BREAKING NEWS
Search

சிவாஜி சிலையை அகற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.. வேறு இடத்தில் வைக்கத்தானே போகிறார்கள்?

சிவாஜி சிலையை அகற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.. வேறு இடத்தில் வைக்கத்தானே போகிறார்கள்?

ijhabbjb

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி மெரினாவை ஒட்டிய காமராஜர் சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அளித்துள்ள தனது பதிலில் தமிழக அரசு சம்மதம் தெரிவித்த செய்தி வெளியான 24 மணி நேரம் வரை ஒருவரும் வாய் திறக்கவில்லை.

பின்னர் சில கட்சித் தலைவர்கள் பேச ஆரம்பித்தார்கள். வைகோ போன்றவர்கள் கூட நிஜம் புரியாமல் தேவையில்லாமல் முழங்கினார்.

தொடர்ந்து சில சிவாஜி ரசிகர்கள். இவர்கள் எல்லாம் சிவாஜியின் அன்னை இல்லத்தில் போய், சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று போராட்டம் நடத்தலாம் என பிரபு மற்றும் ராம்குமாரிடம் முறையிட்டபோது, ‘வேலையப் பார்த்துட்டு போங்கப்பா.. நீங்க பாட்டுக்கு ஏதாவது செய்யப் போய் நாங்கள்தான் பிரச்சினைக்கு உள்ளாவோம்… அதான் வேற இடத்தில வைக்கிறதா சொல்றாங்களே,’ என்றுதான் பதில் சொன்னார்களாம்.

இந்த புரிதல் அரசியல்வாதிகளுக்கோ, சினிமாக்காரர்களுக்கோ இல்லாததுதான் காமெடி காட்சிகள் அரங்கேறக் காரணமாகியுள்ளன.

பிரச்சினை என்னவென்றே விளங்கிக் கொள்ளாத பாஜகவினர், சிவாஜி சிலையை அகற்றினால், தமிழத்தில் உள்ள அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டும் என பினாத்தியுள்ளனர்.

இதற்கு முன்பு கத்திப்பாரா மேம்பாலத்துக்காக நேரு சிலை அங்கே இங்கே என மாற்றப்பட்டு, இப்போது யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் இருப்பதை ஏனோ இவர்கள் மறந்துவிட்டார்கள். அந்த நேரத்தில் ஒருவரும் இந்த சிலைக்காக குறைந்தபட்சம் குரல் கொடுக்கக் கூட முன்வரவில்லை!

அரசு ஒன்றும் இந்த சிலையை தூக்கி மியூசியத்தில் வைக்கவோ, கடலில் வீசவோ சொல்லவில்லை. சிறிதும் பெரிதுமாக 20 விபத்துக்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது இந்த சிலை. இப்போதும் காரில் பயணிப்பவர்களுக்கு ஒரு பக்கத்தை முழுமையாக மறைக்கிறது. இந்த சிலையை யாருக்கும் தொந்தரவில்லாத ஒரு இடத்தில், அதுவும் அதே கடற்கரையில் வைப்பதாகத்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதில் கோபப்படவோ, போராட்டம் நடத்தவோ என்ன இருக்கிறது… சிவாஜி என்ற அற்புதமான கலைஞர், வெறும் இந்த சிலையின் இருப்பிட மாற்றத்தால் மதிப்பிழந்து போகக் கூடியவரா என்ன? அதுவும் சிவாஜியின் பெருமதிப்புக்குரிய காமராஜர் சிலை அருகில்தானே வைக்கப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது சிவாஜிக்கு எப்பேர்ப்பட்ட பெருமை!

சிவாஜி குடும்பம் அமைதி காப்பதன் பின்னணி வேறு. அதைக் கூட சினிமாக்காரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த விஷயத்தில் தலையிட்டுள்ள முன்னாள் முதல்வரும், இந்த சிலையை வைத்தவருமான கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள் தேவையற்றவை.

சிலை திறக்கப்பட்டபோது இந்த போலீசார் எந்த நாட்டில் வேலைப் பார்த்தனர் என்று கேட்டுள்ளார். அவர்கள் இந்த நாட்டில்தான் இருந்தனர். ஆனால் என்றைக்கு அவர்களை சுயமாக இயங்கவிட்டிருக்கிறீர்கள்… அன்று முதல்வராக இருந்த கருணாநிதி சொன்னதைச் செய்தார்கள். இத்தனைக்கும் அன்றைக்கே இந்த சிலைக்கு எதிர்ப்பு எழுந்தது. அதை சீர்தூக்கிப் பார்த்து, யாருக்கும் தொந்தரவில்லாத ஒரு இடத்தில் சிவாஜி சிலையை வைக்கத் தவறியவர் கருணாநிதிதான்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது தெரிந்தும், இந்த சிலையால் யாருக்கும் தொந்தரவில்லை என்று கூறி திறந்து வைத்தது இவர்தானே. இதோ, அதன் பிறகு 20 விபத்துகளை போலீஸ் பதிவு செய்துள்ளது. போலீஸ் துறைக்கு பொறுப்பாளரான கருணாநிதி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?

சிவாஜி சிலை என்றல்ல… போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துக்களை உருவாக்குபவையாகவும் உள்ள எந்த சிலையும் அகற்றப்படலாம். தவறே இல்லை. வேறு இடம் தேடி வைப்பது அரசின் பெருந்தன்மை.. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

-என்வழி ஸ்பெஷல்
3 thoughts on “சிவாஜி சிலையை அகற்றுவதில் எந்தத் தவறும் இல்லை.. வேறு இடத்தில் வைக்கத்தானே போகிறார்கள்?

 1. மிஸ்டர் பாவலன்

  ////சிவாஜி சிலை என்றல்ல… போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துக்களை உருவாக்குபவையாகவும் உள்ள எந்த சிலையும் அகற்றப்படலாம். தவறே இல்லை. வேறு இடம் தேடி வைப்பது அரசின் பெருந்தன்மை.. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்!/// (-என்வழி ஸ்பெஷல்)

  சிவாஜி ஒரு மாபெரும் கலைஞன். அதனால் சிலர் உணர்ச்சிவசப் படுத்தல்
  மனித இயல்பு. கலைஞர் அரசியல் ஆக்குவது அவரது இயல்பு.

  தனது சிலையால் விபத்துக்கள் நேரிடுவதை மனித நேயம் உள்ள
  சிவாஜி ஒரு நாளும் விரும்ப மாட்டார். ஒரு நல்ல இடத்தில், பீச்சில்,
  சிலையை இடம் மாற்றி வைத்து, அவருக்கு உரிய மரியாதையை,
  முதல் மரியாதையை (!), நாம் வழங்குவோம்.. நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 2. கிரி

  வினோ ரொம்ப சரியா எழுதி இருக்கீங்க..

  முதலில் எவருக்கும் சிலை வைக்க வேண்டும் என்பதையே தடை செய்ய வேண்டும். போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்பது மட்டுமல்ல, இது போல தேவையற்ற பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.

  இந்த சிலை இங்கு வைத்த போதே பலரும் போக்குவரத்து பிரச்சனை வரும் என்று கூறினார்கள் ஆனால், யார் காதில் வாங்குகிறார்கள். அப்போதையே சிலரின் திருப்தியே அரசியல்வாதிகளுக்கு முக்கியமாக இருக்கிறது.

  எப்படியோ.. இது போல தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு முடிவு என்பதே இல்லை. இன்னொரு சிலைக்கும் இது போல நீங்கள் எழுதுவீர்கள்.. நாங்களும் புலம்பி கருத்து கூறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *