BREAKING NEWS
Search

பெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்

petrol price-envazhiடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 41 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசும் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 58 காசு குறைந்து 67 ரூபாய் ஒரு காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பெட்ரோல் விலை கடந்த 15ம் தேதி லிட்டருக்கு ஒரு ரூபாய் 21 காசு குறைக்கப்பட்டது.

டீசல் விலையை மத்திய அரசு கடந்த 18ம் தேதி லிட்டருக்கு 3 ரூபாய் 37 காசு குறைத்தது. அதோடு, பெட்ரோலைப் போல டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை நிலவரப்படி நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தை அளித்தது.

டீசல் விலை நிர்ணய அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடம் வந்த பிறகு முதல்முறையாக டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை 6-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால் பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 15 நாட்களில் டீசல் விலை மட்டும் 5 ரூபாய் 62 காசு குறைந்துள்ளது. கடந்த 15ம் தேதிக்கு முன்பு வரை டீசல் விலை மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு வந்தது.

விலைக் குறைக்கப்பட்ட பிறகு சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ 69.59லிருந்து 2 ரூபாய் 58 காசு குறைந்து ரூ 67.01-க்கு விற்கப்படுகிறது.

டெல்லியில் ரூ 64.24 ஆகவும், கொல்கத்தாவில் ரூ 71.68 ஆகவும் உள்ளது.  மும்பையில் பெட்ரோல் விலை 71 ரூபாய் 91 காசாக குறைந்துள்ளது.

சென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ 59. 27லிருந்து 2 ரூபாய் 43 காசு குறைந்து ரூ 56. 84 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *