BREAKING NEWS
Search

ஸ்டன்ட் கலைஞர்களுக்கு எந்த நேரத்திலும் உதவத் தயார்…! – சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு

ஸ்டன்ட் கலைஞர்களுக்காக நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார்!

stunt-rajini3

சென்னை: ஸ்டன்ட் கலைஞர்களுக்கு உதவ என் வீட்டின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

தென்னிந்திய திரைப்பட மற்றும் டெலிவிஷன் ஸ்டண்ட் இயக்குனர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அனல் அரசு தலைமை தாங்கினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “நான் சிறுவயதில் சினிமா படங்கள் பார்க்கும்போது எத்தனை சண்டைக் காட்சிகள் உள்ளன என்றுதான் முதலில் தெரிந்து கொள்வேன். தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் என்னிடம் கதை சொல்ல வரும்போது படத்தில் எத்தனை சண்டை காட்சிகள் இருக்கும் என்றுதான் கேட்பேன்.

ஹாலிவுட் படங்கள், தமிழ், இந்தி, தெலுங்கு படங்கள் எதுவாக இருந்தாலும் அதிரடி படங்கள் மட்டுமே விரும்பி பார்க்கப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்கள்தான் அதிகமான வசூலையும் குவிக்கின்றன. ரசிகர்கள் மத்தியில் அதிரடி படங்களுக்குத்தான் மவுசு இருக்கிறது. நடிகர்களும் அதிரடி படங்களில் நடிக்க ஆர்வப்படுகின்றனர்.

சண்டை காட்சிகளுக்கான பெருமைகள் ஸ்டண்ட் கலைஞர்களையே சேரும். அவர்கள் தங்கள் உடம்பை மூலதனமாகவும் உயிரை பணயமாகவும் வைத்து தொழில் செய்கிறார்கள். வியர்வையோடு ரத்தம் சிந்துகிறார்கள். தங்கள் வயிற்று பிழைப்புக்காகத்தான் கஷ்டப்பட்டு சண்டை காட்சிகளில் நடிக்கிறார்கள்.

stunt-rajini

சண்டை காட்சிகள் எடுக்கும்போது கை உடைந்தாலும் கால் உடைந்தாலும் ஒன்றும் ஆகவில்லை என்றுதான் சொல்வார்கள். ஆம்பூர் பாபு, ஜுடோ ரத்னம் உள்பட பல ஸ்டண்ட் மாஸ்டர்கள் எனது படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்து இருக்கிறார்கள். அவர்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நான் நடித்த முரட்டுக்காளை படத்தில் ரெயில் சண்டை காட்சி ஒன்று இடம் பெற்று உள்ளது. அந்த சண்டையை வெளிநாட்டு கலைஞர்களை வைத்து படமாக்க தயாரிப்பாளர் திட்டமிட்டார். ஜுடோ ரத்னம், நாங்களே அந்த சண்டை காட்சியை சிறப்பாக அமைத்து தருகிறோம் என்று வாக்குறுதி அளித்து சவாலாக எடுத்து செய்தார்கள்.

அப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கிடையாது. அதையும் மீறி சண்டை காட்சி பிரமாதமாக வந்து இருந்தது. நான் நடித்து வரும் 2.0 படத்தில் வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. நமது கலைஞர்களுக்கும் அதே வசதிகள் செய்து கொடுத்தால் உலகத் தரத்துக்கு மேலாக சாதிப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களிடம் திறமைகள் இருக்கிறது.

எம்.ஜி.ஆர் ஸ்டண்ட் கலைஞர்கள் மீது அன்பாக இருந்தார். அவர்தான் இந்த சங்கத்தை ஆரம்பித்து வைத்தார். அவரது நூற்றாண்டு விழாவில் இந்த அமைப்பு பொன்விழா காண்பது மிகவும் சிறப்பானது. எம்ஜிஆர் முதல்வரான பிறகு 30, 40 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மாதம் ரூ.500, ரூ.600 சம்பளமாக கொடுத்து வந்தார்.

நீங்கள் சண்டைகாட்சி படப்பிடிப்பின் போது காட்டும் அக்கறையை உங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும் படிக்க வைப்பதிலும் காட்டுங்கள்.
உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் வந்து கேளுங்கள்.
என் வீட்டு கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கும்,” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகர்கள் பலரும் வரவில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி தனது மகள்கள், மருமகன் தனுஷோடு வந்து சிறப்பித்தார்.

-என்வழி
2 thoughts on “ஸ்டன்ட் கலைஞர்களுக்கு எந்த நேரத்திலும் உதவத் தயார்…! – சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு

  1. Rajagopalan

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகர்கள் பலரும் வரவில்லை.
    I thought this. Why nobody came?

  2. ஸ்ரீகாந்த்.1974

    தல கணத்திடாத தலைவன்
    எங்கள் அண்ணன் மட்டும் தான்!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *