BREAKING NEWS
Search

இலங்கையில் ஒரு கண்ணை இழந்த சர்வதேச பெண் நிருபர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை!

இலங்கையில் ஒரு கண்ணை இழந்த சர்வதேச பெண் நிருபர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை!

ஹோம்ஸ்: சிரியாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பிரபல போர் முனை செய்தியாளர் மேரி கொல்வின், பிரபல பிரெஞ்ச் புகைப்படக்காரர் ரெமி ஓச்லில் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்த்துக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து, அங்கு மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை.

எனினும், அரசு எதிர்ப்பாளர்களின் துணையுடன் பெரும் ஆபத்துக்களுக்கு மத்தியில் செய்தியாளர்கள் சிலர் அங்கு சென்று நடப்பதை உலகுக்கு அறிவித்து வருகின்றனர். ள்ளனர்.

இந்த நிலையில், ஹோம்ஸ் நகரில் ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் மேரி கோல்வின் மற்றும் பிரெஞ்சு புகைப்படக்காரர் ரெமி ஒச்லிக் ஆகியோர் தங்கியிருந்த கட்டடம் மீது அரசு படைகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தின.

இதில், அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.  மேலும், மூன்று பத்திரிகையாளர்கள் பலத்த காயம் அடைந்ததுள்ளனர்.

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற வெளிநாட்டு செய்தியாளரான மேரி கொல்வின்,  அமெரிக்காவில் பிறந்தவர்.

பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த இவர், உலகின் மோதல் நடக்கும் நாடுகளுக்கு சென்று செய்தி சேகரிப்பதில் துணிச்சல் மிக்கவர்.

இலங்கையில் ஒரு கண்ணை இழந்தவர்…

கடந்த 2001-ம் ஆண்டு இலங்கையின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் செய்தி சேகரிக்க, எல்லையைத் தாண்டியபோது சிங்களப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கொல்வின், தனது ஒரு கண்ணையும் இழந்தார். இதற்கு விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கண்ணை இழந்தாலும், மனதின் உறுதியை இம்மியும் இழக்காத மேரி கொல்வின், தனது போர் முனை செய்தியாளர் பணியைத் தொடர்ந்தார். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழர் படுகொலையின் போது, வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பி நடேசன் மற்றும் புலிகள் சமாதான செயலக இயக்குநர் புலித்தேவன் ஆகியோருடன் கடைசியாகப் பேசியவர் மேரி கொல்வின்தான்.

சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்றத்துக்கு ஒருவகையில் முழு சாட்சியாக இருந்தவர் கொல்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்கான பிரிட்டிஷ் அரசின் விருதை வென்றவர் மேரி கொல்வின். கடைசியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) சேனல் 4 தொலைக்காட்சியில் தோன்றி, சிரியாவில் நடக்கும் தாக்குதலின் கொடூரத்தை விவரித்தார்.

கொல்வின் படுகொலைக்கு சர்வதேச அளவில் கண்டனங்களும் இரங்கல் செய்திகளும் வெளியாகி வருகின்றன.

சன்டே டைம்ஸ் ஆசிரியர் ஜான் விதரோ தனது அறிக்கையில், “மேரி கொல்வின் ஒரு போர் நிருபர் மட்டுமல்ல, அதற்கும் மேல் மிகச்சிறந்த மனித உணர்வுகள் கொண்டவர். துடிப்பானவர். ஆபத்துக்களை எதிர்நோக்கத் தயங்காதவர். 2001-ல் இலங்கையில் அவர் படுகாயமுற்று கண்ணை இழந்தாலும், நோக்கத்தில் உறுதியாக இருந்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பத்திரிகை – தொலைக்காட்சி அதிபர் ரூபர்ட் முர்டோக்கும் கொல்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேரி கொல்வினின் கடைசி ரிப்போர்ட்:

-என்வழி செய்திகள்
One thought on “இலங்கையில் ஒரு கண்ணை இழந்த சர்வதேச பெண் நிருபர் மேரி கொல்வின் சிரியாவில் படுகொலை!

  1. குமரன்

    /// சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்றத்துக்கு ஒருவகையில் முழு சாட்சியாக இருந்தவர் கொல்வின் என்பது குறிப்பிடத்தக்கது.///

    நமக்குத்தான் அடிமேல் அடி விழுகிறது.

    மேரி போன்ற மனிதர்கள் அரிது. ஆனால் அவர்களது உயிர் மிகவும் அரிதாகி விடுகின்றதே. உண்மையை நிலைநாட்ட எத்தனை சோதனைகள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *