BREAKING NEWS
Search

தேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்!

சென்னை: தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: சமீப காலமாக ரஜினியின் ஆதரவு தனக்கு வேண்டும் என்று கேட்டு வருகிறார் கமல் ஹாஸன். முதலில் ‘நான் கேட்காமலேயே ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று கூறியவர், பின்னர், ‘ரஜினியிடம் ஆதரவு கேட்டிருக்கிறேன், அவரும் கண்டிப்பாக தருவதாகக் கூறியுள்ளார்’ என்றும் கூறி வந்தார். கடந்த இரண்டு மூன்று தினங்களாக, ஏதோ ரஜினிகாந்த் வலிய வந்து ஆதரவு தருவதாகக் கூறியது போலவும், இப்போது தராமல் இழுத்தடிப்பது போலவும் தொடர்ந்து மீடியாவில் பேசி வருகிறார் கமல் ஹாஸன். ரஜினி தரப்பில் இதுகுறித்து எந்த பதிலும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று ரஜினியின் தர்பார் பட முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கமல் ஹாஸன் தொடர்ந்து ரஜினி ஆதரவு வேண்டும் என்று கேட்டு வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன், எனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று. அதில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்து திரும்பத் திரும்பப் பேசி எங்கள் நட்பைக் கெடுத்து விடாதீர்கள்,” என்றார். ரஜினி இந்த பதிலை மீடியாவிடம் கூறினாலும், அது கமல் ஹாஸனுக்கே நேரடியாகச் சொன்னது போலவே அமைந்தது.

நட்பு மரியாதைக்காக தன்னிடம் ரஜினி கூறிய ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு, ரஜினி ஆதரவு தனக்குத்தான் என்று திரும்பத் திரும்ப பேசி வரும் கமலுக்கு இதைவிட தெளிவாக எப்படி பதிலளிக்க முடியும்!

அடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து ரஜினியிடம் கருத்துக் கேட்டனர் செய்தியாளர்கள். அதற்கான பதிலாக ரஜினி கூறியது: “நதிகளை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நான் வெகுநாட்களாக கூறி வருகிறேன். மறைந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவு இது. இது தொடர்பாக அவரை நான் ஒரு முறை சந்தித்தபோது, இந்தத் திட்டத்துக்கு பகீரத் யோஜனா என்று பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். சாத்தியமாகாத ஒன்றை சாத்தியப்படுத்திக் காட்டுவதுதான் பகீரத் யோஜனா. சிரித்தபடி அதனைக் கேட்டுக் கொண்டார் வாஜ்பாய். அந்த வகையில், தற்போது, நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

மக்கள் ஆதரவுடன் – அவர்கள் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாது – ஒருவேளை மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நதிகள் இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நதிகளை இணைத்தால் நாட்டில் இருந்து வறுமை போய்விடும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்,” என்றார்.

முன்னதாக, தர்பார் படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அதற்கு அனைவருக்கும் நன்றி என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *