BREAKING NEWS
Search

பலே ‘புதிய புரோக்கர் தலைமுறை’!

ஆள் சேர்க்க மாணவர்களையே புரோக்கர்களாக்கும் கல்லூரிகள்-குற்றச் செயல்களுக்கு அடித்தளம்!

னியார் பள்ளிகள் கல்லூரிகளின் செயல்பாடுகள், பேராசை, பகல் கொள்ளைதான் பல குற்றச் சம்பவங்கள், சமூக ஒழுக்கக் கேடுகள் மற்றும் மனிதாபிமானமற்ற பணவேட்டைக்கு அடிப்படை என்று பல காலமாகவே நாம் சொல்லி வருகிறோம்.

ஏதோ இந்த கொள்ளையில் மாணவர்கள் மாட்டிக் கொண்டதை வைத்து இந்தக் கருத்தை முன் வைக்கவில்லை.

தனியார் கல்வி அமைப்புகளில் முதலில் கொல்லப்படுவது மனிதாபிமானம்தான். ‘எவன் எக்கேடு கெட்டுப் போனால் உனக்கென்ன… நீ மனப்பாடம் செய்து மார்க் வாங்குவதை மட்டும் பார். அதிக வருமானத்துக்காக நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்… நீங்களும் எங்களை மாதிரியே முன்னுக்கு வரணும்’ என்ற தப்பான போதனைதான் இந்தத் தலைமுறை மாணவர்களை ஏகத்துக்கும் சீரழித்துள்ளது.

அப்படின்னா… அரசு கல்வி அமைப்புகள் யோக்கியமா… அங்கு தப்பே நடப்பதில்லையா? என்ற கேள்வியை எழுப்பலாம். அரசு கல்வி நிலையங்கள் ஒரு கட்டற்ற விளையாட்டுத்திடல் மாதிரிதான். அங்கே எல்லாம் கிடைக்கும். படிப்பை ஜஸ்ட் கண்ணில் காட்டுவார்கள். எது நல்லது கெட்டது என்று சொல்ல மட்டும்தான் செய்வார்கள். படித்துக் கொள்வதும் நல்லது கெட்டதைத் தேர்வு செய்வதும் அவரவர் பொறுப்பு.

இந்த வங்கிக் கொள்ளையர்களின் தலைவன் என்று சொல்லப்படுபவனையே எடுத்துக் கொள்ளலாம்…

இவன் எஸ் ஆர் எம் கல்லூரியில் படித்து, வெளியில் வந்த பிறகு, அதே கல்லூரிக்கு ஆள் பிடித்துத் தரும் புரோக்கராக செயல்பட்டு வந்திருக்கிறான். இன்று இரு வங்கிகளில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு கடைசியில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளான்.

தமிழகத்திலேயே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்தான் ஏராளமான தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்தப் பொறியியல் கல்லூரிகளில் தமிழக மாணவர்களை விட வெளி மாநில மாணவர்கள்தான் அதிகம் படிக்கின்றனர். குறிப்பாக சமீப காலமாக வட மாநில மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

லட்சம் லட்சமாக பணம் கொடுத்து கல்லூரிகளில் சேரும் இவர்கள், தங்களது கல்லூரிகளில் படிக்கும் தமிழக மாணவர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதும், மிரட்டுவதும், தாக்குவதும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பல வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. பெரும் கலவரமே ஏற்பட்ட சம்பவங்களும் கூட உண்டு.

ரெண்டு வருஷத்துக்கு முந்தைய நிலவரம்...

இந்த வட மாநில மாணவர்கள் பெரும்பாலும் விடுதிகளில் தங்குவது கிடையாது. மாறாக, நான்கைந்து பேராக சேர்ந்து வீடு பிடித்து தங்கிக் கொள்கிறார்கள். இல்லாத சேட்டைகளையெல்லாம் செய்து அக்கம் பக்கத்தினரை கலவரப்படுத்துகிறார்கள். சின்னச் சின்ன குற்றச் செயல்களில் ஈடுபடுவதோடு, கொலை வரைக்கும் கூட இவர்கள் போயுள்ளனர்.

இவர்கள் இப்படி ஆட்டம் போடக் காரணமே தனியார் பொறியியல் கல்லூரிகளின் பணத்தாசைதான். தங்களது கல்லூரிகளில் படிக்கும் வெளி மாநில மாணவர்களிடம், குறிப்பாக வட மாநில மாணவர்களிடம், உங்களது மாநிலத்து மாணவர்களைச் சேர்த்து விட்டால் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக தருவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் படிக்கும் காலத்திலேயே இவர்கள் புரோக்கர்களாக மாற்றப்படுகிறார்கள். நல்ல பணம் கிடைப்பதால் அவர்களும் தங்களது மாநிலத்திலிருந்து பலரை கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்.

படிப்பை முடித்த பிறகும் கூட பலர் இதுபோல புரோக்கர்களாக செயல்படுகின்றனர்.

வேலைக்குப் போனால் கூட அவ்வளவு சம்பாதிக்க முடியாது. ஒரு சீட்டுக்கு ரூ 10 லட்சம் பிடுங்குகிறார்கள் என்றால், அதில் 20 – 30 சதவீதம் அதாவது 2 – 3 லட்சம் வரை கமிஷன் கிடைக்கும்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆள் பிடித்துக் கொடுத்தால் (ஜஸ்ட் 600 மார்க் வாங்கிய ஒரு பெண்ணுக்கே எம்பிபிஎஸ் சீட் கொடுத்த கல்லூரி அது!), 8 லட்சம் கமிஷன் (இது போன வருஷம்)!!

குறைந்த மதிப்பெண்களுடன் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குப் படையெடுக்கும் மாணவர்கள், இப்படி புரோக்கர்கள் மூலம்தான் கல்லூரிகளில் சேர்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இப்படித்தான் தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் சீட்டுகள் பெரும்பாலும் நிரப்பப்படுகின்றன.

தமிழகத்தில் ஜோராக நடக்கும் இந்த கல்வி வியாபாரம் குறித்து உண்மையான அக்கறையோடு எத்தனையோ பேர் குரல் கொடுத்தும், கருணாநிதி, ஜெயலலிதா அரசுகள் இதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தன.

இன்று இந்த வியாபாரம் இன்று கடும் போட்டியும், குற்றச் செயல்களும் நிறைந்ததாக மாறி, சமூக சீர்கேட்டுக்கு வலுவான அஸ்திவாரமாகிவிட்டது.

இன்று சுட்டுக் கொல்லப்பட்ட வினோத்குமாரும் என்ஜினீயரிங் படித்த ஒரு பக்கா புரோக்கர்தான். இத்தனைக்கும் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இவன் படிக்கும் போதே மக்குப் பையனாம். ஏக சேட்டை, சின்னச் சின்ன திருட்டு என மாட்டி வந்திருக்கிறான். ஆனால் இவன் படித்து முடித்ததும் அதே கல்லூரியின் ‘பார்ட்னர்’ ஆகிவிட்டான்.

தனது மாநிலத்தைச் சேர்ந்த பலரையும் இவன் கல்லூரியில் சேர்த்து விட்டு கமிஷன் வாங்கி வந்துள்ளான்.

இப்படி மாணவர்களை சேர்த்து விடுவதில் மாணவர்களுக்குள் பலமுறை மோதல்கள் மூண்டதுண்டு. சில வருடங்களுக்கு முன்பும் இதே பொறியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வட மாநில மாணவர்களிடையே பெரும் மோதல் வெடித்தது. இதற்கு புரோக்கர் கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அதேபோல ஒரு சம்பவத்தில் புரோக்கர் கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு வட மாநில மாணவரை, இன்னொரு வட மாநில மாணவர் கும்பல் கடத்திச் சென்ற சம்பவமும் நடந்தது. அந்த மாணவரை போலீஸார் சென்னை அருகே மீட்டனர்.

இப்படி தனியார் பொறியியல் கல்லூரிகள் உருவாக்கும் மாணவ புரோக்கர்களின் பணத்தாசை, மிதமிஞ்சிப் போய்  குற்றச் செயல்களில் முடிகிறது.

தமிழக அரசு இதில் கடுமையாக நடந்து கொண்டு இதுபோல புரோக்கர்களை வைத்து மாணவர்களை சேர்க்கும் கொடிய பழக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும். குறிப்பாக வட மாநில மாணவர்களைக் கட்டுப்படுத்தினால்தான் கொள்ளை, கொலை, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு முடிவு கட்ட முடியும்.

அதற்கு கல்வியில் தனியார் மயத்தை முடிந்தவரை ஒழித்துக் கட்ட வேண்டும். ம்ம்… எப்போது அந்த நாள் வருமோ!

விதுரன்

-என்வழி ஸ்பெஷல்
2 thoughts on “பலே ‘புதிய புரோக்கர் தலைமுறை’!

 1. குமரன்

  ///கல்வியில் தனியார் மயத்தை முடிந்தவரை ஒழித்துக் கட்ட வேண்டும்///

  எல்லா தனியார் பொறியியல் பல்கலைக் கலகங்களையும், கல்லூரிகளையும் உடனடியாக அரசு எடுத்துக் கொள்ளவேண்டும். இவை எல்லாம் அறக் கட்டளைகலாகப் பதிவு செய்யப் பட்டு முதலாளிகளால் நடத்தப்பட்டு சுரண்டப் படுகின்றன.

  எந்த நன்கொடையும் நிறுவனத்தின் கணக்குக்குப் போவதில்லை. எந்த ரசீதும் கிடையாது. எல்லாம் பணமாகப் பெறப்பட்டு கறுப்புப் பணமாக முதலாளி எடுத்துக் கொள்கிறார்.

  ///தமிழகத்தில் ஜோராக நடக்கும் இந்த கல்வி வியாபாரம் குறித்து உண்மையான அக்கறையோடு எத்தனையோ பேர் குரல் கொடுத்தும், கருணாநிதி, ஜெயலலிதா அரசுகள் இதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தன.///

  பல்கலை வேந்தர்கள், கல்லூரி முதலாளிகள் …..யார் இவர்கள் எல்லாம்?
  எல்லாரும் திமுக அதிமுக பாமக காங்கிரஸ் தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்.

  இவர்களில் முன்னணியில் இருப்போர் ஒரு காலத்தில் பேட்டை ரவுடிகளாக, மார்க்கெட் மாமூல் வசூல் ராஜாக்களாக, ஸ்டேட் ரவுடிகளாக, தலைவர்களின் அடியாட்களாக இருந்தவர்கள், இப்போதும் இருப்பவர்கள் அல்லது அவர்களது சந்ததியினர்.

  இப்படிப்பட்டவர்கல்தாம் இப்போது கல்வித்தந்தைகள் ! ! இந்தக் கல்வித் தந்தைகள் செய்வது என்ன?

  ரசீதுக் காகிதம் இல்லா பகல் கொள்ளை.

  இவர்கள் வளர்த்தவர்கள் எப்படி இருப்பார்கள்?
  ஆயுதம் தாங்கிய கொள்ளைக் காரர்களாக, கொலை காரர்களாக இருப்பதில் என்ன வியப்பு?

  ஜேப்பியார் கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்ற காரணத்துக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபில். இன்று சுமார் முப்பது பொறியியல் பல்கலைக் கலகங்கள்/ கல்லூரிகள் இவரது கட்டுப்பாட்டில். இவர்தான் தமிழ்நாடு தனியார் பல்கலை/ கல்லூரிகளின் தாளாளர்களின் சங்கத் தலைவர்.

  இன்னொருவர், ஜெகத் ரட்சகன் தற்போது மத்திய அமைச்சர், இவரது மருத்துவக் கல்லூரியில் டொனேஷன் வாங்கிய விவகாரம் ஆதாரத்துடன் பத்திரிகைகளில் வந்து சி.பி.ஐ. வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் நடக்கிறது. இவர் இன்னமும் மந்திரிதான். எந்திரி என்று சொல்ல மன்மொஹனுக்குத் துணிவு இல்லை. அவர் ஜெயாவிடம் பயிற்சி எடுக்க வேண்டும். ஜெயா தன்னிடமே எத்தனையோ முறைகேடுகள் இருந்தாலும் மந்திரியாக இருந்த பரஞ்சோதி மீது வழக்கு இருக்கிறதால் ஜெயா அவரை நீக்கி இருக்கிறார்.

  பட்டியலிட்டால், ஏ.சி. சண்முகம், விஜயகாந்த், ஜேப்பியார், பொன்முடி, ஏ.வ.வேலு, துரைமுருகன், பொங்கலூர் பழனிசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரை தயாநிதி, அன்வர் ராஜா, பன்னீர்செல்வம் (திமுக), ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், ஐ.பெரியசாமி, நேரு, என்று எல்லா முன்னாள்/ இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தான் கல்லூரிகளை வைத்திருக்கிறார்கள்.

  இவற்றை எல்லாம் தேசியமயமாக்குதல் உடனடித் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *