BREAKING NEWS
Search

சொதப்பல் ஆட்டம்… கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் கேவலமாகத் தோற்ற சென்னை!

சென்னை சூப்பர் சொதப்பல் ஆட்டம்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட்  வெற்றி


தர்மசாலா: ஐபிஎல் 5 தொடரின் வியாழக்கிழமை நடந்த முக்கிய போட்டியில் கத்துக்குட்டி அணியான பஞ்சாப், நடப்பு சாம்பியன் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தர்மசாலாவில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்கம் முதலே படுகேவலமாக பேட்டிங் செய்தது.

துவக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய் 10 ரன்களிலும், ஹஸ்ஸி 7 ரன்களிலும் வெளியேறினர்.

சுரேஷ் ரெய்னா 17 ரன்கள் அடித்தார். கேப்டன் டோனியின் பங்களிப்பு 6 ரன்கள்தான்.

ரவீந்திர ஜடேஜா கொஞ்சம் பந்துகளை சாப்பிட்டு 13 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்த வந்த அல்பி மார்கல், பிராவோ ஜோடி ஓரளவுக்கு ஆடியது.  மார்கல் 14 ரன்களில் அவுட்டாக, பிராவோ மட்டும்  3 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து 48 ரன்களைச் சேர்த்தார்.

20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 120 ரன்களில் சுருண்டது.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிரவீண் குமார், அசார் மகமூது, அவானா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

121 ரன்கள் எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற எளிய இலக்கை 16.3 ஓவர்களிலேயே எட்டிவிட்டது பஞ்சாப் அணி.

கேப்டன் கில்கிறிஸ்ட், மன்தீப் சிங் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது.  மன்தீப் சிங் 5 பவுண்டரிகள் அடித்து 24 ரன்களை எடுத்த நிலையில், மார்கலின் பந்தில் போல்டானார். அடுத்து வந்த நிதின் சைனி 1 ரன் எடுத்து பிராவோ பந்தில் அவுட்டானார். சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய டேவிட் ஹஸ்ஸி 9 ரன்கள் எடுத்து பிராவோவின் பந்தில் அவுட்டானார்.

விக்கெட்கள் ஒருபுறம் சரிய, துவக்க வீரரும் கேப்டனுமான கில்கிறிஸ்ட் மறுபுறம் நின்று பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். அவருக்கு சித்தார்த் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். 14வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை சேர்த்த கில்கிறிஸ்ட் அரைசதம் கடந்து, அதிரடியை தொடர்ந்தார். 15வது ஓவரில் 11 ரன்கள் எடுத்த சித்தார்த், டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த கேப்டன் கில் கிறிஸ்ட் 46 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரிகள் அடித்து 64 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் அசார் மகமூது உதவியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

பஞ்சாபிடம் தோற்றதன் மூலம், சென்னை அணி அடுத்த சுற்றுக்குப் போவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன.

சுருக்கமான ஸ்கோர்

சென்னை சூப்பர் கிங்ஸ் 120 / 7

பிராவோ 48

பிரவீண் குமார், அசார் மகமூது, அவானா தலா 2 விக்கெட்டுகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 121 / 4

கில்கிறிஸ்ட் 64

6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி

-என்வழி கிரிக்கெட்




One thought on “சொதப்பல் ஆட்டம்… கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் கேவலமாகத் தோற்ற சென்னை!

  1. குமரன்

    போட்ட திட்டப்படியே எல்லாம் நடக்கிறது. இந்த முறையும் சென்னை அணியே வென்றால் ஆட்டத்தில் சுவாரசியம் இருக்காது. அதனால் கப்பைக் கை மாற்றியே ஆக வேண்டும். எனவே இந்த முறை டெல்லி அணியோ கல்கத்தா அணியோதான் வெல்லும்.

    கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *