சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்துக்கு தர்பார் என்று தலைப்பிட்டுள்ளனர். படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும் வெற்றிப் படமான பேட்ட-க்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரும், தலைப்பும் இன்று வெளியாகின. படத்துக்கு தர்பார் என்று தலைப்பிட்டுள்ளனர். ரஜினி மீண்டும் இளமையாக, செம ஸ்டைலான தோற்றத்தில் காட்சி தருகிறார். முதல் பார்வை போஸ்டரிலேயே ரஜினியின் கேரக்டரைக் காட்டும் விதமாக போலீஸ் சீருடை, பெல்ட், தொப்பி, துப்பறியும் நாய், துப்பாக்கிகள், குற்றம் நடந்த இடம் என காவல் துறை சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் வைத்து டிசைன் செய்துள்ளனர்.
இது மும்பை பின்னணியில் நடக்கும் போலீஸ் கதை என்பதை போஸ்டர் தெளிவாகத் தெரிவிக்கிறது.
இன்று காலை 8.30 மணிக்கு இந்த போஸ்டர் வெளியானது. அடுத்த சில நொடிகளில் இந்திய அளவிலும், சில நிமிடங்களில் உலகளவிலும் தர்பார் தலைப்பும் போஸ்டரும் ட்ரெண்டிங் ஆனது.
2020 பொங்கல் ரிலீஸ் என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவித்துள்ளனர் இந்தப் போஸ்டரில்!
-என்வழி