BREAKING NEWS
Search

ரஜினி சொன்னார்… மீனா செய்தார்!

ரஜினி சொன்னார்… மீனா செய்தார்!

kuselan_rajini_still_20

பொதுவாக திரையுலக ஹீரோயின்களைப் பற்றிய நம் கணிப்பு என்னவாக இருக்கும்? படப்பிடிப்புத் தளத்தில் யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை ‘மனப்பாடம்’ செய்து, பிறகு இயக்குனர் ‘ஆக்ஷன்’ என்று சொன்னதும், அந்த வசனங்களை கேமிரா முன் ‘ஒப்பிக்கும்’ மெஷின் என்பதாகத்தான் பெரும்பாலும் நினைப்போம். அவர்களுக்கு காபி போடக்கூடாது தெரியாது அல்லது சுடுதண்ணீர் வைக்கக்கூடாது தெரியாது என்பதாகவே நினைத்திருப்போம்.

தமிழ்த் திரையுலக ஹீரோயின்களாக இருந்தாலும் சரி, மற்ற மொழிகளில் இருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வரும் ஹீரோயின்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு அதிக கல்வியறிவு இருக்காது என்று நினைக்கும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். எதற்கு இவ்வளவு பீடிகை, ஏன் இவ்வளவு பில்டப் என்று கேட்கிறீர்களா?

ஒன்றுமில்லை. மீனாவை குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்தவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள். பொதுவாக ஒரு ஹீரோயினிடம், ‘பொழுதுபோக்காக என்ன படிப்பீர்கள்?’ என்று கேட்டால், நம் வாயில் எளிதில் நுழையாத அல்லது இதுவரை நாம் கேள்விப்பட்டிராத வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் எழுதிய நாவலைப் படிப்பதாக கதையளப்பதுண்டு.

படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் தன்னைப் பார்த்து மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சில ஹீரோயின்கள், நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் படிப்பது போல் பாவனை செய்வதும் உண்டு. இதுபோன்ற காட்சிகளை, என் 25 வருட திரையுலக அனுபவத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால், பல ஹீரோயின்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமான சிந்தனை கொண்டவர் மீனா.

with meena
சில வருடங்களுக்கு முன் ஒருநாள், ‘எனக்கு ‘பொன்னியின் செல்வன்’ வேண்டும் தேவராஜ். வாங்கிட்டு வந்து தர்றீங்களா?’ என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. காரணம், அதுநாள் வரை நான் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகம் எந்த வடிவத்தில் இருக்கும் என்று கூட பார்த்ததில்லை. சரி, ஒருவர் ஆசைப்பட்டு, அதுவும் தமிழில் படிக்க வேண்டும் என்று புத்தகத்தைக் கேட்டுவிட்டாரே என்று, பாண்டி பஜார் மற்றும் மயிலாப்பூரில் அலைந்து திரிந்து ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை வாங்கிக் கொடுத்தேன்.

சில மாதங்கள் கழிந்தது. ஓரிரு வருடங்களும் கழிந்தது. மீனாவிடம் கேட்டேன். ‘பொன்னியின் செல்வன்’ படித்து விட்டீர்களா என்று.

‘ஓ… படிச்சி முடிச்சிட்டேனே…’ என்றார். எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. நானும் அந்த புத்தகத்தை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.

‘ஒருமுறை படிக்க ஆரம்பிங்க. அப்புறம் பாருங்க, அதுலயே மூழ்கிடுவீங்க’ என்ற மீனா, சாண்டில்யன் எழுதிய ‘யவன ராணி’ புத்தகத்தைக் கேட்டார். அதையும் வாங்கிக் கொடுத்தேன்.

அவர் படிக்கப் படிக்க, எனக்கு, அவர் எந்த புத்தகத்தைக் கேட்டாலும், அது எங்கே இருந்தாலும் அலைந்து திரிந்து வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்ப் படத்தில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஒரு நடிகையின் தமிழார்வத்தை கண்டிப்பாக நாம் பாராட்டியே ஆக வேண்டும். பிறகு சுஜாதாவின் ‘கனவு தொழிற்சாலை’ புத்தகத்தையும் வாங்கிக் கொடுத்ததாக ஞாபகம்.

இன்று மீனா தன் கணவர் வித்யாசாகர், எல்.கே.ஜி படிக்கும் மகள் நைனிகா ஆகியோருடன் பெங்களூருவில் வசித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கும்போது எல்லாம், ‘அடடா… நாமும் இலக்கியப் புத்தகங்களில் மூழ்கி முத்தெடுக்க வேண்டுமே’ என்ற எண்ணம் ஏற்படும். ஆனால், படிப்பதற்கான நேரம் அபூர்வமாகத்தான் கிடைக்கிறது.

அதுசரி, ‘பொன்னியின் செல்வன்’ படிக்க வேண்டும் என்று, மீனாவின் மனதில் ஆர்வத்தைத் தூண்டியவர் யார்?

சாட்சாத் ரஜினி சார்தான்! அவர் படிக்காத புத்தகங்களே கிடையாது. அவரது வீட்டில் ஆன்மீகம், அரசியல், தத்துவம், இலக்கியம், வேதமந்திரங்கள் என அனைத்துவிதமான புத்தகங்களும் நிரம்பி வழிகிறது. நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆழ்ந்து படிக்கக்கூடிய, மிகச் சிறந்த படிப்பாளி ரஜினி சார்.

படப்பிடிப்புத் தளத்தில் மீனா எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பதைப் பார்த்த ரஜினி சார், படிப்பில் மீனாவுக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு சொன்னார், ‘நீங்க ஒருமுறை ‘பொன்னியின் செல்வன்’ படிச்சு பாருங்க’ என்று. அவரது சொல்லுக்கு மதிப்பளித்து படித்தார் மீனா.

‘நந்தினி’ என்ற வில்லி கேரக்டர்தான், தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்று என்னிடம் சொன்னார் மீனா.

ரஜினி சாருடன் அவர், குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது, ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் நடித்தார். ஹீரோயினான பிறகு ‘எஜமான்’, ‘வீரா’, ‘முத்து’ படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார். பிறகு ‘குசேலன்’ படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். இதில் அவர் பசுபதிக்கு ஜோடி.

யோகி தேவராஜ்
மூத்த பத்திரிகையாளர்
2 thoughts on “ரஜினி சொன்னார்… மீனா செய்தார்!

 1. srikanth1974

  நல்ல விஷயங்களையும்,நற்பண்புகளையும்,
  நல்ல மனிதரிடம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.

 2. S.SARAVANAN

  நல்ல விஷயங்களையும்,நற்பண்புகளையும்,
  நல்ல மனிதரிடம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.

  IT IS TRUE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *