BREAKING NEWS
Search

போயஸ் தோட்டத்து போதி மரம்!

போயஸ் தோட்டத்து போதி மரம்!

 

-தேனி கண்ணன்

thalaivar-kumudam
போயஸ் கார்டன் ரஜினி சார் வீட்டு வரவேற்பறையில் என் அலுவலக நண்பர்களோடு  காத்திருக்கிறேன். ’நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’ என்று எழுதப்பட்ட வாசகம் அலுவலக சுவற்றில் பெரிய சைஸில் மின்னியது. அது ரஜினி சாரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வாசகம்… ரஜினியே எழுதச் சொல்லி வைத்தது.

சரியாக ஒன்பது மணிக்கு ரஜினி சார் வருவதாக சொல்லப்பட்டது. எல்லோருக்கும் சூடாக டீ வந்தது. சூப்பர் ஸ்டாரை பார்க்கும் நேரத்தில் யாரவது டீ குடிச்சிகிட்டு உட்கார்ந்திருப்பாங்களா..  கையிலேயே வெச்சுகிட்டு இருந்த எனக்கு, அவர் என்ன கலர் ட்ரெஸ் போட்டு வருவார்… எப்படி பேசுவார்னு ஒரே சிந்தனை.

ரஜினி சாருக்காக காத்திருக்கும் இந்த சின்ன இடைவெளியில் சில வருடங்களுக்கு முன் நான் ரஜினி சாரைச் சந்தித்த  அனுபவத்தை சொல்லிவிடுறேன். ஒரு ரசிகன் தான் நேசிக்கும் மனிதருக்காக எந்த எல்லைக்கும் போவான் என்பதை நான் நேரில் பார்த்து மிரண்டு போன சம்பவம் அது.

முத்து படம் வெளியாகியிருந்த சமயம் அது. ரஜினி சாரைப் பார்க்க போயஸ் தோட்டத்தில் ரசிகர்கள் காலையிலேயே கூட ஆரம்பித்திருந்தனர். அன்றைய அரசியல் சூழலில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

என்னுடைய நண்பர்கள் ஊரிலிருந்து வந்திருந்தனர். வந்ததும் “ரஜினி சார் வீட்டுக்குப் போய் பாத்துட்டு வரலாம்” என்று கெஞ்சினார்கள். அடுத்த சில மணி நேரத்தில் போயஸ் கார்டன் வந்து விட்டோம். அது காலை ஏழு மணி.  நாங்கள்தான் சீக்கிரம் வந்து விட்டதாக நினைத்துக்கொண்டு அவர் வீட்டை நெருங்கினால் எங்களுக்கும் முன்பே முன்னூறு பேருக்கும் மேல் கூடியிருந்தனர். இப்போதுள்ள வீட்டின் அமைப்பு அல்ல அது. வீட்டின் முன் ஒரு மரம் இருக்கும்.

rajini

சத்யநாரயணன் கூட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் ரஜினி சாரை பார்க்கும் ஆர்வத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. அந்த தெரு நிறைந்தது. வீட்டு முன்பிருந்த மரத்திலும் ரசிகர்கள் ஏறியிருந்தார்கள்.

சரியாக ஒன்பது மணி. ரஜினி சார் வீட்டுக் கதவு திறந்தது. வெள்ளை சட்டை வேட்டியில் வெண்மேகமாய், மின் காந்தமாய், கருப்பு தங்கமாய் கையசைத்தபடி வந்தார் ரஜினி. அவ்வளவுதான் ஏரியாவே அலறியது. உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை கட்டிப்போடும் அந்த மந்திரப் புன்னகையை தவழவிட்டபடி ரசிகர்களைப் பார்த்து கைகூப்பினார்.

“தலைவா…தலைவா” என்று ஏகத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டனர் ரசிகர்கள். ரஜினி சாரின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு கூக்குரல் எழுந்தது. எல்லோரையும் தனித்தனியாக பார்க்க முயற்சி செய்தன ரஜினி சாரின் கண்கள். அப்படியொரு பெருமிதம், அன்பு அவர் முகத்தில்.

மரத்தில் இருந்த ரசிகர்களில் ஒருவர் ‘தலைவா..’ என்று கூச்சலிட அப்படியே மேலே பார்த்து கையைசைத்தார் ரஜினி சார். அடுத்த நொடியில் அந்த ரசிகர் செய்த செயலைப் பார்த்து பதறிப்போனர் ரஜினி சார்.

தன்னைப்பார்த்து ரஜினி சார் கையசைத்ததும் உணர்ச்சிவசப்பட்டு அந்த ரசிகர் தன்னிடமிருந்த ஏதோ ஒரு பொருளால் கையை கிழித்துக் கொண்டார். ரத்தம் கொட்டுகிறது. இதைபார்த்து பதட்டமடைந்த ரஜினி சார் ‘ஏன்..ஏன் இப்படி..சத்தி..’ என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே சென்று விட்டார். அங்கிருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்த்து. அதே சமயம் எல்லோரும் சேர்ந்து அந்த ரசிகரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இது ஒரு பக்கம் கண்டிக்கதக்கது என்றாலும்  தான் நேசிக்கும் தலைவனை பார்த்த மகிழ்ச்சியில் தன்னையே வருத்திக்கொள்ள தயாராக இருக்கும் ரசிகர்களை பெற்ற ரஜினியின் பிறப்பு போல் யாருக்கு வாய்க்கும்!

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நான் ரஜினி சார் வீட்டில் அமர்ந்திருந்தேன்.

நாங்கள் வந்து பத்து நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தார் ரஜினி சார். விருட்டென்று வந்து எங்கள் முன் வந்து நின்றார். கதர் சட்டை, கரும்பச்சை பட்டு வேஷ்டி கழுத்தில் நீண்டு தொங்கும் கருப்பு கயிற்றில் ஒரு ருத்ராட்சம் ஆடிக்கொண்டிருக்க, “வாங்க..வாங்க..” என்று சிரித்தபடியே கைகூப்பினார். எனக்கு உடலெல்லாம் பரவசம்.
எல்லோரும் நின்றபடியிருக்க, “ஏன்.. நிக்கறீங்க… உட்காருங்க உட்காருங்க…” என்று அவரே அங்கிருந்த சேரை எடுத்துப்போட்டு எங்கள் முன் உட்கார்ந்தார்.

நாங்கள் தயாரித்திருந்த அவருடைய பிறந்தநாள் மலரைக் காட்டினோம். அது அவருக்கு சிறப்பான பிறந்தநாள் 12.12.12 என்று வரும்படி அமைந்திருந்தது.

குமுதத்தின் பதிப்பாக வெளிவந்திருந்த அந்தப் புத்தகத்தை வாங்கி ஆர்வத்தோடு புரட்டினார் ரஜினி. அந்த புத்தகத்தில் கே.எஸ்..ரவிக்குமாரிடம் நான் எடுத்திருந்த பேட்டி வந்திருந்தது. அதை பார்த்து விட்டு ‘படையப்பா’ படத்தை பற்றி பேச ஆரம்பித்தார். அப்போது நான் ‘சார் படையப்பாவின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமே..’ என்று சொன்னதும் ‘நல்ல ஐடியா’ என்று ரசித்தார்.

thalaivar-kumudam 4

“அப்ப எடுத்த படையப்பாவையே இரண்டு பாகமாக எடுத்துட்டோம். அவ்வளவு நீளம். இரண்டு இடைவேளை விடலாமான்னு கூட யோசிசோம். அப்புறம் கமல் சார்தான் அப்படிச் செய்யாதீங்கனு சொன்னார். எந்த காட்சியை வெட்டுறதுன்னு குழப்பமாக இருந்துச்சு. அப்புறம் ஒரு வழியாக கட் பண்ணினார் ரவி.” என்று விவரித்தார் ரஜினி சார்.

“அப்படி வெட்டப்பட்ட காட்சிகளையாவது ரசிகர்களுக்காக நீங்க காட்டலாமேனு,” விடாமல் நான் கேட்கவும் ரஜினியே ஆர்வமானார். “ஆமால்ல.. நான் ரவி சார்கிட்ட பேசுறேன்,” என்றார்.

அப்படியே பேச்சு இளையராஜா பக்கம் வந்தது. “ராஜா சார் பேட்டி எதுவும் தரமாட்டாரே.. எப்படி அவர்கிட்ட தொடர் வாங்கினீங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

அப்புறம் தமிழக சின்னத்தில் இருக்கும் கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமே அல்ல.. அது மதுரை மேற்கு கோபுரம்தான் என்று ராஜா சார் எழுதியிருந்ததை படித்து விட்டு. “எப்படி… எப்படி இது ராஜா சாருக்கு தெரியும்… இது உண்மையா?” என்று கேட்டார். நான் ஆதரத்துடன்தான் ராஜா சார் எழுதியிருக்கிறார் என்று ஒரு தகவலை சொன்னதும், வியந்துபோனார்.

மஹாபாரதம் பற்றியும் அதில் வரும் கதாபாத்திரங்கள் பற்றியும் நுணுக்கமான பல தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

பேச்சு சுவராஸ்யத்தில் நேரம் போனதே தெரியவில்லை. தனக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்தை வைத்து அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்காததற்கு காரணத்தை அன்று அவரிடம் தெரிந்து கொண்டேன். ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்புதான் அரசியலுக்கு வர அவரை யோசிக்க வைத்திருக்கிறது. தனக்கும் ரசிகர்களுக்கும் பெரிய இடைவெளி விழுந்து விடும், அல்லது தன் ரசிகர்களை அரசியல்வாதிகள் தவறாக வழி நடத்தி விடுவார்கள் என்பதைப் புரிந்து வைத்திருந்தார் ரஜினி சார்.

thalaivar-kumudam 6

இதையே ‘லிங்கா விழாவில் உங்களை எல்லாம் மிதித்துவிட்டு நான் பதவிக்கு வரவேண்டுமா என்றுதான் யோசிக்கிறேன்’ என்று  வெளிப்படையாக சொன்னது நினைவிருக்கலாம். இந்த விஷயத்தில் இப்போதிருக்கும் அரசியல்வாதிகள் ரஜினி என்கிற போயஸ் தோட்டத்து போதிமரத்தின் கீழ் ஞானம் பெறவேண்டியவர்கள்.

நான் சந்தித்து பேசி விட்டு வந்த மறுநாள் கே.எஸ்ரவிக்குமாரிடமிருந்து எனக்கு போன் வந்தது.

”சார்கிட்ட படையப்பா படம் பற்றி பேசுனீங்களா கண்ணன் சார் எனக்கு போன் பண்ணி அந்த ஃபுட்டேஜெல்லாம் இருக்கானு விசாரிச்சார். அதெல்லாம் அந்த படம் வெளியான நாளிலேயே  ஸ்கிராப்க்கு போயிடுச்சேனு சொல்லிட்டேன்,” என்றார். ஆனால் ரசிகர்களுக்கு அதை எப்படியாவது கட்டிடனும்னு ரஜினி நினைச்சார். அது நடக்கலை. அன்று காலையில் ரஜினி சார் வீட்டிலிருந்து போன், “சார் உங்க கிட்ட பேசறாங்க..” என்று லைன் கொடுத்தார்கள். ரஜினி சார் பேசினார், “கண்ணன் இன்னிக்கு குமுதம் பார்த்தேன் நல்லா இருந்துச்சு..” என்று சொல்லி சில தகவல்களைச் சொன்னார். அந்த நிமிடங்களை வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது.

-என்வழி ஸ்பெஷல்

படங்கள்: ஆர் சண்முகம்




4 thoughts on “போயஸ் தோட்டத்து போதி மரம்!

  1. Kumar

    இந்த தேனி கண்ணன் தான் 2-3 வருடங்களுக்கு முன்பு ‘சூப்பர் ஸ்டாருக்கு ஒரு திறந்த மடல்’ என்று தலைவரை சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டு கடிதம் எழுதியதாக ஞாபகம்.

  2. குமரன்

    தேனி கண்ணன் எழுதிய திறந்த மடல் வைரமுத்துவுக்கு என்று என் நினைவு.

    http://www.newtamilcinema.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/

    கூடங்குளம் போராட்டத்தை நடத்திய உதயகுமார்தான் தலைவரைக் கண்டபடி ஏசி, அவருக்குத் திறந்த மடல் எழுதியவர்.

    http://newsalai.com/?p=28973

    ///தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுத்துவிட்டு, மாநிலத்தின் பிரச்சினைகள் எதையும் கண்டுகொள்ளாது, எந்தப் பிரச்சினையிலும் ஒரு நிலைப்பாடு எடுக்காது, தங்கள் சுயநலன்களை மட்டுமேப் பேணிக்கொண்டு, தமிழ் மக்களின் முதுகுகளில் ஏறி அரசியல் அதிகாரமும் பெற்று மக்களைத் தொடர்ந்து ஏய்த்துக் கொண்டிருக்கும் சினிமாத் துறையே தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் உறுதியாக நினைக்கிறேன். தங்கள் விடயத்திலும் இது உண்மை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்./// இது ஒரு சாம்பிள்.

    இந்த உதயகுமாரின் சாயம் வெளுத்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

    நல்ல எண்ணத்தோடு, நற்செயல்களோடு, நல்லதை மட்டுமே பேசி வாழ்ந்துவரும் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் தமது போலி வெற்றிகள் போய்விடுமோ என்று கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், உதயகுமார் உள்ளிட்ட பல வேடதாரிகளும் அஞ்சும்போது, மக்கள்/ ரசிகர்கள் மீதுள்ள உண்மையான அன்பால் ரஜினி அமைதி காக்கிறார் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ?

  3. ரஜினி பிரியன்

    தலைவர் ரஜினியின் பெருந்தன்மை வேறு தமிழ் சினிமாவில் வேறு எவனுக்கும் வராது. வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *