BREAKING NEWS
Search

ராஷ்ட்ரபதி பவன் இப்போதுதான் ஒரு சரியான தலைவரைச் சந்திக்கிறது!

ராஷ்ட்ரபதி பவன் இப்போதுதான் ஒரு சரியான தலைவரைச் சந்திக்கிறது!


பிரணாப் முகர்ஜி –

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால அரசியல்வாதி. தேர்ந்த நிர்வாகி. உலகின் அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் பரிச்சயமானவர். எந்தப் பிரச்சினையையும் பக்குவமாகக் கையாளக் கூடியவர் என்று பாராட்டப்பட்டவர்… இன்று நாட்டின் முதல் குடிமகனாகும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.

இன்றைய சூழலில் குடியரசுத் தலைவர் பதவிக்கு சரியான தேர்வு பிரணாப் ஒருவரே என எதிர்க்கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளதே, பிரணாபின் தகுதிக்கு பெரிய சான்று!

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ராஷ்ட்ரபதி பவன் பெரிய அறிவாளிகள், மனிதாபிமானிகளைச் சந்தித்திருக்கிறது. சில ரிடையர்ட் அரசியல்வாதிகளுக்கும் இடம் கொடுத்திருக்கிறது. ஆனால் முதல் முறையாக இப்போதுதான் Active Leader  ஒருவரைச் சந்திக்கிறது!

கல்லூரி ஆசிரியராக இருந்த பிரணாப் முகர்ஜி அரசியலில் புகுந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளைக் கடந்து விட்டார்.

எப்போதுமே கண்டிப்பும், கறாரும் மிக்க ஒரு ஆசிரியரின் உடல்மொழியை பிரணாபிடம் பார்க்கலாம். தப்பு செய்தாலோ அல்லது தவறாக பேசினாலோ யாராக இருந்தாலும் கண்டிக்கத் தயங்காதவர். அது கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி. பட்டென்று பேசி விடுவார் பிரணாப் – நாடாளுமன்றக் கூட்டங்களின்போது இதை மக்களும் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்ல, பிடிக்காத விஷயத்தில் அவர் கவனம் செலுத்தியதே இல்லை.

செல்போனில் வரும் ‘நாங்க பிப்பிபிப்பி பேங்கிலிருந்து பேசுறோம்… வீட்டு லோன் வேணுமா?’ மாதிரியான இம்சை கால்களால் படு கடுப்பான இந்தியர்களில் பிரணாபும் ஒருவர். அதுவும் அவர் நாடாளுமன்றத்தில் இருந்தபோதே அந்த கால் வந்தது. இதை பகிரங்கமாக சொன்னதோடு, அத்தகைய அழைப்புகளுக்கு கட்டுப்பாடும் விதித்தார். அதன் பிறகுதான் அதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் இன்று அடியோடு குறைந்து போயுள்ளன. மனதில் நினைப்பதை வெளிப்படையாக பேசி விடுவது பிரணாபின் பலம்.

60களில்தான் பிரணாபின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. அப்போது பங்களா காங்கிரஸில் பொதுச் செயலாளராக இருந்தார் பிரணாப். அப்போது மேற்கு வங்க முதல்வராக அஜோய் முகர்ஜியும், துணை முதல்வராக ஜோதிபாசுவும் இருந்தனர்.

அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற பிரணாப் ஞாபக சக்தியில் புலி. அரசியல் வரலாறு தொடர்பான எந்த நிகழ்வு பற்றிக் கேட்டாலும் படாரென்று பதிலளித்து கலகலக்க வைப்பார். இவரை நடமாடும் என்சைக்ளோபீடியா என்றுதான் பலரும் செல்லமாக அழைக்கின்றனர். இவரது சகாக்கள் பலரும் உங்களைப் போல உண்டா என்று நேரடியாகவே புகழ்ந்து பேசியுள்ளனர் – சற்றே பொறாமையுடன்.

பிரணாபின் தந்தை கிங்கர் முகர்ஜி. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்தவர். இடையில் சில காலம் வக்கீலாகவும் இருந்துள்ளார் பிரணாப். பத்திரிக்கையாளராகவும் பேனாவுடன் திரிந்துள்ளார். 1969ம் ஆண்டு விதி இவரை ராஜ்யசபாவுக்கு இழுத்து வந்து நிறுத்தியது. அன்று முதல் இன்று வரை பிரணாபின் அரசியல் வாழ்க்கையில் எல்லாமே ஏறுமுகம்தான் – இடையில் சில சின்னச் சின்ன சறுக்கல்கள் வந்தாலும், அதற்கடுத்து பெரிய உச்சத்துக்குப் போவது பிரணாபின் ஜாதக விசேஷம்!

1973ம் ஆண்டு மத்திய தொழில் வளர்ச்சித்துறை இணை அமைச்சராக இருந்தார். பின்னர் 1982 முதல் 1984 வரை இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். இந்தப் பதவியை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர் மன்மோகன் சிங்கின் 2வது ஆட்சியின்போது மறுபடியும் பிரணாப் வகித்தார் என்பதிலிருந்தே பிரணாபின் நிர்வாகத் திறனைப் புரிந்து கொள்ளலாம்.

மிகுந்த நினைவாற்றலும், புத்திசாலித்தனமும், சாதுரியமும், திறமையும் மிகுந்தவர் பிரணாப். தீவிர காங்கிரஸ்காரராக இருந்தாலும் கூட எதார்த்தவாதி.

பிரணாப் முகர்ஜி இத்தனை திறமைகளும் நிரம்பியவராக இருந்தபோதிலும் அவர் கடைசி வரை காங்கிரஸில் நம்பர் 2 தலைவராகவே இருந்து விட்டார். இந்திரா காந்தி மறைந்தபோது அடுத்த பிரதமர் தான்தான் என நம்பினார்.  ஆனால் அது ராஜீவ் காந்திக்குப் போனதால் கொஞ்ச நாள் அரசியலில் அமைதி காத்தார். பின்னர் மீண்டும் கட்சிக்குள் வந்தார், அமைச்சர் பொறுப்பிலும் அமர்ந்தார்.

ராஜீவ்காந்தி மரணத்துக்குப் பின் மீண்டும் பிரதமர் கனவு வந்தது பிரணாபுக்கு. ஆனால் அதை நரசிம்மராவ் கலைத்துவிட்டார்.

இவரைத் தேடி பிரதமர் பதவி வராவிட்டாலும் கூட பிரதமர் பதவியில் அமர்ந்தவர்கள் இவரிடம்தான் முக்கிய ஆலோசனைகளைக் கேட்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யமான ஆச்சரியம்.

மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் சரி, இப்போதைய 2வது ஆட்சியிலும் சரி பிரணாபைத் தவிர்த்து ஒரு நாள் கூட ஆட்சி நடந்ததில்லை, கட்சி நடந்ததில்லை. ஒரு கூட்டம்கூட நடந்ததில்லை. அப்படி ஒரு முக்கியத்துவத்துடன் வலம் வந்தவர் பிரணாப்.

நீண்ட காலமாக ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. அதாவது 1969 முதல் 2004 வரை ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர். 2004ம் ஆண்டுதான் முதல் முறையாக நேரடி தேர்தலில் போட்டியிட்டார். மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2009 தேர்தலில் மீண்டும் வென்றார். ஆனால் இனிமேல் போட்டியிட மாட்டேன், வயதாகி விட்டது என்று கறாராக கூறி விட்டார்.

நரசிம்ம ராவ் காலத்தில் இவரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும், இவரது நிதியாற்றல் காரணமாக திட்டக் கமிஷன் துணைத் தலைவராகவும் இரட்டைப் பதவி கொடுத்து வைத்திருந்தார். அதையும் அழகாக சமாளித்தார் பிரணாப்.

மன்மோகன் சிங்குக்கும், பிரணாபுக்கும் இடையிலான தொடர்புகளும் நீண்ட காலமானவை. அதாவது ஒருவர் நிழலை மற்றவர் துரத்திக் கொண்டு ஓடுவதைப் போல இருவருமே மாறி மாறி பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

1982ம் ஆண்டு பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் மன்மோகன் சிங். அதேபோல 1985 முதல் 87 வரை மன்மோகன் சிங் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தார். இப்பதவியை 1991 முதல் 96 வரை பிரணாப் வகித்தார். அப்போது மன்மோகன் சிங், நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார்.

அதேபோல பிரணாப் முகர்ஜி 1987 முதல் 89 வரை காங்கிரஸ் கட்சியின் பொருளாதார ஆலோசனைப் பிரிவின் தலைவராக இருந்தார். இதே பொறுப்பை 1999 முதல் 2004 வரை மன்மோகன் சிங் வகித்தார். இப்படி இருவருக்குமான தொடர்பு ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு போல தொடர்ந்து வந்தது.

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் போல பிரணாப் முகர்ஜியின் திறமையைக் குறித்துச் சொல்ல வேண்டுமானால் இதைச் சொல்லலாம் – இத்தனை ஆண்டு கால அமைச்சர் பதவி அனுபவத்தில் மொத்தம் 33 பல்வேறு துறைகளின் அமைச்சர் குழுக்களுக்குத் தலைவராக இருந்துள்ளார் பிரணாப்.

இதுவரை ரப்பர் ஸ்டாம்ப் என கிண்டலடிக்கப்பட்டு வந்த குடியரசுத் தலைவர் பதவி, பிரணாப் மூலம் பரபரப்பான, நிஜமான அரசியல் தலைமைத்துவத்தைப் பெறும் என அரசியல் தாண்டி பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை விட வேறு என்ன வேண்டும், பிரணாப்பைப் பற்றிச் சொல்ல… அடுத்த குடியரசுத் தலைவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

-என்வழி ஸ்பெஷல்
34 thoughts on “ராஷ்ட்ரபதி பவன் இப்போதுதான் ஒரு சரியான தலைவரைச் சந்திக்கிறது!

 1. தினகர்

  தன்னை விட ஜூனியரான மன்மோகனுக்கு கீழ் அமைச்சராக பணியாற்றியதில் கொஞ்சம் வருத்தப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு அதை சமன் செய்ய ஒரு வாய்ப்பும் கிடைத்துள்ளது. குடியரசு தலைவரை சந்திக்க பிரதமர் தானே போக வேண்டும்..

  பிரணாப் முகர்ஜி முதல் குடிமகனாக புதிய முத்திரை பதிப்பார் என நம்புவோம். வாழ்த்துக்கள்

 2. Red Ragu

  அப்துல்கலாம் அவர்களுகு பின்னர் “முதல் குடிமகன்” என்ற பெயரை காப்பாற்றக்கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக.. திரு.பிரணாப் மின்னுவர் என்ற நம்பிக்கையில் “வாழ்த்துக்கள்”

 3. r.v.saravanan

  இதுவரை ரப்பர் ஸ்டாம்ப் என கிண்டலடிக்கப்பட்டு வந்த குடியரசுத் தலைவர் பதவி, பிரணாப் மூலம் பரபரப்பான, நிஜமான அரசியல் தலைமைத்துவத்தைப் பெறும் என அரசியல் தாண்டி பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  வாழ்த்துக்கள் பிரணாப் முகர்ஜி சார்

 4. Giri

  Another Good Tactics from Congress party, any how in next loksaba election congress party not able to come for power, so that now itself the represnting strong leader from congress end….Will see….

 5. Arun

  ஏன் நமது கலாமும் சிறப்பாக தானே பணியாற்றினார். “ராஷ்ட்ரபதி பவன் இப்போதுதான் ஒரு சரியான தலைவரைச் சந்திக்கிறது!” என்று கூறுவது கலாமினை underestimate செய்வது போல் உள்ளது. இது எனது கருத்து.

 6. குமரன்

  குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர்கள் ரப்பர் ஸ்டாம்ப் ஆக ஆரம்பித்த்தது 1969 க்குப் பிறகுதான். இந்திராவின் ஆளும் போக்கு அப்படிப்பட்டது.

  பாப் ராஜேந்திரப் பிரசாத், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதுடன் அவர்களால் குடியரசுத் தலைவர் பதவில்லு ஒரு சிறப்பே ஏற்பட்டது எனலாம்.

  பின்னர் வந்த குடியரசுத் தலைவர்கள் காங்கிரஸ் ஆளும் காலத்தில் அவர்கள் ஆதரவுடன் வந்தவர்கள் எல்லாம் ரப்பர் ஸ்டாம்புகள் ஆகவே இருந்து வந்தார்கள்.

  சஞ்சீவ ரெட்டியும், அப்துல் கலாமும் ரப்பர் ஸ்டாம்புகள் என்று சொல்ல முடியாது.

  குறிப்பிட்டுச் சொன்னால், சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவர் என்பதும், அவர் இந்தியாவுக்கு வந்தும் கூட பல பத்தாண்டுகளுக்கு இந்தியக் குடியுரிமை ஏற்கவில்லை என்பதையும் கருத்தில் கொண்டுதான் அவரைப் பிரதமராகப் பதவி ஏற்க அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெகு தைரியமாகவும், அர்ப்பணிப்புடன் கூடிய தேச பக்தியுடனும் எடுத்து அதற்கான சட்ட வல்லுனர்களைக் கலந்து ஆலோசித்து விருப்பு வெறுப்பு இல்லாமல், வெளிப்படையாக முடிவை எடுத்து அறிவித்தவர் அப்துல் கலாம்.

  அத்துடன் நில்லாமல் அவரது வெளி நாட்டுப் பயணங்கள் இப்போதுள்ள பிரதிபா பாட்டிலுடையது போல சுற்றுலாப் பயணங்களாக அமையவில்லை. ஒவ்வொரு பயணமும் அந்தந்த நாட்டுடன் ஆனா நல்லுறவை வேகுமளவில் பலப்பாடுத்தும் வகையில் “diplomacy ” உடன் அமைந்தன.

  அவர் எந்த வித அதிகார துஷ்பிரயோகமும் செய்யவில்லை. அவரது குடும்பத்தார் இன்னமும் எளிமையாக உள்ளனர். அவரும் எளிய வாழ்வே வாழ்கிறார்.

  அவர் ஊழல் செய்யவில்லை.

  அவர் இந்த நாட்டின் இளைஞர்களை ஊக்குவிப்பதில் தனி அக்கறை காட்டினார், இன்றும் காட்டி வருகிறார்.

  ஒரு அப்பளுக்கற்ற மனிதர் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதை எந்த ஊழல் அரசியல்வாதியும் விரும்பவில்லை. நமது “தமிழினத் தலைவர்” “டாக்டர்” “கலைஞர்” அவர்களுக்கு கலாமை ஏன் பிடிக்கவில்லை என்பதற்கான காரணங்கள் நான் பட்டியல் இட்ட நற்பண்புகள்.

  தூய்மையான ஒரு தமிழனை விட காங்கிரஸ் தலைவர் “சொக்கத்தங்கம்” “அன்னை” “தியாகத் திருவிளக்கு” சோனியா சுட்டிக் காட்டும் “அரசியல் நெளிவு சுளிவுகளில் கைதேர்ந்த” “ஆரியரான” பிரணாப் முகர்ஜி அவர்கள்தான் கருணாநிதிக்குப் பிடித்தவர்.

 7. குமரன்

  காங்கிரசைப் பொறுத்த மட்டில் அவர்களிடம் உள்ளவர்களில் பிரனாப்தான் சரியான தேர்வு.

  அரசியல் ரீதியாகவும் காங்கிரசுக்கு இதனால் பல லாபங்கள்.

  மம்தாவைக் கட்டுக்குள் வைக்கலாம்.
  அடுத்த பிரதமராக ராகுலை அமர்த்த பிரணாப் இருக்கையில் செய்வது தர்ம சங்கடம். எப்போதும் இரண்டாம் இடத்தில் இருக்க அவர் என்ன பேராசிரியர் அன்பழகனா? வீட்டில் இருக்கும் அடுத்த வார்சுகள் எல்லாம் முதல் இடத்துக்கு வரவும் தாம் மட்டும் இருந்த இடத்தை விட்டு நகராமல் இருக்கவும் பிரணாப் விரும்பவில்லை.

  எனவே பிரனாபுக்கு புரமோஷன் கொடுத்து விட்டால் ராகுல் அடுத்த காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் ஆவதில் வசதியே. ஆனால் ராகுல் பிரதமர் ஆவது மக்கள் கையில்.

  இப்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் சிதம்பரத்துக்குச் சங்கடம்தான். அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

 8. raja

  this guy supported killing tamils at eelam. he should not be supported.. according to seeman.

 9. mathan

  இவன் ஒரு தமிழர் விரோதி. ஈழத்தில் 2 லட்சம் மக்கள் அழிய காரணமானவன் இந்தியாவின் ஜனாதிபதி ஆவது கேலிக்குரிய நிகழ்வு

 10. Ramkumar

  நாட்டின் மிக பொறுப்பு கிடைத்தும் தமிழராய் இருந்து ஈழதமிழர் பிரச்சினையின் தீர்வுக்கு அப்துல் கலாம் என்ன முயற்சி செய்தார் ? தன் சொந்த மண்ணிண் மீனவர்கள் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டபோது அதற்க்கு நிரந்தர தீர்வுகான அப்போதைய மத்திய அரசை இவர் நிபந்திக்காதது ஏன் ? அணு உலை பிரச்சினையில் இவரின் நடவடிக்கை தமிழர்களுக்கு எதிரானது இல்லையா ? தமிழராய் பிறந்து இந்தியராய் வாழும் இவரும் தமிழர்களின் பார்வையில் அப்பதவிக்கு தகுதி இல்லாதவரே..

  -இது என் கருத்தல்ல, யாரோ இமெயிலில் அனுப்பியது. யோசிக்க வேண்டியிருக்கே!!

 11. தேவராஜன்

  கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி கூறியதை வைத்து, முஸ்லிம்கள் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதை அப்படியே திமுக மற்றும் கருணாநிதிக்கு எதிராகத் திருப்பும் முயற்சியும் நடக்கிறது.

  கருணாநிதி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?

  எந்த ஆதரவும், பின்புலமும், அரசியல் செல்வாக்கும் இல்லாத கலாம், தனக்கு ஒரு மித்த ஆதரவு இல்லை என்பது தெரிந்தும், பிரசிடென்ட் போஸ்டைப் பெற முயற்சிப்பதால், ஏற்பட்டுள்ள தேவையற்ற குழப்பங்களைக் குறிப்பிடத்தான் கருணாநிதி இந்த சொல்லைப் பயன்படுத்தியுள்ளாரே தவிர, கலாம் என்ற வார்த்தைக்கு அகராதி ரீதியான அர்த்தத்தைச் சொல்ல அல்ல.

  தமிழில் கலாம் என்றால் கலகம் என்றுதானே அர்த்தம். க்ரியா தமிழ் அகராதி மற்றும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அகராதிகளில் கலகம் (கலாம்) – சண்டை, சச்சரவு என்றுதானே அர்த்தம் தந்துள்ளனர்.

  கலகம் என்ற சொல்லியில் ‘க’ மயங்கி, கலாம் என்று இலக்கியங்களில் கையாளப்படுவது உண்மைதானே..

  மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்றல்லவா ஆகிவிட்டது.

  கலாம் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள ஆரம்பத்திலேயே ஒதுங்கியிருந்திருக்கலாம். ஒரு சராசரி அரசியல்வாதியாகி, நமக்கு மீண்டும் அந்தப் பதவி கிடைத்தால் நன்றாக இருக்குமே என்றுதானே நினைத்துவிட்டார். அப்படியே இவர் பிரசிடென்டாக இருந்த காலத்தில் ஏதாவது நல்லது நடந்ததா, அதுபற்றி யாராவது ஏதேனும் கூற முடியுமா?

  இவர் பிரசிடென்டாக இருந்த காலத்தில் செய்த பயணங்கள் அனைத்திலும் ஏதாவது வெளிநாட்டு சர்ச் அல்லது மசூதிகளுக்குப் போவதை வழக்கமாக வைத்திருந்தார். காங்கிரஸ் அரசுடன் நல்ல உறவு இல்லாததால், அரச ரீதியான உறவுவை அயல் நாடுகளிடம் மெயின்டெய்ன் பண்ணவும் முடியவில்லை!

  கலாம் நல்ல மனிதர். ஆனால் நிர்வாகத் திறமை அற்றவர். ராஜரீக விவகாரங்களுக்கு சரிப்படாதவர். அதனால்தான் பாஜகவே அவரை மீண்டும் பிரசிடென்ட் ஆக்க விரும்பவில்லை.

 12. பாவலன்

  ///தமிழில் கலாம் என்றால் கலகம் என்றுதானே அர்த்தம்.//// (தேவராஜன்)

  இதைப் பற்றி நண்பர் அமானுல்லா ஒரு பெரிய பதிவு
  செய்துள்ளார். ‘அப்துல் கலாம்’ என்பது அராபியப் பெயர்.
  இதற்கு தமிழ் அகராதியில் பொருள் தேடி கலைஞர்
  சொன்னதை நியாயப்படுத்துவது தவறு.

  -பாவலன்

 13. uday

  உங்களுடைய தலைப்பு தவறு … இவரால் ஒன்றும் செய்ய முடியாது .. இந்திய பொருளதரதையே தலைகீழாக ஆக்கியதே இவர் தான் .. துடிக்க துடிக்க தமிழன் ஈழத்தில் கொள்ளப்படும் போது இவனும் திமுகவும் என்ன விளையாட்டு விளையாடினார்கள் .. அப்துல் கலாம் தான் சரியான நபர் .. அவர் வந்தார் என்றால் அமெரிக்காவே பயப்படும்.. உண்மை தமிழன் அவர்.. தமிழ்னு சொல்லி கொள்ளை அடிக்கும் திமுக கருணாநிதி குடும்பம் அல்ல அவர் .. அப்துல் கலாமின் வரலாற்றை படித்து பாருங்கள் உங்களுக்கு இதை விட பெரிய கட்டுரை எழுத முடியும் ..

 14. பாவலன்

  //ஒரு அப்பளுக்கற்ற மனிதர் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதை எந்த ஊழல் அரசியல்வாதியும் விரும்பவில்லை. // (குமரன்)

  மிகத் தெளிவாக எழுதி உள்ளீர்கள். உதய் சொன்னது போல் அப்துல்
  கலாமின் வரலாறு நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. பள்ளிகளில்
  பாடமாக வர வேண்டிய ஒன்றும் கூட. கலாமை ‘கலகம்’ என அழைத்த
  கலைஞருக்கு காலம் தக்க பதில் தரும்.

  கிருஷ்ணா, கணேஷ் ஷங்கர் கருத்துக்கும் நன்றி!

  -பாவலன்

 15. தேவராஜன்

  திரு பாவலன்,
  இன்றைய அரசியல் சூழலை மனதில் வைத்து கலைஞர் பிரயோகித்த ஒரு சிலேடை சொல்லாடல் அது. அதை இத்தனை சீரியஸாக்குவது வேடிக்கை மட்டுமல்ல, கருணாநிதி வெறுப்பைத்தான் காட்டுகிறது.

  கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இந்த முறை இல்லாத நிலையில், இத்தகைய விமர்சனங்களை தாங்கித்தானே தீர வேண்டும்? கலாமுக்கு ஏன் காங்கிரஸும், திமுகவும், சமாஜ்வாடியும் வேலை பார்க்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறீர்கள்?

  கலாம் என்ற சொல்லுக்கு கருணாநிதி தமிழில் சொன்ன அர்த்தத்தை, நீங்கள் அரபி மொழி அர்த்தத்தோடு ஒப்பிட்டுக் கொண்டிருப்பது சரியா?

 16. Krishna

  //இன்றைய அரசியல் சூழலை மனதில் வைத்து கலைஞர் பிரயோகித்த ஒரு சிலேடை சொல்லாடல் அது. அதை இத்தனை சீரியஸாக்குவது வேடிக்கை மட்டுமல்ல, கருணாநிதி வெறுப்பைத்தான் காட்டுகிறது. கலாம் என்ற சொல்லுக்கு கருணாநிதி தமிழில் சொன்ன அர்த்தத்தை, நீங்கள் அரபி மொழி அர்த்தத்தோடு ஒப்பிட்டுக் கொண்டிருப்பது சரியா? – தேவராஜன்//

  கலாம் என்ற வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல, அந்த வார்த்தை எந்த மொழியுடையதோ, அந்த மொழியின் அர்த்தத்தில் தான் பார்க்க வேண்டும். வேறு ஒரு உதாரணம் சொல்வதென்றால் ஹிந்தி பேசும் ஒருவர் “நாக்கு” என்று கூறினால், தமிழில் “மூக்கு” என்று அர்த்தம். இதை வைத்துக் கொண்டு ஹிந்தி பேசுகிறவர்கள் நாக்கால் சுவாசிக்கிறார்கள் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தம் கருணாநிதியின் விளக்கம். கருணா என்றால் அரேபிய மொழியில் கொம்புகள் என்று அர்த்தம் என்று ஒரு இஸ்லாமிய நண்பர் ஒரு வலைதளத்தில் எழுதியுள்ளார். அதை வைத்துக்கொண்டு கருணாநிதிக்கு கொம்பு முளைத்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?

 17. palPalani

  தொழில் அதிபர்களை காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை – பிரணாப் முகர்ஜி

 18. பாவலன்

  ///கலாம் என்ற வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல, அந்த வார்த்தை எந்த மொழியுடையதோ, அந்த மொழியின் அர்த்தத்தில் தான் பார்க்க வேண்டும்.///
  (கிருஷ்ணா)

  கலைஞர் முன்பு ஹிந்து என்றால் ‘திருடன்’ என ஒரு முஸ்லீம்
  மீட்டிங்கில் சொன்னார். அதை அங்கு இருந்த முஸ்லீம்களே ஏற்கவில்லை.
  பெரும் எதிர்ப்பு வந்த பின், “உள்ளம் கவர் கள்வன்” என சமாளித்தார்.
  அதே போல் கலாமை ‘கலக்கம்’ என ஏளனம் செய்து விட்டு
  (இதை காங்கிரசாரே ரசிக்கவில்லை!), பின்னர் “நான் கலாமின் மீது
  மரியாதை வைத்திருப்பவன்” என சமாளிக்க பார்க்கிறார்.

  “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
  காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு” (குறள்)

  இங்கே ‘சோர்வு’ என்ற சொல் ‘தவறு’ என்று பொருள்படுகிறது.
  காலப் போக்கில் ‘சோர்வு’ என்ற சொல்லின் பொருள் மாறி
  “அயர்வு” (tiredness) என ஆகி விட்டது. (சங்க நூல்களில் ‘நாற்றம்’
  என்றால் ‘நறுமணம்’ என்று பொருள். “நாற்ற நறுமலர்’ என்பார்கள்.
  இன்று ‘நாற்றம்’ என்பதன் பொருள் ‘துர்மணம்” என ஆகிவிட்டது!)

  மு.வ உரை:

  ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

  கலைஞர் குறளோவியம் எழுதியவர், பெரும் தமிழ் அறிஞர்.
  அவர் கவனமாக சொற்களை கையாள வேண்டும். நன்றி.

  -பாவலன்

 19. Krishna

  பாவலன் அவர்களே, தங்களின் குறள் எடுத்துக்காட்டும் மு.வ. உறையும் பொருத்தமாக இருக்கிறது. இதை விடுத்து பார்க்கும் போது, நான் ஏற்கனவே சொன்னது போல் கலைஞர் கருணாநிதி கடந்த காலங்களில் கர்ம வீரர் காமராஜரையே அண்டங்காக்காய், அமாவாசை இருட்டு என்றெல்லாம் தரக்குறைவாக பேசியிருக்கிறார். அதையெல்லாம் பார்க்கும் போது இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  பிரணாப் முகர்ஜியை எடுத்துக்கொண்டால் அவர் நியாயமாக பிரதமராகி இருக்கவேண்டும் – இப்போது அல்ல, இந்திரா காந்தி படு கொலை செய்யப்பட பின்பே. பொதுவாக பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இறந்தால், நம்பர் 2 தான் தாற்காலிக பிரதமராக வேண்டும் என்பது மரபு. ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி இறந்த பிறகு நம்பர் 2 வாக இருந்த குல்ஜாரிலால் நந்தா தான் தாற்காலிக பிரதமராக இருந்தார். அதே போன்று இந்திரா காந்தி கேபினெட்டில் நம்பர் 2 ஆக இருந்த பிரணாப் தான் அப்போதே காபந்து பிரதமராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் பதவி என்பது தனது குடும்பத்துக்கு வெளியே போய் விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்தில் இருந்த ராஜீவ் காந்தி பிரணாப் முகெர்ஜி பிரதமராவதை தடுத்தார். அதுவும் யார் மூலமாக? “இந்திரா காந்தி சொன்னால் அவர் வீட்டை துடைப்பத்தால் பெருக்க தயாராக இருக்கிறேன்” என்று சத்திய பிரமாணம் செய்த அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் மூலமாக. இந்திரா காந்தி சுடப்பட்ட போது ராஜீவும் பிரனாபும் கொல்கத்தாவில் இருந்தார்கள். ராஜீவ் காந்தி உடனே டில்லி புறப்பட்டார். ஆனால் எங்கே பிரணாப் தற்காலிக பிரதமர் பதவியை claim பண்ணுவாரோ என்று பயந்து அவரை கொல்கத்தாவிலிருந்து செல்லாமல் பார்த்துக்கொண்டார். 2004-ல் சோனியா எப்போது பிரதமராக முடியவில்லையோ அப்போதே பிரணாப் தான் ஆகியிருக்க வேண்டும். ஆனால் பிரனாபோ தன்னிச்சையாக (independent) ஆக செயல்படக் கூடியவர். சோனியா சொல்வதர்க்கெல்லாம் தாளம் போட மாட்டார். அதனால் தான் தலையாட்டி பொம்மையாக இருக்கக் கூடிய மன்மோகன் சிங்கை தேர்வு செய்தார். எதோ பிரனாபிற்கு இவ்வளவு ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் ஜனாதிபதி பதவியாவது கிடைத்ததே என்று சந்தோசம் தான்.

 20. பாவலன்

  ///ஆனால் பிரனாபோ தன்னிச்சையாக (independent) ஆக செயல்படக் கூடியவர். சோனியா சொல்வதர்க்கெல்லாம் தாளம் போட மாட்டார். அதனால் தான் தலையாட்டி பொம்மையாக இருக்கக் கூடிய மன்மோகன் சிங்கை தேர்வு செய்தார். எதோ பிரனாபிற்கு இவ்வளவு ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் ஜனாதிபதி பதவியாவது கிடைத்ததே என்று சந்தோசம் தான்./// (கிருஷ்ணா)

  கிருஷ்ணா அவர்களே..மன்மோகன் சிங் பிரதமராக இருந்தாலும்
  நிர்வாகத்தில் (தப்போ, ரைட்டோ) பெரும் பொறுப்பை வகித்து,
  பல கமிட்டிகளின் தலைவராக பராமரித்தவர் பிரணாப் முகர்ஜி.
  அவரை Troubleshooter என அழைப்பார்கள். மம்தாவின் அதிரடியால்
  உடனடியாக UPA-2 அவரை Presidential candidate ஆக அறிவித்தது.
  அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில், அவர்
  இல்லாமல் மன்மோகன் சிங் அவர்களால் திறமையாக நிர்வாகம்
  செய்ய முடியுமா? உங்கள் கருத்து என்ன ?

  -பாவலன்

 21. Manoharan

  ////இவன் ஒரு தமிழர் விரோதி. ஈழத்தில் 2 லட்சம் மக்கள் அழிய காரணமானவன் இந்தியாவின் ஜனாதிபதி ஆவது கேலிக்குரிய நிகழ்வு///

  உண்மையச் சொன்னீங்க…

 22. Krishna

  //மம்தாவின் அதிரடியால்
  உடனடியாக UPA-2 அவரை Presidential candidate ஆக அறிவித்தது.
  அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில், அவர்
  இல்லாமல் மன்மோகன் சிங் அவர்களால் திறமையாக நிர்வாகம்
  செய்ய முடியுமா? உங்கள் கருத்து என்ன ?//

  பாவலன் அவர்களே, வசூல் ராஜா திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் “பூட்ட கேஸ்” என்பார். பிரணாப் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தான் மத்திய அரசின் நிலை. பிரனாபை பொறுத்தவரையிலும் அவர் ஒரு சிறந்த troubleshooter ஆக இருக்கலாம் – ஆனால் அவர் ஒரு incompetent Finance Minister. அவர் சீனியாரிட்டியை வைத்து பார்த்தால் அவருக்கு உள்துறை பதவி தான் கொடுக்க முடியும். ஆனால் அது சிதம்பரத்திடம் இருக்கிறது. வேறு எந்த துறை கொடுத்தாலும் அது அவரை degrade செய்வது போல் அமைந்து விடும். அதே சமயத்தில் இப்போதைய பொருளாதார சீர்கேட்டை சரி செய்வதற்கு அவரிடம் எந்த திட்டமும் இல்லை. அதனால் அவரை நிதி துறையில் இருந்து தூக்க வேண்டிய கட்டாயத்தில் சோனியா இருக்கிறார். எனவே அவரை குடியரசு தலைவர் பதவிக்கு நியமனம் செய்தது மூலம் இந்த பிரச்சினையை அவர் ஓரளவு சரி செய்திருக்கிறார். இதை தான் “உதைத்து மேலே தள்ளுவது” என்று சொல்லுவார்கள். அது தான் அவருக்கு நடந்திருக்கிறது.

 23. பாவலன்

  ///அதனால் அவரை நிதி துறையில் இருந்து தூக்க வேண்டிய கட்டாயத்தில் சோனியா இருக்கிறார். எனவே அவரை குடியரசு தலைவர் பதவிக்கு நியமனம் செய்தது மூலம் இந்த பிரச்சினையை அவர் ஓரளவு சரி செய்திருக்கிறார். /// (கிருஷ்ணா)

  கலைஞரை விட சோனியா காந்தி பெரும் அரசியல் சாணக்கியன் ஆக
  இருக்கிறார் போல் தெரிகிறதே!

  -பாவலன்

 24. Krishna

  “கலைஞரை விட சோனியா காந்தி பெரும் அரசியல் சாணக்கியன் ஆக
  இருக்கிறார் போல் தெரிகிறதே!”

  பாவலன் அவர்களே, இங்கு தான் சோனியாவின் ராஜ தந்திரம் தோற்று விட்டது. எப்படியெனில் கடந்த முறை பிரதிபா பாட்டிலை தேர்வு செய்த போது எந்த அடிப்படையில் அவரை சோனியா தேர்வு செய்தார் என்ற குழப்பம் சில வருடங்களாக நீடித்தது. ஆனால் சென்ற ஆண்டு ஒரு ராஜஸ்தான் காங்கிரஸ் MLA அந்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார். அவர் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசும் போது “காங்கிரஸ் தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் பெரிய பதவிகள் தானாக தேடி வரும். இப்படித் தான் இந்திரா காந்தியின் வீட்டில் சமயற்காரியாக இருந்த பிரதிபா பாட்டில் நாட்டின் தலை சிறந்த ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்ற அந்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார். ஆத்திரமடைந்த காங்கிரஸ் மேலிடம் அவரை கட்சியிலிருந்து தூக்கி விட்டது. சோனியாவுக்கு ideal-ஆக அது போன்ற ஒரு ரப்பர் ஸ்டாம்பை தான் இம்முறையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உந்துதல் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால் மம்தாவும் முலாயமும் என்ன செய்தார்கள்? கலாம் பெயரை முன்மொழிந்து சோனியாவின் வயிற்றில் புளியை கரைத்து விட்டார்கள். இதனால் சோனியாவுக்கு பிரணாப் என்ற lesser evil – ஐ தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. முலாயமோ பிரனாபை தவிர வேறு யாரையும் ஏற்க மாட்டேன் என்று தீர்க்கமாக சொல்லிவிட்டார். பிரனாபோ பிரதிபா பாட்டில் போல் கூஜா தூக்க கூடியவர் இல்லை. இதன் மூலம் தாம் விரும்பாத பிரணாப் குடியரசு தலைவர் ஆவதை சோனியா அவ்வளவாக ரசிக்க மாட்டார் என்று நிச்சயமாக சொல்லல்லாம்.

 25. சேனா

  Anti-corruption crusader Anna Hazare on Monday appeared to approve the candidature of Finance Minister Pranab Mukherjee for the President’s post, describing him as “better than other UPA ministers”.

  -Anna Hazare , June 19 .

 26. பாவலன்

  ///இதன் மூலம் தாம் விரும்பாத பிரணாப் குடியரசு தலைவர் ஆவதை சோனியா அவ்வளவாக ரசிக்க மாட்டார் என்று நிச்சயமாக சொல்லலாம்.///
  (கிருஷ்ணா)

  நண்பர்களே.. கடந்த ஒரு வார நிகழ்வுகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்
  யார் யார் என்று பார்த்தால்..1 ) NDA 2) டாக்டர் அப்துல் கலாம் 3 ) மாம்தா
  பானர்ஜி, 4 ) முலாயம் சிங் யாதவ்

  Winners யார் யார் என்று பார்த்தால் 1) டாக்டர் மன்மோகன் சிங், 2 ) பிரணாப்
  முகர்ஜி, 3) UPA-II.

  தமிழ்த் திரைப்படங்கள் ஒரு winning formula என்ன என்றால் இண்டர்வல்
  வரை ஹீரோ அப்பாவியாக இருப்பார், அடி வாங்குவார், ஏமாற்றப்படுவார்,
  காதல் தோல்வி கூட இருக்கும். வாழ்வின் அடிமட்டத்தை அடைந்த
  நிலையில் இண்டர்வல் பெல் அடிக்கும். நாமும் கூட “இந்த மொக்கைப்
  படத்தையோ பார்க்க வந்தோம்? பேசாம அப்படியே escape ஆயிடுவோமா?”
  என யோசிப்போம். சிலர் ஒரு டீ அடித்துவிட்டு சிகரட், பீடி பிடித்த படி
  கேட்டைத் திறந்து வெளியே போனதையும் பார்த்ததுண்டு. ஆனால்
  கதை தெரிந்தவர்கள் ஒரு பாப் கார்னை வாங்கிக் கொண்டு (உப்புக்
  கரிக்கும்!) உள்ளே உட்காருவோம். திடீர் என ஒரு change, ஹீரோவிடம்.
  தடாலடியாக சண்டை போடுவார். திடீர் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி
  விடுவார். வில்லன் கும்பலை பாய்ந்து பாய்ந்து அடிப்பார். வில்லன்
  மகளுடன் டூயட் பாடுவார். பெரிய க்ளைமாக்ஸ் சண்டையில் வில்லன்
  போலீசிடம் சரணடைவார்.

  விஷயத்திற்கு வருகிறேன். “2014-வரை நீங்கள் தான் பிரதமர்!” என
  காங்கிரஸ் தலைவர் (தலைவி) சோனியா காந்தி அறிவித்து, நிதித்
  துறையும் (finance ministry) மன்மோகன் சிங் கைக்கு வரும் நிலையில்
  அதிரடியாக களத்தில் இறங்கி, ratings-ஐ stable நிலைக்கு கொண்டு வந்து,
  ஊழல்களை களைந்து, மக்கள் மனதில் நல்ல பெயர் வாங்குவாரா?
  winning formula அவருக்கு work out ஆகுமா? உங்கள் கருத்து என்ன?

  -பாவலன்

 27. Krishna

  //“2014-வரை நீங்கள் தான் பிரதமர்!” என
  காங்கிரஸ் தலைவர் (தலைவி) சோனியா காந்தி அறிவித்து, நிதித்
  துறையும் (finance ministry) மன்மோகன் சிங் கைக்கு வரும் நிலையில்
  அதிரடியாக களத்தில் இறங்கி, ratings-ஐ stable நிலைக்கு கொண்டு வந்து,
  ஊழல்களை களைந்து, மக்கள் மனதில் நல்ல பெயர் வாங்குவாரா?
  winning formula அவருக்கு work out ஆகுமா? உங்கள் கருத்து என்ன?//

  பாவலன் அவர்களே, சில நாட்களுக்கு முன் Standard & Poor என்ற அயல் நாட்டு நிறுவனம், நம் நாட்டின் நிதி நிலைமை மீட்க முடியாத அளவுக்கு (beyond redemption) அதல பாதாளத்துக்கு போய் விட்டது என்று புள்ளி விவரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது. சோனியாவுக்கு எப்படியும் நம் நாட்டின் மீதோ, ஏன் காங்கிரஸ் மீதோ கூட அக்கறை இருப்பதாக தெரியவில்லை. 2009 தேர்தலில் காங்கிரஸ் தோற்று விடும் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருதார்கள். ஆனால் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் ராஜ் தாக்கரே, சிரஞ்சீவி, விஜயகாந்த் போன்றவர்களை பயன் படுத்தி ஆளும் கட்சி எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து 2004-ஐ விடவும் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறவில்லையா? இப்போது கூட இது போன்ற சிந்தனையில் தான் காங்கிரஸ் இருக்கும். தவிர பாஜகவில் ஏற்பட்டு வரும் குடுமி பிடி சண்டையை பார்க்கும் போது காங்கிரஸ் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏதாவது தகிடுதத்தம் மூலம் வெற்றி பெற்றால் போதும் என்று தான் நினைப்பார்கள். அவர்களுக்கு உண்மையான சவால் எப்போது வரும் என்றால் பாஜகவில் ஒற்றுமை ஏற்பட்டு நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால் தான். அதிலும் நிதிஷ் குமார் போன்றவர்கள் இருக்கும் போது காங்கிரசுக்கு கவலை இல்லை. ஆனால் போகிற போக்கை பார்த்தால் மக்களுக்கு கை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்தில் வேண்டுமானாலும் போடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் காங்கிரசின் இந்த சரிவு மாநில கட்சிகளுக்கு தான் நன்மையாக முடியும். பாஜகவால் இந்த பலனை அறுவடை செய்ய முடியாது.

 28. பாவலன்

  கிருஷ்ணாவின் நீண்ட பதிலில் இருந்து நான் தெரிந்து கொண்டது
  இது தான்: With regard to MMS, the status quo will continue & India’s
  financial problems may continue as well. Congress is not worried about NDA
  after their poor strategic planning in Presidential Elections. நன்றி!

  -பாவலன்

 29. குமரன்

  கிருஷ்ணாவின் அலசல் superb.

  இந்திராவும் சோனியாவும் எந்த அளவுக்கு குடியரசுத் தலைவர் பதவியை தாழ்ந்த நிலைக்குக் கொண்டு போய் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்திருக்கிறீர்கள்.

  சோனியாவும் இந்திராவும் ஜெயலலிதாவும் மமதாவும் மாயாவதியும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இந்த தேசத்தின் அரசியலை அதல பாதாளத்துக்குக் கொண்டுபோய் இருக்கிறார்கள். இதனை பெண்ணியம் என்ற பார்வையில் பார்க்க வேண்டாம். இன்னொரு புறத்தில் கருணாநிதியும் இன்னபிற ஆண் அரசியல் வாதிகளும் இதையே செய்து வருகிறார்கள். ஜெயலலிதா காலில் அமைச்சர்கள் விழுவது போலவே இந்திராவுக்கும் சோனியாவுக்கும் வீட்டு வேலை (menial jobs) செய்பவர்கள் குடியரசுத் தலைவராகவே ஆக முடியும் என்றால் மற்ற பதவிகளில் கூட இப்படிப் பட்டவர்கள் இருக்க முடியும் என்பது உண்மை ஆகிறது.

  நீங்கள் சொன்ன உதைத்து மேலே தள்ளுவது என்ற உதாரணம் மிகச் சரியே.

 30. குமரன்

  பாவலன் அவர்களே

  சோனியா அரசியல் சாணக்கியன் என்று சொல்வது அவரை மிகவும் எளிதாக எடை போடுதல்.

  சோனியாவிடம் அப்படியே ஐரோப்பிய சதிவலை பின்னும் திறன் மேம்பட்டிருக்கிறது.

  அவர் நினைத்ததை சாதிப்பதில் திறமையானவர்.

  ஆனானப்பட்ட அரசியல் சாணக்கியர், அறுபதாண்டுகளுக்கும் மேலால இந்திய அரசியலில் முன்னணியில் இருப்பவர், எல்லா இந்திய முன்னணி அரசியல்வாதிகளுடன் முட்டி மோதியவர், சிறந்த அறிஞர் (இப்போது நான் சொல்வது அனைத்துமே உளமார சொல்பவையே, satire அல்ல) கருணாநிதியே கூட சோனியாவிடம் “ஜூஜூபி” என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

  கூட்டணி வைத்து உறவாடி, கருணாநிதிக்கு அதிக பட்ச மரியாதை காட்டி, அவருக்கு வேண்டிய அளவுக்கு மந்திரி பதவி கொடுத்து, தேசத்தின் மாபெரும் ஊழலில் முதன்மைப் பங்கைக் கொடுத்துத் தான் சாதாப் பங்கை எடுத்து, பிரியங்காவை புழல் சிறைக்கு அனுப்பி நளினியை வேவு பார்த்துவந்து, லட்சக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை என்று சிங்கள அரசுக்கு ஆதரவு தந்து, விடுதலைப் புலிகளைப் பூண்டோடு அளித்தாரே சோனியா, அதை விடவா பிரணாப்பை நாசூக்காக ஓரம் கட்டியது பெரிய தந்திரம் ?

  தன் ஈழப் பலி தீர்ந்தபின்னர், அதே கருணாநிதியைக் கண்டும் காணாமல் ஓரமாக வைத்து அரசியல் செய்யும் சோனியாவின் தந்திரத்தை நாடு இப்போது பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது?

  தனது உறவினரோ, நண்பரோ என்னமோ கொத்தரோச்சியைத் தப்பிக்க வைத்த சாமர்த்தியம், அதுவும் நாட்டின் உச்ச நீதி மன்றம் அளித்த பல தீர்ப்புக்களைப் பந்தாடிய தந்திரம் பற்றி அனைவரும் அறிவர். நூறு வாய்தா புகழ் டான்சி ராணி ஜெயலலிதா கூட இந்த நீதிமன்றத்தைப் பந்தாடும் விதத்தில் சோனியாவிடம் பிச்சை வாங்க வேண்டும்!

 31. பாவலன்

  //தவிர பாஜகவில் ஏற்பட்டு வரும் குடுமி பிடி சண்டையை பார்க்கும் போது காங்கிரஸ் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏதாவது தகிடுதத்தம் மூலம் வெற்றி பெற்றால் போதும் என்று தான் நினைப்பார்கள். அவர்களுக்கு உண்மையான சவால் எப்போது வரும் என்றால் பாஜகவில் ஒற்றுமை ஏற்பட்டு நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால் தான். அதிலும் நிதிஷ் குமார் போன்றவர்கள் இருக்கும் போது காங்கிரசுக்கு கவலை இல்லை. /// (கிருஷ்ணா)

  தேசிய அரசியலைப் பற்றி மிகவும் தீர்க்கமாக யோசித்து எழுதி
  இருக்கிறீர்கள்! சரி…இதே flow-வில் கீழ்க் கண்ட கேள்விகளுக்கும்
  நண்பர்கள் பதில் எழுதலாம் – நன்றி!

  1) தமிழகத்தில் 2014 ஆண்டிலோ, அதற்கு முன்னமோ, பார்லிமென்ட்
  தேர்தல் நடந்தால் தி.மு.க.-காங்கிரஸ்-தே.மு.தி.க. ஒரே அணியில்
  சாத்தியமா? கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சேர்ந்தால் பெரிய அணியாக
  அமையும். இது வெற்றிக் கூட்டணியாக இருக்குமா? ஆனால் தி.மு.க.
  கட்சிக்கு 40-ல் 20 தொகுதிக்கு மேல் தேறாதே!!

  2) 2G கேஸ் விரைவில் முடிவதை காங்கிரஸ் விரும்பாது. இந்த கேஸ்
  இழுத்துக் கொண்டு போனால் அதை வைத்து தொகுதிகள் bargaining
  நடக்குமா? காங்கிரசிற்கு 20-25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என
  நான் நினைக்கிறேன். இந்த தொகுதிகளில் AIADMK வெற்றி வாய்ப்பு
  எப்படி?

  3) AIADMK கட்சி மத்தியில் NDA கூட்டணியில் இணையுமா? அப்படி
  இணைந்தால் தமிழக BJP கட்சிக்கு 2-3 தொகுதிகள் தேறுமா?!

  4) ம.தி.மு.க. (வை.கோ) நிலை என்ன? கம்யூனிஸ்ட் யாருடன் சேரலாம்?

  -பாவலன்

 32. Krishna

  பாவலன் அவர்களே, தங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ:

  //1) தமிழகத்தில் 2014 ஆண்டிலோ, அதற்கு முன்னமோ, பார்லிமென்ட்
  தேர்தல் நடந்தால் தி.மு.க.-காங்கிரஸ்-தே.மு.தி.க. ஒரே அணியில்
  சாத்தியமா? கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சேர்ந்தால் பெரிய அணியாக
  அமையும். இது வெற்றிக் கூட்டணியாக இருக்குமா? ஆனால் தி.மு.க.
  கட்சிக்கு 40-ல் 20 தொகுதிக்கு மேல் தேறாதே!!//

  திமுகவும் காங்கிரசும் கூட்டணி வைப்பது சாத்தியம். 2G அவர்களை பின்னி பிணைய வைத்திருக்கிறது. எனக்கு தெரிந்த வரையில் தேமுதிக அவர்களுடன் சேருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் 2G வழக்கு முடியும் என்று தோன்றவில்லை. எனவே கேப்டன் இதில் நிச்சயம் தயங்குவார். அப்படியே அவர்களிடையே கூட்டணி வந்தாலும் பெரியதாக ஒரு லாபமும் இருக்காது. ஏனெனில் தேமுதிக விடம் ஜாதி ஒட்டுக்களோ மத ஒட்டுக்களோ இல்லை. மக்கள் அவரை இரு கழகங்களுக்கான ஒரு alternative ஆகத்தான் பார்க்கிறார்கள். எனவே அவர்களால் திமுகவுக்கு added advantage என்று எதுவும் கிடையாது. கம்யுனிஸ்டுகளை பொறுத்த வரையிலும் அவர்கள் நிச்சயம் திமுகவுடன் சேர மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மத்திய ஆட்சியின் செயல்பாடுகளை மைய்யப்படுத்தி தான் இருக்கும். பெட்ரோல் விலை உயர்வு, மத்திய அரசின் பொருளாதார சீர்கேடுகள், தமிழகத்தை ஓரம் கட்டும் மத்திய அரசின் செயல்பாடுகள் இவற்றை பற்றி ஜே பிரச்சாரம் செய்வார். மின்வெட்டு அதற்குள் தணிந்து விட்டால் எதிர்க்கட்சிகள் கட்டண உயர்வைப்பற்றி பேசுவார்கள் – இல்லையென்றால் மின் வெட்டையும் சேர்த்து பேசுவார்கள். அதில் ஆளும் கட்சிக்கு கொஞ்சம் சங்கடம் ஏற்படலாம். திமுகவை பொறுத்த வரையில் அவர்களுக்கு காங்கிரசுடன் சரணாகதி அடைய வேண்டியதை தவிர வேறு வழியே இல்லை. சீமானும் தா.பாண்டியனும் அதிமுகவை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் வழக்கம் போல் இலங்கை சம்பவங்களை நினைவு படுத்த தொடங்கினால், காங்கிரஸ் நிச்சயம் மண்ணை கவ்வும். கடந்த தேர்தலிலேயே சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. இளங்கோவன் போன்றவர்கள் தோற்றே விட்டார்கள். சிதம்பரமும் வெற்றி பெற்றார் என்று சொல்ல முடியவில்லை. எனவே எப்படி இருப்பினும் காங்கிரசுக்கு மரண அடி காத்திருக்கிறது.

  //2G கேஸ் விரைவில் முடிவதை காங்கிரஸ் விரும்பாது. இந்த கேஸ்
  இழுத்துக் கொண்டு போனால் அதை வைத்து தொகுதிகள் bargaining
  நடக்குமா? காங்கிரசிற்கு 20-25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என
  நான் நினைக்கிறேன். இந்த தொகுதிகளில் AIADMK வெற்றி வாய்ப்பு
  எப்படி?//

  நிச்சயமாக இதை வைத்து கொண்டு பேரம் நடக்கும். 2011 தேர்தலுக்கு முன் – தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரத்தில், அண்ணா அறிவாலயத்தில் ஒரு வினோத நிகழ்ச்சி நடை பெற்றது. மேல் தளத்தில் CBI அதிகாரிகள் தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கும் அதே நேரத்தில் கீழ் தளத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலைஞருடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்தார்கள். இதற்கும் திமுக அபரிமிதமான இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்கியதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதே கூத்து மறுபடியும் நடக்கத் தான் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் அதிமுகவுக்கு காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் literal walkover வெற்றி கிடைத்து விடும்.

  //AIADMK கட்சி மத்தியில் NDA கூட்டணியில் இணையுமா? அப்படி
  இணைந்தால் தமிழக BJP கட்சிக்கு 2-3 தொகுதிகள் தேறுமா?!//

  அப்படி நடக்கும் வாய்ப்பு நிச்சயமாக இல்லை. ஜெயலலிதாவை பொறுத்த வரையிலும் she wants to keep her options open. அவர் தேர்தலில் பாஜக வோடு கூட்டணி வைத்தால், தேர்தலுக்கு பின் பாஜக வெற்றி பெறவில்லை என்ற சூழ்நிலை வந்தால் அவர் வேறு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்பொழுது அவரின் இந்த நிலைப்பாடு கடுமையாக விமரிசிக்க படும். தவிர அவர் அதிக பட்ச தொகுதிகளில் நின்றால் தான் பிரதமர் பதவி பெறுவதில் வாய்ப்பு இருக்கும் என்று நம்புவார் (அவர் பிரதமராவது நடக்காது என்பது வேறு விஷயம்)

  //ம.தி.மு.க. (வை.கோ) நிலை என்ன? கம்யூனிஸ்ட் யாருடன் சேரலாம்?//

  மதிமுக, திமுகவுடன் சேர முடியாது. ஏனெனில் ஜெயா டிவியில் ரேடியா டேப்புகளை பற்றி பேசும் போது அவர் கலைஞர் குடும்பத்தை பற்றி தாறுமாறாக பேசினார். அதனால் கலைஞர் குடும்பத்தில் இருந்து அவரை சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு வரும்.
  கம்ம்யுநிச்டுகளை பொறுத்த வரையில் CPI அதிமுகவுடனும், CPM தேமுதிகவுடனும் நிற்கும். இவ்விரண்டு கட்சிகளும் மூன்றாவது அணியாக மலரும். வைகோ இந்த அணியில் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *