BREAKING NEWS
Search

ரிகார்ட் ப்ளேயர்

ரிகார்ட் ப்ளேயர்

IMG-20160224-WA0029

ரு காலத்தில் இசை கேட்புக்கு பிரதான மூலமாகத் திகழ்ந்த வினைல் ரிகார்டுகள், தொன்னூறுகளின் இறுதியில் கிட்டத்தட்ட வழக்கொழிந்த நிலைக்கு வந்தன. ஆனால் 2004-க்குப் பிறகு மீண்டும் வினைல் கேட்கும் ஆர்வம் அதிகரித்தது, இங்கல்ல மேற்கத்திய மக்களிடம் (நம்மவர்களுக்கு டவுன்லோடு போதும்!).

கடந்த பத்தாண்டுகளில் வினைல் ரிகார்டுகளின் விற்பனை எண்ணிக்கை பிரமிக்க வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 12 மில்லியன் ரிகார்டுகள் விற்றிருக்கின்றன. அதாவது 1.20 கோடி இசைத் தட்டுகள் ((2014-ல் 9.19 மில்லியன்).

IMG-20160224-WA0031

ஏற்கெனவே சாதனைப் படைத்த இசைக் கலைஞராக இருந்தாலும் சரி, புதியவர்களாக இருந்தாலும் சரி… தங்கள் படைப்பு ரிகார்டு வடிவில் வெளியாவதை கௌரவமாகக் கருதுகிறார்கள். கட்டாயம் ரிகார்ட் கட் பண்ண வேண்டும் என்பது அவர்களின் முதல் விருப்பம்.

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் மிகப் பெரிய எலெக்ட்ரானிக் விற்பனை மாலான ஃப்ரைஸில் (FRYS) வினைல் மற்றும் ரிகார்ட் ப்ளேயருக்கென்று தனி பிரிவே உள்ளது. வால்மார்ட், பெஸ்ட் பை ஷோரூம்களிலும் கூட உண்டு.

ஆடியோ டெக்னிகா, சோனி, க்ராஸ்லி, இயான், பயோனிர், டெனான் என பிரபல பிராண்டுகளின் ரிகார்ட் ப்ளேயர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பக்கத்திலேயே புத்தம் புது எல்பி ரிகார்டுகள் ஏராளமாய். பார்க்கப் பார்க்க அத்தனை ஆசையாய் இருந்தது.

IMG-20160224-WA0022

ரிகார்டுகள், ப்ளேயர்கள் விலை அந்த ஊர் நிலவரப்படி ரொம்பவே நியாயமான விலைதான். ரிகார்ட்கள் இப்போது 15 லிருந்து 35 டாலருக்குள் கிடைக்கின்றன. 80களில் 20 டாலர் வரை விலை இருந்ததாம். ஒப்பிட்டால், பெரிய வித்தியாசம் இல்லை.

இந்தியாவில் ரிகார்ட்கள் இப்போதைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வந்து கொண்டிருக்கின்றன. அதுவும் இந்தியில் மட்டும். 90கள் வரை அதிக ரிகார்ட்கள் வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில், கடந்த 20 ஆண்டுகளாக அடியோடு நின்று போய்விட்டது. திரும்ப வருமா என்றால்.. விலைதான் பெரும் தடையாக இருக்கிறது. புதிய ரிகார்டை ரூ 1500 வரை விற்றால்தான் லாபம் கிடைக்கும் என தவறான மனப்பான்மை நிலவுவதால், யாரும் ரிஸ்க் எடுக்காமல் உள்ளனர்.

IMG-20160224-WA0021

தமிழின் கடைசி ரிகார்டான எஜமான் ரூ 85-க்குக் கிடைத்தது. இன்றைய நிலையில் புதிய ரிகார்டுகளை ரூ 300 லிருந்து 400-க்குத் தர முடியும் என்கிறது மார்க்கெட் நிலவரம். இதுவே விலை அதிகம்தான் என்றாலும், ஒலித் துல்லியம், உடனடியாக தரவிறக்கம் செய்ய முடியாத தன்மை, இசைக்கான நீடித்த ஆயுள் போன்றவற்றை மனதில் கொண்டு மீண்டும் ரிகார்ட்களை வெளியிட முயற்சி மேற்கொள்ளலாம்.

1000 படங்களுக்கு இசையமைத்து சாதனைப் படைத்த இளையராஜாவின் இசை ஆல்பங்களை மீண்டும் வினைல் ரிகார்டுகளாக வெளியிடுவது, அவரது இசையை இன்னும் பல காலத்துக்கு அழியாமல் பாதுகாக்கும் ஒரு பெரும் முயற்சி. காரணம், ராஜா இசையமைத்து ரிகார்டுகளாக வெளிவந்த படங்களின் இசை இன்னும் பொக்கிஷமாக பலரிடம் உள்ளது. ஆனால் 90களின் பிற்பகுதியில் மற்றும் 2000-களில் வெளிவந்த அவரது படங்களின் இசை ஆல்பங்கள் எத்தனை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்விக்கு விடையில்லை.

IMG-20160219-WA0035

ஏஆர் ரஹ்மானின் இந்தி, ஹாலிவுட் படங்களின் இசை இப்போது இசைத் தட்டுக்களாக வெளியாவது பலருக்கும் தெரியாத உண்மை. தமிழில் கிழக்குச் சீமைதான் அவரது கடைசி ரிகார்ட்.

ராஜாவின் ஆயிரம் படங்களையும் வெளியிட முடியாவிட்டாலும், தேர்ந்தெடுத்த ஆல்பங்களை ரிகார்டுகளாக இசை வெளியீட்டு நிறுவனங்கள் முன்னெடுத்தால், அது தமிழ் இசைக்கு பெரும் சேவையாக அமையும். துல்லியமான இசைக் கேட்கும் அனுபவமும் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கும். செய்வார்களா?

dangerous

குறிப்பு: சமீபத்தில் நான் வாங்கிய மைக்கேல் ஜாக்ஸன் கலெக்ஷன்ஸ், டேஞ்சரஸ், பேட் மற்றும் த்ரில்லர் 25-ம் ஆண்டு ஸ்பெஷல் எடிஷன்.

குறிப்பு 2: ‘ரிகார்ட் ப்ளேயர்’ என்ற தலைப்பில், எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து 90 கள் வரை வெளியான இளையராஜா மற்றும் முக்கிய இசையமைப்பாளர்களின் இசைத் தட்டுகள் குறித்து எழுதும் திட்டம் உள்ளது.

-வினோ
படங்கள்: இர தினகர்

என்வழி

 
One thought on “ரிகார்ட் ப்ளேயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *