BREAKING NEWS
Search

‘கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் இத்தனை நாள் எங்கே போனார்கள்?’ – ஒரு கேள்வியும் பதிலும்!

‘கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் இத்தனை நாள் எங்கே போனார்கள்?’ – அபத்தக் கேள்விக்கு ஆதாரத்துடன் ஒரு பதில்!


கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் இத்தனை நாட்களாக எங்கே போயிருந்தார்கள்? இந்தக் கேள்வியைத்தான் நிறைய பேர் விவரம் தெரியாமல்… அல்லது தெரிந்திருந்தாலும் தெரியாத மாதிரி நடித்தபடி கேட்கிறார்கள்.

ஏற்கெனவே என்வழி வெளியிட்ட கட்டுரைகளில் இதற்கான விவரங்களைத் தந்திருக்கிறோம்.

எப்போது கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதோ, அப்போது முதலே கடுமையான எதிர்ப்புப் போராட்டங்கள் தொடங்கிவிட்டன.  பாராளுமன்றத்தில் அன்றைய திமுக எம்பியான வைகோ மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளார் (அதே திமுக இன்றைக்கு கூடங்குளம் திட்டத்தை ஆதரிப்பது காலக் கொடுமை!).

அவ்வளவு ஏன், கூடங்குளம் திட்டத்துக்கு நெல்லை, குமரி மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்பைப் பார்த்த பிறகு, அணுமின் நிலையத்துக்கான தொடக்க விழாவையே அன்றைக்கு ரத்து செய்திருக்கிறார்கள்.

மீடியாவிலும் தொடர்ந்து கூடங்குள எதிர்ப்புச் செய்திகள் பதிவு செய்யப்பட்டே வந்துள்ளன. 1988 நவம்பரில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனவே 1998-க்குப் பிறகு தொடர்ச்சியாக அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வந்துள்ளன.

இப்போது சர்ச்சைக்குரியவராகப் பார்க்கப்படும் உதயகுமார், ஆரம்ப நாட்களிலிருந்தே இந்த அணு உலையை எதிர்த்து போராடி வருகிறார், உள்ளூர் மக்களின் அமோக ஆதரவுடன். ஏதோ கடந்த ஆண்டுதான் அவர் போராட ஆரம்பித்ததாகக் கூறுவதும், அவர் வெளிநாட்டிலிருந்து வந்து குதித்தவராகச் சித்தரிக்கப்படுவதும் மிகத் தவறான வாதங்கள். அரசின் கையாலாகத்தனத்துக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

உதயகுமார் ஒரு பிஎச்டி பட்டதாரி. அமெரிக்காவில் 12 ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறார். ஒரு என்ஜிஓ நடத்துகிறார். குமரி மாவட்டத்தில் பள்ளிகள் நடத்துகிறார். இவற்றுக்கு அவர் நிதியுதவி பெறுவதில் முறைகேடு நடந்திருந்தால் அதை ஆதாரப்பூர்வமாகக் காட்டி நடவடிக்கை எடுக்கலாமே…

உதயகுமார் மீதான விமர்சனங்கள் எப்படி அணுஉலைக்கு சாதகமாகிவிடும்? உதயகுமார் நல்லவரா கெட்டவரா என்பதா விவாதம்…? தலைமுறைகளைக் கொல்லும் அணுஉலை வேண்டாம் என்பதுதானே இங்கு முக்கியம்!

ஹஸாரே கும்பல் மோசடிப் பேர்வழிகள் என்பதற்காக ஊழலை போஷாக்குடன் வளர்க்கலாம் என்று சொல்வதும், உதயகுமார் தவறானவர் அதனால் அணுஉலை இருந்துவிட்டுப் போகட்டும் என்பதும் இரண்டும் ஒன்றுதான்!

நம்மைப் பொறுத்த வரை தவறான மனிதர்களும் வேண்டாம். மக்கள் விரோத திட்டங்களும் வேண்டாம்.

‘இன்றைக்கு 13000 கோடி முதலீடு செய்தாகிவிட்டது. எனவே உடனே திறந்தாக வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டம்,’ என்று புலம்புவதில் அர்த்தமில்லை. அணு உலையை தொடர்ந்து அப்படியே வைத்திருந்தாலும் ஆபத்து என்று பயமுறுத்த ஆரம்பித்துள்ளனர். பெரும் வன்முறைகளை நிகழ்த்தியாவது ஆகஸ்ட் மாதம் திறந்துவிடுவோம் என்று பகிரங்கமாகவே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த அணுஉலை இருந்தாலும் ஆபத்து, மூடப்பட்டாலும் ஆபத்து என்றால், எத்தகைய ஒரு மோசடி இது?

மக்களைக் கொன்றுவிட்டு, யாருக்காக இந்த அணுஉலை திறக்கப் போகிறார்கள்?

இந்தப் போராட்டங்களைப் பார்த்த பிறகு, ரஷ்ய மீடியா எழுதியுள்ளதைப் பாருங்கள்: “Until recently, some may have still wondered whether the tradition of civil disobedience – the force of non-violent resistance that fuelled Mahatma Gandhi’s historic campaign as he led his country to independence – was still alive in India. The People’s Movement Against Nuclear Energy not only answered that question, but also laid a first brick in the road that will take India toward a safe and environmentally clean future” – Vladimir Slivyak

அர்த்தம்: “இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தர மகாத்மா காந்தி பிரயோகித்த ஆயுதமான ஒத்துழையாமை அகிம்சை இயக்கம் இன்னும் உயிரோடு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்த இயக்கம் உயிர்ப்புடன் இருப்பது மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய, சுத்தமான எதிர்காலத்துக்கான முதல் செங்கல்லை அந்த மக்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மூலம்” என்று எழுதியுள்ளார் விளாடிமிர் ஸ்லிவ்யாக் என்ற எழுத்தாளர்.

ஜப்பானின் புகுஷிமாவில் நடந்ததைப் போல ஒரு சுனாமி கூடங்குளம் கடற்கரையைத் தாக்கினால், நிச்சயம் அணுஉலைகள் பாதிக்கும் என்றும் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள இந்த கட்டுரையாளர், “மக்களின் இந்த எதிர்ப்புகள் நியாயமானவை. ஆனால் வழக்கம்போல அயல்நாட்டு சதி என்ற சப்பைக் காரணத்தை பெரிதாக ஊதுமாறு இந்தியாவுக்கு கற்றுத்தரப் போகிறது ரஷ்யா,” என்றும் கூறப்பட்டுள்ளது. கட்டுரை வெளியானது கடந்த அக்டோபர் 2011-ல். நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்தக் கட்டுரையாளர் சொன்னது அப்படியே நடப்பதைக் கவனியுங்கள். கட்டுரையை முழுமையாகப் படிக்க.

அணுஉலைகளுக்கு எதிரான பல்வேறு விஷயங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது இந்தக் கட்டுரை வெளியாகியுள்ள இணையதளமான பெல்லோனா. ரஷ்யாவில் எத்தனை அணுஉலைகள் மகா ஆபத்தில் உள்ளன என்பதையெல்லாம் இங்கே போய் பார்த்துக் கொள்ளலாம் அணுஉலை ஆதரவாளர்கள்!

கூடங்குளத்திலிருந்து தமிழகத்துக்கு கிடைக்கவிருக்கும் 500 மெவா மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்கி, தொழிற்சாலைகளுக்கு மட்டும் அதிக விலைக்குத் தரலாமே அரசு! அடுத்த மூன்றாண்டுகளுக்குள் உற்பத்தியைத் தொடங்குவதற்கேற்ற புதிய மின்னுற்பத்தி தொழிற்சாலைகளுக்கு இப்போதே திட்டமிடலாமே…

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்குள்ள பல மின் உற்பத்தி நிலையங்களை திட்டமிட்டு ஆரம்பித்தது திமுக அரசுதான். இதில் ஜெயலலிதாவின் அதிமுக பெரிதாக சொல்லிக் கொள்ளக் கூட எதுவும் இல்லை. அடுத்த இரண்டாண்டுகளில் உற்பத்தியைத் தொடங்கவுள்ள மூன்று மின் உற்பத்தி நிலையங்களைக் கூட திமுக அரசுதான் போட்டது.

இந்த முறைதான் உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தை அறிவித்துள்ளார் ஜெயலலிதா (இதுவும் திமுக அரசு ஆரம்பித்து, குழப்பியடித்து நின்ற திட்டம்தான். உடன்குடி மின் நிலையத்தை மாநில அரசே செயல்படுத்தலாம் என்ற அதிகாரிகள் பரிந்துரை திமுக ஆட்சியின்போதே தரப்பட்டுவிட்டது. அதை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. அதையே தூசு தட்டி ஜெ படித்திருக்கிறார்!).

இதுபோன்ற இன்னும் இரு அனல் மின் நிலையங்களையும், சூரிய மின் உற்பத்தி நிலையங்களையும் கொஞ்சம் சிரத்தையெடுத்து செயல்படுத்த ஆரம்பித்தாலே, இப்போதுள்ள மின் பற்றாக்குறை நீங்கிவிடும் என மின்பொறியியல் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளதை ஜெயலலிதா தீவிரமாக நடைமுறைப்படுத்தலாமே..

இந்த நெருக்கடிக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை பொறுப்பாளியாக்குவது சிறுபிள்ளைத்தனம். மக்களின் பல்லாண்டு கால தொடர் போராட்டங்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத மத்திய மாநில அரசுகளே இதன் பொறுப்பாளிகள். கூடங்குளம் அணுஉலை மூடப்பட்டால் அதற்காக செய்யப்பட்ட செலவான ரூ 13000 கோடியை, மக்களைக் காக்க அரசுகள் தாங்கியே தீர வேண்டும்.

இந்திய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க, அடுத்து வரும் சந்ததிகளைக் காக்க நடத்தும் போராட்டத்தை ரஷ்யா தூதர்களும் அமைச்சர்களும் கண்டிப்பது எத்தனை பெரிய கேவலம்… ‘அதானே… நல்லா திட்டுங்க’ என்ற ரீதியில் அதை கைதட்டி வேடிக்கைப் பார்க்கும் இந்திய அரசின் லட்சணத்தை எங்குபோய் சொல்ல!

– விதுரன்
12 thoughts on “‘கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் இத்தனை நாள் எங்கே போனார்கள்?’ – ஒரு கேள்வியும் பதிலும்!

 1. தினகர்

  “உடன்குடி மின் நிலையத்தை மாநில அரசே செயல்படுத்தலாம் என்ற அதிகாரிகள் பரிந்துரை திமுக ஆட்சியின்போதே தரப்பட்டுவிட்டது. அதை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. அதையே தூசு தட்டி ஜெ படித்திருக்கிறார்!). ”

  தூசு தட்டி அல்ல, முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்ட திட்டத்தைதான் படித்திருக்கிறார்

  திமுக ஆட்சியின் போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, பூர்வாங்க பணிகளும், நில ஆர்ஜிதமும் கலைஞர் அரசால செய்யப்பட்டுவிட்டது.. அனல் மின் நிலையம் வருவதால், திருச்செந்தூர் முதல் உடன்குடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும்( பிரிட்டீஷ் காலத்தில் இந்த இரு ஊர்களுக்கு இடையே ரயில் போக்கு வரத்து இருந்தது) என்ற கோரிக்கையும் உடனேயே பொது மக்களால் வைக்க்ப்பட்டது/

 2. தினகர்

  கூடங்குளம் அணுஉலை மூடப்பட்டால் அதற்காக செய்யப்பட்ட செலவான ரூ 13000 கோடியை, மக்களைக் காக்க அரசுகள் தாங்கியே தீர வேண்டும்.

  இன்றைய பொருளாதார சூழலில் மத்திய அரசுக்கு இது ஒரு பெரிய தொகை அல்ல. அப்படியே நிறைவேற்றித்தான் ஆக வேண்டும் என்றால் ஆள் நடமாட்டம் இல்லாத சஹாரா பாலைவனத்திற்கு இடம் பெயர்க்கட்டுமே.

 3. senthil

  யாரும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள்..அரசியல் வியாதிகள் .. அணு கழிவு பற்றிய தெளிவான ஒரு பார்வையை தர மறுக்கிறார்கள். சுனாமி பற்றி பேசியே எதிர்ப்பின் வலு குறைந்து போகிறது. உண்மையில் அணு கழிவு பராமரிப்பது எப்படி எத்துனை ஆண்டுகள் கழித்து அதன் வீச்சம் குறையும் . குறைந்தது 300 அடி ஆழத்தில் வைக்க வேண்டுமா?? எங்கு வைப்பார்கள்?? பல கேள்விகளை சுனாமி வராது வந்தாலும் பாதிக்காது, நல்ல கட்டுமானம் இப்படி பூ சுற்றுகிறார்கள். மக்களும் எப்போயோ வர போற சுனாமிய நினைச்சு இப்ப நிறுத்த கூடாதுன்னு வெகு ஜன ஆதரவின்றி , மானில அளவி. நடை பெற வேண்டியது குறுகிய போராட்டமாய்!!! வாழ்க எம் மக்கள்!!!

 4. R.Ramarajan-Madurai

  Nuclear power essential for India to become super power nation. All scientist explain the safety about it . But blindly oppose it like hasare issue. Some religion people bought bribe from usa and behind this activity.
  Govt may consider to encounter Udhayakumar.
  Still 8hours powercut in total Tamilnadu. Chennai people not no this. Start the power plant soon.

 5. மிஸ்டர் பாவலன்

  உதயகுமாரின் கூட்டாளி ஒருவர், ஜெர்மானியர்,
  நாகர்கோயில் லாட்ஜ் ஒன்றில் பிடிபட்டு, ஆவணங்கள்
  கைபற்றப்பட்டு, உடனே நாடு கடத்தப்பட்டுள்ளார்.
  இது ஆரம்பம். மத்திய அரசின் வழிக்கு உதயகுமார்
  வரவில்லை என்றால் கிடைத்த ஆவணங்களை வைத்து
  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படலாம்
  என நடுநிலையாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

  -==== மிஸ்டர் பாவலன் ===

 6. மிஸ்டர் பாவலன்

  -== செய்தியும், கருத்தும் ====-

  கூடங்குளம் அணுஉலை தொடர்பாக, டாக்டர் இனியன்
  தலைமையிலான மாநில அரசின் வல்லுனர் குழுவின்
  அறிக்கை, முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.
  (செய்தி)

  மின்வெட்டு பற்றி மாநிலம் முழுவதும் பெரும் அதிருப்தி
  நிலவி வருகிறது. மக்கள் மனம் மாற புரட்சித்தலைவிக்கு
  ஒரு நல்ல சந்தர்ப்பதம் இது. இனியன் “Safety norms are OK”
  என்ற இனிய செய்தியை வழங்கியிருப்பார். இனியும்
  தாமதிக்காமல் power share பற்றி மத்திய அரசிடம் பேசி
  உடனடி ஒத்துழைப்பைத் தமிழக அரசு வழங்க வேண்டும்.
  “பிரதமரை எதிர்க்கத் துணிந்த உதயகுமார் புரட்சித்தலைவியை
  எதிர்த்து போரிடத் துணிவாரா?” என்றால் – ஜெர்மனியர்
  ஓடியது போல உதயகுமாரும் அமெரிக்காவுக்கு உடனடியாக
  ஓடி விடுவார் எனத் தான் தோன்றுகிறது.

  -=== மிஸ்டர் பாவலன் ===

 7. Anand

  //நெல்லை, குமரி மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்பைப் பார்த்த பிறகு

  குமரி மாவட்ட மக்களின் எதிர்ப்பு எதற்க்காக என்று தெரியுமா..? பேச்சிபாறை அணையில் இருந்து கூடங்குளம் அணுஉலைக்கு தண்ணீர் கொண்டு செல்ல கூடாது என்பதற்காக… சும்மா கதை எழுதாதிங்க…. சென்ற வாரம் என் சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்திற்கு சென்று வந்தேன்… நீங்கள் சொல்லுவது மாதிரி ஒரு எதிர்ப்பும் கிடையாது… மீனவர் கிராமங்களில் கூட எதிர்ப்பு இல்லை என்பது தான் உண்மை… கொஞ்சம் சென்னையில் இருந்து கதை எழுதுதற விட்டுவிட்டு குமரி மாவட்டம் வந்து பாருங்க …

 8. M Senthil

  Nuclear power essential for India to become super power nation. All scientist explain the safety about it . But blindly oppose it

  Congress Govt failed to explain the real fact about nuclear power to the people.

  I think, this issue could be cloverly handled by BJP people if they were in power.

 9. Manoharan

  கருணாநிதிக்கு எதையும் ஆரம்பிக்கத்தான் தெரியும் …முடிக்க தெரியாது. அரைவேக்காட்டுடன் விட்டு விடுவார். ஆனால் ஜெ காரியத்தை முடிப்பவர். உடன்குடி அனல் மின் நிலையம் முடிக்கப்பட்டு மொத்த உற்பத்தியும் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் . அப்போது பேசுவோம் ஜெவை பற்றி.

 10. ஜெயன்

  திமுக வினரை கைது செய்த காவல் துறை தற்போது நடராஜன்,இராவணன் மற்றும் பலரை கைது செய்கிறது. இதுதான் இன்றைய முதல்வரின் முதல் வேலை. மற்ற எந்த பிரச்சனைக்கும் இப்போது எந்த முடிவும் தேவை இல்லை என்பது முதல்வரின் எண்ணமாக இருக்கும் என தெரிகிறது.

 11. மிஸ்டர் பாவலன்

  ///ஆனால் ஜெ காரியத்தை முடிப்பவர். உடன்குடி
  அனல் மின் நிலையம் முடிக்கப்பட்டு மொத்த உற்பத்தியும்
  தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் . அப்போது பேசுவோம்
  ஜெவை பற்றி.////

  உங்கள் வாக்கு பலிக்கட்டும் !!! மிக்க நன்றி!!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *