BREAKING NEWS
Search

இறுதிப் போரில் 9,000 பேர் பலி – இது இலங்கை காட்டும் ‘கணக்கு’!

இறுதிப் போரில் 9,000 பேர் பலி – இது இலங்கை காட்டும் ‘கணக்கு’!


கொழும்பு: 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் சிங்களப் படைக்குமிடையே நடந்த இறுதிப் போரில் 9000 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இவர்களில் 7000 பேர் வரை ராணுவ மோதலில் இறந்தவர்கள் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் சாதாரண மக்கள் யாரும் போரில் பலியாகவில்லை என்று இத்தனை நாளும் கூறிவந்த இலங்கை, முதல்முறையாக, 9000 பேர் பலியாகியுள்ளதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தவிர்த்த, அப்பாவித் தமிழ் மக்கள் மட்டுமே 1 லட்சம் வரை கொல்லப்பட்டுவிட்டதாக மனித உரிமை அமைப்புகள், பல நாட்டு அரசியல் விமர்சகர்கள், சர்வதேச செய்தியாளர்கள் கூறிவரும் நிலையில், இலங்கை  அப்பட்டமான பொய்யை அரசு தரப்பு தகவலென அவிழ்த்துவிட்டுள்ளது.

இலங்கை மக்கள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அலுவலகத்தின் அலுவலர்கள் போர் நடந்த பகுதியில் உள்ள மக்களிடம் நேர்காணல் நடத்தி இந்த தகவல்களைச் சேகரித்து வெளியிட்டுள்ளதாகக் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதிப் போரின் சிங்களப் படைகளின் பெரும் தாக்குதல் நடந்த முல்லைத்தீவிலேயே இவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்திருப்பதாக அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் 2009 ஆண்டு  4,156 க்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாகவும் அவர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

போரின் போது இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்களா அல்லது விடுதலைப்புலிகளா அல்லது அவர்களது இறப்புக்கு யார் பொறுப்பு என்பது தெளிவாக அரசுத் தரப்பு குறிப்பிடவில்லை.

முதலில் தாம் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று கூறிவந்த இலங்கை அரசாங்கம், பின்னர் அண்மையில் ”சில பொதுமக்களை தமது தரப்பு கொன்றிருக்கலாம்” என்று ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நெருக்கடி முற்றிவிட்டதால், இந்த மிகக் குறைந்தபட்ச உண்மையை வெளியிட்டுள்ளது.

ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த குழுவின் அறிக்கையில்  40 000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற கூறப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கையோடு ஒப்பிட்டால்கூட, இலங்கை அரசு கூறியுள்ள தகவல் அப்பட்டமான பொய் என்பது தெரியவரும்.

ஐநா குழுவிலிருந்து சாவேந்திர சில்வா ஒதுக்கி வைப்பு

இதற்கிடையில், முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு  முக்கிய காரணமானவர்களில் ஒருவரான சாவேந்திர சில்வாயை ஐநா ஆலோசனைக் குழுவிலிருந்து விலக்கி வைத்துள்ளார் ஐநா மூத்த அதிகாரி லூயிஸ் ஃபிரச்செட்.

போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்படும் சாவேந்திர சில்வாவை குழுவில் அனுமதிக்க முடியாது என லூயிஸ் கூறியிருந்தார்.

இது தங்களை அவமானப்படுத்தும், சகிக்க முடியாத அராஜகம் என இலங்கை வர்ணித்துள்ளது.

-என்வழி செய்திகள்
2 thoughts on “இறுதிப் போரில் 9,000 பேர் பலி – இது இலங்கை காட்டும் ‘கணக்கு’!

  1. Kumar

    அப்ப தமிழனுக்கு பெரிய அப்பை நம்ம கலைஞர் வச்சுட்டார.இதுலயும் பொய் கணக்கு கட்ட அரம்பிசுடார?.கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்த மிக பெரிய வளர்ச்சியா இது?.

  2. குமரன்

    ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டதை எந்த நாளிலும் இந்த ராஜபக்ஷே அரசு ஒப்புக் கொள்ளாது.

    இன்றும் கூட ஒரு லட்சம் பேருக்கும் மேலானவர்கள் முடமாக இருக்கிறார்கள்.

    படுகொலை செய்து விட்டு பல்லைக் காட்டி படத்துக்கு போஸ் கொடுக்கும் ராஜ பக்ஷேயும் ஒரு நாள் நீதிக்குமுன் நிற்கவேண்டி வரும், தக்க தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். அவரும் நமது தமிழினத் தலைவர் போல 120 ஆண்டுகள் வாழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *