பிறந்த நாளுக்கு வாழ்த்திய பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்த ரஜினி
சென்னை: தனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
நேற்று டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளை உலகமே கொண்டாடியது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தமிழில் ட்வீட் செய்து ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னார்.
திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட கட்சித் தலைவர்கள் ரஜினியை வாழ்த்தினர்.
இந்தியத் திரையுலகின் ஜாம்பவான் அமிதாப் பச்சன், கமல்ஹாஸன் தொடங்கி, இளம் தலைமுறை நடிகர் – நடிகைகள் மற்றும் திரையுலகக் கலைஞர்கள் அத்தனை பேரும் ரஜினிக்கு தங்களின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மீடியா மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை புதுப் புது பாணியில் தெரிவித்தன.
இந்திய அஞ்சல்துறை நேற்று முழுக்க ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கெல்லாம் நன்றி தெரிவித்து, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நான்கு ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார்.
அவற்றில் பிரதமர் மோடி தனது பிஸியான பணிகளுக்கிடையிலும் எனக்காக பிறந்த நாள் வாழ்த்து கூறியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல, திமுக தலைவர் கருணாநிதி, அமிதாப் பச்சன், கமல்ஹாஸன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினி, தனி ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனி ட்வீட் செய்துள்ளார்.
-என்வழி