‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி!’
– பட்டுக்கோட்டை பிரபாகர்
நான் என்றும் வியக்கும் அற்புதமான படைப்பாளியான பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்தில் அன்புக்கு முன்னால் மதம் பெரிதில்லை, அதைப் புறக்கணிக்கலாம் என்றார். வேதம் புதிது படத்தில் மனிதத்திற்கு முன்னால் ஜாதி பெரிதில்லை என்றார். ஜாதி, மதத்தைக் கடந்த அவரால் இனத்தைக் கடக்க முடியாதது ஆச்சரியமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள பல பெரிய வெளிநாட்டு வங்கிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பது இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் என்பதில் பெருமைப்படுகிறோமா இல்லையா?
ஒரு வெள்ளைக்கார முதலாளி தன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் ஒரு வெள்ளைக்காரன்தான் இருக்க வேண்டும் எனறு இனப் பற்றுடன் சிந்தித்தால் இது சாத்தியமா?
வெள்ளை – கறுப்பு பேதம் இன்றுவரை தொடரும் அமெரிக்காவில் ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒரு ஒபாமா அதிபராக முடிந்ததில் சமூக நீதி இல்லையா?
மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் இந்தியாவின் மிக உச்சமான பதவியான அதிபர் பதவியில் அமர்ந்தது தவறா? இந்திரா காந்தியின் மறைவுக்குக் காரணமான ஒரு இனத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் பிரதம மந்திரியாக வர முடிந்தது எதனால்?
நம் தமிழ்நாடு மாநிலத்தின் ஆட்சியைக் கலைப்பதற்கான உச்சமான அதிகாரம் பெற்றுள்ள மாநிலத்தின் கவர்னர் ஒரு தமிழராகத்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறோமா? ஆட்சி இருந்தாலும், இல்லையென்றாலும் ஓய்வு வரைக்கும் இயங்கும் மாவட்ட நிர்வாகிகளான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழர்களாகத்தான் இருக்கிறார்களா?
மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் தமிழர் மட்டும்தான் அமர வேண்டும் என்று சிந்திப்பது பரந்த சிந்தனையா? எம்.ஜி.ஆர் தமிழரா? ஜெயலலிதா தமிழரா? மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் நல்ல உள்ளமும், நேர்மையும், நல்ல நிர்வாகத் திறனும், தேவையா.. தமிழன் என்கிற ஒரு லேபிள் மட்டும் தேவையா?
இங்கு வாழ்ந்தால் மட்டும் போதாது.. பிறப்பால் தமிழராக இருக்க வேண்டும் என்கிறார். நம் பாரம்பரியத்தில் ஒரு சிலரால் தங்கள் கொள்ளுத் தாத்தா வரை விபரம் சொல்ல முடியலாம். அதற்கு முந்தைய தலைமுறை பற்றிய உறுதியான தகவலுக்கு எங்கேப் போவது? ‘நாலாந் தலைமுறையில் நாவிதனும் சித்தப்பனாகலாம்’ என்கிற கூற்று விதண்டா வாதம் என்று ஒதுக்க முடியுமா? நாலாந் தலைமுறையில் கலப்புத் திருமணம் நடந்திருக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்?
அப்படிப் பார்த்தால் யார் பச்சைத் தமிழன்? எந்த டி.என்.ஏ சோதனை மூலம் இதை நிரூபிப்பது? “ஒரு வேளை ரஜினி நாளை கட்சி துவங்கி தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் அவர் அமைச்சர்களில் ஒருவராக இருக்கலாம், அவர் சுட்டிக் காட்டும் ஒருவர் முதலமைச்சராக இருக்கலாம்.. ஆனால் அவர் முதலைமைச்சராக ஆகக் கூடாது,” என்கிறார்.
இதற்குப் பெயர் இனப்பற்று அல்ல சார், இன வெறி!