BREAKING NEWS
Search

சங்கரன்கோயில்… திராணியற்றவர்கள் வாக்காளர்களா?

சங்கர நாராயணரின் ‘ஆசி’ யாருக்கு?

சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்று சைவர்களும் வைணவர்களும் கடுமையாக மோதிக்கொண்ட காலத்தில் ஹரியும் சிவனும் ஒன்று என்று நிருபிப்பதற்காக சங்கர நாராயணராக அவதாரம் எடுத்து மோதலை தீர்த்து வைத்த தலம் சங்கரன்கோவில் என்பது  ஐதீகம்!

இன்றைக்கு அதே சங்கரன்கோவிலில், நான்கு அரசியல் கட்சிகளில் எந்த கட்சி பெரியது, இந்த நேரத்துக்கு அவசியம் என்று ஒரு போட்டி நடைபெறுகிறது.  தமிழகத்தின் பதினான்காவது சட்டசபையின் முதல் இடைத்தேர்தல். வரலாற்றை புரட்டிப் பார்த்தால் கடந்த முப்பத்தோரு ஆண்டுகளில் 26 ஆண்டுகள் அதிமுக தான் இந்த சட்டமன்ற தொகுதியை கைப்பற்றி வந்திருக்கிறது. அதிமுக கடுமையான நெருக்கடியை சந்தித்த 1996 ஆம் ஆண்டு தேர்தலில் கூட சங்கரன்கோவிலில் வெற்றி பெற்றிருக்கிறது

இப்படி தலைமுறை தலைமுறையாக அதிமுக வெற்றி பெற்று வந்துள்ள தொகுதியில் இடைத்தேர்தலை, அதுவும் அதிமுக ஆட்சியில் இருக்கும் வேளையில், அனாசயமாக வெற்றி பெற வேண்டும் என்பது தானே நியதி.
அப்படி இருக்கையில், உலக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக,  முதல்வரையும் சேர்த்து முப்பத்துமூன்று அமைச்சர்கள் ஒரு இடைத்தேர்தலுக்காக பணியாற்ற வேண்டிய அவசியம் என்ன?

சுய பரிசோதனை

முன்பெல்லாம் இடைத்தேர்தல் என்பது தங்கள் ஆட்சியை சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஒரு கருவியாகத்தான் ஆளுங்கட்சியினர் கருதினர்.

அது வரை, அந்த ஆட்சியில் செய்த சாதனைகளை முன்னிறுத்தித்தான் வாக்கு கேட்பார்கள். எதிர்க்கட்சியினரோ அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்வார்கள். ஆளுங்கட்சி வெற்றி என்றால் சாதனைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்றும், தோல்வி என்றால் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

தொடர்ந்து இடைத்தேர்தல்களில் தோல்வியை தழுவிய எம்.ஜி.ஆர் அவர்கள் பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்றார் என்றால் என்ன காரணம். மக்கள் முன் வைக்கப்பட்ட குறைகளை பொதுத் தேர்தலுக்கு முன்பாக சரி செய்து கொண்டார், மேலும் நல்ல புதிய திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் என்பதனால் தான்.

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தொடர்ச்சியாக பதினோரு இடைத்தேர்தல்களை வென்ற திமுக, பொதுத்தேர்தலில் ஆட்சியை பறி கொடுத்தது என்றால் இடைத்தேர்தல்களின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது என்பது தான் நிதர்சனம்.

ஆளுங்கட்சிக்கு இடைத்தேர்தல் என்பது ஒரு கௌரவப்பிரச்சனையாக மாறிவிட்ட்து 1991- 96 க்கு உட்பட்ட அதிமுக ஆட்சியில் தான். அப்போது தான் முதன் முறையாக, ஒரு வாக்குக்கு ஐநூறு ரூபாய் வரை விலை வைத்து வாங்கும் அவலம் உருவானது. அந்தந்த தொகுதிகளில் உள்ள ஜாதிகளின் அடைப்படையில் வாக்காளார்ளை கணக்கிட்டு, குறிப்பிட்ட ஜாதிகளை சார்ந்த அமைச்சர்களை தொகுதி நிர்வாகிகளாக நியமித்து, ஜாதி ரீதியாக வாக்குகளை வாங்கும் பேரவலமும் அரங்கேற தொடங்கியது.

அடுத்தடுத்து வந்த திமுக , அதிமுக ஆட்சி காலங்களில் இந்த அணுகுமுறை மேலும் தழைத்தோங்கி, விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப வாக்குகளின் விலையும் ஏறியது.. கூடவே குவார்ட்டர், பிரியாணி என்ற புதிய ஃபார்முலாக்களும் சேர்ந்து கொண்டது.

தேர்தல் ஆணையத்தின் செலக்டிவ் அம்னீசியா

இதற்கெல்லாம் மேலாக, பொதுத்தேர்தல்களின் போது பொங்கியெழும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல்களில் இதையெல்லாம் கண்டும் காணாமல் அமைதியாக வேடிக்கை பார்க்கும் கூத்தை யாரிடம் முறையிடுவது!

தமிழகம் முழுவதும் ஊர்ப்பகுதிகளில் 12 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை இருப்பது உலகத்திற்கே தெரியும். ஆனால் சங்கரன் கோவில் தொகுதியில் இரண்டு மணி நேரம் மட்டும் தான் மின் தடையாம்? அதெப்படி சாத்தியம் என்பது தேர்தல் ஆணையருக்கு தெரியாமல் போனது பெரிய ஆச்சரியம்.

தேர்தல் அறிவித்த நாள் முதல் நன்னடத்தை விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய ஆணையம் கண்டும் காணாமல் இருந்து விட்டு, இப்போது குற்றசாட்டு வந்த பிறகு ஒப்புக்கு சப்பாக மின் வாரியத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது. சட்டப்படி இவர்கள், தமிழகம் முழுவதும் , ஏன் தொகுதிக்குட்பட்ட  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில்  நிலவும் மின்வெட்டும் சங்கரன்கோவில் தொகுதியில் நிலவும் மின்வெட்டும் ஒரே அளவில் இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டியதும் நன்னடத்தை விதிகளுக்கு உட்பட்டதுதானே.

தேர்தல் அறிவிக்கும் முன்னரே தமிழக அமைச்சரவையை ஒட்டு மொத்தமாக தேர்தல் பணிக்கு வெளிப்படையாக அறிவிப்பு கொடுத்து அனுப்பியுள்ள முதல்வரை, தேர்தல் ஆணையம் ஒப்புக்காவது கேள்வி கேட்க வேண்டாமா? அமைச்சருக்குரிய அனைத்து அரசு வசதிகளையும், அதிகாரத்தையும் பயன்படுத்திக்கொண்டு, ஒரு மாதத்திற்கு அரசுப் பணி செய்யாமல் கட்சிக்கு வேலை செய்வது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதுதானே?

இப்படி ஒட்டு மொத்த அமைச்சரவையும் ஒரு இடைத்தேர்தலுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் என்ன? அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் ஒரு தொகுதியில், சட்டசபையில் சவால் விட்ட  ‘திராணி’ யை காட்ட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமா? அல்லது எட்டு மாத ஆட்சி குறித்து பழைய இடைத்தேர்தல்கள் போல் மக்கள் தீர்ப்பு எழுதிவிடுவார்கள் என்ற பயமா?

ஒரு வார்டுக்கு ஒரு அமைச்சர் என்ற ரீதியில் பிரச்சாரம் நடைபெறும் தொகுதி மக்கள் என்ன செய்யவார்கள்?. எந்த கட்சியை தேர்ந்தெடுப்பார்கள்?

அதிமுக Vs மதிமுக Vs திமுக

அள்ளிக் தெளிகக்கப்படும் கோடிக்கணக்கான பணம், தொகுதி முழுக்க உள்ள எதற்கும் அசையாத அதிமுக விசுவாசிகள் இவை இரண்டும் அதிமுக பெருவாரியான வாக்குகளுடன் வெற்றி அடைவதற்கான அறிகுறிகள்.

அதிமுக விசுவாசிகளை அசைக்க முடியாது தான். ஆனால் பொது வாக்காளர்கள் அசைந்து விட்டால்? பணத்தையும் வாங்கிக்கொண்டு வாக்கை மாற்றிப்போட்டு விட்டால் அது யாருக்கு போகும்?

இப்படி ஒரு அதிசயம் நடந்து விடாதா என்ற நம்பிக்கையில் தான் திமுக, மதிமுக வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

தவிர, தேமுதிகவுக்கு அதிகளவு வாக்குள் இல்லாவிட்டாலும் அவர்களின் பத்து சதவீத வாக்குகளான 10 முதல் 15 ஆயிரம் வாக்குகள் கண்டிப்பாக அதிமுகவுக்கு சரிவு தான்.

மதிமுகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ள தொகுதி இது. கொஞ்சம் எட்டிப்பிடித்து விட்டால் வெற்றியின் இலக்கைக்கூட தொட்டுவிட முடியும்.

இங்கு திமுக தொடர் தோல்வியை கண்டு வந்தால் கூட அசைக்க முடியாத 40 முதல் 50 ஆயிரம் வாக்குகளை கொண்டுள்ளது.

நான்கு கட்சிகளின் அசையா வாக்குகள் மாற்று கட்சியினருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. பொது வாக்காளர்கள்தான் வெற்றியை நிர்ணயிக்க போகிறவர்கள். இவர்கள் பணத்துக்கு விலை போவார்களா? அல்லது தமிழ் நாட்டு அரசியலில் புதிய அத்தியாயத்திற்கு வழி காட்டுவார்களா?

அதிமுக வெற்றி பெற்றால் ஆட்சியிலோ, தொகுதியிலோ எந்த மாற்றமும் வரப்போவதில்லை. இடைத்தேர்தலில் கிடைத்த சலுகைகளோடு அடுத்த நான்கு ஆண்டு காலமும் இருந்து விட வேண்டியதுதான்.

திமுக வெற்றி பெறுவது சாத்தியம்தானா?

இதே பொது வாக்காளர்கள்தான் கடந்த தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பியவர்கள். கடந்த ஆட்சியின் போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவது சுழன்று சுழன்று பணியாற்றியது எந்த அரசியல் விமர்சகராலும் மறுக்க முடியாதது. ஸ்டாலினின் தலைமையில் நல்ல திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன என்பதும் உண்மைதான்.

ஆட்சியில் இல்லாத நேரத்திலும் அமெரிக்க மாகாணத்தின் உயரிய விருது அவருக்கு கிடைத்திருக்கிறது என்பதே அவரது திறமையான நிர்வாகத்திற்கு சான்று. ஆனால் அவர் மட்டுமே திமுக அல்லவே.. கடந்த பொதுத்தேர்தலில் அழகிரி, கனிமொழி போன்றவர்களை கட்சியினர் ரசித்தாலும் பொது வாக்காளர்கள் ரசிக்க வில்லையே. இன்றும் கட்சிக்குள் குடும்ப சண்டை நடைபெறுவது வெளிப்படையாக தெரியும் வேளையில் இவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்களா? அப்படியே திமுக வெற்றி பெற்று விட்டால் கூட என்ன மாற்றங்கள் நிகழும்? என்னால் தான் வெற்றி என்று கட்சியில் ஸ்டாலினா, அழகிரியா என்ற சண்டைக்கு மேலும் ஒரு காரணமாகத்தானே அமையும். இதையும் மக்கள் யோசித்து பார்க்கத்தானே செய்வார்கள்!

மாற்றம் நிகழுமா?

சட்டசபையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத மதிமுக வெற்றி பெற்றுவிட்டால் மட்டும் என்ன மாறுதல்கள் நிகழ்ந்து விடும். கண்டிப்பாக ஆட்சியிலோ, சட்டசபை கூட்டங்களிலோ எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அடுத்து வரும் பொதுத்தேர்தலில் மதிமுக ஆட்சியை பிடித்து விடும் அளவுக்கு வலிமையான வாக்கு வங்கியையும் வைத்து இருக்க வில்லை. ஆனால் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், தமிழக நலனுக்காக முதல் குரல் கொடுக்கும் ஒரு போராளிக்கு மக்களின் ஆறுதலாக இது அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்படிப்பட்ட தொடர் போராளிக்கு அது தேவையானதும் கூட. பொது வாக்காளர்கள் இந்த நிலையிலிருந்து சிந்தித்தால் மதிமுகவின் வெற்றியும் சாத்தியமே.

சங்கரன்கோவிலை சவால் மைதானமாக மாற்றிய பெருமைக்குரிய தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு எப்படி? அவர்களின் 11 சதவீத வாக்கு வங்கி கரையாமல் இருந்தாலே வெற்றி தான். அந்த ஒரு கணக்கை வைத்தே அதிமுகவின் பொதுத்தேர்தல் வெற்றிக்கு காரணம் விஜயகாந்தின் வாக்கு வங்கி தான் என்று தொகுதி வாரியாக கணக்கெடுத்து விடலாமே. பதினோரு சதவீத ஆதரவைக்கொண்ட கட்சிக்கு பொது வாக்காளார்கள் வாக்களிக்க முன்வருவார்களா?

நல்லதோ , கெட்டதோ பொது வாக்காளர்கள் தங்கள் வாக்கு வீணாக்கக்கூடாது என்ற புதுவிதமான சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். வெற்றிபெறாது என்ற நிலையில் இருக்கும் தேமுதிகவுக்கு தங்கள் வாக்குகளை கொடுத்து வீணாக்குவார்களா என்ன?  ஆனால் சங்கர நாராயணரின் கணக்கு வேறு விதமாகவும் இருக்கலாமோ?

-ஸ்கார்ப்பியன்

(கட்டுரையாளர் ஒரு அரசியல் விமர்சகர். என்வழிக்காக தொடர்ந்து  எழுதி வருகிறார்)
21 thoughts on “சங்கரன்கோயில்… திராணியற்றவர்கள் வாக்காளர்களா?

 1. Manoharan

  இது ரொம்பவும் சுலபமான கணிப்பு. 4 முனை போட்டியில் எப்போதுமே ஆளும் கட்சிதான் ஜெயிக்கும். ஏன் என்றால் ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களை மூன்று கட்சிகள் பிரிக்கிறது. யாருக்கு வெற்றி என்பதில் கேள்வியே வேண்டியதில்லை. இரண்டாம் இடம் யாருக்கு என்பது தான் சங்கரன் கோயில் தேர்தல் சொல்லப் போகிறது.

 2. raja

  இடை தேர்தல் என்பது ஒரு கண்துடைப்புதான் .. பேசாம ஆளும் கட்சிதான் வெற்றி என சொல்லிவிடலாம்

 3. தினகர்

  கட்டுரையில் குறிப்பிட்டது போல் பொது வாக்காளார்கள் மனது வைத்தால் சங்கரன்கோவில் அதிமுக ஆட்சிக்கு கடிவாளமாக அமையும். வைகோவால் மட்டுமே அவர்களது மனதை மாற்ற முடியும்.

 4. மிஸ்டர் பாவலன்

  மனோகரன் – எனது கணிப்பு.

  1 ) அ.தி.மு.க. (பெரும் வெற்றி), 2 ) ம.தி.மு.க. (கணிசமான வாக்குகள்)
  3 ) தி.மு.க. 4) தே.மு.தி.க.

  எஸ். வி. சேகர் சரியான நேரத்தில் அ.தி.மு.க. சேர இருக்கிறார்.
  அமைச்சர்கள் படையுடன் சேகரும் சென்று வாக்கு சேகரித்தால் நல்லது.

  இறுதிக்கட்ட நிலையில் மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மாவின் பிரச்சாரம் சூறாவளி காற்று போல அதிரடியாக அமையும்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 5. muthu

  இந்த தேர்தல் எப்போது ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சட்டசபையில் பிரச்சனை கிளபினார்களோ அப்போதே சூடு பிடித்து விட்டது ஆனாலும் அதற்க்கு முன்னரே மதிமுக பிரச்சாரத்தை துடங்கி விட்டது. திமுக விற்கு நன்றாக தெரியும் வெற்றி பெற முடியாது என்று ஆனாலும் மதிமுக வளர்வதை கருனாந்தியும் விரும்பவில்லை விஜயகாந்தை உசுப்பேத்தி விட்டு தேர்தலில் நிக்க வைத்த ஜெயலலிதாவும் விரும்பவில்லை என்பது மட்டும் நிச்சயம் . மதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது ஆட்சியை பிடிக்கும் என்ற மாயையை கூட உருவாக்க முடியாத அளவிற்கே அவர்களின் வாக்கு வங்கி உள்ளது ( கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனியாக களம் இறங்கிய மதிமுக வெறும் 2 .5 சதவிகிதம் வாக்கு தான் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது )

  வைகோ சிறந்த பேச்சாற்றல் உள்ளவர் கரை படியாத கரத்துக்கு சொந்தகாரர் தான் ஆனால் இன்றைய சூழலில் அந்த கட்சியின் ஒன்றிய நகராட்சி ரீதியான செல்வாக்கு மிகவும் பின் தங்கி உள்ளது (கடந்த திருச்சி இடைத்தேர்தலில் போட்டி இட கூட இல்லை என்பது வேறு விஷயம் ) .பல இடங்களில் மதிமுக தொண்டர்கள் வெறும் விரலை விட்டு என்னும் அளவிலேயே உள்ளனர் . ஒரு கட்சி வளர்ச்சி அடைய கோடி கணக்கில் பணத்தை சிலவிட்டாவது வெற்றி பெற செய்யும் இரண்டாம் முன்றாம் கட்ட தலைவர்கள் தான் ஒரு கட்சியின் செல்வாக்கை நிர்ணயிகிரார்கள்.

  இந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறுவது உறுதி என்றாலும் எப்போது இத்தனை அமைச்சர்களை அனுப்பினாரோ அப்போதே அவர் தோற்றுவிட்டார் என்று தான் அர்த்தம் .

  பொது வேட்பாளரை நிறுத்தி இருந்தால் அவர் எந்த கட்சியாக இருந்தாலும் அவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது அதை திமுக வும் தேமுதிகவும் மறைமுகமாக சேர்ந்து முடிவெடுத்து மதிமுக விருக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கலாம் . ஆனால் ஒருவர் வளர்வதை இன்னொருவர் விரும்பவில்லை என்பது தான் நிதர்சனம் .

  தேமுதிக வை பொறுத்தவரை விஜயகாந்த் தனது கட்சியை ஆரம்பித்து போட்டி இட்ட இரண்டு சட்டமன்ற தேர்தல்கள் இரண்டு உள்ளாட்சி தேர்தல்கள் ஒரு பாராளுமன்ற தேர்தல் அனைத்திலும் தனது வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளது இப்போதும் சங்கரன்கோவிலில் தனது வாக்கு வங்கியை தக்கவைக்கும் ஆனால் யாருக்கும் அது லாபம் இல்லை விஜயகந்திர்க்கு தேமுதிக வெற்றி பெறாது என்று நன்றாக தெரியும் ஆனால் அவர் போட்டி இட வில்லை என்றால் அவர் பயந்து விட்டார் என்று தம்பட்டம் அடித்து விடுவார்கள் என்பது தான் நிதர்சனம் ஆகவே ஒரு ஒப்புக்காவது போட்டி என்று அறுவித்து விட்டு தனது வாக்கு வங்கியை நிருபித்து ஒரு ஒப்புக்காக அறிக்கையும் விடுவார் என்பது வேறு விஷயம்

  அதிமுக வின் வெற்றி ஒற்றுமை இல்லாத எதிர் கட்சிக்கு ஒரு நல்ல பாடம் மட்டும் அல்ல ஆணவத்திற்கு கிடைத்த வெற்றி எப்போது எதிர்கட்சிகளுக்கு ஒற்றுமை இல்லையோ அப்போதே அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று தானே அர்த்தம் ?

  இரண்டாம் இடம் முன்றாம் இடம் என்று பேசு வது எதிர்க்கட்சியின் தோல்வியையே குறிக்கும் யார் இரண்டாம் இடம் பிடித்தாலும் அது மதிமுக விற்கு கிடைத்தாலும் திமுகவிற்கு கிடைத்தாலும் தேமுதிகவிற்கு ஒரு வெங்காயமும் நடக்க போவது இல்லை ஜெயலலிதா மாரபோவதும் இல்லை ஒரு எடுத்து காட்டிற்கு சென்ற முறை பென்னகரத்தில் பாமக அதிமுகவையும் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது அதனால் யாருக்காவது நன்மை கிடைத்ததா ? இல்லை பாமகவிருக்கு நன்மை கிடைத்ததா ? அடுத்த தேர்தலில் வெறும் மூன்று இடம் தானே பிடித்தது பாமக ?

  ஆக ஒற்றுமை இல்லாத இந்த எதிர் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதை விட இந்த மூன்று எதிர்கட்சிகளும் deposit தொகையை இழப்பது தான் நியாயமாக இருக்கும்

 6. Ramesh

  தயவு செய்து ம தி மு க வுக்கு வாகலயுங்கள் மக்களே .. ஒரு முறை வாய்ப்ப்பு கொடுங்கள் …. நல்ல ஒரு போராளி அவர் … அன்புடன் ரமேஷ்
  சவுதி

 7. தினகர்

  “எஸ். வி. சேகர் சரியான நேரத்தில் அ.தி.மு.க. சேர இருக்கிறார்.
  அமைச்சர்கள் படையுடன் சேகரும் சென்று வாக்கு சேகரித்தால் நல்லது”

  அடேங்க்ப்பா… முப்பத்திரண்டு அமைச்சர்களால் முடியாததை எஸ். வி. சேகர் சென்று சாதிக்கப்போகிறாரா.. சேகர் அதிமுகவுக்குள் சேரமுடியாமல் போய்விடும் போலிருக்கே….

 8. தினகர்

  “இந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறுவது உறுதி என்றாலும் எப்போது இத்தனை அமைச்சர்களை அனுப்பினாரோ அப்போதே அவர் தோற்றுவிட்டார் என்று தான் அர்த்தம் .”

  குறிப்பாக விஜயகாந்தின் தேமுதிகவிடம் தோற்றுவிட்டார் என்று சொல்லுங்கள்.. முப்பத்திரண்டு அமைச்சர்களை தொகுதிக்குள் வர வைத்த வெற்றி சந்தேகமில்லாமல் விஜயகாந்திற்குத்தான்.. அந்த வகையில் அவர் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். 11 % சதவீதம் ஓட்டும் கிடைத்துவிட்டால் அவருக்கு வெற்றிதான்.

 9. மிஸ்டர் பாவலன்

  ///ஆக ஒற்றுமை இல்லாத இந்த எதிர் கட்சிகள் தேர்தலில்
  வெற்றி பெறுவதை விட இந்த மூன்று எதிர்கட்சிகளும்
  deposit தொகையை இழப்பது தான் நியாயமாக இருக்கும்///

  இது நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் மின்வெட்டுத் தொல்லை
  மக்களை பாதித்துள்ளதால் கணிசமான வாக்குகளைப் பெற்று
  ம.தி.மு.க. இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். (சங்கரன் கோயில்
  வை.கோ.விற்கு சொந்த தொகுதி. நல்ல செல்வாக்கு பெற்றவர்.)

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 10. தினகர்

  ஆனாலும் சங்கரன் கோவிலில் வைகோ வெற்றி பெறுவது தான் தமிழகத்திற்கு நல்லது..திமுக, அதிமுக வுக்கு ஒரு செக்பாயிண்ட் ஆகவும் இருக்கும்.

 11. மிஸ்டர் பாவலன்

  ///அடேங்க்ப்பா… முப்பத்திரண்டு அமைச்சர்களால் முடியாததை
  எஸ். வி. சேகர் சென்று சாதிக்கப்போகிறாரா.. ////

  எஸ். வி. சேகர் காமெடியை விட தினகர் கலக்கறார் 🙂

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 12. ஊர்க்குருவி.

  அம்மா திமுகவின் அமைச்சர் பட்டாளம், தடையில்லா மின்வினியோகம், அம்மாவின் சூனியப்பார்வை, அனைத்தும் மக்கள் சிந்தனை சரியாக இருந்தால் தூள் தூளாகிவிடும். மதிமுகவுக்குத்தான் வெற்றியென்று பட்சி சொல்லுகிறது. இருந்தும் சூனியம் சூழ்ச்சி செய்யுமாக இருந்தாலும் வைகோ அவர்களின் மதிமுகவின் எழுச்சி சங்கரன் கோவிலில் நிச்சியம் உணரப்படும்.

 13. தினகர்

  எஸ். வி. சேகர் சென்று சாதிக்கப்போகிறாரா.?

  பாவலன் . எஸ்.வி சேகருக்கு இந்த தேர்தலில் என்ன வேலை என்பதற்கான கேள்வி? எஸ்.வி சேகர் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டும் என்பது தான் காமெடி 🙂 அவ்வளவு பவர் அவருக்கு இருக்கா?

 14. மிஸ்டர் பாவலன்

  ///முப்பத்திரண்டு அமைச்சர்களை தொகுதிக்குள் வர வைத்த
  வெற்றி சந்தேகமில்லாமல் விஜயகாந்திற்குத்தான்.. அந்த
  வகையில் அவர் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.
  11 % சதவீதம் ஓட்டும் கிடைத்துவிட்டால் அவருக்கு வெற்றிதான்.////

  இளங்கோ எழுதாத குறையை தினகர் தீர்த்து வைத்திருக்கிறார்.

  எக்குத்தப்பா ஏத்தி விட்டு பார்லிமென்ட் தேர்தல்ல மொத்தமும்
  போயிடப் போகுது கேப்டன்!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 15. raja

  மதிமுக ஜெயிப்பது கண்டிப்பாக நடக்காத ஒன்று.. இங்கு பின்னூட்டம் இடும் பலருக்கு நம் மக்களின் மனோபாவம் இன்னும் புரியவில்லை போலும் …

 16. தினகர்

  “நம் மக்களின் மனோபாவம் இன்னும் புரியவில்லை போலும் …”

  ம்க்கள் என்பது இங்கு பின்னூட்டம் எழுதுபவர்களையும் சேர்த்துத்தானே?. மாற்றம் விரும்பும் மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள், மேலும் மக்க்ள் கோபம் அடைந்து விட்டால் எந்த பணமும் அதை அடை போட முடியாது. இப்போது நடக்கும் ஆட்சியில் மக்கள் அதிக கோபம் அடைந்துள்ளார்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

  மக்கள் மனோபாவம் என்பது ஒரு சிலரின் ஆசைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டதல்ல. காட்டாற்று வெள்ளம் எந்தப் பக்கமும் திரும்பலாம்.

 17. மிஸ்டர் பாவலன்

  ///இப்போது நடக்கும் ஆட்சியில் மக்கள் அதிக கோபம்
  அடைந்துள்ளார்கள் என்பது சொல்லித்தான்
  தெரிய வேண்டுமா?///

  தினகர் எழுதியது மிக உண்மை. மின்வெட்டு, மின்வெட்டு,
  மின்வெட்டு, மின்வெட்டு – இதனால் மக்கள் கடும்
  அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
  -== மிஸ்டர் பாவலன் ===

 18. ஊர்க்குருவி.

  “நம் மக்களின் மனோபாவம் இன்னும் புரியவில்லை போலும் …”(???)

  கோடி பணம் செலவழித்து

  கொண்ட மொழி மாநாடும்,

  மானாட மயிலாட மங்காத தமிழாட,

  நேரிடையாய் எந்தன்,….

  நெட்டவிழ்ந்து அதுவாட.

  போர் மேகம்தனை உடைக்க

  நெஞ்சறுந்து உணவொறுத்து,

  பாழ்பட்ட இந்த உயிர்

  பாடையிலே போகாதோ!

  வாராயோ இணைந்தொருக்கால்

  வழி நெடுக செயின் அமைப்போம்.

  தீராது என் தாகம் திராவிடமும் சாகாது?

  தினம் ஒரு விழாவெடுப்பேன்

  செப்பியதோர் வழிசமைப்பேன்.

  பராயோ தமிழா

  பாழ்பட்ட மனித இனம்

  ஏமாற்றி எனை புலம்ப

  ஏனிந்த நிலை கண்டீர்?

  “மக்களின் மனோபாவம் மணித்துளியில் மாற்றமடையும்”

 19. மிஸ்டர் பாவலன்

  ஊர்க்குருவி – நீங்கள் தான் உண்மையான பாவலன் 🙂
  நல்ல கவிதை. தேர்ந்த சொற்கள். சீரிய கருத்து.
  வாழ்க உம் புலமை!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *