BREAKING NEWS
Search

பஞ்சு அருணாச்சலம் மகள் புதிய சாதனை – 1330 குறள்களையும் மேடையில் சொல்லி முதல் பரிசு வென்றார்!

பஞ்சு அருணாச்சலம் மகள் புதிய சாதனை – 1330 குறள்களையும் மேடையில் சொல்லி முதல் பரிசு வென்றார்!

unnamed

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்காவில் நடந்த தமிழ் நிகழ்ச்சியில் 1330 திருக்குறள்களையும் ஒப்பித்து புதிய சாதனை படைத்தார் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மகள் கீதா.

சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் அமெரிக்காவில், ஆண்டுதோறும் திருக்குறள் போட்டி நடைபெற்று வருகிறது. மழலைகள் முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு குறள் சொன்னால் ஒரு டாலர் வீதம் பரிசுத் தொகை வழங்கி வருகிறார்கள்.

சென்ற ஆண்டு முதல் பெரியவர்களுக்கும் இந்த போட்டி விரிவுபடுத்தப்பட்டது. சனிக்கிழமை டி.எஃப்.டபுள்யூ இந்து கோவில் வித்யா விகாஸ் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியில், அனைத்து (1330) குறள்களையும் அனாயசமாகச் சொல்லி பஞ்சு அருணாச்சலத்தின் மகள் கீதா புதிய சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் எந்த போட்டியிலும் யாரும் அனைத்து குறள்களையும் ஒப்புவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அவருடைய சாதனையை (500 குறள்கள்) அவரே முறியடித்துள்ளார் என்பது முக்கியமான ஒன்று.

முயற்சி திருவினையானது…

போட்டியின் நிறைவில் கீதா கூறும் போது, “திருக்குறள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியது. அதில் திருவள்ளுவர் கையாண்டுள்ள தமிழ் மிகவும் இனிமையானது. படிக்கப் படிக்க மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். எனது மகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் போதே அனைத்து திருக்குறள்களையும் படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் உதித்துவிட்டது.

அதனால் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தேன். வள்ளுவரின் வாக்குப் போல் முயற்சி திருவினையாகி விட்டது. புத்தகத்தை பார்த்து மலைத்துவிடாமல், விடா முயற்சியோடு, படித்தால் எல்லோரும் 1330 குறள்களையும் புரிந்து படித்துவிட முடியும். எல்லோரும் கட்டாயம் முயற்சி செய்யுங்கள்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.

டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வரும் கீதா, திருக்குறளை முழுமையாக கற்றறிந்ததன் மூலம் தமிழ்ச் சங்க தலைவர் பதவிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றே கூறலாம்.

ஆர்வத்துடன் பங்கேற்று திருக்குறள் சொன்ன தமிழ்க் குழந்தைகள்!

ஆர்வத்துடன் பங்கேற்று திருக்குறள் சொன்ன தமிழ்க் குழந்தைகள்!

கலிஃபோர்னியாவில் தொடரப்போகும் திருக்குறள் போட்டி

டல்லாஸில் நடைபெற்று வரும் திருக்குறள் போட்டி குறித்து ஏற்கனவே அறிந்திருந்த சமூக சேவகர் மற்றும் அமெரிக்கத் தமிழ் நடிகர் திருமுடி, சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் வேலு ராமனுடன் கலந்தாலோசித்து, சான்ஃப்ரான்சிஸ்கோ பகுதியிலும், திருக்குறள் போட்டியை அறிமுகப்படுத்துகிறார். போட்டி ஏற்பாடுகள் அனைத்தையும் நேரிலேயே கண்டறிந்து, கலிஃபோர்னியா போட்டியிலும் அவற்றை இடம்பெறச் செய்யும் நோக்கத்துடன்  நான்கு நாட்கள் பயணமாக டல்லாஸ் வந்திருந்தார்.

போட்டிக் குழுவினருடன் அனைத்து ஏற்பாடுகளிலும் கலந்து கொண்டார். ஐபோன் மூலம் நேரடி ஒளிபரப்பு (Facetime) செய்து கலிஃபோர்னியா குழுவினருக்கும் தெரியப்படுத்தினார். தனது வருகை மிகவும் பயனுள்ளதாக தெரிவித்த அவர், அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

unnamed (2)
தொழில் அதிபர் பால்பாண்டியன்

டல்லாஸில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபரும், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் புரவலருமான பால்பாண்டின் (பொம்மலாட்டம் படத் தயாரிப்பாளர்) அவருடைய மனைவி டாக்டர் கீதா பாண்டியனுடன், போட்டி நடைபெற்ற வளாகத்திற்கு வந்திருந்து பங்கேற்றவர்களை ஊக்கப்படுத்தினார்.

இந்தப் போட்டி, அமெரிக்கா முழுவதும் விரிவுபடுத்தப் பட வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். அதற்காக, வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை (FeTNA) மற்றும் தமிழ் நாடு அறக்கட்டளை ஆகிய தமிழ் அமைப்புகள் முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மேற்கண்ட அமைப்புகளுடன் போட்டி வடிவமைப்பு, செயல்முறை ஆகியவற்றை விவரித்து, அமெரிக்கா முழுவதும் போட்டியை விரிவுபடுத்த ஆதரவு திரட்ட வேண்டும் என்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை வேலு ராமனிடம் வலியுறுத்தினார்.
 
தமிழ்நாட்டிலிருந்து கணிணி மென்பொருள்

முந்தைய போட்டிகளின் அனுபவத்தைக் கொண்டு சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் குழுவினர் புதிய சாஃப்ட்வேருக்கான திட்டம் உருவாக்கியிருந்தனர். அதை முழுமையான மென்பொருளாக மாற்றி தமிழகத்தைச் சார்ந்த SumTwo கம்ப்யூட்டர் நிறுவனத்தினர் வடிவமைத்திருந்தனர்.

போட்டி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜ் கூறுகையில், “இந்த சாஃப்ட்வேர் மூலம் பெற்றோர்கள் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்ய முடிந்தது.

போட்டியாளர்களுக்கான திருக்குறளை அங்கேயே தேர்வு செய்தார்கள். நடுவர்களுக்கு மதிப்பீடு செய்வது எளிதானது. மேலும் மதிப்பெண்களையும் போட்டி முடிவுகளையும் விரைவாக தெரிந்து கொள்ள முடிகிறது. தன்னார்வ தொண்டர்களின் வேலைப் பளுவை வெகுவாக குறைத்துள்ளோம்,” என்றார்.

உலகம் முழுவதும் திருக்குறள் போட்டி

சாஸ்தா அறக்கட்டளை வேலு ராமன் தம்பதி

சாஸ்தா அறக்கட்டளை வேலு ராமன் தம்பதி

சாஸ்தா தமிழ் அறக்கட்டளை வேலு ராமன் கூறுகையில், “தமிழர்களை ஒன்றிணைக்கும் சக்தி அனைவருக்கும் பொதுமறையான திருக்குறளுக்கு இருப்பதாக உணர்கிறேன். சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் புதிய திருக்குறள் போட்டி மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் போட்டிகளை நடத்த இயலும். இதற்காக அந்தந்த ஊர்களில் உள்ள தமிழ், சமூக அமைப்புகளுடன் இணைந்து நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். விருப்பமுள்ள அமைப்புகள் தொடர்பு கொள்ளலாம்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘டெஸ்லா’ ஜெய் விஜயன்

சுமார் 200 பேர் கலந்து கொண்டு, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டிகள் நடைபெற்றதால், பரிசளிப்பு விழா வரும் சனிக்கிழமை, (பிப்ரவரி 22)  ஃப்ரிஸ்கோ உயர் நிலைப்பள்ளி அரங்கில் நடைபெறுகிறது. திருக்குறள் சார்ந்த நடனம், கலந்துரையாடல், மிமிக்ரி உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளுடன் திருவள்ளுவர் விழாவாக நடைபெறுகிறது.

சிறப்பு விருந்தினராக ‘டெஸ்லா’ (எலெக்ட்ரிக் கார்) நிறுவனத்தில் சி.ஐ.ஓ வாக பணியாற்றும் ஜெய் விஜயன் கலந்து கொள்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சாஸ்தா தமிழ் அறக்கட்டளை இயக்குனர்கள் வேலு ராமன், விசாலாட்சி வேலு, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜ் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

குறிப்பு: கடந்த ஆண்டு இந்தப் போட்டியை என்வழியும் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தமிழகத்தில் இதே போட்டியை நடத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

-சின்னமணி, டல்லஸ்

-என்வழி ஸ்பெஷல்
5 thoughts on “பஞ்சு அருணாச்சலம் மகள் புதிய சாதனை – 1330 குறள்களையும் மேடையில் சொல்லி முதல் பரிசு வென்றார்!

 1. Ganesan

  திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், யார்க்கும் படித்து மட்டும் பெருமை சேர்க்க அல்ல. நேரம் ஒதுக்கினால் அனைவராலும் அனைத்து குறளையும் படித்து சொல்ல முடியும். அதுக்குத் தான் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு உள்ளது.

  சும்மா படித்தால் மட்டும் போதாது. அதன் படி நடக்க வேண்டும். அதற்குத் தான் நம் முன்னோர் பாடு பட்டு எழுதி வைத்து உள்ளார்கள். குறள் படி நடங்கள் முதலில். பெருமை நீங்கள் சொல்லாமல்,அதுவா வரும்.

 2. மிஸ்டர் பாவலன்

  >> சும்மா படித்தால் மட்டும் போதாது. அதன் படி நடக்க வேண்டும்.

  திருக்குறள் வள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கான நீதி நூல்.
  அதில் உள்ள அனைத்துக் குறள்களும் எல்லாக் காலத்திற்கும்
  பொதுவானது அல்ல. நல்லவற்றைத் தேடி எடுத்து நாம்
  பின்பற்றலாம். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *