BREAKING NEWS
Search

பண்ணையாரும் பத்மினியும் – விமர்சனம்

 

பண்ணையாரும் பத்மினியும் – விமர்சனம்

unnamed (3)

டிப்பு: விஜய் சேதுபதி, ஜெய்பிரகாஷ், துளசி, ஐஸ்வர்யா, பால சரவணன், நீலிமா
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பிஆர்ஓ: ஜான்சன்
தயாரிப்பு: எம் ஆர் கணேஷ்
எழுத்து – இயக்கம் : அருண் குமார்

யர்திணையோ அஃறிணையோ.. மனிதனல்லாத ஒவ்வொரு உயிர் அல்லது பொருள் மீதும் நமக்கு ஒரு சென்டிமென்ட்… பாசம் இருக்கவே செய்கிறது. காலங்கள் மாறினாலும் இந்த சென்டிமென்ட் மாறுவதில்லை.

சிலருக்கு ஆசையாக வளர்த்த காளை மீது.. நாய்க் குட்டி மீது… பார்த்துப் பார்த்து வாங்கிய மாட்டு வண்டி மீது… புல்லட் மீது. அப்படி இந்தப் படத்தில் பண்ணையாருக்கு பத்மினி மீது!

ஏற்கெனவே இதே பெயரில் வெளியான ஒரு குறும்படத்தின் நீ…ட்சியாக இந்தப் பெரும் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

IMG_4815
கதை… ரொம்ப சிம்பிள். ஒரு ஊர்ல ஒரு பண்ணையார். அவர் கிட்ட வந்து சேருது ஒரு பத்மினி.. கார். அந்த கார் மீது அவரும் அவர் மனைவியும் அவர் ட்ரைவரும் அவரது க்ளீனரும் மகா ப்ரியம் வைத்துவிடுகிறார்கள். ஆனால் மகள் வந்து காரை கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு போகிறாள். பண்ணையாருக்கு பத்மினி மீண்டும் கிடைத்ததா என்பதுதான் கதை.

ஒரு பண்ணையாரையும் பத்மினி காரையும் மட்டும் வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக இரண்டரை மணி நேரம் கதை சொல்வது லேசுப்பட்ட காரியமில்லை. அவ்வப்போது கொஞ்சம் இழுவையாக சில காட்சிகள் வந்தாலும், படம் முழுக்க ஒரு இயல்பான நீரோடை போல நகர்கின்றன காட்சிகள்.

யார் ஹீரோ… யாருக்கு முக்கியத்துவம் என்றெல்லாம் பார்க்காமல் கதையை மட்டும் கவனத்தில் கொண்டால் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு அவ்வளவாக ஏமாற்றம் இருக்காது.

காரணம்… கதைப்படி படத்தின் நாயகன் பண்ணையார் ஜெயப்பிரகாஷ்தான். மனிதர் வெளுத்து வாங்கிவிட்டார். எப்போதே வந்திருக்க வேண்டிய ஆள் இவர் என்பது மட்டும் புரிகிறது. ரேடியோ, டிவி, நவீன கழிப்பிடம் என ஒவ்வொன்றாக இவர் ஊர் மக்களுக்கு அறிமுகம் செய்து இலவசமாகத் தரும் பாங்கும், அந்த பத்மினி காரைப் பார்த்ததும் சின்னக் குழந்தையாக மாறி துள்ளிக் குதிப்பதும்… மனைவியிடம் செல்லக் கோபம் கொள்வதும்… மெல்லக் காதல் காட்டுவதும்… அத்தனை இயல்பு, நேர்த்தி!

அதுவும் அந்த காரை சினேகாவிடம் ஒப்படைப்பதா வேண்டாமா என பண்ணையார் தயங்க, இது என்ன அநியாயம்.. அவங்க பொருளை அவங்ககிட்ட கொடுக்க வேணாமா என பண்ணையாரம்மா நியாயம் கேட்பதும்… நியாயம் வாழ்வது இந்த மாதிரி இதயங்களில்தான்!

துளசிக்கு இப்படியொரு வாய்ப்பு அவரது வாலிபப் பிராயத்தில் கூட கிடைத்ததில்லை (நல்லவனுக்கு நல்லவனில் ரஜினி மகளாக வருவாரே… அதே துளசி!). கிடைத்த வாய்ப்பை க்ளாஸிக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்!

IMG_0047
விஜய் சேதுபதியும் குறை வைக்கவில்லை. தனக்கு ஸ்கோப் உள்ள இடங்கள் அனைத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். ‘காரே இன்னும் கத்துக்கல.. அதுக்குள்ள பேச்சைப் பாரு… இவரு காராமே… கார் ஓட்ட கத்துக்கு விட்ருவோமா…’ என கறுவிக் கொண்டு, பண்ணையாரை தொங்கலில் விடும் அந்த காட்சி ஒன்று போதும் அவரது இயல்பான நடிப்புக்கு. அதே விஜய் சேதுபதி பண்ணையார் – அவர் மனைவியின் கார் சென்டிமென்ட் புரிந்து, அந்தக் காரை மீட்கப் படும் பாடு… நெகிழ்ச்சி.

ஹீரோயின் ஐஸ்வர்யா யதார்த்தமான அழகு. ஆனால் நடிக்க ஒன்றும் வாய்ப்பில்லை.

பாலசரவணனுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. அதைப் புரிந்து காமெடியில் புதிய தடம் பதித்திருக்கிறார். டார்ச்சர் பார்ட்டிகளிடம் ‘அண்ணே.. பேசாம நீ நல்லாருன்னு சொல்லிரட்டுமா’ என மிரட்டுவது குபீர்.

படத்தில் எல்லாரும் நல்லவர்களே… பண்ணையாரின் பேராசைக்கார மகள் நீலிமாவைத் தவிர!

படத்தில் வரும் அத்தனைப் பாத்திரங்களையும் நாம் சந்தித்திருக்கிறோம்… சந்திக்கிறோம் என்பது இயக்குநர் அருண்குமாரின் திரைக்கதைக்கு ப்ளஸ். எங்கே திடீர் திருப்பம் என்ற பெயரில் காரை விபத்துக்குள்ளாக்கிவிடுவார்களோ, பண்ணையாரையோ அந்தம்மாவையோ காலி பண்ணிவிடுவார்களோ என்று கொஞ்சம் அச்சத்தோடுதான் பார்க்கிறோம்.. நல்ல வேளை அப்படி எந்தக் காட்சியும் இல்லை.

இன்னொன்று, குடிக்கிற மாதிரியோ, புகைக்கிற மாதிரியோ ஒரு காட்சி கூட இல்லாமல் பார்த்துக் கொண்டதற்காகவே ஒரு ஸ்பெஷல் பாராட்டு சொல்ல வேண்டும் இயக்குநருக்கு!

ஆனால் எந்த வித விறுவிறுப்போ திருப்பமோ இல்லாததுதான் பெரிய மைனஸ். காட்சிகளின் தேவையில்லாத நீளம்… அந்த சாவு வீட்டு பயணம்…

அடுத்து, படம் நடக்கும் காலகட்டம் எது என்பதில் இயக்குநருக்கு மகா குழப்பம் போலிருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்துக்கு முக்கிய பலம். உனக்காக பொறந்தேனே… மிக அழகிய மெலடி. பின்னணி இசையிலும் மனதை வருடுகிறது இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு யதார்த்தம். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இன்னும் கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு கிராமத்துப் பண்ணையார், அவரைக் கொண்டாடும் மக்களுடன் கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு வந்த உணர்வுடன் திரும்புகிறோம் படம் பார்த்து முடிந்ததும்!

குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்!

-எஸ் ஷங்கர்

Courtesy: ஒன்இந்தியா தமிழ்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *