BREAKING NEWS
Search

ஒரு அரசமரத்தடி பஞ்சாயத்து!

6

நான் அரசமரத்தடித் திண்டில் உட்கார்ந்திருந்தேன். வெள்ளைவேட்டி சட்டை அணிந்து வெண்கலச் சொம்பில் கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் வைத்திருந்தேன். ஒரு கூட்டம் என்னிடம் நீதியைத் தேடி வந்துவிட்டது. இதற்குத்தான் நான் வெள்ளை அணிவதில்லை என்றாலும் வந்துவிட்டோருக்கு வழி சொல்லும் பொறுப்பிலிருந்து நான் பின்வாங்க விரும்பவில்லை. ஊரில் யார் வந்து சுடுகாட்டுக்கு வழிகேட்டாலும் நான்தான் சொல்லி அனுப்புவேன்.

‘ஐயா… இவுங்க எங்க ஆளக் கொன்னுட்டாங்க…’ எதிர்த்தரப்பைக் காட்டி ஒரு சப்பையான கூட்டம் முறையிட்டது.

நான் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குப் பலமுறை சென்ற அனுபவஸ்தன் என்பதால் அங்கே இந்தப் புகாரை எப்படி அணுகுவார்கள் என்பதும் தெரியும். அதேபோல் நான் அணுகினேன்.

‘அவுங்க கொல்ற அளவுக்கு உங்க ஆளு எதையோ பண்ணியிருக்கனுமே… அப்படி என்ன பண்ணாரு ?’

துணுக்குற்ற அவர்கள் எங்கள் ஆள் எதையும் நியாயமாகத்தான் செய்வார் என்கிற நம்பிக்கைக் குளத்தில் கல்விழுந்ததுபோல் கலவரப்பட்டார்கள்.

‘அப்படி எதுவும் செய்யலீங்களே…’ என்று தலையைச் சொறிந்தார்கள்.

‘நல்லா யோசிச்சுப் பாருங்க… உங்காள் எதையாவது ஏடாகூடமா செஞ்சிருக்கனுமே…’ – நான் தூண்டிலிட்டேன்.

‘ஆமாங்க… ஒரே ஒரு தடவை இவுங்க ஊருக்கு அடியாளுங்கள அனுப்பிட்டாருங்க…’

‘அதானே… பார்த்தேன். இல்லாட்டி இவ்வளவு பெரிய சம்பவம் நடக்குமா ?’ என்றபடி நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

‘உங்க ஆளு தலைக்கு மேல இருக்கிற தன்னோட வேலையப் பார்க்கிறத விட்டுபுட்டு அங்கே எதுக்கு ஆளுங்கள அனுப்புனாப்ல…’

‘அங்கே ஒரே சண்டைங்க… அடிதடி… இவுங்ககிட்ட அடிவாங்குற ஒரு பய இருக்கான். அவன் கண்ட்ரோல்லதான் அந்த இடம் இருக்கு. அவன் அடிதாங்க முடியலேன்னா எங்ககிட்ட டீப்பொட்டணத்தோட வந்து உதவி உதவின்னு கால்ல விழுந்துடறான். டீ வேற நல்லாருக்குமுங்க. அதான் அவனைக் காபந்து பண்ணலாம்னு எங்காளு கொஞ்சம் ஸ்டெப் எடுத்தாப்ல…’

‘போன ஆளுங்க அமைதிய நிலைநாட்டுனாங்களா ?’

‘ஹி ஹி இல்லீங்க… கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாங்க…’

‘அதானா பார்த்தேன்… வாய்க்கா தகராற தீர்க்க வந்தவன் வரப்ப அழிச்ச கதையால்ல இருக்கு…!’

‘அதனால இவுங்க வேற வழியில்லாம இப்படிப் பண்ணிபுட்டாங்களா… சரி. இவுங்கதான் எல்லாம் பண்ணாங்களா ?’

‘இல்லீங்க… பண்ணவங்களத் தேடிப்போனதில அங்கங்கே அவுட்டுங்க. இவுங்க அவங்களோட ஹாய் ஹலோ சொன்னவங்க…’

‘என்னது ? செல்லாது செல்லாது. சம்பவத்தை நேரடியாகப் பண்ணவங்கள விட்டுட்டு மத்தவங்கள வெச்சி என்ன பண்ணனும்கறீங்க ?’

‘அவுங்க போய்ட்டாங்க. இவுங்கதான் மிச்சம் இருக்கறவங்க…’

‘வேற யாராச்சும் சம்பந்தப்பட்டிருப்பாங்கன்னு நினைக்கறீங்களா ? உங்களுக்குள்ளேயே யாராவது…’

‘அதெல்லாம் எதுக்குங்க ? இவங்கள ஒருவழி பண்ணுங்க…’

‘இது அரசமடித்தடி பஞ்சாயத்துதான். ஆனாலும் நியாயம் நியாயம்தான். நீங்க சொல்ற எல்லாமே முன்னுக்குப் பின் முரணா இருக்கு. நீங்க சொல்ற கதை நடந்து ஒரு தலைமுறை ஆகிப்போச்சு. இந்தக் கால இடைவெளியில முரண்பாடுகள் எல்லாத்துக்குமே நியாயவலு சேர்ந்துபோச்சு. உன் காவல்ல இவங்க இத்தனை காலமா இருந்திருக்காங்க. இப்போ தாவா முத்திப்போயி ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரம். இப்பப் பார்த்து எல்லாப் பிரச்சனையும் கிளப்பறீங்க. கத்தியில குத்தினவன்தான் பொறுப்பு. கத்திக் கடையில பில் போட்டவனுமா பொறுப்பு ? அப்படின்னா அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகியிருக்கு. இது இருதரப்புக்குமே பொருந்தும். இதைக் கைவிட்டுத் தொலைத்து காடு கழனியைப் பாருங்க. மறந்திருந்து புண்களை ஆற விடுங்க.’

நான் அரசமரத்தடி திண்டை விட்டிறங்கி வடிவேலுவை வண்டியெடுக்கச் சொன்னேன்.

நன்றி: கவிஞர் மகுடேஸ்வரன்

(குறிப்பு: ராஜீவ் கொலை வழக்கு, அதன் மீதான் தீர்ப்புகள், குற்றவாளிகள் என அடைக்கப்பட்டுள்ளோரின் நிலை குறித்து ஏகப்பட்ட விவாதங்கள் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே கடந்து வந்த வழக்கு இது. எத்தனை பேருக்கு இது முழுசாகப் புரிந்திருக்கும் என்று தெரியவில்லை.

அவர்களுக்காக கவிஞர் மகுடேஸ்வரன் எழுதியுள்ள ஒரு உருவகக் கதைதான் மேலே நீங்கள் படித்தது!)
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *