BREAKING NEWS
Search

‘ஜெ கூட்டாளிதான்.. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது… நான்தான் பொறுப்பு!’ – நீதிபதி முன் சசிகலா கண்ணீர்

‘ஜெ கூட்டாளிதான்-ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது… எல்லாத்துக்கும் நான்தான் பொறுப்பு!’ – நீதிபதி முன் அழுத சசிகலா

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதைச் சொல்லிவிட்டு நீதிபதி முன்பு கண்ணீர்விட்டு  அழுதாராம் சசிகலா.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது நண்பர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்கில் இருமுறை நேரில் ஆஜராகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தார் ஜெயலலிதா.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக உடன்பிறவா சகோதரி என்ற  அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், இப்போது சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது பெங்களூர் தனி நீதிமன்றம். தனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது என்ற ஒரு காரணத்தைச் சொல்லியே 8 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து வந்தவர் சசிகலா. ஆனால் இனியும் வழக்கை இப்படி நீட்டிக்க முடியாது என அத்தனை நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன.

எனவே வேறு வழியின்றி இந்த முறை சசிகலா, இளவரசு, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர்.

கடைசி முயற்சியாக, ‘சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும்’ என்று சசிகலா தரப்பு வக்கீல் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு தமிழில் மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார்.

சசிகலா தந்த பதில்களை  ஆங்கிலத்தில் நீதிபதிக்கு மொழிபெயர்த்தார் ஹரீஸ்.

கதறி அழுத சசி

பல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது கதறி அழுதாராம்.

வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவும் தானும் ஏராளமான நிறுவனங்களை ஆரம்பித்து நடத்துவது உண்மைதான் என்றும், அவற்றில் ஜெயலலிதா கூட்டாளி என்றாலும், நிர்வாகத்துக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்றும் விரிவாகக் கூறியுள்ளார் சசிகலா.

சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்
5 thoughts on “‘ஜெ கூட்டாளிதான்.. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது… நான்தான் பொறுப்பு!’ – நீதிபதி முன் சசிகலா கண்ணீர்

 1. JB

  இப்போது தெரியுது ஏன் சசிகலா போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று.

 2. enkaruthu

  நல்ல நாடகம்.ஜெயலலிதாவை சசி ஏமாற்றினாரா கேனையன் கூட நம்ப மாட்டான்.எனகென்னமோ நடராஜனை பகடைக்காயாக வைத்து சசிகலாவை சாட்சி சொல்ல வைத்திருப்பார் ஜெயலலிதா.அதனால்தான் அந்த பதிலை சொல்லும்பொழுது சசிகலா அழுதிருப்பார் இதிலருந்தே தெரியவில்லையா ஜெயலலிதா குற்றவாளி என்று .

 3. குமரன்

  வழக்கு விசாரணை இன்னும் இருக்கிறது. முன்னரே கூட 1996 -97 இல் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகும்போது சசிக்கு மயக்கம், வலிப்பு முதலியவை வந்தன. ஸ்ட்ரெச்சரில் படுத்து நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார். இப்போது அழுகையுடன் ஆரம்பித்திருக்கிறார். பல சீன்கள் பாக்கி இருக்கிறது. ஜெயா சினிமாவில் நடித்தவர். சசி நிஜ வாழ்வில் மிக நேர்த்தியாக நடிப்பவர். இப்போது அவரது நடிப்பும் கதை வசனமும் எல்லாமும் “எப்படியாவது ஜெயாவுடன் மீண்டும் இணைந்து விடமாட்டோமா” என்ற நோக்கம் உடையவை.

  “ஜெயாவுக்குத் தெரியாமல் இந்த சொத்தையெல்லாம் சேர்த்தேன்” என்று ஒப்புக் கொள்ளும் இவர் மன்னார்குடி வகையாரா இது வரை ஊரையெல்லாம் அடித்து உலையில் போட்டு சேர்த்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை வெளிப்படையாகப் பட்டியலிட்டு தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கத் தயாரா?

  ஜெயாவும் சசியும் கூட்டுக் களவாணிகள். அவரும் இப்படிப்பட்ட சொத்துக்களைத் தமக்கும் தமது கட்சிக்கும் வேண்டாம் என்று அரசு கஜானாவில் ஒப்படைக்கட்டுமே. அப்படிச் செய்தால் மக்களுக்கும் கருணாநிதி குடும்பம் கொள்ளையடித்து வைத்திருக்கும் ஆயிரக் கணக்கான கோடிகளை அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தைரியமாக வைக்க வசதியாகும்.

 4. குமரன்

  இன்று சசிகலா நடராஜன் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

  உலகிலேயே தன பெயருடன் மனைவி பெயரையும் சேர்த்தே அறியப்படும் அளவுக்கு “பெண்ணுரிமை தந்த பெருமகனார்” இந்த நடராஜன்.

  நிலா அபகரிப்பு வழக்காம். இவர் கடந்த இருபதாண்டுகளில் வழக்கமாக செய்து வந்த தொழிலைக் குறித்து இப்போதுதான் முதல் முறையாக இவர் மீது வழக்குப் பதிவாகி இருக்கிறது!!

  இது கூட ஜெயாவுக்குத் தெரியாமல்தான் நடந்ததோ?

  கடந்த 1991 -96 , 2001 -06 ஆட்சிக் காலங்களில் பழிவாங்கும் வகையில் கருணாநிதி, ஸ்டாலின், எம்.ஜி.ஆரின் பழைய டிரைவர் முத்து, நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மருமகன் குமார், என்று பலதரப்பட்டவர்களை பொய் வழக்குப் போட்டுக் கைது செய்ததெல்லாம் கூட ஜெயா அறியாமலே சசி சொல்லித்தான் நடந்ததா?

  சொல்லுகின்ற பொய் கூட இவர் மீது வெறுப்புக் கொள்ளும் அளவுக்குப் பொய் சொல்கிறார், சசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *