BREAKING NEWS
Search

சென்னை ஐஐடியில் ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை.. பெயருக்கு 3 தாழ்த்தப்பட்டோர்!

சென்னை ஐஐடியில் ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை.. பெயருக்கு 3 தாழ்த்தப்பட்டோர்!

டெல்லி: சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்திலிருந்து ஒப்புக்கு சிலரை வைத்துள்ளார்கள்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

சென்னை ஐஐடி கல்வி மையத்தில் மொத்தம் 212 பேராசிரியர்களும், 91 இணைப் பேராசிரியர்களும், 177 துணைப் பேராசிரியர்களும் உள்ளனர்.

212 பேராசிரியர்கள் மற்றும் 91 இணைப் பேராசிரியர்களில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. துணைப் பேராசிரியர்கள் பதவியில் மட்டும் 7 பேர் உள்ளனர்.

அதே போல தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெறும் 3 பேர் மட்டும் பேராசிரியர்களாகவும், 3 பேர் இணைப் பேராசிரியர்களாகவும், 4 பேர் துணைப் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே துணைப் பேராசிரியராக உள்ளார்.

ஐஐடிக்களில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லாததே இதற்குக் காரணமாகும். துணைப் பேராசிரியர் பதவிக்கான தேர்வில் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது.

இதே நிலைமை தான் ஐஐடி காரக்பூர், ஐஐடி காந்திநகர், ஐஐடி ரூர்கி, ஐஐடி ரோபர் என பல இடங்களிலும் நிலவுகிறது.

ஐஐடி ஹைதராபாதில் மட்டுமே 22 பிற்படுத்தப்பட்டவர்கள் பேராசிரியர்களாக உள்ளனர்.

இந்தத் தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் மகேந்திர பிரதாப் சிங் என்பவர் திரட்டியுள்ளார். ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை ஆகியவை இவருக்கு இன்னும் பதிலைத் தரவில்லை. தந்தால்தான் அவற்றின் லட்சணமும் தெரியவரும்.

அதேபோல,  மாணவர் சேர்ப்பிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எந்த அளவு ஐஐடிகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற தகவலையும் கேட்டுள்ளனர்.

அடுத்து மத்திய விஞ்ஞான மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவன லேபில் உள்ள விஞ்ஞானிகள் குறித்த விவரங்களை கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவையெல்லாம் வெளியில் வந்தால் இன்னும் என்னென்ன அவலங்கள் காத்திருக்கின்றனவோ.

ஐஐடி என்பதே முழுக்க முழுக்க உயர் வகுப்பினருக்கான ஒரு கேம்பஸ் என்ற எண்ணம் சிலரிடம் ஆழப் பதிந்துவிட்டதன் விளைவுதான், இங்கே சாதாரண வகுப்பைச் சேரந்தவர்களால் நுழைய முடியாத நிலைய ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த தங்கள் எதிர்ப்புகளை சமூக ஆர்வலர்கள் பதிவு செய்தாலும் ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்வது பாஜகவாக இருந்தாலும் காங்கிரஸாக இருந்தாலும் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவாக இருந்தாலும் தொடர்கிறது.

-என்வழி செய்திகள்




6 thoughts on “சென்னை ஐஐடியில் ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை.. பெயருக்கு 3 தாழ்த்தப்பட்டோர்!

  1. arulnithya

    மிக மிக mukkiyamaana விஷயம் இது வினோ.
    வேலை நிமித்தம் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு USA போன pozuthu இங்கிருத்து அங்கு சென்றிருந்த என்னுடன் வேலை பார்த்த சில முற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் இட ஒதுக்கீட்டை மிக kevalamaaga பேசினார்கள். இங்கு இந்தியாவில் இருக்கும் வரை அதை பற்றி பேசாவதவர்கள் அங்கு அதிகமா பேசினார்கள், பெயருக்கு பின்புறம் ஜாதி அடையாளம் வேறு சேர்த்து கொண்டார்கள். எனக்கும் அவர்களுக்கும் வாக்கு வாதமே நடந்தது. நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். இந்துக்கள் பெரும்பான்மை பேசுகிறீர்களே, இது இந்து நாடு என்கிறீர்களே , அப்போ பிற்படுததப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தான் இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள், உழைப்பாளிகள், வரி செலுத்துபவர்கள் எனவே இந்த நாட்டில் அவர்களுக்குதான் எதிலும் முன்னுரிமை, நீங்கள் தான் இடஒதுக்கீடு கேட்டு போராடனும் என்றேன் ஒருத்தன் வாய தொரக்கலை….இது விதண்டாவாதம் என்றாலும்,மற்ற சமையத்துக்கு எதிராக பேசும்போது மட்டும் நாம் இந்துக்கள் பெரும்பான்மை மனோபாவம் ஆனால் மற்ற நேரங்களில் நாம் கீழானவர்கள் ஆளப்படவேண்டியவர்கள்…இன்னும் பல மோசடிகள் IIT அண்ட் ஈம், AIMS ல இடஒதுக்கீடுக்கு எதிரா நடக்குது…

  2. கிரி

    வினோ எனக்கு இது குறித்து சில சந்தேகங்கள் உள்ளன.. விளக்கங்கள் தேவை. தெரிந்து கொள்ள விருப்பப்படுகிறேன்.

    என்னுடைய கேள்விகள் எந்த சாதிக்கும் ஆதரவாகவும் இல்லை எதிர்ப்பாகவும் இல்லை. என் தனிப்பட்ட சந்தேகங்களே!

    இட ஒதுக்கீடு கொடுத்ததன் மூலமாகத்தான் தாழத்தப்பட்டவர்கள் மேலே வர முடிந்தது என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை. அவர்களுக்கு இது போல வாய்ப்புகள் முன்பு வழங்கப்படவில்லை என்றால் இன்றும் அவர்கள் மிகச் சிரமப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இப்பவும் சிரமப்படுகிறார்கள் ஆனால் ஒப்பீட்டளவில் முன்பு போல இல்லை.

    துவக்கப்பள்ளி, கல்லூரி, பணி இடங்களில் இட ஒதுக்கீடு ஓகே.. ஆனால் ஐ ஐ டி போன்ற இடங்கள் திறமையை அடிப்படையாக வைத்து வந்தால் தான் அதில் திறமையான மாணவர்களைப் பெற முடியும். இட ஒதுக்கீடு என்ற முறையில் திறமை குறைந்த மாணவர்களை எப்படி இதில் சேர்ப்பது? திறமையற்ற மாணவர்கள் என்று தாழ்த்தப்பட்ட மாணவர்களை மட்டுமல்ல எந்த சாதியினருக்கும் சேர்த்தே கூறுகிறேன்.

    மாணவர்களையாவது ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளாம் என்றால் பேராசிரியர்கள் திறமையானவர்களாக இருந்தால் மட்டுமே சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். எனவே இட ஒதுக்கீடு என்ற முறையில் திறமை குறைந்த பேராசிரியர்களாக இருந்தாலும் சேர்க்கலாம் என்றால் எப்படி நல்ல மாணவர்களைப் பெற முடியும். இட ஒதுக்கீட்டில் திறமையாக வரும் பேராசிரியர்களைப் பற்றி பேச்சே இல்லை.. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே போல இட ஒதுக்கீடு இல்லாமல் வருபவர்களில் திறமை இல்லாத பேராசிரியர்கள் இருந்தாலும் இது பொருந்தும்.

    இப்படி இருக்க, சிறந்த கல்வியை உருவாக்கும் இடங்களில் (மற்றதோடு கல்வியை ஒப்பிட முடியாது) இட ஒதுக்கீடு எப்படி சரியாக வரும்? யார் திறமையானவர்களோ அவர்களே சரியான கல்வியை தர முடியும்.

    தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் திறமையற்றவர்கள் என்று கூறுவதாக நினைக்க வேண்டாம். அது யாராக இருந்தாலும் பொருந்தும். ஐ ஐ டி யில் திறமை இருந்தும் தகுதி இருந்தும் தாழ்த்தப்பட்டவர்களை எடுக்கவில்லை என்றால் அது மிகப்பெரிய தவறு. இது போல நடக்கிறதா! ஆம் என்றால் இதற்கும் விளக்கம் கூறவும்.

    இது யாரை எதிர்த்தும் ஆதரித்தும் எழுதப்பட்டதல்ல.. இதன் பின்னணியில் வேறு எதுவும் அரசியல் இருந்தாலும் எனக்கு தெரியாது. இது ஒரு பொதுவான கேள்வி தான்.. சந்தேகம் தான். இதற்க்கு விளக்கம் கொடுக்கும் படி கேட்கிறேன்.
    ______________________________________

    ஒடுக்கப்பட்ட மக்களை இன்னும் பல நூறாண்டுகள் பின்னுக்கிழுக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் வாதம் இது கிரி. இந்தக் கேள்விகளை நீங்கள் முதல் முறையாக எழுப்பினாலும், பல ஆண்டு காலமாக ஆதிக்க சாதியினர் இதைச் சொல்லித்தான் தங்களை மட்டுமே உயர் நிலையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சரி உங்கள் கேள்விக்கு வருவோம்…

    ஐஐடி போன்ற இடங்களில் இருப்பது சிண்டிகேட் முறை. இங்கே பணிமூப்பு, திறமையெல்லாம் ஒருசார்பானது. நான்தான் துறைத் தலைவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். கிரியை எனக்குப் பிடிக்கும். அல்லது அவர் என் சாதிக்காரர் என்ற கூடுதல் பரிவில் பேராசிரியராக என்னால் பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்ய முடியும் அல்லது கொண்டுவந்துவிட முடியும். அங்கே, அதே சீனியாரிட்டியுடன் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்டவனும் தாழ்த்தப்பட்டவனும் பழங்குடியும் அடிபட்டு நிற்கிறான்.

    இதுவே அவர்களுக்கான இட ஒதுக்கீடாக இருந்தால், அந்த இனத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் வந்தே தீருவார் அல்லவா!

    ஒருவேளை திறமை நிரூபிப்புத் தேர்வு என்று வைத்தால், உயர்சாதியினர் ஓரிரு சதவீத மதிப்பெண்களை அதிகம் பெற்று முதலிடத்துக்கு தாவுவார்கள். இந்த ஓரிரு சதவீத சலுகைதான் மற்ற இனத்தவர்களுக்கு. அதுகூட எதற்காக என்றால் காலகாலமாக ஆதிக்க சாதியினரிடம் அடிமைப்பட்டுக் கிடந்து, இன்று தட்டுத் தடுமாறி மேலேறி வருகிறார்களே அதற்காகத்தான்.

    இந்த ஓரிரு சதவீத சலுகை காரணமாக கல்வியின் தரமோ, கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் தரமோ தாழ்ந்துவிடாது.

    இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சின்ன உந்து சக்தி. முற்றிலும் திறமையற்றவர்களாக இருப்பவர்களை இட ஒதுக்கீடு கூட மேலே கொண்டு வந்துவிட முடியாது.

    -வினோ

  3. கிரி

    விளக்கத்திற்கு நன்றி வினோ.

    “நான்தான் துறைத் தலைவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். கிரியை எனக்குப் பிடிக்கும். அல்லது அவர் என் சாதிக்காரர் என்ற கூடுதல் பரிவில் பேராசிரியராக என்னால் பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்ய முடியும் அல்லது கொண்டுவந்துவிட முடியும். அங்கே, அதே சீனியாரிட்டியுடன் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்டவனும் தாழ்த்தப்பட்டவனும் பழங்குடியும் அடிபட்டு நிற்கிறான்.”

    இது நிச்சயம் தவறான ஒன்று. நீங்கள் கூறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். சிபாரிசு என்ற ஒன்று முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். திறமை உள்ளவர்களே வர வேண்டும்.

    “இந்த ஓரிரு சதவீத சலுகை காரணமாக கல்வியின் தரமோ, கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் தரமோ தாழ்ந்துவிடாது.”

    IIT இட ஒதுக்கீட்டில் வருபவர்களுக்கு (மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்) எத்தனை சதவீத சலுகை என்பது எனக்கு தெரியவில்லை. எனவே இது பற்றி எதுவும் கூற முடியவில்லை.

    வினோ இந்தக்கேள்வியையும் நீங்கள் நிச்சயம் கேட்டு இருப்பீர்கள்.. புளித்துப்போன கேள்வியாகக் கூட இருக்கலாம்.. இருந்தாலும் இதற்கு சரியான பதில் எனக்கு கிடைக்கவில்லை. எனவே இதற்கும் பதில் கூறுங்கள். இவ்வளோ நாளா தூங்கிட்டு இருந்தேனா என்றெல்லாம் யோசிக்காதீர்கள்.. 🙂 பேச சந்தர்ப்பம் அமையவில்லை.. இப்போது கேட்க தோன்றுகிறது.. அவ்வளோ தான்.

    அரசு உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் அவர்களின் பள்ளிப் படிப்பின் அனைத்து செலவுகளையும் எடுத்துக்கலாமே! இதில் உள்ள ஒரு பிரச்னையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு படிப்பில் உதவினாலும் மற்ற உயர் சாதியினர் போல இவர்களால் படிப்பு மட்டுமே வேலை என்று இருக்க முடியாது. குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கிறது. பகுதி நேர பணியில் ஈடுபட வேண்டி இருக்கிறது. இதனால் படிப்பில் அரசு உதவினாலும் இது போன்ற காரணங்களால் அவர்கள் மதிப்பெண் குறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த நேரத்தில் இடஒதுக்கீடு இவர்களுக்கு பெரும் துணை புரிகிறது. ஏற்புடையதாகவும் இருக்கிறது.

    தாழ்த்தப்பட்டவர்களிலேயே பலர் பெரும் பணக்காரர்களும் இருக்கிறார்கள் ஆனால் இவர்களும் அதே சலுகையை அனுபவித்து வருகிறார்கள். இது எப்படி நியாயம் ஆகும்? உயர்சாதியில் பிறந்து கஷ்டப்படுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு எந்த சலுகையும் இல்லை. உயர் சாதியில் பிறப்பதாலையே ஒருவர் பணக்காரர் ஆகி விடுவதில்லை. ஒரு காலத்தில் இருந்து இருக்கலாம், தற்போது சிரமப்படலாம்.

    இதற்கு பதிலாக பொருளாதார ரீதியாக சிரமப்படுகிறவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே! அது யாராக இருந்தால் என்ன. எந்த சாதியினராக இருந்தால் என்ன? IIT செலவு முழுவதையும் அரசே ஏற்கலாம்.. IIT யில் 5000 இடங்களுக்கு ஐந்து லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதில் திறமையில்லாதவர்கள் வந்து (அவர்களின் IIT பாட திட்டத்தில் எந்த சலுகையும் இல்லை) தொடர முடியாமல் விலகி விட்டால், அந்த ஒரு இடம் வீணாகப் போனது, போனது தான். ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு அனாவசியமாக பறிபோவது போலத்தானே உள்ளது.

    பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கி இருப்பவர்களை முன்னுக்கு கொண்டு வர நினைப்பது நியாயம் என்று எனக்குத் தோன்றுகிறது. இது தவறு என்றால்.. விளக்கம் கூறினால் நானும் தெரிந்து / திருத்திக் கொள்கிறேன், என் புரிதல் தவறாக இருந்தால்.
    ___________
    இதற்கான பதில் பெரியது கிரி. தனியாகவே தருகிறேன். அதுவும் இன்றே (லேட் பண்ணமாட்டேன் 🙂 )

    -வினோ

  4. கிரி

    🙂 No problem take your time. இன்றே கூட தேவையில்லை.. நேரமிருக்கும் போது பொறுமையாகக் கூறுங்கள், அவசரமில்லை. நீங்களும் இன்னும் பொறுமையாக யோசித்து விளக்கமாகக் கூறலாம். நான் எங்கே போய்டப் போகிறேன்.

  5. pisaasu

    ஒரு விவாதத்துக்கு வங்கி துறையை எடுத்துகொள்ளுங்கள். டாப் லெவெலில் எத்தனை பேர் உயர் பதவி வகிக்கிறார்கள்? சேரும்போது அனைவரும் அதிகாரிகளாக சேர்ந்தாலும் பதவி உயர்வு என்றால் உயர் ஜாதியனர் மட்டும் முன்னுரிமை பெற்று முக்கியமான பொறுப்புகளுக்கு போய்விடுகிறார்கள். எதாவது ஒரு வங்கிக்கு தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த யாரேனும் இப்போது தலைவராக உள்ளாரா? மற்ற பொது துறைக்கும் இது பொருந்தும்.

  6. mu. vasu

    சில பொதுத்துறை வங்கிகளில் உள்ள மேலதிகரிகளுக்கு சுத்தமாக எந்த வேலையும் தெரியவில்லை என்பதே உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *