BREAKING NEWS
Search

விண்ணில் முதல் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்!

விண்ணில் முதல் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்!

சின்சின்னாட்டி: நிலவில் காலெடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 82.

பவுர்ணமி, அமாவாசை, பாட்டி வடை சுடும் கதைகளுக்காக மட்டுமே அறியப்பட்டு வந்த நிலவில், மனிதன் வசிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியை அமெரிக்கா மேற்கொண்டது. அந்தக் கேள்விக்கான பதிலையும் கண்டது. அதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த சந்திரனில் முதல் முறையாக காலெடுத்து வைத்து ஒட்டுமொத்த மனித குலத்தையும் சிலிர்க்க வைத்தார் ஆம்ஸ்டிராங்.

நீல் ஆம்ஸ்டிராங் 1930ம் ஆண்டு ஆக்ஸட் மாதம் 5ம் தேதி அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் உள்ள வாபாகோனேட்டா என்ற இடத்தில் ஸ்டீபன் கோனிக் ஆம்ஸ்டிராங் மற்றும் வயோலா லூயிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.

ஆம்ஸ்டிராங் தனது 15வது வயதில் ஓட்டுநர் உரிமம் பெறும் முன்பே விமானத்தை இயக்கும் சான்றிதழ் பெற்றார். இதையடுத்து 1947ம் ஆண்டு அவர் பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படித்தார். அதன் பிறகு தனது 30வது வயதில் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சி விமானியாக சேர்ந்தார்.

அப்போது நாசாவில் நிலவுக்கு விண்கலம் அனுப்புவது குறித்த ஆலோசனைகள் நடந்து வந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான் அப்பல்லோ 11 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப உருவாக்கினர். அதில் செல்ல நீல் ஆம்ஸ்டிராங்கும், எட்வின் பஸ் ஆல்டரினும் தேர்வு செய்யப்பட்டனர்.

1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்பல்லோ விண்கலம் நிலவில் இறங்கியது. அந்த விண்கலத்தில் இருந்து ஆம்ஸ்டிராங்தான் முதல் ஆளாக இறங்கி நிலவில் கால் வைத்தார். அதன் மூலம் நிலவில் கால் வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை அவர் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஆல்ட்ரின் காலடி எடுத்து வைத்தார்.

அவர்கள் இருவரும் சுமார் 3 மணிநேரம் நிலவில் நடந்தனர். ஆராய்ச்சிக்காக மாதிரிகள் சேகரித்ததுடன், பல புகைப்படங்கள் எடுத்தனர். தங்களின் சாதனையை நினைவு கூறும் வகையில் நிலவில் அமெரிக்க கொடியை நட்டு வைத்தார் ஆம்ஸ்டிராங்.

அவர்கள் நிலவில் நடந்த காட்சியை சுமார் 600 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் லைவாகக் கண்டு வியந்தனர். தொலைக்காட்சி இல்லாதவர்கள் ரேடியோவில் அந்த செய்தியைக் கேட்டு மகிழ்ந்தனர்.

நிலவில் இருந்து பூமி திரும்பிய ஆம்ஸ்டிராங் உலக ஹீரோவானார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தனது சொந்த ஊருக்கு சென்றபோது அங்கு அவரைப் பார்க்க 50,000 பேர் கூடியிருந்தனர். அவரது சொந்த ஊரில் மொத்தம் 9,000 பேர் தான் வசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1970ம் ஆண்டு ஆம்ஸ்டிராங் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஏரோனாட்டிக்ஸ் பிரிவில் துணை கூடுதல் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு சின்சின்னாட்டி பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் பாடம் கற்பிக்க சென்றுவிட்டார்.

அந்த பல்கலைக்கழகத்தில் அவர் 9 ஆண்டுகள் பணியாற்றினார். சாதித்த நிறைவு கிடைத்ததும், அவர் லெபனான் அருகே 310 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பண்ணையை வாங்கி சோளம் பயிரிட்டதுடன், ஆடுகளை வளர்த்தார். கேமராவின் ப்ளாஷ் மழையிலிருந்து இருந்து ஒதுங்கியே வாழ்ந்தார்.

தான் நிலவில் நடப்பேன் என்று ஒரு நாளும் கனவு கண்டதில்லை என்று அவர் தெரிவித்தார். 1982ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை பிசினஸ் விமானங்களுக்கு கம்ப்யூட்டர் தகவல் மேலாண்மை அமைப்புகள் வழங்கிய நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அதன் பிறகு நியூ யார்க்கில் உள்ள ஏஐஎல் சிஸ்டம்ஸ் என்ற கம்பெனியின் தலைவரானார்.

அவரது மனைவி ஜேனட் 38 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த பிறகு அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு ஆம்ஸ்டிராங் 1999ம் ஆண்டு கரோல் நைட் என்பவரை மணந்தார். ஜேனட் மூலம் ஆம்ஸ்டிராங்கிற்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5ம் தேதி தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவருக்கு அடுத்த 2 நாட்களில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அதிலிருந்து அவரால் தேற முடியவில்லை.

கடந்த 1969ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை 12 அமெரிக்கர்கள் நிலவுக்கு சென்று வந்துள்ளனர். ஆனால் அவர்களில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆம்ஸ்டிராங் மட்டுமே.

நிலவில் காலடி வைத்ததும் நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்ன முதல் வார்த்தை.. ‘என்னுடைய சிறிய காலடி, மனித குலத்துக்கே மிகப் பெரிய உயர்வாகும் (one giant leap for mankind)!

-என்வழி செய்திகள்
2 thoughts on “விண்ணில் முதல் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்!

  1. EZ (Easy) Editorial Calendar

    வருத்தாமான செய்தி

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *