BREAKING NEWS
Search

தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது! – மாணவர்களுக்கு ரஜினியின் அறிவுரை

‘நானே கட்சி ஆரம்பித்தாலும் சேராதீங்க!’

சென்னை: தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழர்கள் வளர வேண்டும் அப்போதுதான் தமிழ் வளரும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்த ரஜினிகாந்த் பேசியது:

மனித ஜென்மத்தின் வசந்த காலம், மாணவர் பருவ காலம். அந்த சந்தோஷமான நாட்கள்தான், சோதனையான நாட்களும் கூட. உங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரம் அதில்தான் உள்ளது.

நான்கு ஆண்டு கஷ்டப்பட்டுப் படித்தால், 40 ஆண்டுகள் நன்றாக இருக்க முடியும். எனவே, படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கல்லுாரி படிக்கட்டில் ஏறும் போது, உங்கள் எதிர்காலம், பெற்றோரின் உழைப்பு, அவர்களின் சந்தோஷம், அவர்களின் எதிர்காலம் அனைத்தையும் சுமந்து, படியேறுவதை மறந்து விடாதீர்கள்.

அரசியல் குறித்து, தெரிந்து கொள்ளுங்கள்; ஆனால் படிக்கும்போது அரசியலில் ஈடுபடாதீர்கள். நான் கட்சி ஆரம்பித்தாலும், அரசியலில் ஈடுபடாதீர்கள். ஓட்டுப் போடுங்கள்; கவனத்தைச் சிதற விடாமல் படியுங்கள்.

நான் கர்நாடகாவில், கன்னடப் பள்ளியில் படித்தேன். அப்போது, 98 சதவீத மதிப்பெண் எடுத்தேன். பிரில்லியன்ட் ஸ்டூடன்டாக இருந்தேன். நன்றாகப் படித்ததால், உயர்நிலைக் கல்வி கற்க, ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தனர்.
அங்கு, அனைவரும் ஆங்கிலம் பேசினர். நான் தமிழில் படித்துவிட்டு சென்றதால், ஆங்கிலம் படிக்க சிரமப்பட்டேன். இதனால், 17 மதிப்பெண்கள் எடுத்தேன். முதல் பெஞ்சிலிருந்தவன், பின்னால் உள்ள பெஞ்சிற்கு வந்து விட்டேன்.

அதே போல், பல்கலைக் கழகத்தில் எத்தனையோ பேர், தமிழ் மீடியம் படித்துவிட்டு வந்திருப்பீர்கள். அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் இருக்கும். ஆங்கிலம் புரியாவிட்டால் கஷ்டமாக இருக்கும்.

பிற மொழியை தவறாகப் பேசினால் ரசிப்பர். ஆனால், ஆங்கிலத்தை தவறாகப் பேசினால் கிண்டலடிப்பர். மாணவர்களே, ஆங்கிலம் பேச, பேசத்தான் வரும். எனவே, நண்பர்களோடு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்; உங்கள் தொழிலுக்கு அது உதவும்.

இது, கம்ப்யூட்டர் உலகம். தமிழ் பேசினால் மட்டும், தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும்.
நவீன உலகில் ஆங்கிலம் கற்று, பிற மாநிலங்களுக்கு, நாடுகளுக்கு சென்று பெயர் வாங்கினால்தான், தமிழனுக்கு பெயர். சுந்தர் பிச்சையால் தமிழனுக்கு, தமிழுக்கு பெயர். அப்துல் கலாமால் தமிழனுக்கு, தமிழுக்குப் பெயர். காரணம், அவர்களுக்கு ஆங்கிலப் புலமை இருந்தது. அதனால், ஆங்கிலம் பேசப் பழகிக் கொள்ளுங்கள்.

உங்கள் துணைவியை சரியாக தேர்வு செய்கிறீர்களோ இல்லையோ, நண்பர்களை சரியாக தேர்வு செய்யுங்கள். அவர்கள்தான், உங்கள் வாழ்க்கையை திசை திருப்புவர்.

துரோணாச்சாரியார் ஒரு முறை, துரியோதனனை அழைத்து, ’30 நாட்கள் அவகாசம் தருகிறேன். எனக்கு, 10 நல்லவர்களை அழைத்து வா’ எனக் கேட்டுக் கொண்டார். துரியோதனன், ‘சரி குருதேவா’ எனக்கூறி சென்றான். பின், தர்மரை அழைத்து, ’10 கெட்டவர்களை அழைத்து வா’ என்றார்; அவரும் புறப்பட்டுச் சென்றார்.

துரோணாச்சாரியாரிடம், 30 நாட்கள் முடிந்து துரியோதனன் வெறும் கையோடு வந்தான். ‘ஒரு நல்லவன் கூட கிடைக்கவில்லை’ என்றான். தர்மர் வந்து, ‘ஒரு கெட்டவர் கூட கிடைக்கவில்லை’ என்றார்.

துரியோதனன் கெட்ட குணம் கொண்டவன். எனவே, பார்ப்பவர்கள் எல்லாம், அவருக்கு கெட்டவர்களாக தெரிந்தனர். தர்மன் நல்லவன்; அவர் பார்க்கும் போது அனைவரும் நல்லவர்களாகவே தெரிந்தனர். அதே போல், நீங்கள் நல்லவர்களாக இருந்தால், நல்ல குணம் உள்ள நண்பர்கள் கிடைப்பர்,” என்றார்.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *