சென்னை: மக்கள் தலைவர் ரஜினிகாந்தின் கட்சியில் குடும்ப அரசியல் நிச்சயம் இருக்காது என்று ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கம் தெரிவித்தார்.
ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது.
இக்கூட்டத்துக்கு மன்ற நிர்வாகி சுதாகர், செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநிலம் முழுவதிலுமிருந்து நிர்வாகிகள் திரண்டு வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் ராஜு மகாலிங்கம் பேசுகையில், “ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது. ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்பதில் தலைவர் உறுதியாக உள்ளார்.
உண்மையான, நேர்மையான, அமைதியான தலைவராக ரஜினிகாந்த் அவர்கள் இருப்பார். மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடு தலைவருக்கு திருப்தி ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனங்களைக் கண்டு ஆத்திரம் கொள்ள வேண்டாம். அரசியலில் விமர்சனங்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும். அதை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்று தலைவரே கூறியுள்ளார். தலைவர் வழியில் நடப்போம்,”, என்றார்.
-என்வழி