BREAKING NEWS
Search

கலகலத்துப் போன பாஜக அணி… பிரணாபுக்கு நிதீஷ்குமார், மேனகா, சிவசேனா, ஆதரவு!

கலகலத்துப் போன பாஜக அணி… பிரணாபுக்கு நிதீஷ்குமார், மேனகா, சிவசேனா, ஆதரவு!


டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரத்தில் ரொம்பத்தான் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு இல்லாத வேலையெல்லாம் செய்த பாஜகவின் நிலைமை மிக பரிதாபத்துக்குரியதாகிவிட்டது.

கிட்டத்தட்ட அந்த கூடாரமே ஆடிப்போயிருக்கிறது. அதற்கான முதல் கல்லை சங்மா மூலம் விட்டெறிந்தவர்கள் ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும். அடுத்து இப்போது நிதீஷ்குமார், சிவசேனா, மேனகா காந்தி என ஆளுக்கொரு காலைப் பிடித்து இழுக்க, பாஜக கூட்டணி கூடாரம் பரிதாபமாகக் காட்சி தருகிறது.

பிரணாப் முகர்ஜி, 100 சதவீதம் வெற்றி உறுதி செய்யப்பட்ட தெம்போடு, விருந்துக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வை, 2014ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் முடிச்சு போட்டு பாஜக சில முடிவுகளை மேற்கொண்டது.

முதலில் பிரணாப் முகர்ஜி அல்லது ஹமீத் அன்சாரி என்று காங்கிரஸ் தரப்பில் இரு வேட்பாளர் பெயர்கள் வெளியே கசியவிடப்பட்டன. உடனே, கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் அரசியல்வாதியான பிரணாபையோ, ஜனாதிபதி பதவிக்கு லாயக்கில்லாத அன்சாரியையோ தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்காது என்று அறிவித்தார் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ்.

அவர் பேசி முடித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் பாஜக கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமாரிடமிருந்து அதிரடி பதில் வந்தது.

ஏன் அரசியல்வாதியை ஜனாதிபதியாக ஏற்கக் கூடாது, ஏன் அன்சாரியை ஜனாதிபதியாக்கினால் என்ன தப்பு என்று கேள்வி எழுப்பி பாஜகவுக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம் தந்தார் நிதிஷ். மேலும் சுஷ்மாவின் பேச்சு பாஜகவின் கருத்து தானே தவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கருத்து அல்ல என்றார்.

இதையடுத்து பாஜக தலைவர் நிதின் கட்காரி நிருபர்களை அழைத்து, ‘ஆமாம் ஆமாம்.. அது சுஷ்மாவின் தனிப்பட்ட கருத்துதான்’ என்று விளக்கம் தந்தார். மூக்குடைந்த அதிர்ச்சியில் சுஷ்மா கப்சிப்பாகிப் போனார்!

பாஜகவுக்கு முதல் நெருக்கடி தந்த ஜெ – நவீன்..


பாஜகவில் நடக்கும் கூத்துக்களை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும், தங்கள் வேட்பாளராக பிஏ சங்மாவை அறிவித்துவிட்டார்கள். இதன் மூலம் தேசிய அரசியலில் தாங்கள் மிகப் பெரிய சக்தி என்று காட்டிக் கொள்வது ஜெவின் கணக்கு. ஆனால் காலிப் பானைக்கு என்ன மரியாதை இருக்கும் தேசிய அரசியலில் என்பதை அடுத்து வந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்திவிட்டன.

ஒருவிதத்தில், பாஜகவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பவரே ஜெயலலிதாதான். அவரது அவசரகுடுக்கைத்தனத்தால், பாஜக தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போயிற்று.

சோனியாவின் தீர்க்கதரிசனம்…

தனது ஜனாதிபதி வேட்பாளரை முதலிலேயே அறிவித்துவிட்டால், பாஜகவும் எதிர்க் கட்சிகளும் கூட்டு சேர்ந்து போட்டி வேட்பாளரை நிறுத்த நிறைய கால அவகாசம் கிடைத்துவிடும் என்பதால், பெயரையே வெளியில் சொல்லாமல் அமைதி காத்து தனது அரசியல் தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்தினார் சோனியா காந்தி.

கடைசி நேரத்தில் பெயரைச் சொல்லி எதிர்க் கட்சிகள் சுதாரிப்பதற்குக் கூட அவசாகம் தரவில்லை சோனியா. பிரணாப் பெயரை அறிவித்து கிட்டத்தட்ட 4 நாட்கள் ஓடிவிட்ட நிலையில், இன்று வரை பாஜகவால் ஒரு வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை.

இதற்குக் காரணம், அந்தக் கட்சியின் முரண்டுபாடுகள் மட்டுமல்ல, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரணாபின் ஆளுமையும் கூட!

முதலில் பிரணாப்பை ஆதரித்து, அதற்குப் பதிலாக துணை ஜனாதிபதி பதவியை பெறலாமா என்று அந்தக் கட்சி யோசித்தது.

பின்னர் அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் சங்மாவை ஆதரித்து, இதன்மூலம் இரு கட்சிகளையும் தாஜா செய்து கூட்டணிக்குக் கொண்டு வந்து 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கலாமா என்று யோசித்தது.

பின்னர் மம்தா பானர்ஜியையும் கூட்டணிக்குள் இழுக்க வசதியாக அவர் ஆதரிக்கும் அப்துல் கலாமை ஆதரித்து சங்மாவை கைவிட்டுவிடலாமா என்று யோசித்தது.

அப்படிச் செய்தால் அதிமுகவும் பிஜூ ஜனதா தளமும் நம் கூட்டணிக்கு வர மாட்டார்களே என்று தவித்தது.

இதையடுத்து பிரணாப் முகர்ஜியையே ஏற்றுக் கொள்ளலாமா என்று யோசித்தது. ஆனால், இதைச் செய்தால் அதிமுக, பிஜூ ஜனதா தளம், மம்தா மூவருமே நமது கூட்டணிக்கு வர மாட்டார்களே என்று திணறியது.

அதே நேரத்தில் பிரணாப்பை ஆதரிக்காவிட்டால், அவரை ஆதரிக்கும் சிவசேனா, இழக்க வேண்டியிருக்குமோ? அன்சாரியை ஏற்க மறுத்தால் ஐக்கிய ஜனதாதளத்தை இழக்க வேண்டி வருமே… இப்படி குழப்பத்தின் உச்சிக்கே போய்விட்டது.

அட ஒரு கட்டத்தில், எல்லாரையும் விட்டுவிட்டு அப்துல் கலாமை ஆதரிப்பதாக நேற்று மாலை 3 மணிக்கு திடீர் முடிவெடுத்தது. ஒன்றும் நடக்கவில்லை. பாஜகவின் அத்தனை நகர்வுகளுமே தப்புத் தப்பாய் அமைந்துவிட, இப்போது நெருக்கமான கூட்டாளிகளே பாஜகவை கைவிட்டு தங்கள் விருப்பப்படி ஆதரவை அளிக்க ஆரம்பித்துவிட்டன.

என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு நிற்கிறது பாஜக. 2014 தேர்தலுக்கு இது ஒன்றே போதும் என்ற தெம்போடு, காங்கிரஸ் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

மேனகா காந்தி

இப்போது பாஜகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதல் கட்டமாக அக்கட்சியின் முக்கிய தலைவராகக் கருதப்படும் மேனகா காந்தி, தனது ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு நேற்று இரவு தெரிவித்துவிட்டார்.

அடுத்து, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பிரணாப் குடியரசுத் தலைவராவதே நாட்டுக்கு நல்லது என்று அறிவித்துள்ளார். சரத்யாதவ் நிலையும் இதுவே.

இன்று காலை பாஜகவின் உற்ற தோழனான சிவசேனையும் தனது ஆதரவை பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்துவிட்டது.

பாஜக மட்டும்தான் பாக்கி!

-என்வழி ஸ்பெஷல்
One thought on “கலகலத்துப் போன பாஜக அணி… பிரணாபுக்கு நிதீஷ்குமார், மேனகா, சிவசேனா, ஆதரவு!

 1. Venkatesh, Madurai

  இந்த குடியரசுத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜக, ஜெயலலிதா, மம்தா, உள்ளிட்ட அனைவருமே தங்களுக்கு என்ன ஆதாயம் என்று பார்த்துதான் வேட்பாளர்களை அறிவித்தனர்.

  இவர்கள் யாருக்குமே நாட்டின் நலன், அல்லது நல்ல தலைவர் வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. தங்கள் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய ஒருவரை தேடி வந்தார்கள் என்பதே உண்மை.

  காங்கிரஸுக்கு அந்த கட்டாயம் எதுவும் கிடையாது. காரணம், அங்கே அமரப் போகிறவர் ஒரு பக்கா காங்கிரஸ்காரர்தான். எனவே திறமையான வேட்பாளர், எதிரணியும் மதிக்கும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளனர். ஏற்கெனவே இங்கு சிலர் கருத்து கூறியிருப்பதைப் போல, பிரணாப் ஒன்றும் சோனியாவின் ஏவலாளி அல்ல. எந்த சூழலையும் சமாளிக்கும் திறமைசாலி. அப்புறம் எப்படி, சோனியாவின் வீட்டு வேலை செய்பவர்தான் ஜனாதிபதியாக வரமுடியும் என குமரன் போன்றவர்கள் கூறுகிறார்கள்?

  காங்கிரஸ் கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை. அவர்கள் மமதாவின் மிரட்டலை பொருட்படுத்தவே இல்லை. மவுனம் சாதித்தே மமதாவை மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர்.

  இங்கே பலரும் தாங்கள் நினைப்பது, தங்கள் விருப்பத்தை சோனியாவும் காங்கிரஸ் கூட்டணியும் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள். அது எத்தனை பெரிய பேதைமை?

  காங்கிரஸ் தனக்கென வேட்பாளரை வைத்திருக்கும்போது கலாமை எதற்காக அவர்கள் பீல்ட் பண்ணனும். உங்க அணி நிறுத்தட்டுமேன்னு கேட்டால், “இல்லயில்ல, காங்கிரஸ் கலாமைத்தான் நிறுத்தனும். எங்களுக்கெல்லாம் அவரைப் பிடிச்சிருக்கு,” என்ன சின்னபுள்ளத்தனமா திரும்பத் திரும்ப அதையே சொல்லி வருகிறார்கள்.

  எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்போது சோனியாதான் அனைத்துக்கும் காரணம் என்ற பல்லவியைப் பிடித்துக் கொண்டார்கள்.

  ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்பாளர் பிரணாப். உங்களுக்கு யார்? இந்த நேரடிக் கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாமல், கண்டதையும் இங்கே எழுதக் கூடாது. எப்படிக் கேட்டாலும், தனக்கு வசதியாக பதில் சொல்லிக் கொண்டிருப்பது ஒருவித நோயுற்ற மனநிலையின் அறிகுறி.

  தேவராஜன் குறிப்பிட்டிருப்பதைப் போல கமெண்டுகளைப் படிக்கவே வெறுப்பாக இருக்கிறது எனும் நிலையை கிருஷ்ணா என்பரும், கணேஷ் சங்கர் என்பவரும் உருவாக்கி வைத்துள்ளனர் (இரண்டல்லது ஒன்றோ!!).

  கட்டுரைக்கு ஆரோக்கியமான கருத்து சொல்வது இவர்கள் நோக்கமல்ல. கட்டுரை கிடக்கட்டும். நாம் நினைப்பதுதான் சரி என எல்லோரும் பேசிவிட வேண்டும் என்ற சூழலை உருவாக்கும் ஒரு நச்சுத் திட்டம் இது.

  தமிழகத்தில் கரண்ட் இல்லை என்றால், கருணாநிதியே காரணம் என்கிறார்கள். ‘சரி*, வெளக்கெண்ணெய் வந்து ஒரு வருஷம் ஆச்சே, என்ன கிழிச்சாங்க.. இருட்டு மட்டும்தானே மிச்சம்’ என்றால், அதெப்படி ஒரு வருஷம் போதும், 10 வருஷம் வேணும் என்கிறார்கள். ஆடத் தெரியாத தாசி மேடை சரியில்லன்னு முறுக்கிக்கிட்டாளாம்!

  ஏற்கெனவே இந்த வலையில் கொஞ்ச நாள் இந்தப் பிரச்சினை இருந்து, ஓய்ந்தது. மீண்டும் அந்த நிலையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

  வெளியில் எங்களைப் போன்றவர்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *