BREAKING NEWS
Search

மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டு தடை

மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டு தடை


மும்பை: மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் குடி போதையில் தகராறு செய்ததற்காக நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக்கான் அம்மைதானத்தில் 5 ஆண்டுகள் நுழைவதற்கு மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது.

நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. அப்போது மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கான் முயன்றார். ஆனால் வான்கடே மைதான பாதுகாவலர்கள் அவரைத் தடுத்தனர்.

இதனால் ஷாருக்கானும் அவரது பாதுகாவலர்களும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஷாருக்கான் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அவர் வான்கடே மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடைவிதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் வான்கடே மைதான பாதுகாவலர்கள்தான் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தாம் குடித்துவிட்டெல்லாம் ரகளை செய்யவில்லை என்றும் ஷாருக்கான் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை மும்பை கிரிக்கெட் சங்கக் கூட்டம் இது பற்றி விவாதித்தது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக், மாநில கிரிக்கெட் சங்கம் ஒருமித்த கருத்தாக ஷாருக்கானுக்கு 5 ஆண்டு தடைவிதித்துள்ளது என்றார். இந்தத் தடைவிதிப்பில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்பை கிரிக்கெட் சங்கம் தடை விதித்திருக்கும் தீர்மானம் தங்களுக்குக் கிடைத்தபிறகே இறுதி முடிவு எடுப்போம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஷாரூக்கான் மீதான தடைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொள்வதாகவும், மைதானத்துக்குள் எத்தனையோ ரசிகர்கள் இப்படி அத்துமீறி நுழையத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இப்படி தடை விதிப்பது சாத்தியமா? என்றும் ஷாரூக்கான் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னொரு சாரார், ஷாரூக்கானை கடுமையாகக் கண்டித்துள்ளனர். சினிமா நட்சத்திரங்கள் என்றால் சட்டத்தை விட உர்வானவர்கள் என்ற எண்ணம் இருப்பதைத்தான் அவர் நடத்தை காட்டுகிறது. மைதான காவலர்களைப் பொறுத்தவரை, அங்கு வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் போலத்தான் ஷாரூக்கானும். அந்த வகையில்தான் கட்டுப்படுத்த முயன்றனர். அதற்காக ரகளையில் இறங்குவது சரியா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேநேரம், இந்த தடை உத்தரவு பிசிசிஐயால் ரத்து செய்யப்படும் சாத்தியம் உள்ளதாகத் தெரிகிறது.

-என்வழி செய்திகள்




2 thoughts on “மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டு தடை

  1. குமரன்

    தவறு யார் பக்கம் என்பது சரியான விசாரணையில்தான் தெரிய வரும். அப்படியே ஷாருக் மீது தவறு இருந்தாலும், ஐந்தாண்டுத் தடை என்பது மிக மிக அதிகம். நிச்சயம் இது குறைக்கப் படும். ஒரு வாரம் இரு வாரம் என்றால் நிற்கும். இல்லாவிட்டால் நிச்சயம் நீதிமன்றம் சென்றால் ஷாருக் வெல்வார்.

  2. M. Senthil

    நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.

    இது முதல் முறை அல்ல இவர் பொது இடத்தில் ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறார். (தான் ஒரு சிறப்புமனிதன் தனக்கு சிறப்பு சலுகை வேண்டும் என்ற கோணத்தில்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *