BREAKING NEWS
Search

ருத்ரய்யா… தமிழ் சினிமாவின் மறக்க முடியாத அத்தியாயம்!

ருத்ரய்யா… தமிழ் சினிமாவின் மறக்க முடியாத அத்தியாயம்!

tamil-filmmaker-rudhraiya-passes-away

ருத்ரய்யா… கிட்டத்தட்ட 36 ஆண்டு காலம் தமிழ் சினிமா தவறாமல் உச்சரிக்கும் படைப்பாளியின் பெயர் இது. இத்தனைக்கும் ருத்ரய்யா இயக்கியவை இரண்டே இரண்டு படங்கள்தான்.

இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாகப் போகவில்லை. ஆனால் ருத்ரய்யாவுக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு பக்கத்தை உருவாக்கும் அளவுக்கு அழுத்தமான பதிவுகளாக அமைந்தன.

ஒன்று அவள் அப்படித்தான். இன்னொன்று கிராமத்து அத்தியாயம்.

தமிழ் சினிமா முழுமையாக வண்ணத்துக்கு மாறிக் கொண்டிருந்த தருணத்தில், தன் முதல் படத்தை கறுப்பு வெள்ளையில் தந்தார் ருத்ரய்யா. அன்று முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்த ரஜினி, கமல் (அன்றைய தேதிக்கு கமல் – ரஜினி என்ற வரிசைதான்!) ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன் என பாத்திரங்களுக்கேற்ப தேர்வு செய்திருந்தார்.

வாழ்க்கையில் ஏமாற்றங்களைச் சந்தித்து, மனிதர்கள், குறிப்பாக ஆண்கள் மீதே நம்பிக்கையற்றுப் போன ஒரு பெண்ணை மையப்படுத்திய கதை. அவள் வாழ்க்கையில் நுழையும் ரஜினி, கமல். ரஜினி யதார்த்தவாதி. பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பவர். பணம் பண்ணுவதுதான் நோக்கம். கமலோ பெண்ணியவாதியாக தன்னை முன்நிறுத்துபவர். பெண்களுக்காக ஒரு டாக்குமென்டரி தயாரிக்கும் முயற்சியில் இருப்பவர். அவருக்கு உதவியாகத்தான் தன்னிடம் வேலைப் பார்க்கும் ஸ்ரீப்ரியாவை அனுப்பி வைப்பார். மெல்ல மெல்ல  ஸ்ரீப்ரியாவை கமல் காதலிக்கத் தொடங்க, அதை அவர் நிராகரிப்பார்.

பின்னர் கமலின் காதலை உணரும் போது, அவர் வேறு பெண்ணை மணம் முடித்துத் திரும்புவார்.

இறுதிக் காட்சி, ரஜினி காரை ஓட்டிக் கொண்டிருப்பார். பின்னிருக்கையில் புதுமணத் தம்பதிகள் கமல் – சரிதா. உடன் ஸ்ரீப்ரியா. சரிதாவைப் பார்த்து ‘பெண்ணுரிமை பத்தி என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்பார் ஸ்ரீப்ரியா.

பதிலுக்கு  ‘ஓ.. எனக்கு அதப் பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது’ என்பார் சரிதா.

‘ஆச்சர்யமே இல்ல.. நீங்க சந்தோஷமா இருப்பீங்க!’ என்று கூறிவிட்டு இறங்கிக் கொள்வார் ஸ்ரீப்ரியா.

aval appadithaan

‘மீண்டும் ஒரு முறை இறக்கிறாள். இருப்பினும் அவள் மீண்டும் பிறப்பாள். அவள் அப்படித்தான்..’ என்ற வாய்ஸ் ஓவருடன் படம் முடியும்!

அன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே அந்நியமான, புதிய முயற்சி இந்தப் படம். தோல்வியைச் சந்தித்தது. ஆனால் பின்னாட்களில் மறுவெளியீடாக வந்து வெற்றிப் பெற்றது.

இளையராஜாவின் இசை இந்தப் படத்தின் முக்கிய சிறப்பம்சம். மூன்று பாடல்கள்தான். உறவுகள் தொடர்கதை, பன்னீர் புஷ்பங்களே பாடல்களை கங்கை அமரனும், வாழ்க்கை ஓடம் என்ற பாடலை கவியரசு கண்ணதாசனும் எழுதியிருந்தனர்.

இந்தப் படத்தை 100 மறக்க முடியாத இந்திய சினிமாக்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து கவுரவித்தது ஐபிஎன் தொலைக்காட்சி.

கிராமத்து அத்தியாயம்

அவள் அப்படித்தான் வெளியான இரண்டு ஆண்டுகள் கழித்து கிராமத்து அத்தியாயம் என்ற தலைப்பில் தனது புதிய படத்தை அறிவித்தார் ருத்ரய்யா. இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தவர் கமல்ஹாஸன். ஆனால் திடீரென படத்திலிருந்து அவர் பின்வாங்கிக் கொண்டார்.

இதை தனது படைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்ட ருத்ரய்யா, முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டும் வைத்து களத்திலிறங்கினார். இளையராஜா பிரமாதமான இசையை வழங்கியிருந்தார். கங்கை அமரன் எழுதிய ஆத்து மேட்டுல, ஊதக் காத்து வீசயில, வாடாத ரோசாப்பு, பூவே இது பூஜைக் காலமே ஆகிய பாடல்கள் அன்றைக்கு பட்டிதொட்டியெங்கும் பாப்புலர். இன்றைக்கும்தான்!

1525388_527054240724713_2027805322_n

ஆனால் இந்தப் படமும் சரியாகப் போகவில்லை.

அதன் பிறகு ருத்ரய்யா எங்கிருக்கிறார் என்றே தெரியாத நிலைதான். ஆனால் அவர் பெயர் அடிக்கடி பத்திரிகைகளில் வந்து கொண்டுதானிருந்தது. முன்னணி இயக்குநர்கள் பலரும் அவரையும் அவரது படங்களையும் குறிப்பிட்டு எழுதியும் பேசியும் வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பட முயற்சியில் இறங்கினார் ருத்ரய்யா. கமலுக்காக ஒரு கதை வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். கார்ப்பொரேட் நிறுவனம் ஒன்று அவரது கதையைத் தயாரிக்கவும் முன்வந்தது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.

ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவர் தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தது போலத் தெரிந்தாலும், அவர் அன்றாட நிகழ்வுகளை கவனித்து வந்தார். இன்றைய சினிமா மீதான தனது பார்வை, விமர்சனங்களை முன் வைக்கவும் தவறியதில்லை. 67 வயதில், மனைவியைப் பிரிந்து தனிமையில் வாடி மரணத்தைத் தழுவினார்!
One thought on “ருத்ரய்யா… தமிழ் சினிமாவின் மறக்க முடியாத அத்தியாயம்!

  1. குமரன்

    வருத்தம் தரும் வரலாறு.

    இரண்டுமே வெகு அருமையான படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *