் சமுத்திரக்கனியும் தேவயானியும்.

பள்ளியின் கவனக் குறைவால், அலட்சியத்தால் நிகழும் இந்த கோர மரணத்துக்கு குறைந்தபட்சம் மன்னிப்புக் கூட கோராத நிர்வாகம், மாறாக வழக்கை வாங்க பேரம் பேசுகிறது, ரவுடிகளை வைத்து மிரட்டுகிறது.

அதைச் சமாளிக்க முடியாமல் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு அந்த தாயும் தந்தையும் இயலாமையுடன் திரும்பும்போதுதான், இறந்த குழந்தை ஆவியாக ஒரு நல்லவன் உடம்பில் வருகிறது…. அதற்குப் பிறகு நடப்பது வழக்கமான சினிமா மசாலா.

இன்னும் கொஞ்சம் கவனமெடுத்து, ஆவி சம்பந்தப்பட்ட காட்சிகளை பக்குவமாகச் செய்திருக்கலாம். ஆனால் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டார் பா விஜய். அதுவே பெரிய வெற்றிதான், கல்விக் கொள்ளைக்காரர்கள் மலிந்த இன்றைய சூழலில்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *