BREAKING NEWS
Search

கூடங்குளம் அணுமின் நிலையம் நோக்கி கடற்கரை வழியாக பல்லாயிரம் மக்கள் முற்றுகை… பெரும் பதட்டம்!

கூடங்குளம் அணுமின் நிலையம் நோக்கி கடற்கரை வழியாக பல்லாயிரம் மக்கள் முற்றுகை… பெரும் பதட்டம்!

கூடங்குளம்: ஒரு பெரும் போருக்குரிய ஆயத்தங்களுக்கு நிகரான பதட்டமும் கொந்தளிப்பும் கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதியில் காணப்படுகிறது.

கடற்கரை வழியாக குவிந்த பல ஆயிரம் கிராம மக்கள், குறிப்பாக பெண்கள் இந்த அணுமின் உலையை முற்றுகையிட்டுள்ளனர்.  பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் மக்களைத் தாக்குவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கூடங்குளம் அணுமின் உலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் தொடங்கப் போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணுஉலைக்கு எதிரான போராட்டம் மீண்டும் வேகமெடுத்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்பது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் கருத்து.

இன்று காலை இடிந்தகரை தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி கூடங்குளத்தை நோக்கிச் சென்றனர். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

அணுமின் உலையை முற்றுகையிடப் போவதுதான் திட்டம். இதனால் அந்தப் பகுதியில் 144 தடையுத்தரவை அமல்படுத்தியது போலீஸ். எனவே சாலை மார்க்கத்தை புறக்கணித்த மக்கள், கடற்கரை வழியாகவே ஆயிரமாயிரமாய் அணிவகுத்தனர்.

குறிப்பாக பல ஆயிரம் பெண்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இவர்களை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்திவிட்டது போலீஸ்.

எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மேற்கொண்டு எதிர்ப்பாளர்களை நகர விடாமல் போலீஸ் தடுத்ததால், கடற்கரையிலேயே தொடர்ந்து போராட்டம் நடத்த மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. முன்பு முல்லைப் பெரியாறு அணைக்காக லட்சக்கணக்கான தமிழ் விவசாயிகள் போராட்டம் நடத்தியதுபோது, அதனை கொடூரமாக அடக்கிய போலீஸ் அதிகாரிகள் ராஜேஸ் தாஸ், பிதாரி போன்றவர்கள் போராட்ட இடத்தில் முகாமிட்டுள்ளது பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தினால் மட்டுமே இந்த இடத்தை விட்டு நகருவோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இப்பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *