BREAKING NEWS
Search

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம்.. கேரள அரசின் சட்டம் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம்.. கேரள அரசின் சட்டம் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Tamil_News_large_381257

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீரை தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கேரளா கொண்டுவந்த அணைப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கேரளா கூறிவருவது போல முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இல்லை. பலமாகவே உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அன்றைய பிரிட்டிஷ் அரசால் 1887-ல் தொடங்கி, 1895-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது இந்த முல்லைப் பெரியாறு அணை. இடையில் கைவிடப்பட்ட இந்த அணை கட்டுமானத்தை தனி ஒரு நபராக நின்று, தன் சொத்துகள், மனைவியின் நகைகளையெல்லாம் விற்று கட்டித் தந்தார் கர்னல் பென்னி குயிக்.

தென் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களின் ஜீவாதாரமே இந்த அணைதான்.

இந்த அணையில் 152 அடி நீர்மட்டம் அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டு வந்தது. பின்னர் அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளா அணையின் நீர் தேக்கி வைக்கும் அளவை 136 அடியாகக் குறைத்தது. ஆனால் தமிழகமோ 142 அடியாக நீர் தேக்கும் அளவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து கேரளா நிராகரித்ததால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், அணையை வலுப்படுத்தும் பணிகளை முடித்த பிறகு, முழுக் கொள்ளளவான 152 அடிவரை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளித்தது. ஆனால் இதை நிராகரித்த கேரளா, 2006, மார்ச் 18-ந் தேதியன்று கேரளா சட்டசபையில் அணை பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. அதாவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் இந்த புதிய சட்டத்தை இயற்றியது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் இந்த சட்டத்தின்படி நீர் தேக்கும் அளவை உயர்த்த முடியாது என்று கூறியது கேரளா. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 2010 பிப்ரவரி 18 ந் தேதி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு, 2012 ஏப்ரல் 25ந் தேதி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக உள்ளதாகவும், சமீபத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் கூட அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அறிக்கை அளித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ந் தேதி இந்த வழக்கில் தலைமை நீதிபதி லோதா, நீதிபதிகள் சந்திரமெளலி, கே.ஆர். பிரசாத், டட்டூ, இக்பால், மதன் பி லோகூர் ஆகியோர் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர் தேக்க அளவை தற்போதைய 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று கூறியுள்ளது.

அத்துடன் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என்றும்  தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கேரளாவின் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சட்டம், சட்ட விரோதமானது, செல்லாது என்றும் புதிய அணை கட்ட கட்டத் தடையும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

அதேபோல் அணையின் பாதுகாப்புக்கான குழு ஒன்றையும் அமைக்க உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தீர்ப்பால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத் தலைவர்கள் அனைவரும் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

-என்வழி




2 thoughts on “முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம்.. கேரள அரசின் சட்டம் செல்லாது – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

  1. யாரோ

    //கேரளாவின் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சட்டம், சட்ட விரோதமானது, செல்லாது என்றும் புதிய அணை கட்ட கட்டத் தடையும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.//

    இந்த சட்ட விரோதத்தை புரிந்த சுயநல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு நம் இந்திய தண்டனைச் சட்டம் என்ன தண்டனை விதிக்கப் போகிறது?

    — யாரோ

  2. Nam Kural

    Dear Admin,
    You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

    நன்றிகள் பல…
    நம் குரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *