BREAKING NEWS
Search

பாண்டிய நாடு – சிறப்பு விமர்சனம்

பாண்டிய நாடு – சிறப்பு விமர்சனம்
tamil-diwali-releases3
நடிப்பு: விஷால், பாரதிராஜா, லட்சுமி மேனன், சூரி, லோஹித் அஷ்வா
இசை: டி இமான்
ஒளிப்பதிவு: மதி
தயாரிப்பு : விஷால்
இயக்கம் : சுசீந்திரன்
ண்பர்களே… ஒரு படத்துக்கு இரண்டு முறை விமர்சனம் எழுதுவதில் உள்ள சலிப்பின் காரணமாக, என்வழியில் சமீப காலமாக சினிமா விமர்சனங்கள் இடம்பெறவில்லை.
இனி முடிந்தவரை விமர்சனங்களை தொடர முடிவு செய்துள்ளேன். பாண்டிய நாடு படத்துக்கு நான் ஏற்கெனவே எழுதிய விமர்சனத்தை சற்று திருத்தி இங்கு மறுவெளியீடு செய்கிறேன்.
மற்ற படங்களுக்கு விரைவில் தனியாக விமர்சனங்கள் வெளியாகும்…
சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில், தன் தவறுகள் என்னவென்பதை உணர்ந்து, அதைத் தானே சரி செய்துகொள்ளும் ஹீரோக்கள் இன்றைக்கு யாருமில்லை. என்னதான் முன்னணி நடிகர் என்றாலும் தன் இமேஜை நம்பிக் கொண்டு கதையில் கோட்டை விடுவதுதான் வழக்கம்.
ஆனால் பாண்டிய நாட்டில் விஷாலின் அணுகுமுறை மெச்சத்தக்கது.
சத்யம் படத்தில் விழுந்தவர், அடுத்தடுத்த தவறுகளிலிருந்து கற்ற பாடங்களை வைத்து தானே சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்து, ஒரு நல்ல இயக்குநருக்கு அடங்கிய நடிகராக நடித்து மீண்டும் வெற்றியை ருசி பார்த்திருக்கிறார். வாழ்த்துகள்!
அப்படி ஒன்றும் புதிய கதை இல்லைதான்.  மகனைக் கொன்ற ஒரு வில்லனை தந்தையும் சகோதரனும் பழி வாங்கும் கதை. ஆனால் இந்த ஒற்றைவரிக் கதைக்கு சுசீந்திரன் அமைத்திருக்கும் பக்காவான திரைக்கதைதான் உண்மையான ஹீரோ!
IMG_0678
விஷாலை விட இந்தப் படத்தில் அதிகம் கவர்பவர் பாரதிராஜா. மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார்.. இல்லை.. கல்யாண சுந்தரமாய் வாழ்ந்திருக்கிறார். நாடி நரம்பு ரத்தம் சதையெங்கும் சினிமா ஊறிப்போன அந்த மாபெரும் கலைஞனைப் பார்க்கும்போதெல்லாம் கண்கள் தளும்பின. தமிழ் ரசிகர்கள் இவருக்காகவே ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்!
மதுரைதான் கதைக் களம். ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர் பாரதிராஜா. அவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் அரசின் கனிம வளத்துறையில் பணியாற்றுகிறார். இளைய மகன் விஷால் செல்போன் கடை வைத்திருக்கிறார்.
அரசின் விதிகளை மீறி கிரானைட் வெட்டியெடுக்கும் கும்பலின் நிறுவனத்தை இழுத்து மூடுகிறார் விஷாலின் அண்ணன். பதிலுக்கு அண்ணனை போட்டுத் தள்ளுகிறது வில்லன் கும்பல். மகனைப் பறி கொடுத்த சோகமும் ஆத்திரமும் அப்பா பாரதிராஜாவுக்கு. அண்ணனை இழந்து, அதற்காகப் பழிவாங்கும் சக்தியில்லாத இயலாமையில் தம்பி விஷால். ஆனால் அந்த கும்பலை ஏதாவது செய்தாக வேண்டும்… என்ன செய்கிறார்கள் என்பது தீப் பிடிக்கும் பரபர க்ளைமாக்ஸ்!
பள்ளி கல்லூரி நாட்களில் விறுவிறுப்பான ஆக்ஷன் படங்களைப் பார்த்துவிட்டு, அந்த உணர்வு மாறாமலேயே வீடு திரும்பி, நீண்ட நேரம்வரை நண்பர்களுடன் கூட அதே மனநிலையோடு பேசியது நினைவிருக்கிறதா… ரொம்ப நாட்களுக்குப் பிறகு அப்படியொரு உணர்வை இந்தப் படம் தந்தது.
காரணம் சினிமாத்தனம் அதிகமில்லாத சுசீந்திரனின் திரைக்கதையும் கச்சிதமான இயக்கமும். இந்தக் காட்சிக்கு அடுத்து இதுதான் நடக்கும் என எந்த இடத்திலும் சொல்ல முடியாத அளவுக்கு கவனமெடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறார்.
ஒரு பக்கம் விஷாலின் காதல், இன்னொரு பக்கம் வில்லனின் பின்னணி, அடுத்து அதற்கு இணையாக விஷாலின் குடும்பப் பின்னணி என தனித் தனி ட்ராக்குகளில், ஆனால் சுவாரஸ்யமாகப் பயணிக்கிறது திரைக்கதை. இவை அனைத்தும் ஒற்றைப் புள்ளியில் சந்திக்கும்போது மனசெல்லாம் பாண்டிய நாட்டில் ஒன்றிவிட்டிருப்பதை உணர முடிகிறது!
அடக்கமான, இயலாமை மிக்க இளைஞனாக வரும் விஷாலை இனி ரொம்பப் பேருக்குப் பிடிக்கும். அத்தனை சிறப்பான நடிப்பு. தன்னை முழுமையாக இயக்குநரிடம் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு பங்கம் நேரவில்லை. லட்சுமி மேனனுடன் அவர் காதல் பண்ணும் காட்சிகள் துள்ளல். ஒரு ஹீரோவாக இதுதான் அவரது மிகச் சிறந்த படம். தயாரிப்பாளர் என்ற முறையிலும்கூட!
pandia-nadu-movie
லட்சுமி மேனனின் நடிப்பும் அழகும் படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டே போகிறது. கடுப்பேற்றும் அந்த கலாசிபை பாட்டைக் கூட உட்கார்ந்து பார்க்க வைத்துவிடுகிறது லட்சுமியின் அழகும் நளினமும்!
தேவையான இடங்களில் மட்டும் சூரியை எட்டிப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். காமெடியனுக்கு எப்போது எங்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை இந்தப் படம் பார்த்தாவது கத்துங்கப்பா…
வில்லனாக வரும் லோஹித், விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த் அனைவருமே உணர்ந்து நடித்து, காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
படத்தின் எதிர்மறையான பக்கம் என்று பார்த்தால்… இத்தனை பெரிய முறைகேடுகளுக்கு காரணமான அதிகார மேலிடம் தண்டிக்கப்படாமல் போவதுதான். ஒருவேளை அப்படி காட்சிகள் வைத்திருந்தால், அது தெலுங்குப் பட ரேஞ்சுக்குப் போயிருக்குமோ… அல்லது படத்தையே வெளிவராமல் செய்திருக்குமோ என்னமோ..
இமானின் இசை (இரு பாடல்கள்), மதியின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்துக்கு பக்க பலம்.
கமர்ஷியல் பார்முலா கதைகளை அதிகபட்ச ரியலிசத்தோடு தருவதில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார் சுசீந்திரன்.. விஷால் போன்ற இளைஞர்கள் வெற்றி பெறுவது சினிமாவுக்கு ஆரோக்கியம்!
Rating: 4/5
-எஸ் ஷங்கர்2 thoughts on “பாண்டிய நாடு – சிறப்பு விமர்சனம்

  1. micson

    பார பட்சம் இல்லாத உங்கள் விமர்சனம் வரவேற்க தக்கது .

  2. kumaran

    படம் பார்க்க தூண்டுகிறது உங்கள் விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *