அரிமா நம்பி இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்
விக்ரம் பிரபு – ப்ரியா ஆனந்த் நடித்த அரிமா நம்பி படத்தின் இசையை இன்று தன் வீட்டில் வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்தப் படத்துக்கு இசை பிரபல ட்ரம்ஸ் கலைஞர் சிவமணி. ஆனந்த் சங்கர் என்பவர் இயக்கியுள்ளார். இன்று காலை சத்யம் திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
அதற்கு முன்பே ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து இசைத் தட்டை வெளியிட வைத்து ஆசி பெற்றனர் ட்ரம்ஸ் மணி, விக்ரம் பிரபு உள்ளிட்டோர். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
ஏப்ரல் 19-ல் ஹைதராபாதில் விக்ரமசிம்ஹா அறிமுக விழா
சூப்பர் ஸ்டார் ரஜினியின் விக்ரமசிம்ஹா தெலுங்குப் படத்தின் அறிமுக விழா வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஹைதராபாதில் நடக்கிறது.
இந்த விழாவில் ரஜினி – தீபிகா படுகோன் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியுடன் மேலும் சில புரமோஷனல் நிகழ்ச்சிகளிலும் இருவரும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
கோச்சடையான் இந்திக்கு டப்பிங் பேசிய ரஜினி!
‘சம்போ மஹாதேவ்….’ – கோச்சடையான் இந்தி ட்ரைலரில் கம்பீரமாக ஒலிக்கும் இந்தக் குரல்.. சாட்சாத் சூப்பர் ஸ்டாருடையதுதான்.
ஆரம்பத்திலேயே கோச்சடையான் இந்தி பதிப்புக்கும் ரஜினிதான் குரல் கொடுக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பாடலில் இடம்பெறும் வரிகளையும் ரஜினியே தன் சொந்தக் குரலில் உச்சரித்துள்ளார்.
இந்தப் படத்துக்கான டப்பிங் பணிகளை சமீபத்தில்தான் முடித்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கோச்சடையான் போஜ்பூரி மொழியிலும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது சென்சார் குழு.
-என்வழி