BREAKING NEWS
Search

இந்தக் கொடூரம் இனி எந்தத் தளிருக்கும் நேரக் கூடாது!

சிறுமி ஸ்ருதியின் கொடூர மரணம்: இந்தக் கொடூரம் இனி எந்தத் தளிருக்கும் நேரக் கூடாது!

னியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய அவசியம் குறித்துப் பலமுறை நாம் வலியுறுத்தியுள்ளோம். இதோ, அரசின் அலட்சியம் இன்னொரு பிஞ்சின் உயிரைப் பறித்திருக்கிறது.

தாம்பரம் முடிச்சூரில் உள்ள ஜியோன் மெட்ரிகுலேசன் பள்ளியின் டப்பா பஸ் ஒன்றில், புதன்கிழமை மாலை பயணித்த 2ம் வகுப்பு ஸ்ருதி, அந்தப் பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து கொடூரமாக உயிரிழந்தாள். எதிரிக்கு மட்டுமல்ல, கொடிய தீவிரவாதிக்கும் கூட வரக்கூடாது என்று சொல்ல வைக்கும் மிகக் கோரமான மரணம் அது!

மனதளவில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள துர்மரணம் இது. இந்தப் பள்ளிக்கு சென்னையின் மிகப் பெரிய பள்ளிகளுள் ஒன்று என்ற ‘பெருமை’ வேறு!

பலியான அந்த சிறுமியின் தந்தையுடைய பின்னணி கல் மனதையும் கண்ணீரி்ல் நனைய வைக்கிறது. பிள்ளைகளை தனது ஆட்டோவில் அழைத்துப் போய் பள்ளிகளில் விடுவதுதான் இவரது வேலை. அந்த வருமானத்தில் தன் பிள்ளையை இந்த தனியார் பள்ளியில் சேர்த்து, பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்திருக்கிறார். மகளுக்கு இப்படி விபத்து நேர்ந்துவிட்டது என்பது தெரிந்த போதுகூட, தன் ஆட்டோவிலிருந்த மழலைகளை வீடுகளில் சேர்த்த பிறகே மகளைப் பார்க்க வந்திருக்கிறார்.

ஊரார் பிள்ளையையெல்லாம் பத்திரமாகச் சேர்த்துவிட்டு, பேருந்தில் அடிபட்டு கிழிந்து உயிரிழந்த சடலமாக அந்த செல்ல மகளைப் பார்த்த மனசு எத்தனை வேதனைப்பட்டிருக்கும்?

இந்த விபத்துக்கு இருவர்தான் மிக முக்கிய காரணம். பேருந்து மகா கேவலமான நிலையிலிருப்பது தெரிந்தும், லஞ்சம் கொடுத்து எப்சி வாங்கி ஓட்டிய பள்ளி நிர்வாகமும், அதற்கு அனுமதி தந்த வட்டார போக்குவரத்து அலுவலகமும்தான்.

நடந்த சம்பவத்தின் கொடூரத் தன்மையை உணர்ந்து பதறிய சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்து, கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தனியார் பள்ளியின் பேருந்து லட்சணம்… இந்த ஓட்டை வழியாகத்தான் அந்தக் குழந்தை விழுந்திருக்கிறாள்!

இந்த விவகாரத்தை அடுத்த நாளே கையிலெடுத்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், “20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்சி அளித்தார்கள். யார் இதைக் கொடுத்தது… இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும்?” என்று கோபமாக உத்தரவிட்டார்.

நீதிமன்றமே இப்படி நேரடியாக தலையிட்ட பின்னரும் கூட, சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனியார் பள்ளி நிர்வாகிகள் நால்வர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு தவறு நடந்ததும், அந்த தவறுக்குக் காரணமானவர்கள் மீது தண்டனை, இனி ஒருபோதும் அப்படி நடக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்வது ஒன்றுதான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும். ஆனால் இங்கே, தவறை ஒப்புக் கொள்வதே பெரிய கவுரவக் குறைச்சலாகிவிடுகிறது மாநில அரசுகளுக்கு. முடிந்த வரை அவற்றை மூடி மறைத்து, மீண்டும் மீண்டும் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறவே வழி செய்கின்றனர்.

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, வாகன வசதி என்பது பிள்ளைப் பிடிக்கும் ஒரு உபாயமாக ஆரம்பிக்கப்பட்டு, இப்போது பணம் அள்ளும் வழியாகக் கையாளப்படுகிறது. நான்கு தெருக்கள் தள்ளி உள்ள பள்ளிகளுக்கும் வேனில் அனுப்புங்கள் என்று பள்ளி நிர்வாகங்கள் சொல்வதும், அதற்கு கிஞ்சித்தும் கூச்சமின்றி பெற்றோர் ஒப்புக் கொள்வதும் நடக்கிறது.

தலைவாரிப் பூச்சூடி பள்ளிக்குப் போன செல்ல மகள்…

கிழிந்த தகர டப்பாக்கள் உருண்டு செல்வதைப் போன்ற மோசமான பேருந்து அல்லது வேனில் பல நூறு குழந்தைகளைத் திணித்துப் போய் பள்ளிகளுக்குக் கொண்டுபோய், மீண்டும் மாலையில் வீட்டில் போய் தள்ளி விடும் மட்டமான பொதி வண்டிகளாகவே பல பள்ளிகளின் வாகனங்கள் காட்சியளிக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை, அரசின் போக்குவரத்துக் கழகங்களால் அடாசு வண்டிகள் என ஒதுக்கப்பட்டவை. அவற்றை ஏலத்தில் எடுத்து, பெயின்ட் அடித்து சொகுசு வாகனங்கள் என கறுப்புக் கண்ணாடி மாட்டி அனுப்பி வைக்கின்றனர் தனியார் பள்ளி / கல்லூரிகள்.

இவற்றை எப்சி பண்ணும்போது, கண்டு கொள்ளாமல் இருக்க கத்தை கத்தையாக பணம் கைமாறுகிறது ஆர்டிஓ அலுவலகங்களில்.

இந்த நச்சுச் சுழலை களைய வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவே பல விதங்களிலும் செயல்படுவதால், மழலைகளின் உயிர்கள் பறிக்கப்படும்போது பதறுவதும், நான்கைந்து நாளில் மீண்டும் அதே வாகனங்களில் இந்த இளம் தளிர்களைத் திணிப்பதும் தொடர்கிறது.

ஸ்ருதியின் மரணமாவது இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

தனியார் பள்ளிகளில் சேர்க்கும் ஆர்வத்தை பக்கத்திலேயே உள்ள அரசுப் பள்ளிகள் பக்கம் திருப்புவார்களா? அப்படித் திரும்பினால், அரசுப் பள்ளிகளும் திருந்த ஒரு வாய்ப்பு கிடைக்கும்.. புற்றீசல் போல முளைத்து பிள்ளைகளின் உயிரை.. பெற்றோரின் பர்சை பறிக்கும் தனியார் பள்ளிகளும் குறையுமே!

அரசுப் பள்ளிகள் இல்லாத கிராமங்களே இன்றைக்கு இல்லை. நகரங்களில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு பள்ளி உள்ளது. இவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், வாகன வசதியே தேவையில்லையே… பள்ளிகளை முறைப்படுத்துவதில், சம்பள மெஷின்களாக மாறி, கொடுமையின் சின்னங்களாக இன்றைக்கு காட்சிதரும் அரசு ஆசிரியர்களை வழிக்குக் கொண்டுவருவதில் அரசு தீவிர கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது!

…கிழிந்த பூவாய் சவப்பெட்டியில் கிடக்கும் அவலம்!

இந்த சம்பவத்தினால் கோபப்பட்டு கடைகளை அடித்து நொறுக்கி, பஸ்ஸைக் கொளுத்தி தங்கள் கோபத்தைக் காட்டியுள்ள மக்கள், கொஞ்சம் நிதானமாக சிந்தித்து, இத்தனை கொடுமைகளுக்கும் காரணம் தங்கள் பக்கம் உள்ள தவறுகளும்தான் என்பதை உணர்வார்களா?

சம்பவத்துக்குக் காரணமான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை உறுதி எனும் முதல்வர், அப்படியே, இந்த கொடுமையின் மூல காரணத்துக்கும் சவுக்கடி கொடுத்து, தன்னை ‘அம்மா’ என அழைக்கும் மக்களின் கண்ணீர் துடைப்பாரா?

-என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “இந்தக் கொடூரம் இனி எந்தத் தளிருக்கும் நேரக் கூடாது!

 1. குமரன்

  இதைப் போல எத்தனை கொடுமைகள் நடந்தாலும்

  ஊழல் பெருச்சாளிகள் தப்பித்து விடுவார்கள். லஞ்சம் கொடுத்து வாகனத்தை ஒட்டிய வேன்காரரும் இப்போது லஞ்சம் கொடுத்துத் தனது அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் போகும் சீயோன் பள்ளியும் தப்பித்துவிடுவார்கள்.

  மக்கள் தங்கள் ஆத்திரத்தை ஒருநாள் காட்டி ஆகிற்று. மறுநாள் முதல் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள்.

  மாணவனைச் “சிறுநீர்” குடிக்க வைக்கும் “சிறுமலர்” பள்ளிகளும், அதிகார பூர்வமாக “விடைத் தாள் பிட்” கொடுக்கும் “மவுன்ட் செயின்ட்” பள்ளிகளும் மீண்டும் மீண்டும் கொள்ளை அடித்துக் கொண்டே இருப்பார்கள்.

  “அம்மாவோ” “தாத்தாவோ” மாறி மாறி ஆண்டு கொண்டே இருப்பார்கள்.

 2. கிரி

  “ஸ்ருதியின் மரணமாவது இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?”

  100 % வைக்காது. இது இந்தியா..இவை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதே முடியல.. டெல்லியில் ஒரு பையன் பேருந்தில் தலை மாட்டி நேற்று இறந்து விட்டான். ஜன்னல் முறைப்படி வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு..

  பெட்ரோல் விலை ஏறுனா இரண்டு நாள் திட்டிட்டு திரும்ப போட்டுட்டு போவோம்ல.. அது மாதிரி இதை திட்டிட்டு போய்டுவோம். கடுப்பாக உள்ளது.

 3. மு. செந்தில் குமார்

  – இது போன்ற செய்தியை முழுமையாக படிக்கிற நெஞ்சுறுதி என்னிடம் சிறு வயது முதற்கொண்டே கிடையாது.

  பேருந்தின் படத்தை பார்த்தவுடன் பகீர் என்றிருக்கிறது.

  குமரன் அவர்கள் சொல்லி இருப்பதுதான் நடைமுறையில் உண்மை என்றாலும்

  பெற்றோர்கள் எப்படி தங்கள் குழந்தைகளை இது மாதிரி பள்ளி வாகனத்தில் அனுப்புகிறார்கள்? (ஊரை மாற்ற முடிவது கடினம்தான். ஆனால் நம் அளவிலாவது சூதானமாக / கவனமாக இருப்பது நம்மால் முடியும் அல்லவா)

  ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது எவ்வளவு கடினம்! அப்பப்பா!! அதுவும் இதுபோல் ஆகிவிட்டால்? அந்த பெற்றோர்க்கு எந்த ஆறுதல் கொடுத்தாலும் அவர்கள் மனம் படும் பாட்டை சரி செய்ய முடியாது.

 4. chenthil UK

  இவர்கள் ஆள(ஆட்சி செய்ய ) அவர்கள் உதவுவதால் அவர்கள் வாழ ஆட்சியர் உதவுகின்றனர் …. மொத்தத்தில் நாசிக் காகிதிற்காக மனசாட்சியை அடமானம் வைக்கும் ஈன பிறவிகள் தான் இந்த அரசாங்க உத்தியோகமும் …. அதே நாசிக் காகிதத்தை குவித்து வைத்துள்ள பண முதலைகளின் பெரிய பேராசைகளும் .. தான் மொத்த காரணம் … பணம் இல்லாதவனுக்கு பணம் வந்ததும் மனம் மாற்றம் ஏற்படுகின்றது… பணம் இருந்தால் உயிரோடு இல்லாத ஒருவனுக்கு licence கிடைத்து விடுகிறது.. பணம் இருந்தால் வண்டியே கொண்டு செல்லாமல் RTO NOC கொடுத்து விடுகின்றார் … அனால் பணம் இல்லாதவனுக்கு அணைத்து தகுதிகள் இருந்தும் எளிதில் எதுவும் கிடைபதில்லை.. ஏற்றதாழ்வுகள் மற்றும் பேராசை இருக்கும் வரை இது நிகழ்ந்து கோடே தான் இருக்கும் போல,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *