BREAKING NEWS
Search

பொங்கல் படங்கள் எப்படியிருக்கு?

பொங்கல் படங்கள் எப்படியிருக்கு?

 

பொங்கலுக்கு முன்பே வந்துவிட்ட கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் அம்பேல் ஆகிவிட்டது.

மற்ற நான்கு படங்களின் நிலை என்ன என்பதை மொத்தமாகப் பார்த்துவிடலாம்.

புத்தகம்

Sathya,Rakul Preet Singh at Puthagam Shooting Spot Stills

ஆர்யாவின் தம்பி சத்யா, இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் ஹீரோக்களாக அறிமுகமாகியுள்ளனர். சீரியல் நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கியுள்ளார். புதுமுகம் ரகுல் ப்ரீத் ஹீரோயின்.

எம்ஜிஆர் காலத்துக் கதை. காதலிக்காக சத்யசோதனை புத்தகத்தை லைப்ரரியில் எடுத்துவருகிறார் சத்யா. அதில் இருக்கும் ஒரு சீட்டில் ஒரு கல்லறையில் பெரும் பணம் புதைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் குறித்துவைக்கப்பட்டுள்ளது.

அதை நண்பர்களுடன் தேடிப் போய் எடுத்துவிடுகிறார் ஹீரோ. ஆனால் அந்தப் பணத்துக்கு சொந்தக்காரர் ஒரு அமைச்சர். எப்படியாவது பணத்தைக் கைப்பற்ற அடியாட்களுடன் திட்டம் போடுகிறார். பணம் யாருக்குக் கிடைத்தது என்பது க்ளைமாக்ஸ்.

பழைய கதை என்றாலும் கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரொம்பவே சேனல் வாசமடிக்கிறது.

புதுமுகங்களாக இருந்தாலும் அனைவருமே நன்றாக நடித்துள்ளதால் படத்தில் உட்கார முடிகிறது. மனோபாலா, சுரேஷ் போன்ற அனுபவஸ்தர்களும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தன் வழக்கம்போல சொதப்பியிருக்கிறார்.

நடிகராக தேறாமல் போன விஜய் ஆதிராஜ், இயக்குநராக பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா

kanna-laddu-thinna-aasaiya-poster03

பாக்யராஜின் சூப்பர் ஹிட் படமான இன்று போய் நாளை வா கதையை லட்டு மாதிரி சுட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று திருட்டு லட்டு கொடுத்திருக்கிறார்கள்!

சந்தானம் – சீனிவாசன் – சேது என மூன்று நண்பர்கள், எதிர்வீட்டுக்குப் புதிதாக வரும் ஒரு பெண்ணை மடக்க முயற்சிப்பதுதான் கதை.

இந்த மூவர்தான் என்றில்லை… வேறு யார் நடித்திருந்தாலும் சூப்பர் ஹிட்டாகக் கூடிய வசதியான கதை, திரைக்கதை. நிச்சயம் இந்தப் படத்தின் வெற்றிக்கான மேக்ஸிமம் கிரெடிட் கதாசிரியர் பாக்யராஜுக்கே.

சொந்தப் படம் என்பதால் சந்தானம் ரூம் போட்டு யோசித்திருப்பது, அவரது பளிச் ஒன்லைன்களில் தெரிகிறது.

சீனிவாசனை நக்கலடிப்பது மட்டுமே சந்தானத்தின் பிரதான காமெடி. மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். பாக்யராஜ் படத்தில் இதையெல்லாம் மருந்துக்கும் பார்க்க முடியாது. அவரது பாத்திரங்கள் ஒவ்வொன்றும் பார்ப்பவருக்கு அப்பிராணியாகத் தெரிந்தாலும், அந்தப் பாத்திரங்களைப் பொறுத்தவரை புத்திசாலிகளே! அந்த அளவு நுணுக்கமான காட்சியமைப்பு எதுவும் இந்தப் படத்தில் கிடையாது.

பொங்கல் விடுமுறையில் ஜஸ்ட் டைம் பாஸுக்கு ஏற்ற படம் இந்த கலதிஆ!

சமர்

samar-new-stills_1

தீராத விளையாட்டுப் பிள்ளைக்குப் பிறகு விஷால் – திருவின் கூட்டணியில் வந்திருக்கும் இரண்டாவது படம் சமர். பொங்கலுக்கு வந்திருக்கும் படங்களில் சத்தமில்லாமல் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

காதலியைத் தேடிப்போன இடத்தில் யாரோ இரண்டு பணக்கார சைக்கோக்களின் வக்கிர விளையாட்டில் சிக்கிக் கொள்ளும் சராசரி இளைஞன், அதிலிருந்து மீண்டு வருவதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்.

ஆரம்பம் சாதாரணம்… ஆனால் போகப்போக அசாதாரணம்!

விஷாலுக்கு ஏற்ற வேடம். அவரும் அடக்கி வாசித்து மனசில் இடம் பிடிக்கிறார். விஷாலுக்கு நிகராக மனதைக் கவர்பவர் த்ரிஷா. சுனைனா, சம்பத், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் என அத்தனை பாத்திரங்களும் கச்சிதம்.

2.15 நிமிடப் படம். அதன் விறு விறு திரைக்கதையில் படத்தின் சின்னச்சின்ன ஓட்டைகள் நம் கவனத்தைக் கடந்து போகின்றன. யுவன் இசை, ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு மற்றும் எஸ் ராமகிருஷ்ணன் வசனங்கள் படத்துக்கு ப்ளஸ்.

நிச்சயம் ஏதாவது ஒரு வெளிநாட்டுப் படத்தின் பாதிப்பு இருக்கும். ஆனால் அந்த பாதிப்பை ஒழுங்கான படம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் பொங்கல் படங்களில் முதலிடம் கிடைத்திருக்கிறது சமருக்கு.

இன்னொரு படமான விஜயநகரத்தை இன்னும் பார்க்கவில்லை!

-என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “பொங்கல் படங்கள் எப்படியிருக்கு?

  1. srikanth

    அன்புள்ள வினோ சார்;விடுமுறை நாட்களெல்லாம் முடிந்து இன்றுதான் என்னால் பணம் அனுப்ப முடிந்தது. சகோதரி வினோதினியின் தந்தை திரு.ஜெயபாலன்.அவர்களின் வங்கிக் கணக்கிற்கு என்னால் இயன்ற ஒரு சிறுத்தொகையை இன்று காலை அனுப்பிவிட்டேன்.மேலும் சகோதரி வினோதினியின் மாமா திரு.ரமேஷிடமும்,போன் பண்ணி விவரம் கூறிவிட்டேன்.பணம் அனுப்ப தாமதமானதற்கு என்னை மன்னித்து விடுங்கள் சார்.

  2. srikanth

    பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் விஷால் நடித்த சமர்,அருமையாக இருக்கிறது .என்று என் நண்பன் கூறினான்.திரு விஷாலுக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *