BREAKING NEWS
Search

அரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்!

வெளியில் தெரிகிறதோ இல்லையோ, மீடியா கவனம் பெறுகிறதோ இல்லையோ… கடந்த ஓராண்டு காலமாக ரஜினி மக்கள் மன்றம் செய்து வரும் மக்கள் நலப் பணிகள் குறிப்பிடத்தக்கவை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், தமிழக அரசின் நிவாரணப் பணிகள் கிடைக்கும் முன்பாக முதலில் போய் உதவிக் கரம் நீட்டியவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர்தான். ரஜினிகாந்தே நேரில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிக்குப் போய் உதவுங்கள் என உத்தரவிட்டு, கோடிக் கணக்கில் நிதியும், பொருளும் வழங்கினார்.

இப்போது தமிழகம் கொடிய வறட்சியில், குடிக்க நீரின்றி தவித்துக் கொண்டுள்ளது. இந்த கோடை ஆரம்பிக்கும்போதே ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் தோறும் மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகத்தை ஆரம்பித்தனர். இப்போது தமிழகம் முழுக்க ரஜினி மக்கள் மன்றத்தினர் லாரிகளில் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

இதில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது வேலூர் மாவட்டம். இந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் ரவிக்கு எதையுமே சாதாரணமாக செய்யத் தெரியாது. செய்வதை திருந்தச் செய்பவர், அரசியல் கட்சிகளையே திணறடிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர். வேலூர் மாவட்ட மக்களின் தாகம் தணிக்க, நேற்றிலிருந்து மாவட்டம் முழுக்க தண்ணீரின்றி தவிக்கும் மக்களைத் தேடிப்பிடித்து கேன்களில், லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளார். ஒரு அரசாங்கம் கூட செய்ய முடியாத வேலையை மன்ற நிர்வாகிகளின் துணையுடன் செய்ய ஆரம்பித்துள்ளார் ரவி.

அதுமட்டுமல்ல, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ரஜினி மன்றத்தினர், சோளிங்கரில் நடத்திய பிரமாண்ட பேரணி அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரவி தலைமையில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பேரணியைப் பார்த்த அனைத்து அரசியல் கட்சியினரும் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.

இதுபற்றி பேசிய மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி, “இதுபோன்ற உதவிகள் தற்காலிகமானதுதான். ஏனெனில் தனிமனிதர் அல்லது ஒரு இயக்கத்தினரால் சில மாதங்களுக்கு மட்டுமே உதவிசெய்ய முடியும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதால் எந்தப் பயனும் இல்லை. ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான செயல் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதே சமயம், ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் மழைநீரைச் சேகரிக்க வேண்டும். குடிநீரை வீணாக்குவதை போதுமான அளவு தடுக்க வேண்டும்.

நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதைத் தவிர்த்து தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றுவதை தவிர்த்தால் அடுத்த தலைமுறையினருக்கு நாம் மிகப்பெரிய துரோகம் செய்வதாக அமைந்துவிடும். அடுத்த தலைமுறை என்பது குப்பனோ, சுப்பனோ இல்லை. நம் குழந்தைகள்தான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வரும்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டிலிருந்து மீள வேண்டும் என்றால் சிந்தித்துச் செயல்படுங்கள்,” என்றார்.

இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை என்றாலும், நூறு சதவீதம் மக்கள் பணியில் தீவிரமாகியுள்ள ரஜினி மக்கள் மன்றம், அரசியல் கட்சிகள் அனைவருக்குமே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *