BREAKING NEWS
Search

நான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது! – தலைவர் ரஜினி

தலைவர் பேட்டி

சென்னை: நான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது என்று ரஜினிகாந்த் கூறினார்.

அமெரிக்கா செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கேள்வி: அமெரிக்க பயணம் குறித்து…

பதில்: தனிப்பட்ட முறையில் செல்கிறேன். ஒரு பத்து நாட்கள் இருந்துவிட்டு திரும்புவேன்.

கேள்வி: போராட்டத்தில் போலீசார் மீது எதார்த்தமாக நடந்த நிகழ்வை மட்டும் கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று உங்கள் மீது இயக்குநர் பாரதிராஜா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறாரே?

பதில்: போலீசார் சீருடையில் இருக்கிற போது, கை வைப்பது மன்னிக்க முடியாத குற்றம். அதே நேரம் சட்டம் கையில் இருக்கிறது என்று போலீசாரும் வரம்பு மீறி போகக்கூடாது.

கேள்வி: குருமூர்த்தி உங்களை சந்தித்தற்கு என்ன காரணம்?

பதில்: குருமூர்த்தி எனக்கு 25 ஆண்டுகால நண்பர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். இதில் தனித்துவம் ஒன்றும் கிடையாது.

கேள்வி: நீங்கள் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த பிறகு, திரைத்துறையில் இருந்த நண்பர்கள் கூட உங்களை விமர்சனம் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது.

கேள்வி: சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறீர்கள். கட்சி பணி எந்த நிலையில் இருக்கிறது. நீங்கள் அமெரிக்கா சென்று வந்த பின்னர் அரசியல் கட்சி அறிவிப்பு இருக்குமா?

பதில்: பாருங்க… மன்றத்துக்குள் நடக்கிற எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. நான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் தெரியாது. கண்டிப்பாக உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) சொல்லாமல் அதைச் செய்ய முடியாது. சரியான காலத்தில் அதை தெரிவிப்பேன்.

கேள்வி: பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நீங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லையே?

பதில்: அது ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது உண்மையானால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்து கிடையாது.

கேள்வி: கவர்னர் பெயரும் அடிபடுகிறதே?

பதில்: அதைப் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை.

கேள்வி: பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை முகநூல், டுவிட்டரில் பதிவு செய்துவிட்டு, அட்மின் பதிவு செய்ததாக மழுப்பலாக கூறி வருகிறார்களே…

பதில்: தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அதில் 2-வது கருத்தே கிடையாது.

கேள்வி: கனிமொழி தொடர்பாக…

பதில்: அது பற்றி, நான் பேச விரும்பவில்லை.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *