ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி… நேரில் ரசித்த ரஜினி!
Friday, January 27, 2012 at 4:56 pm | 1,103 views
இந்தோ – ஜெர்மனி உறவை கொண்டாடும் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி… நேரில் ரசித்த ரஜினி!
சென்னை: சென்னையில் ஜெர்மன் இசைக் குழுவினருடன் இணைந்து ஏ ஆர் ரஹ்மான் நடத்திய சிறப்பு இசை நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஜெர்மனியிலிருந்து 100 இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்காக பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்திய – ஜெர்மனி நாடுகளின் 60 ஆண்டு நட்புறவை கொண்டாடும் விதமாக, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் என நாட்டின் முக்கிய நகரங்களில் இந்தக் குழுவினர் ரஹ்மானுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
நேற்று இந்திய குடியரசு தின விழா என்பதால் சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆண் பெண்கள் வயது வித்தியாசமின்றி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வருகை. இளையமகள் சௌந்தர்யாவுடன் ரஜினி அரங்கில் நுழைந்ததும் மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்தது. விழாவுக்கு வந்து சிறப்பித்த ரஜினிக்கு வாழ்த்து சொன்னார் ரஹ்மான்.
ஒரு ஒபேரா போல நடைபெற்ற இந்த சிறப்பு இசை நிகழ்ச்சியில் ரஜினியின் எந்திரன், படையப்பா பட பாடல்கள் இசைக்கப்பட்ட போது கரவொலி அரங்கை அதிரவைத்தது.
ரஹ்மானின் ரோஜா, லகான், பம்பாய் போன்ற படங்களின் பாடல்களும் இசைக்கப்பட்டன.
முன்னதாக, நாட்டின் தேசிய கீதமான ஜனகண மண.. வை 100 இசைக் கலைஞர்களும் ஒருங்கே இசைத்தபோது, மக்கள் எழுந்து நின்று சிலிர்ப்புடன் அனுபவித்தனர்.
-என்வழி செய்திகள்







அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்



