BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ‘ரஜினிகாந்து’க்கு வயது 41!

ரஜினிகாந்த் 41

kb-rajini-1

லைவர் ரஜினிகாந்துக்கு வயது இன்றைக்கு 65 ஆக இருக்கலாம். ஆனால் அவருக்கு சூட்டப்பட்ட ‘ரஜினிகாந்த்’ என்ற பெயருக்கு வயது 41.

ஆம்… சரியாக 41 ஆண்டுகளுக்கு முன் இதே ஹோலி தினத்தன்று சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற 24 வயது இளைஞருக்கு ரஜினிகாந்த் என்ற பெயரைச் சூட்டினார் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர்.

எழுபதுகளின் ஆரம்ப காலம்… தங்க இடமின்றி, வறுமை, பசியைப் பொறுத்துக் கொண்டு சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துக் கொண்டிருந்தார் சிவாஜிராவ்.

அந்தப் படிப்புக்கான செலவை அவரது நண்பர் ராஜ்பகதூர் ஏற்றுக் கொண்டு மாதந்தோறும் தன் சம்பளத்திலிருந்து ரஜினிக்கு அனுப்பி வைப்பாராம்.

ஒரு முறை பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுடன் பேச இயக்குநர் பாலச்சந்தர் வந்திருந்தபோது, அவரது பார்வையில் பட்டார் சிவாஜி ராவ். அந்த வித்தியாசமான முகமும், கண்களும், கோதிவிடப்பட்ட தலைமுடியும் பாலச்சந்தரை ஈர்த்தது.

1419406635_k-balachander

தன்னை வந்து அலுவலகத்தில் பார்க்குமாறு சிவாஜி ராவிடம் கூறிவிட்டுச் சென்றார்.

பாலச்சந்தரை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது, “இப்போது, அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல் என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல். அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன்,” என்றார்.

அடுத்த சில தினங்களிலேயே அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சீக்கிரமே முடிந்து, படத்தில் டைட்டில் தயாராவதற்கு முன்பு சிவாஜி ராவை அழைத்தாராம் பாலச்சந்தர்.

அப்போது நடந்ததை ரஜினியே இப்படிச் சொல்கிறார்:

“டைட்டிலில் பெயர் போடவேண்டும். சிவாஜிராவ் என்ற பெயர் வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் வேண்டாம். `ராவ்’ என்கிற பெயரும், தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது’ என்றார்.

`நீங்களே ஏதாவது பெயர் சொல்லுங்க சார்!’ என்று கூறிவிட்டுத் திரும்பினேன்.

என் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தேன். `சரத்’, ‘ஆர்.எஸ்.கெய்க்வாட்’ என்ற இரண்டு பெயர்கள் என் மனதில் இருந்தன. அதைச் சொன்னேன். நண்பர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக, ‘நன்றாக இல்லை’ என்று கூறினார்கள்.

மறுபடியும் பாலசந்தர் சார் கிட்ட போய், “நீங்களே ஆசீர்வாதம் செய்து, ஒரு பெயர் வையுங்க!” என்றேன்.

அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். பவுர்ணமி தினம்.

பாலசந்தர் சார் சொன்னார்: ‘என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன்.’

இவ்வாறு பாலசந்தர் சொன்னதும், அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். ‘நல்ல வில்லனா வரணும் என்று ஆசீர்வாதம் செய்யுங்க’ என்றேன்.

‘வில்லன் எதுக்கப்பா! நீ பெரிய நடிகனாக வருவே. பார்த்துக்கொண்டே இரு!’ என்றார், பாலசந்தர் சார்.”

சிவாஜிராவ் கெய்க்வாடுக்கு கே பாலச்சந்தர் ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டிய அந்த நாள், இதே ஹோலி தினம்தான்!

ரஜினி இந்த நாளை மறப்பதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹோலி தினத்தில் தனது குரு பாலச்சந்தரைச் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெறுவார். அந்த நாளில் தமிழ் சினிமாவில் தனது வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த அத்தனைப் பேரையும் மறக்காமல் வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இன்னொன்று, ரஜினிகாந்த் என்பதையே அனைத்து ஆவணங்களிலும் தனது உண்மையான பெயராக மாற்றிக் கொண்டார் ரஜினி. அவர் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவும் கூட ஆர் என்ற  இனிஷியலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

-என்வழி
3 thoughts on “சூப்பர் ஸ்டார் ‘ரஜினிகாந்து’க்கு வயது 41!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *