பெண் பாலியல் வல்லுறவு – டெல்லியை உலுக்கிய ஆர்ப்பாட்டம் – சில படங்கள்
Monday, December 24, 2012 at 11:57 am | 635 views
பெண் பாலியல் வல்லுறவு – டெல்லியை உலுக்கிய ஆர்ப்பாட்டம் – சில படங்கள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிறன்று ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, கூட்டாகக் கற்பழிக்கப்பட்டார். நாடே அதிர்ந்து போனது. இந்த கொடுமைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்கள் உணர்ச்சிவசத்தில் குற்றவாளிகள் 6 பேரையும் விசாரணையின்றி தூக்கிலிட வேண்டும் என்று கோரி பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லை என்று சொல்லும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு பெரும் எண்ணிக்கையிலானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக முற்றுகைப் போர் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி கிட்டத்தட்ட முடக்கப்பட்ட நிலை. பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போராட்டம் இப்போது வன்முறையாக மாறி, வழியில் போகும் வரும் வாகனங்கள் மீதான தாக்குதலாகத் திரும்பியுள்ளது.
மக்களின் இந்தப் போராட்டத்தை வன்முறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்வதாகவும் பிரதமர் மன்மோகன் சிங்கே தெரிவித்துள்ளார்.
இந்த நிலைக்கு காரணம் அரசுகளா.. சமூகத்தின் ஒழுங்கின்மையா… என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது.
எந்த அரசும் கற்பழிக்கச் சொல்லிக் கொடுப்பதில்லை. எந்த அரசும் யாரும் எப்படியாவது கற்பழித்து, கொலை செய்து கொண்டு திரியட்டும் என நினைப்பதில்லை. மக்களின் வக்கிரம்தான் இதற்கெல்லாம் காரணம். எல்லா விஷயத்திலுமே சுதந்திரத்தை விரும்பும் மக்கள், ஒரு அசம்பாவிதம் நேரும்போது மொத்த அமைப்பையும் சபிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.
மக்கள் தங்களை எதிர்த்து தாங்களே போராடிக் கொண்டிருக்கும் சூழல் இன்றைக்கு…
அந்தப் போராட்டத்தின் சில காட்சிகள்…

‘கற்பழிக்காதீர்கள் என்று ஆண்களுக்கு சொல்லித் தராத சமூகம், கற்பழிப்புக்கு ஆளாகாதீர்கள் என பெண்களைப் பார்த்து சொல்வது நியாயமா?’

சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் முதல் முறையாக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை எதிரில் இப்படி ஒரு காட்சி!

’6 குற்றவாளிகளையும் மூன்று தினங்களுக்குள் கைது செய்துவிட்டோம்… நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கிறது… இப்படி அடம்பிடித்தால் எப்படி?’ – டெல்லி போலீஸ்
-என்வழி ஸ்பெஷல்


















அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்


